அன்புடன் ஜெயமோகனுக்கு,
வாய்ப்புக்கிடைத்தால் இந்த மாத அம்ருதாவில் எனது கட்டுரை – ஞானபீடத்துக்கான பாதை – வாசியுங்கள்.
அ.ராமசாமி
—
www.ramasamywritings.blogspot.com
அன்புள்ள அ.ராமசாமி,
வாசித்தேன்.
என்பேரைச் சொல்லியிருந்தீர்கள். நன்றி. நான் ஒரு ஞானபீடத்தை கொடுக்க வாய்ப்பிருக்கிறது, பெறுவதற்கு முற்றிலும் இல்லை.
ஞானபீட விருது பற்றி சமீபத்தில் நான் எனது மாத்ருபூமி பேட்டியில்கூட விரிவாகச் சொல்லியிருந்தேன். இந்திரா கோஸ்வாமி [ஒரியா] பெற்ற விருதுக்குப் பின் யாருக்குக் கொடுத்தாலும் பிரச்சினை இல்லை என்றேன். நான் அதில் சொல்லியிருக்கும் தகுதியான முதன்மைத் தமிழ் படைப்பாளிகளின் பட்டியலையே நீங்களும் சொல்லியிருக்கிறீர்கள்.
பொதுவாக ஞானபீடத்தில் முற்றிலும் தகுதியற்ற வணிக எழுத்தாளர்கள் விருது பெற்றதில்லை- முக்கியமான விதிவிலக்கு அகிலன்.
ஞானபீட விருது இலக்கியத்தகுதிக்கானது மட்டும் அல்ல. அதன் விதிகளின்படி அது இலக்கியம் மூலம் சமூகத்துடன் விரிவான உரையாடலை நிகழ்த்திக் கருத்தியல்பங்களிப்பைச் செலுத்தியவருக்கு உரியது. அந்த வகையில் ஜெயகாந்தனுக்கு அளிக்கப்பட்டது முற்றிலும் தகுதியானதே , அதைச் சரியாகவே சொல்லியிருக்கிறீர்கள்.
ஆனால் இந்த விருதுக்களில் பல சிக்கல்கள் உள்ளன. விருதுக்குரிய ஓர் எழுத்தாளரை அந்தவிருது வரை கொண்டு சென்று சேர்ப்பதற்கு ஒரு கூட்டு தேவையாகிறது. எழுத்தாளர்கள், இதழியலாளர்கள், கல்வியாளர்கள் அடங்கிய ஒரு கூட்டுச்செயல்பாடு. அது கன்னடத்திலும் மலையாளத்திலும் வங்காளியிலும் உருதுவிலும் உண்டு. தமிழில் இல்லை.
ஞானபீடத்தில் எப்போதும் சில உள்ளோட்டங்கள் உண்டு. இந்தியா முழுக்க இடதுசாரிகள் விரும்பாத படைப்பாளிகள் அவ்விருதை பெற்றதில்லை. சிவராம காரந்த் அளவுக்கே முக்கியமான பெரும்படைப்பாளி எஸ் எல் பைரப்பா. யு ஆர் அனந்தமூர்த்தி, கிரீஷ் கர்நாட் போன்றவர்களை விட எவ்வளவோ மேலானவர்.ஆனால் கன்னட முற்போக்காளர்களுக்கு அவரை பிடிக்காது. அவர் கௌரவிக்கப்படவில்லை.
மலையாளத்தின் முதன்மையான படைப்பாளி பஷீர்தான். ஆனால் இதுவரை விருது பெற்ற அனைவருமே [இவர்களில் ஓ என் வி இவ்விருதுக்குத் தகுதியற்றவர் என நினைக்கிறேன்] இடதுசாரிகளுக்குப் பிரியமானவர்கள். பலமுறை இடதுசாரி எதிர்ப்பாளரான ஓ வி விஜயன் பெயர் ஞானபீட விருதுக்கு சொல்லப்பட்டும் புறக்கணிக்கப்பட்டது. பஷீர் இடதுசாரிகளுடன் வெளிப்படையாக முறித்துக்கொண்டவர்.
இது கல்வித்துறை சார்ந்து உருவாகும் நிர்ப்பந்தம். கல்வித்துறையில் தொழிற்சங்கங்கள் பெரும்செல்வாக்கு செலுத்துகின்றன. அவை பெரும்பாலும் இடதுசாரி தொழிற்சங்கங்கள். வலதுசாரி தொழிற்சங்கங்களுக்கு ஒருங்கிணைப்பு இல்லை. வலதுசாரிகள் பொதுவாக இவ்வகை கருத்தியல் விஷயங்களில் பட்டுக்கொள்ளாத நடைமுறைவாதிகளும்கூட. இந்த அம்சமே இலக்கிய விருதுகளில் தவறான ஒரு செல்வாக்கைச் செலுத்துகிறதென எண்ணுகிறேன்.
தமிழில் இந்த தளத்தில் செயல்படும் பேராசிரியர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் எந்த இலக்கிய நுண்ணுணர்ச்சியும் அடிப்படை மனசாட்சியும்கூட இல்லாதவர்கள். ஒரு விருதுக்குழுவிற்குள் சென்றால் குறைந்தது தான் நம்பும் தகுதியானவருக்கு [அவர் அசட்டு வணிக எழுத்தாளராகவே இருந்தாலும்கூட] விருது கொடுக்க போராடுபவர்களே கூடக் குறைவு. தங்கள் சொந்த லாபத்தை மட்டுமே அங்கே கவனத்தில் கொள்கிறார்கள். தங்களுக்கு நேரடியாக அல்லது மறைமுகமாக ஏதேனும் லாபம் இருந்தால் மட்டுமே ஒருவரை பரிந்துரைக்கிறார்கள்.
இயல்விருது போன்ற புதியவிருதுகளிலேயே பேராசிரியர்கள் உள்ளே நுழைந்ததும் நடப்பது இதுவே. லண்டனில் தங்களைக் கூப்பிட்டு கருத்தரங்கில் பேசவைத்த பேராசிரியரின் வெறும் சில்லறை மொழிபெயர்ப்பாளரான மனைவிக்கு [லட்சுமி ஹாம்ஸ்ட்ரம்] தமிழின் இலக்கியமேதைகளை புறக்கணித்துவிட்டு இலக்கியத்திற்கான வாழ்நாள் சாதனை விருதை பரிந்துரைத்து பெற்றுத்தந்த ஆ.இரா.வெங்கடாசலபதி, எம்.ஏ.நுஃப்மான் போன்ற அடிப்படை அறவுணர்ச்சிகூட இல்லாத பேராசிரியர்களை நாம் பார்க்கிறோம். இவர்கள்தான் நம் கல்வித்துறையை இன்று ஆள்கிறார்கள்.
இந்நிலையில் ஞானபீடத்துக்கு இவர்கள் நம் இலக்கியமேதைகளை பரிந்துரைக்கப்போவதில்லை. முதுமையில் எங்கோ முடங்கிக்கிடக்கும் அசோகமித்திரனோ கி.ராஜநாராயணனோ எங்கே இதில் ஆர்வம் காட்டப்போகிறார்கள்? அவர்கள் இவர்களுக்கு எதைத் திருப்பிக்கொடுக்கமுடியும்? அவர்களுக்காகப் பேச இங்கே எந்த வலுவான குரல் இருக்கிறது? ஜெயகாந்தனுக்கு வலுவான ஒரு ஆதரவுத்தரப்பு உண்டு. அவருக்காக வேலைசெய்ய முற்போக்கு முகாமிலும் காங்கிரஸ் முகாமிலும் ஆளிருந்தார்கள். கெ.எஸ்.சுப்ரமணியம் போன்றசெல்வாக்கான நண்பர்கள் இருந்தார்கள். அசோகமித்திரனுக்கு ஒரு இலக்கியக்கூட்டத்துக்கு அவரைக்கூப்பிட்டால் திரும்பிச்செல்லக் கார்கூட ஏற்பாடுசெய்யாமல் விட்டுவிடும் சூழல் இங்கே உள்ளது.
ஆகவே இங்கே பரிந்துரைக்கப்படுபவர்கள் வேறுவகையினர். தொடர்ந்து மு.கருணாநிதி, வைரமுத்து, சிவசங்கரி, குலோத்துங்கன் [வி சி குழந்தைச்சாமி] போன்றவர்களின் பெயர்களே நம் கல்வியாளர்களால் பரிந்துரைக்கப்பட்டு வருகின்றன. இவர்களை இடதுகையால் ஞானபீடக்குழு தள்ளிவிடுவது முற்றிலும் நியாயமானதே. தப்பித்தவறி கிடைத்தால் அதை விட கேவலமும் இல்லை. அகிலன் பெற்ற ஞானபீடத்துக்காக இது வரை தமிழின் சார்பில் நான் மலையாளத்தில் எட்டுமுறை, ஆங்கிலத்தில் மூன்று முறை, இந்தியில் நான்குமுறை, வங்காளத்தில் இரண்டுமுறை பேட்டிகளில் பொதுமன்னிப்பு கோரியிருக்கிறேன். அதை மட்டும் வைத்து ஒட்டுமொத்த தமிழை மதிப்பிட்டு புறக்கணிக்க முயல்வார்கள் அவர்கள்.ஆகவே வேறு வழியில்லை.
தமிழில் சாதி சார்ந்த ஓர் உள்ளோட்டமும் உண்டு.பிராமண சாதியைசேர்ந்த எவரும் இனிமேல் ஞானபீடம் வரைச்செல்ல வாய்ப்பில்லை. அசோகமித்திரனை ஒரு மாபெரும் படைப்பாளியாக அறிந்தவர் மிகச்சிலர். ‘அய்யிரா?’ என உதடுசுழிக்கும் பேராசிரியர்கள் பல்லாயிரம். சாகித்ய அக்காதமி விருதுகளில்கூட சாதி முக்கியமான ஒரு பங்கு வகிக்கிறது. கி.ராஜநாராயணனுக்கும் அனேகமாக வாய்ப்பில்லை. தமிழ் கல்வித்துறையில் கம்மவாரின் பங்கு மிகமிகக் குறைவு.
ஆக, சமீபத்தில் நாம் மகிழ்ச்சி கொள்ளும் ஒரு ஞானபீடம் கிடைக்க வாய்ப்பில்லை. ஆகவே ஞானபீடம் தமிழ் என்றமொழியை மறந்துவிட்டால் நாம் ஆசுவாசமாக இருக்கலாம்.
ஜெ
ஓ.என்.வி.குறுப்புக்கு ஞானபீடம் …
மேலாண்மைப்பொன்னுச்சாமிக்கு சாகித்ய அக்காதமி விருது
எஸ்.வைத்தீஸ்வரனுக்கு விளக்கு விருது
எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சி.கெ.கெ.விருது
கனடிய இலக்கியத்தேட்ட விருதுகள்
சாகித்ய அக்காதமி விருதுகள் – தமிழன்பனும் சகரியாவும்
விருதுகள். கேள்வி பதில் – 67, 68
விருதுத் தெரிவுக் கமிட்டியினர் கேள்வி பதில் – 40, 41, 42
சாகித்ய அகாடமியின் செயல்பாடுகள் கேள்வி பதில் – 04
ஹெப்சிபா ஜேசுதாசனுக்கு விளக்கு விருது விழா