அன்புள்ள ஜெ
நான் இடதுசாரி அரசியல் கொண்டவன். உங்கள் அரசியல் கருத்துக்கள் பலவற்றுடன் எனக்கு உடன்பாடு கிடையாது. அதைப்பற்றி பதினைந்து ஆண்டுகளாகவே நமக்குள் உரையாடல்கள் நடந்து வந்திருக்கின்றன. இப்போது நான் சில களப்பணிகளில் இருக்கிறேன். ஆகவே பயணங்கள் மிகுதி. தமிழ்த்தேசியமும் பொதுவுடைமைக்கொள்கைகளும் இணைந்த ஓர் அரசியலே இன்றைய தேவை என்பது என் எண்ணம்
ஆனால் நான் தொடக்கம் முதலே உங்கள் புனைவுகளின் அணுக்கமான வாசகன். வழக்கமான இடதுசாரிகள் போல ’அவை என்ன சொல்கின்றன?’ என்று நான் பார்ப்பதில்லை. அவ்வாறு ஏதாவது ஒன்றை கண்டுபிடித்தால் அது நான் சொல்வதுதானே ஒழிய படைப்புக்கள் சொல்வது அல்ல என்ற தெளிவு எனக்கு தொடக்கம் முதலே உண்டு. ஒரு காலத்தில் ராஜேந்திர சோழன் இதை திருப்பித்திருப்பிச் சொல்லியிருக்கிறார்
நான் கொற்றவையைத்தான் முதலில் வாசித்தேன். அதன்பிறகு விஷ்ணுபுரம். இப்போது வெண்முரசு. எனக்கு இவை மனிதர்களின் முடிவில்லாத நிறங்களையும் நிறமாற்றங்களையும் சொல்லும் படைப்புக்கள். வாழ்க்கையும் வரலாறும் ஊடாடிக்கிடப்பதைக் காட்டும் அனுபவங்கள். ஆகவே இவற்றை திரும்பத்திரும்ப வாசிக்கிறேன்.
அதிலும் வெண்முரசு இந்தியாவின் பரிணாமத்தையே ஒட்டுமொத்தமாக காட்டும் ஒரு படைப்பு. பொருளியல் அரசியல் பண்பாட்டு வளர்ச்சிப்பரிணாமத்தை அதிலே காணமுடிகிறது. ஒரு தேசியவாதி அதில் இந்திய பெருந்தேசியத்தின் உருவாக்கத்தையும் அதற்கான காரணங்களையும் நியாயங்களையும் கண்டடையலாம்.
அதேசமயம் ஒரு தமிழ்த்தேசியவாதி, அதாவது பண்பாட்டுத்தேசியவாதி இந்நாடு எப்படி ஒரே நாடாக இல்லாமல் வெவ்வேறு தேசியங்களின் உரையாடலாக இருந்துள்ளது என்பதையும் காணலாம். வெண்முரசில் வெவ்வேறு தேசியங்களை காணமுடிகிறது
இதைப்போன்ற செவ்வியல்படைப்புக்கள் தங்கள் அளவில் அரசியல்முனை கொண்டிருப்பதில்லை. அவை ஓர் உலகத்தைத்தான் உருவாக்கிக் காட்டுகின்றன அவற்றிலிருந்து நம் அரசியலை நாம் காணலாம். நான் தமிழ்த்தேசியத்தின் முதன்மை பிரதி என்று கொற்றவையைத்தான் சொல்வேன்
வெண்முரசில் பால்ஹிகநாடு மணிபூரகநாடு போன்றவை எப்படி மையத்துடன் உரையாடியும் போராடியும் நிலைகொள்கின்றன என்பது தேசியங்களின் போராட்டத்தைப் பற்றிய புரிதலுக்கு மிகவும் இன்றியமையாதது.
வெண்முரசுகாட்டும் சித்திரம் இங்கே தொன்மையான காலகட்டத்தில் ஒற்றைப்பண்பாடு இருக்கவில்லை என்பதுதான். பண்பாடுகளின் ஒருமைப்பாடுதான் இருந்தது. அவற்றுக்கிடையே ஒரு வகையான ஒத்திசைவு தொடர்ச்சியாக எட்டப்பட்டது. அவ்வாறு ஒத்திசைவு உருவாகாத போது போர் நிகழ்ந்தது. மகாபாரதக் களமே தேசியங்களின் போர்க்களமாகத்தான் உள்ளது. அந்தப்போர் அதன்பிறகு நுண்ணிய வடிவில் வரலாறு முழுக்க நீடித்தது.
வெண்முரசில் இருந்து நான் பல செய்திகளை தெரிந்துகொண்டேன்.அவற்றை பின்னர் மகாபாரத மூலங்களில் போய் சரிபார்த்தேன். உதாரணமாக அங்கம், வங்கம், கலிங்கம், பௌண்ட்ரம் போன்ற நாடுகள். இவற்றை ஒரு வகை cluster என்று சொல்லலாம்.ஒரே பிரஜாபதியான தீர்க்கதமஸில் இருந்து அவை உருவாயின. அந்நாடுகளுக்குள் சண்டை இருந்தாலும் அவற்றை ஒட்டுமொத்தமாக ஒரு கூட்டுத்தேசியமாக கொள்ளமுடியும்
அதேபோல பால்ஹிகக்கூட்டமைப்பு. அவர்களும் ஒரு தேசியமாகவே தங்களை தொகுத்துக்கொள்கிறார்கள். அதற்கும் அவர்களுக்கு ஆதிபிரஜாபதி ஒருவர்தான் என்பதே காரணமாக இருக்கிறது. இந்த ஒரே தந்தைவழி என்பது அன்றைக்கு ஒரு தேசிய அமைப்பின் அடிப்படையாக இருந்திருப்பது தெரிகிறது
அதேபோன்ற ஒரு கூட்டுத்தேசியம்தான் சதகர்ணிகள்.நூறு அரசுகளின் தொகுப்பு. அவ்வாறு அவர்கள் நூறு பெரும் ஒன்றாகத்திரள என்ன காரணம் என்பது வெண்முரசிலே இல்லை. அது ஒருவேளை தாய்வழியாகக்கூட இருக்கலாம். இந்திய நிலத்தை தேசியங்களின் அருங்காட்சியகம் என்று சொல்வார்கள். மகாபாரதம் அப்படித்தான் இருக்கிறது. அதை இன்னும் பிரம்மாண்டமாக காட்டுகிறது வெண்முரசு. குறிப்பாக வெய்யோன் இந்த ஆய்வுகளுக்கு மிக உதவியான நூல்
வெண்முரசில் நாகர்கள் தோற்றுக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் கடைசிவரை அவர்கள் முழுக்க தோற்கவுமில்லை. முழுக்க கரையவுமில்லை. மகாபாரதம் தொடங்குவதே நாகர்கள் மீண்டெழுவதிலிருந்துதான். அந்த உறுதிப்பாடு மெய்சிலிர்க்க வைக்கிறது. அதுதான் வெண்முரசு எனக்கெல்லாம் அளிக்கும் பாடம்
செம்மணி அருணாச்சலம்
***
அன்புள்ள அருணாச்சலம்
நீண்ட இடைவெளிக்குப்பின் கடிதம். வெண்முரசு அதன் மையமாக வேதாந்தத்தை, வேதாந்தரூபனை முன்வைக்கிறது. ஆனால் அதன் கிளாஸிக் இயல்பு அதற்கு எதிரான அனைத்தையும் முழுமையாக தொகுத்து முன்வைப்பதாகவும் இருக்கும். அதேபோல வெண்முரசின் அடிப்படை இயல்பு இந்தியப்பெருநிலம் பாரதவர்ஷமாக திரண்டதன் கதை. ஆனால் கூடவே வென்றவை, வீழ்ந்தவை எல்லாமே சொல்லப்பட்டிருக்கும்.
நீங்கள் சொல்வதுபோல வெண்முரசு ஒற்றை வரலாற்றுவாதத்தை முன்வைக்கவில்லை. ஒரு வரலாற்றுப்பரப்பையே முன்வைக்கிறது. அதிலிருந்து வரலாற்றுவாதங்களை வாசகர்கள் உருவாக்கிக்கொள்ள முடியும்
ஜெ