அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம் வெண்முரசைத் துவங்கின முதற்கனலின் முதலத்தியாயத்தின் செண்பகமரத்திலிருந்து, முதலாவிண்ணின் இறுதி அத்தியாயத்தின் அருகும், ஆலும், இன்கிழங்கும் செங்கீரையுமாக 26 நாவல்களையும் தொடர்ந்து வாசிக்கையிலேயே அவற்றில் குறிப்பிடப்பட்டிருக்கும் தாவரவகைகளை, தாவரப்பொருட்களை, மலர்களை, தாவரங்கள் தொடர்பான தகவல்களையெல்லாம் மனம் தனித்தனியே கவனித்தபடியே இருந்தது. இவை தொடர்பான ஏராளமான குறிப்புகளையும் எழுதி வைத்திருக்கிறேன்
முதலாவிண் முடிந்ததும் வெண்முரசு காட்டும் தாவரவியல் தகவல்களில், மிகமுக்கியமானவற்றையும், முன்பிருந்து இப்போது இல்லாத Extinct வகைகளையும், அரியவற்றையும் மட்டும் தொகுத்து கட்டுரையாக்க நினைத்தேன், மீண்டும் முதற்கனலிலிருந்து வாசிக்கவும் செய்து மழைப்பாடல் வரை மீள் வாசிப்பை முடித்தேன்
குறிப்பெடுத்துக் கொள்ளத் துவங்கியதிலிருந்தே, தாமரை, அரசு, ஆல், தர்ப்பை, நாணல், வேங்கை, ஊமத்தை, புல்லரிசி, மருதம், ஸாமி, பிலு, ருத்ராக்ஷம், தாவரப்பொருட்கள், பலவகை மலர்கள், தாவர உணவுகள், மரப்பட்டை கூரையிடப்பட்ட அரண்மனைகள், சுரைக்கமண்டலங்கள், பலாச விறகு, ஆலின் விழுது, முளைத்தெழும் வாழை, கரும்பனையின் தடி, அரணிக்கட்டைகள், கோரைப்புல்பாய்கள், மூங்கில் காடுகள் மரமல்லிகள், மந்தாரங்கள், செண்பகங்கள், வேம்பு கமுகு, வேங்கை என வெண்முரசின் தாவரங்களும், மலர்களும், மரங்களும், பசுங்காடுகளுமே என்னைச்சுற்றி நனவிலும் கனவிலும் நிறைந்து இருக்கின்றது
விழித்தெழுந்ததுமே இரவெல்லாம் சிந்தித்துக்கொண்டிருந்த மலர்களை, மரங்களைப்பற்றிய நினைவுதான் மீண்டெழும். ஆனாலும் இப்படி தகவல்களை திரட்டுவதன் மூலம் வெண்முரசென்னும் மாபெரும் இலக்கியப்படைப்பை அணுகுதலென்பது சரியல்ல என்றும் தோன்றுகிறது. இப்படியான தகவல் சேகரிப்பை இதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கபட்ட ஒரு மென்பொருள் செய்துவிடமுடியும். எனினும் மீள்வாசிப்பில் தாவரஅறிவியல் குறித்த புதிய புதிய திறப்புக்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. இப்படி இருக்குமா, இதுவாக இருக்குமா அல்லது ஒருவேளை அதுவா? இதுவேதானா என்று எப்போதும் அந்த குறிப்புக்களிலேயே மனம் சுழன்றுகொண்டு இருக்கிறது. அத்தனை அரிய தகவல்கள் நிறைந்துஇருக்கிறது வெண்முரசில்.
அர்ஜுனனுக்கு உரியதான மருதமரத்தின் தாவரஅறிவியல் பெயர் Terminalia arjuna என்றிருப்பது வியப்பளிக்கின்றது. அதுபோலவே காந்தாரியின் திருமணதிற்காக தேடிச்சென்ற பெண்களில் ஒருத்தி கண்டடையும் தாலிப்பனை “ஒருமலைச்சரிவில் பூத்துநின்ற தாலிப்பனையைக் கண்டு பிரமித்து கண்ணீர்மல்கினாள். அந்த இளம்பனை தரைதொட்டு பரவிய பச்சை ஓலைகள் உச்சிவரை பரவியிருக்க மண்ணில் வைக்கப்பட்ட மாபெரும் பச்சைக்கூடை போலிருந்தது. அதன்மேல் மாபெரும் கிளிக்கொண்டை போல அதன் வெண்ணிற மலரிதழ்கள் விரிந்து நின்றிருந்தன. நுண்ணிய சரங்கள் கொத்துக்கொத்தாகத் தொங்கிய கிளைகளுடன் நின்றிருந்த அந்த மலர் மாபெரும் நாணல்கொத்துபோலிருந்தது. நாரையின் இறகுகளைக் கொத்தாக்கியது போலிருந்தது.” என்ற விவரிப்பு பலநாட்கள் என்னை தாலிப்பனையின் பின்னே செல்லவைத்தது.
இந்த தாலிப்பனையைக்குறித்து தனியாகவும் நீங்கள் எழுதியிருக்கிறீகள் அது கொடப்பனை எனப்படும் Corypha umbraculifera என்று. அந்த அத்தியாயத்தில் ஷண்முகவேலின் சித்திரமும் அடுக்கடுக்கான வெண்மஞ்சள் மலர்களினாலான கிளைந்த மஞ்சரியுடனிருக்கும் கொடப்பனை/குடைப்பனையைத்தான் காட்டுகிறது. இப்படியான மிகப்பெரிய கிளைத்த மஞ்சரிகளை கொண்ட மரங்கள் உலகில் இரண்டே இரண்டு அதில் ஒன்று குடைப்பனை மற்றோன்று Corypha taliera என்னும் மற்றோரு தாலிப்பனை. இதன் இணையறிவியல் பெயரான Taliera tali என்பதில் பேரினம் சிற்றினம் இரண்டுமே தாலி என்றிருக்கிறது.
குடைப்பனை இப்போது பல இடங்களில் இருக்கிறது ஆனால் இந்த தாலிப்பனை இப்போது அதிகம் இல்லையென்பதால் பலநாட்கள் இதன்வேர்களை தேடிபோனேன். இப்போது இந்த தாலிரா தாலிப்பனை இயற்கையாக எங்குமே வளர்வதில்லை. வங்காள தேசத்தின் தொன்மையான பல்கலைக்கழகமான தாக்கா பல்கலைக்கழகத்தின் 80 வயதான ஒற்றை மரம் 2012ல் பூத்து காய்த்து அழிந்தபின்னர் வேறெங்கும் இந்தப்பனை காணப்படவில்லை. அதுவும் அந்த வளாகத்தில் விதைத்து முளைக்கவைத்து வளர்ந்ததுதான். எனவே சர்வதேசஇயற்கைப் பாதுகாப்புச் சங்கமான IUCN இந்த தாலிரா பனையை Extinct in Wild என்றுதான் பட்டியலிட்டிருக்கிறது.
இப்போது தாக்கா பல்கலைக்கழக மரத்திலிருந்து எடுக்கப்பட்ட விதைகளிலிருந்து வளர்க்கப்படும் சுமார் 300 இளம்பனைகள் உலகில் ஃப்ளோரிடா உள்ளிட்ட பல இடங்களில் வளர்ந்து வருகின்றன அவையெல்லாம் பூக்க இன்னும் நெடுங்காலம் இருக்கிறது. வெண்முரசு காட்டும் மஞ்சரியின் விவரணைக்கு இந்தப்பனையின் மஞ்சரி மிகப்பொருத்தமாக இருப்பதுபோலவும் தோன்றியது. இப்படி ஒன்றிலிருந்து ஒன்றாக தொட்டுத்தொட்டு தேடிச்செல்வது சலிப்பில்லாத செயலாகிவிட்டிருக்கிறது எனக்கு இப்போது.
அப்படியேதான் வெண்முரசில் வரும் நீலச்செண்பகங்களும், செண்பகத்தின் நீலம், நீல செண்பக மலர்கள், என பல இடங்களில் வருகிறது. எனக்குத் தெரிந்து செண்பகத்தில், பொன்மஞ்சள், பழுப்பு, தூயவெள்ளை, இள மஞ்சள் தவிர பிற வண்ணங்களில் மலர்கள் இல்லை . எனவே நீலசெண்பகங்களைக் குறித்து தேடிச்செல்ல துவங்கினேன் பலநாட்கள் தேடலில் பலவாயில்களை திறப்பதும் மூடுவதுமாக இருந்தேன். எந்த தகவலும் நீல செண்பகங்களை குறித்து கிடைக்கவேயில்லை ஆனால் அப்படியொன்று இருக்காது என்னும் முடிவுக்கு மட்டும் நான் வரவேயில்லை நிச்சயம் எங்கோ இருக்குமென மனம் நம்பியது. ஒருவேளை வனச்செண்பகம் எனப்படும் மனம் மயக்கும் நறுமணத்துடனிருக்கும் Spermadictyon suaveolens என்னும் தாவரத்தின் இளநீல மலர்களாக இருக்கலாமென்றும் தோன்றியது.
காப்பிச்செடியின் குடும்பத்தைச்சேர்ந்த இதன் சிற்றினப்பெயரான suaveolens என்பதே நறுமணத்தைத்தான் குறிக்கும். அலரி எனப்படும் frangipani மலர்களில் பித்துக்கொண்டிருக்கும், கிடைக்கும் போதெல்லாம் அவற்றை தலையில் சூடிக்கொள்ளும், தற்போது பாலித்தீவில் வசிக்கும், அமெரிக்கத்தோழி ஜாய் (Joi) சில நாட்களுக்கு முன்னர் கிருஸ்துமஸ் வாழ்த்துச்சொல்ல அழைத்திருந்தபோது, வீட்டுவேலைகளில் அவளுக்கு உதவும் இபுசுச்சி என்னும் பெண்ணின் மகன் விபத்தில் இறந்துபோன துக்கநிகழ்வுக்கு அவர்களின் பழங்குடி கிராமத்துக்கு சென்றிருக்கையில் அங்கு நீல அலரி பூத்திருந்த மரமொன்றை பார்த்ததாக சொன்னாள். அலரிக்கு காட்டுசெண்பகமென்றும் ஒரு பெயரிருக்கிறது. ஒருவேளை வெண்முரசில் வரும் நீலச்செண்பகம் Blue frangipani யாகவும் இருக்கலாம்
அறிவியல் தகவல்கள் மட்டுமல்லாது அழகிய தாவரவியல் சித்தரிப்புக்களும் உவமானங்களும், ஊமத்தைச்சாறு கலந்த அப்பங்கள் என்பதுபோன்ற அரிய பழங்குடித்தாவரப்பயன்பாட்டியல்(Ethnobotany) தகவல்களுமாக வெண்முரசு ஒரு அரிய தாவர அறிவியல் களஞ்சியம். தருமன் பிறக்கையில் சித்ரவனக் குறுங்காட்டில் பூத்த வேங்கை மரத்தடியில் உடல்மேல் மஞ்சள் நிறமான மலர்கள் பொழிந்து மூடிக்கொண்டிருக்க உறங்கிக்கொண்டிருந்த பாண்டுவிடம் மாத்ரி தருமன் பிறக்கவிருப்பதைச் சொல்லுவாள். அதுவரையிலும் ஆண்மையற்றவனாக Sterile என்றே குறிப்பிடப்பட்டுவந்த பாண்டு அப்போது அந்த வேங்கையைப் போலவே முழுக்கப்பூத்து fertile ஆகிவிட்டதை சொல்லும் அழகிய காட்சி அது
வெண்முரசு நாவல் நிரையின் அனைத்துப்பகுதிகளையும் வாசித்தாலும் நீலத்தை மட்டும் தொடவேண்டாமென்று கவனமுடன் இருந்தேன், அது ஒரு மாயச்சுழல் போல என்னை இழுத்துக்கொள்ளும் என்பதால். நீலசெண்பகத்தை குழலில் சூடிக்கொண்டிருந்த அசலையிடம் தாரை சொன்னதுபோல “பிறவண்ணங்கள் நம்மை நோக்கி வருகின்றன. நீலம் நம்மை இழுத்து தன்னுள் ஆழ்த்துகிறது”
இருந்தும் ஒரு கட்டுரையின் பொருட்டு கருவிளை மலர்களைப்பற்றி வெண்முரசு சொல்லியிருப்பவற்றை தேடுகையில் நீலத்தின் ஆழத்தில் மீண்டுமிறங்கினேன் ” வெண்முறுவல் பூத்தது முல்லை. கண்சிவந்தது அரளி. செம்முத்துகொண்டது தெச்சி. பால்துளித்தது தும்பை. பொன்கொண்டது கொன்றை. பூத்து பட்டணிந்தது வேங்கை.. நாணிக் கண்புதைத்தது செண்பகம். நாணிலாது பொதியவிழ்ந்தது பகன்றை. அஞ்சி விழிதூக்கியது அனிச்சம். குறுநகை எழுந்தது பாதிரி. வழியெங்கும் விழிகொண்டது ஆவாரம். நானும் அவனே என்றது குவளை. நானுமல்லவா என்றது நீலத்தாமரை”
இவ்வரிகள் காட்டும் இயற்கை அழகை, அவை சொல்லப்பட்டிருக்கும் மொழியின் அழகை, அவ்வரிகளில் இருக்கும் தாவரவியல் உண்மைகளை என்ணி எண்ணி மலைக்கிறேன். ஓராயிரம் முறை இவற்றையே மீள மீள வாசித்திருப்பேன். ஆம் முல்லை அப்படித்தான் சின்னஞ்சிறு இதழ்களை மெல்லப் பிரித்து முறுவல் செய்யும், அரளியின் இளஞ்சிவப்பு கண் சிவந்தது போலத்தான் இருக்கும். தெச்சியின் கூரிய மொக்கு செம்முத்தேதான். தும்பையின் நீண்ட ஒற்றை வெண்ணிதழ் பால்சொட்டுத்தான், பொன்னேதான் கொன்றை, பட்டணிந்துபோலவேதான் பளபளக்கும் பூத்தவேங்கை , இதழ் நுனிகளை ஒன்றாக குவித்து நாணிக்கொண்டுதான் இருக்கின்றது செண்பகம், சிறு வெண் பொதியை அவிழ்த்தது போலத்தானிருக்கும் பகன்றை, அஞ்சிக்கொண்டிருப்பது போலத்தானிருக்கும் அனிச்சத்தின் சிறுமென்மலர்கள். பொன்மஞ்சளில் செந்தீற்றலுடன் புன்சிரிக்கும் பாதிரி, கண்ணனின் கருநீலமேதான் குவளையும் , நீலத்தாமரையும்.
இப்படி சில வரிகளிலேயே சிக்கிக்கொள்வதால், மேலும் முன்னகரவோ, நீலத்திலிருந்து வெளியே வரவோ மிகுந்த முயற்சி செய்யவேண்டி இருந்தது. தீயின் எடையில் கிருபர் நாகருலகிலிருந்து மீண்டு வரும் குறுங்காட்டில் இருக்கும் செடிகளில் நீர் நிறைந்த வன்பூசணியும் இருந்தது. அதன் பின்னேயும் நான் பல நாட்களாக சென்று கொண்டிருக்கிறேன். இப்போது பயிரடப்படும் அனைத்து முக்கிய பயிர்களுக்கும் காட்டுறவுப்பயிர்களெனப்படும் crop wild relatives (CWR) முன்பிருந்திருக்கும். அவற்றைக்குறித்த தேடல்களும் ஆய்வுகளும் நடந்துகொண்டே இருக்கின்றது. அவற்றில் இந்த வன் பூசணியைக்குறித்தும் தேடினேன்.
1965ல் கடைசியாக காணப்பட்ட பத்தாயிரமாண்டுகளுக்கு முன்பு தோன்றியிருக்கலாமென்று கருதப்படும் Cucurbita ecuadorensis என்னும் வன்பூசணிக்கொடி உலகில் வேறெங்குமே பயிரிடப்பட்டதில்லை. அந்தக்கொடியும், அதன் விதைகளும் பசிபிக் பெருங்கடலின் ஓரத்தில் அமைந்திருக்கும் Machalilla National Park ல் இப்போது பத்திரப்படுத்தப் பட்டிருக்கின்றன. Plants, People, Planet (PPP) என்னும் தாவரவியல் ஆய்வுக்கட்டுரைகளுக்கான சஞ்சிகை கடந்த 2019 டிசம்பரில் பல்லாயிரமாண்டுகளுக்கு முன்பிருந்திருக்கும் காட்டுபூசணிகளின் 16 வகைகளை குறித்த கட்டுரையில் மெக்சிகோவை பிறப்பிடமாக கொண்ட வெள்ளி நிற விதைகளும், வரிகளோடிய மேற்புறமுள்ள ஒரு வன்பூசணியையும் குறிப்பிட்டிருக்கிறது. இதுவும் பத்தாயிரமாண்டுகளுக்கு முன்பே தோன்றியது.
கிருபர் சென்ற வழியில் இவற்றிலொன்று இருந்திருக்கும் வாய்ப்புமிருக்கின்றது. வெண்முரசு காட்டும் தாவரங்களைக்குறித்து எழுதவேண்டுமென நினைக்காத கணமே இல்லை. அது உள்ளே என்னை சொடுக்கிக்கொண்டே இருக்கிறது இப்படி பல தகவல்களையும் சேகரித்திருக்கிறேன் மீண்டும் மீண்டும் அவற்றை சரிபார்த்துக்கொண்டுமிருக்கிறேன். இந்த குறிப்புக்களை, வெண்முரசின் தகவல்களோடு இணைக்கும் அந்த சரடு, அது இன்னும் புலப்படவில்லை அதற்காகத்தான் காத்திருக்கிறேன் அது வரையிலும் இன்னும் இன்னும் என தேடிச்சென்று கொண்டேதானிருப்பேன்.
மாமலரை கொண்டு வந்த பீமன் திரெளபதியிடம் சொல்லுவான் “மாமலரின் இந்த மணத்தை நோக்கி செல்லும் வழியில் பலவகையான மணங்களினூடாக என் அகமும் மூக்கும் கடந்துசென்றன.” என்று. அப்படி வெண்முரசின் தாவரங்களைக்குறித்த தேடலில் நான் கண்டறிந்து கொண்டிருப்பவையே இந்த பிறவியில் எனக்கு கிடைத்திருக்கும் ஆகச்சிறந்த கல்வியறிவு. மிக்க
அன்புடன்
லோகமாதேவி
***
அன்புள்ள லோகமாதேவி
மலர்களைப் பற்றியும் செடிகளைப் பற்றியும் நான் எழுதுவதெல்லாம் இளமைக்கால நினைவுகளிலிருந்து. குமரிமாவட்டம், மேற்குமலைகள் மலர்களால் நிறைந்தவை. பத்துநாட்கள் மலர்களை தேடிச்செல்லும் ஒரு கொண்டாட்டம் இங்கே உண்டு. ஓணக்கொண்டாட்டம். வெவ்வேறுவகையான மலர்களை அதிகமாக சேர்ப்பவர்கள் வெல்வார்கள். அதற்காக மலர்தேடி அலைவோம்
அ.நீலச்செண்பகம் என்பது காணிக்காரர் பாட்டில்தான் பெரும்பாலும் இருக்கிறது. ஒரு இஞ்ச் நீளமுள்ளது. அரளிக்கும் செம்பகத்துக்கும் நடுவே இருக்கும் வடிவம். நீலமும் அல்ல. வெண்மைதான். இதழ்களின் விளிம்பில் நீலப்பூச்சுபோல் இருக்கும். நீங்கள் அளித்த பூவின் படம்போல.
ஆ.குடைப்பனை இப்போது வெட்டித்தள்ளப்படுகிறது. ஆகவே அனேகமாக இல்லாமலாகிவிட்டது. பொதுவாக ரப்பர் வந்ததுமே மலர்கள் அழியத்தொடங்கின. இன்று குமரிமாவட்டத்தில் ஒரே தாவரம்தான், ரப்பர். குடைப்பனைக்கு யட்சிப்பனை என்றும் பெயருண்டு. யட்சிகோயில்கள் கான்கிரீட் கட்டிடங்களாக ஆனதும் குடைப்பனையும் மறைந்துவிட்டது
இ.உலத்தி என்ற வகை பனை உண்டு. அதுவும் இப்போது இல்லையோ என நினைத்தேன். ஆனால் சமீபத்தில் குடகு சென்றிருந்தபோது காட்டில் உலத்திப்பனை குலைதள்ளி நிற்பதைக் கண்டேன்
ஜெ