விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா) – கடிதம்
அன்புள்ள ஜெயமோகனுக்கு,
நலம். நலம் அறிய ஆவல். தளத்தில், விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா) கடிதத்தை வெளியிட்டிருந்தீர்கள். அதை வாசித்துவிட்டு, அங்கங்கே இருந்து புதுப்புது நண்பர்களிடமிருந்து அழைப்புகள் வந்துகொண்டுள்ளன. மகிழ்ச்சி! மொட்டைமாடியில் படுத்துக்கொண்டு, விண்மீன்களை பார்த்துக்கொண்டு, தனியாளாகவோ, குழுவின் ஒரு உறுப்பினராகவோ தமிழ் இலக்கியத்திற்கு அல்லது மொத்த இலக்கியத்திற்கு, எதாவது செய்ய முடியுமா என்று யோசித்த காலங்கள் உண்டு.
[அமெரிக்காவில் ஏதாய்யா மொட்டை மாடி என்று கேட்காதீர்கள். ஏணி இல்லாமல், ஆழ் கிணறு வெட்டமுடியும் என்று புனைவு எழுதியவரின் படைப்புகளை வாசிக்க ஆரம்பித்து, சீரான தோள்கள் கொண்ட, மின்னும் கருமை நிற அழகியைப் படைத்தவரின் எழுத்துக்களை அன்றாடும் வாசிப்பவனுக்கு கற்பனை இருக்கும் என்று வைத்துக்கொள்ளுங்கள்]
ஒன்றுமே சாதிக்காமல் அப்படியே மேலே போய்விட்டால் என்ற ஒரு பயம் இருந்துகொண்டே இருக்கும். 2020-ல் வீட்டில் உட்கார்ந்து வேலை செய்ய, நிறைய யோசிக்கவும், இலக்கியம் சார்ந்த விஷயங்களை அலசவும் நேரம் அமைந்ததால், 2020-ஐ இலக்கியத்திற்கான ஆர்வத்தை முன்னெடுத்துச் செல்லும் வருடமாக எடுத்துக்கொண்டேன். மார்ச்சில் ஆரம்பித்து இன்று வரை, ஒரு நாள் கூட, குறைந்தது ஒரு மணி நேரமாவது, ஒரு நண்பரிடம் புத்தகம், வாசிப்பு, இலக்கியம் என்று பேசாமல் நாள் கழிவதில்லை.
கல்லூரி படிப்பை முடித்துவிட்டு , ஒரு தமிழக அரசாங்க வேலைக்காக, தேர்வு எழுதச் சென்றிருந்தேன். எனக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு அறைக்குச் சென்றால், அங்கே நாற்பது சௌந்தரராஜன்கள் இருந்தார்கள். அதற்கு அப்புறம், நானே என்னுடன் பேசிக்கொண்டால்தான், சௌந்தருடன் பேசினேன் என்று சொல்லலாம். கோவிட்-19 கொடுத்த வீடடங்கில், குருஜீ சௌந்தரிடம், பேசும்பொழுது, அவரை சௌந்தர் என்று அழைத்தால் எனக்கு சிரிப்பு சிரிப்பாக வரும். சிரிப்பை அடக்கிகொண்டு அவரிடம் வெண்முரசு, வெண்முரசு விவாதக்கூட்டம், நண்பர்கள் அதற்குத் தயாராகும் விதம் என்று பேசி பேசி அவ்வளவு அறிந்துகொண்டேன்.
சௌந்தர், ஜெயந்தி என்பவர் , வெண்முரசுவில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற இருக்கிறார். என்று சொல்ல, எங்கே அவரது எண் கொடுங்கள் என்று கேட்டு வாங்கிக்கொண்டேன். அவர் கொடுத்த எண்ணில் அழைத்துப் பேசினால், நான் ஜெயந்தி இல்லை என்று வைஜயந்தி பேசினார். வைஜயந்திக்கு ஜெயந்தியைத் தெரிந்திருந்ததாலும், அவரும் நல்ல வாசகி என்பதாலும் எங்கள் உரையாடல் நீளத்தான் செய்தது.
பெண்கள் எழுதவேண்டும் என்று அன்றே அறிமுகமான அவருக்குக் கூட என்னால் ஒரு அன்புக்கட்டளை வைக்க முடிந்ததற்கு காரணம் வாசிப்பில் ஒன்றியிருக்கும் இரண்டு உள்ளங்கள் கொடுத்த அணுக்கம். முடிவில், ஜெயந்தியிடமும் பேசத்தான் செய்தேன். அவர், ‘வெண்முரசில் உபபாத்திரங்கள்’ என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்வதற்கு எழுதிப்போட்டுவிட்டு ஒப்புதலுக்கு காத்திருந்தார். கண்ணனின் ரசிகையான அவரிடம், நீலம் பற்றி பேச நிறைய இருந்தது.
திருச்சியில் படிக்கும்பொழுது, ஆஞ்சனேயர் பக்தனாக, ஜங்ஷன் அருகில் இருக்கும் கல்லுக்குளியில் அவரைப் பார்க்கச் செல்லும் வழக்கம் என்னிடம் இருந்தது.. நான் சென்ற காலங்களில், வழக்கறிஞர் செல்வராணி, ஒரு சிறு பெண்ணாக இருந்திருப்பார். குட்டி ஜடையுடன் குட்டியாக புன்னகைப் பூவுடன் நின்றுகொண்டிருந்த குழந்தை ஒன்றை, பிற்காலத்தில் சந்திக்கவிருக்கிறேன் என்று தெரியாமல் நான் கடந்திருக்கலாம்.
நான் அவரை அழைத்துப் பேசிய நாள், திரு கமல்ஹாஸன் அவர்கள், வெண்முரசுவைப் பற்றி விஜய் டிவி-யில் பேசிய வாரம். கமலின் ரசிகையான செல்வராணிக்கு, விஷ்ணுபுரம் பற்றி அவர் டிவி-யில் சொல்லப்போய்த்தான் ஜெயமோகன் அறிமுகம் என்பதாக சொன்னார்.
திருச்சி மாவட்டத்தில், ஏன் வெண்முரசு விவாதக்கூட்டம் நடத்தமுடியாது என்று கேட்டதற்கு, அவருக்குத் தெரிந்து மூன்று வாசகர்கள்தான் இருக்கிறார்கள் என்று சொன்னார். நம் நண்பர்களுக்கு ஒரு சவாலான ஏரியா காத்திருக்கிறது என்று எடுத்துக்கொண்டேன்.
சிங்கப்பூர் வாசகி, சுபஸ்ரீ-யை விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் விழாக்களில் பார்த்திருந்தாலும், புன்னகையை கைமாற்றிக் கொண்டதைவிட வேறு அதிகம் பேசியதில்லை. அவரது பரந்த வாசிப்பை, இந்த இக்கட்டான நாட்களில் அறிந்துகொண்டேன். வெண்முரசு வரிசை நூல்களை மூன்று மாதங்களில் மீள் வாசிப்பு செய்த சாதனையாளரான அவர்,
“வெண்முரசு,ஆயிரம் பேர் முன் நின்று கண்டாலும் அவரவர் முகம் காட்டும் ஆடி” என்றார். விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் மற்றும் தளத்தின் வாசகர்களில் படைப்பாளிகளும் அடக்கம். சில நண்பர்களின் ஓரிரு கதைகளை , கட்டுரைகளை வாசித்துவிட்டு, அவர்களை பிறகு கூர்ந்து வாசித்து கவனிக்கவேண்டும் என்று குறித்து வைத்திருந்தேன். கோவிட்-19, காலத்தைப் பிரித்து அவர்களின் படைப்புகளை வாசிக்க ஒரு துண்டை என்னிடம் கொடுத்ததை உபயோகப்படுத்திக்கொண்டேன்.
காளிப்ரசாத்தின் கதைகளை வாசித்துவிட்டு, அவருக்கு மிகவும் அணுக்கமானவனாக உணர்ந்தேன். அவர் எடுத்துக்கொண்ட கதைக்களங்கள், அவரது அன்றாட வேலையையும் அனுபவங்களையும் தாண்டி இருந்தது. அவர் எழுதியுள்ள பத்துக் கதைகளில், ஒரே ஒரு கதையைத் தவிர, மற்ற அனைத்தும் கற்பனை என்று அறிந்துகொண்டேன்.
‘ஜெயமோகன்’ எனும் விமர்சகரை விட்டுவிட்டால், இப்பொழுது நல்ல விமர்சகர்கள் இல்லாமல் போய்விட்டார்கள். காளிப்ரசாத் முயற்சித்தால், அந்தத் துறையிலும் நுழையலாம் என்பது எனது கருத்து.
எனக்குத் தெரிய, GSSV நவீன், மூன்று கதைகள் எழுதியிருந்தாலும், மூன்றும் எனக்குப் பிடித்திருந்தன, அ.கா. பெருமாளின் நூல்களை ஆழ்ந்து வாசிக்கும் அவருக்கு,தொல்கதைகளை புரிந்து எடுத்து கலந்து நவீனக் கதைகளை உருவாக்க முடிகிறது. அவரது எழுத்தில் வெண்முரசின் தமிழ்த்தாக்கம் இருப்பதும் தெரிகிறது. அது நல்லதுதானே! மதுரைப் பயணம் சென்றுவிட்டு, நீங்களும் அவரை எழுத்தாளர் GSSV நவீன் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அவரை, ஒரு நாள் போனில் அழைத்து, “தம்பி நல்லாருப்பா, நிறைய எழுதுப்பா !” என்று சொல்லும் வாய்ப்புக் கிடைத்தது.
நம் குழுவில் சேர்ந்த நாள் முதல், தொடர்ந்து தொடர்பில் இருப்பவர் லோகாமா தேவி. அவர் எனக்கு எழுதும் கடிதங்கள் எல்லாம், ஏழு பக்கங்களுக்கு குறையாமல் இருக்கும். சில கடிதங்களில் நல்லதொரு கதை புதைந்திருக்கும். அவரது துறையான தாவரவியல் சம்பந்தமாக, நல்ல கட்டுரைகள் எழுதி வந்தாலும், புனைவுகளை கோர்க்க அவரிடம் நிறைய இருக்கிறது என்று அவர் உரையாடலிலும், எழுத்திலும் தெரியவரும்.
தான் நினைத்த, கண்டடைந்த உண்மையை அப்படியே சொல்வதற்கு ஒரு தைரியம் வேண்டும். அது லோகாவிற்கு உள்ளது என்பது சிறப்பு. நானும் லோகாவும், ‘சிறப்பு’ என்று சொல்லுமிடத்திலெல்லாம், ‘வெண்முரசு’ என்று சொல்லும் வழக்கத்தைக் கொண்டுள்ளோம்.
ஸ்வேதா ஷண்முகம், மொழிபெயர்ப்பு சம்பந்தமாக எழுதிய கட்டுரையை வாசித்துவிட்டு, நான் பாராட்டி எழுதிய கடிதம் தளத்தில் வந்தது. அவர் எழுத்துக்களை அறிந்து உணர , அவரது தனிப்பட்ட வலைப்பூ சென்று வாசித்தேன். ஆங்கிலம் , தமிழ் இரண்டிலும், விமர்சனக் கட்டுரையாகட்டும், கதையாகட்டும் அவரால் எழுதமுடியும் என்பது தெரிகிறது. நீங்களும், ‘பெண்கள் எழுதுதல்’ கட்டுரையில் அவரின் தனித்துவத்தைக் குறிப்பிட்டு எழுதியிருந்தீர்கள்.
2013-ல், புதியவர்களின் கதைகள் என்று நீங்கள் பன்னிரெண்டு எழுத்தாளர்களின் கதைகளை வெளியிட்டிருந்தீர்கள். அவர்களில் சிலரைக் கையில் எடுத்துக்கொண்டு, இப்பொழுது என்ன செய்கிறார்கள் என பின் சென்று பார்த்தேன். அதில் அறிமுகமான , சுனீல் கிருஷ்ணனும், திரைத்துறையில் இருக்கும் தனசேகரும் வெளிச்சத்தில் இருக்கிறார்கள் என்று நான் சொல்லி நண்பர்களுக்கு தெரியவேண்டியதில்லை.
நமது zoom நிகழ்வுகளில் ஜாம் ஜாமென்று அசத்தும் ஜாஜா, அதில் கதையெழுதிய ராஜகோபால்தான் என்று பின்னர் புரிந்துகொண்டேன். அவரிடம் இருந்து இப்பொழுது படைப்புகள் எதுவும் இல்லைதானே? மரபு இலக்கியம் முதல், இன்றைய எழுத்துக்கள் வரை வாசிக்கும், விமர்சன கருத்தை ஆழமாக வைக்கும் அவர் எழுதாமல் யார் எழுதுவது? அவரிடம் பேசும் வாய்ப்பு அமையும்பொழுது எல்லாம், அவரிடம், ‘எழுதுங்க ஜாஜா! எழுதுங்க!’ என்று சொல்லிக்கொண்டே உள்ளேன்.
புதியவர்களின் கதைகளில், ஆறாவது கதையான ‘பீத்தோவனின் ஆவி’ எழுதிய வேணு தயாநிதியும் அமைதியாகிவிட்ட ஒரு கடல் என்றே முதலில் நினைத்தேன். நவம்பர் முதல் வாரத்தில் , பதாகை மற்றும் சொல்வனம் இணைய இதழ்களில் வந்த அவரது படைப்புகளை குழுவினர் அனைவரும் வாசித்துவிட்டு, இவருக்கு ஒரு தனி இணைய நிகழ்வு அமைத்து கேள்வி கேட்போம் என்று முடிவு செய்தோம். நினைத்ததுபோல் அவர், அமைதியாக இல்லை. இடையில் நிறைய நல்ல கவிதைகள் எழுதியுள்ளார். அவர்தான், காஸ்மிக் தூசி என்பது நமக்குத் தெரிந்து இருக்க வேண்டும்.
‘சுடோகுயி’ என்ற அறிவியல் சிறுகதையை, புத்தம் புதிய பேசுபொருளில் சொல்வனம் இதழில் எழுதியுள்ளார். வாசிப்பே இல்லாமல் போய்விட்ட ஒரு காலத்தில் வாசிப்பின் அவசியத்தை தெளிவாக்க ‘சுடோகுயி’ விளையாட்டில், சரியான சொற்களை கண்டு சேர்த்து வரிகளை / கதையை உருவாக்கச் சொல்லும் கதை. நிகழ்வின் முடிவில், விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா) நண்பர்களின் ஒருமித்த கருத்து, இவரிடமிருந்து ஒரு நாவல் எதிர்பார்க்கலாம் என்பதே. அவரும் ஆமாம், எழுதிக்கொண்டிருக்கிறேன் என்று சொல்லியுள்ளார்.
எல்லாவற்றிர்க்கும் உச்சமாக, மாபெரும் ஆளுமைகளை அழைத்து இணையவழி நிகழ்வுகள் நடத்தியது, 2020-ஐ மறக்கமுடியாத இலக்கிய வருடமாக மாற்றியது. ஆறு நிகழ்வுகளும் அது அதெற்கென்று சிறப்பு பெற்றிருந்தன. நமது நிகழ்வில் முதல் நிகழ்வில், சிறப்பு விருந்தினராக பங்கு கொண்டு, பிறகு பார்வையாளராக வந்த எழுத்தாளர் அ.முத்துலிங்கம் , அ.கா. பெருமாள் நிகழவின் முடிவில், அனுப்பிய குறுஞ்செய்தி – “அ.கா. பெருமாள் நிகழ்வை சிறப்பாக நட்த்தினீர்கள்.அருமையான தகவல்கள். தொடருங்கள். மிக்க நன்றி”.
மிச்சிகன் மாநிலத்தை மையமாகக் கொண்டு இயங்கும், ‘தமிழ் ஆர்வலர்கள் குழு’-வைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர், எனக்கு அனுப்பிய குறுஞ்செய்தியில் இப்படிக் குறிப்பிட்டிருந்தார். “உங்கள் குழுவின் முன்னெடுப்பு நிகழ்வுகள், நாங்கள் நிகழ்வுகள் நடத்தக் கற்றுக்கொடுத்தன. வெண்முரசு முடிவில் ஜெ நிகழ்த்திய உரைகள், கேள்வி பதில்கள், முத்துலிங்கம் அய்யா அவர்களின் உரையாடல் போன்றவை. தனிப்பட்ட முறையில் நாஞ்சில் நாடன் அவர்களின் நிகழ்வு என் மனதிற்குள் இன்றும் அலையாடுகிறது.”
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம், இனி யார் நினைத்தாலும் நிறுத்தமுடியாத, அமெரிக்காவிலும் இலக்கியப் பயணம் செல்லவிருக்கும் தேர்! அமெரிக்கத் தேரில் பயணம் செய்ய விரும்பும் நண்பர்கள் தொடர்பு கொள்ளவேண்டிய மின்னஞ்சல்
தொலைபேசி எண் – 1-512-484-9369.
அன்புடன்,
ஆஸ்டின் சௌந்தர்