மீண்டும் ஈரட்டியில் மூன்றுநாட்கள் இருந்தேன். திருச்சியில் இருந்து பச்சைமலை வழியாக ஈரோடு சென்று அங்கிருந்து ஈரட்டி பங்களா சென்றோம். என்னுடன் கதிர்முருகன், ஜெயராம், யோகேஸ்வரன், அந்தியூர் மணி ஆகியோர் இருந்தார்கள்.
ஈரட்டியில் மழைக்காலம் இன்னும் முடியவில்லை. வானம் இருண்டு உறுமிக்கொண்டே இருந்தது. நாங்கள் கிளம்பிய அன்று மழை வந்துவிட்டது. மழைவெம்மை இருந்தமையால் குளிர் ஒப்புநோக்க குறைவுதான்.
பங்களாவின் முன்னால் இருந்த நிலத்தில் புதர்களை வெட்டிப்போட்டிருந்த விறகுகளைக்கொண்டு ‘காம்ப்ஃபயர்’ அமைத்தோம். முதல்நாள் சரியாக வெட்டி அடுக்காததனால் தீ எரியவில்லை. விறகும் கொஞ்சம் பச்சை. இருந்த மண்ணெண்ணையை விட்டு ஓரளவு எரியசெய்தோம்
மறுநாள் உள்ளே இருந்த எண்ணையை கொட்டி எரியச் செய்தோம். முன்பு தங்கியிருந்தவர்கள் சிக்கன் வறுத்த கடலை எண்ணை குருதிக்குழம்பு போல் இருந்தது. எதற்கும் பயன்படாது. கொழுந்தாடிய தீ விறகில் இருந்த ஈரத்தை ஆவியாக்கியபின் நாக்கு சுழற்றி உண்டு கூத்தாடியது.
நெருப்பு அணைந்தபின் நிலவு. கன்னங்கரிய காட்டின் இருளில் முழுநிலவு எழுவது ஒரு பெருந்தோற்றம், கலை, இலக்கியம் பற்றிய பேச்சுக்கள். வழக்கமான கிண்டல் கேலி. தூங்குவதற்கு சிலபேய்க்கதைகள்.
ஒரு நடை மாதேஸ்வரன் மலை சென்று வரலாம் என்றனர். ஈரட்டியிலிருந்து மாதேஸ்வரன்மலை செல்ல ஒரு புதிய வழி இப்போது உள்ளது.மாதேஸ்வரர் கன்னடத்தில் மலெ மாதேஸ்வரா என அழைக்கப்படும் ஒரு மெய்ஞானி. உத்தரராஜம்மாவுகும் சந்திரசேகர மூர்த்திக்கும் மகனாக ஆதி ஜாம்பவ குடியில் பிறந்தவர். லிங்காயத் மரபைச் சேர்ந்தவர். சுத்தூர் மடத்திலும் குந்தூர் மடத்திலும் இருந்தவர். அவர் ஸ்ரீசைலம் பகுதியைச் சேர்ந்தவர், அங்கிருந்து தெற்கே மைசூர் பகுதிக்கு வந்தார் என்று கருதப்படுகிறது
ஒரு புனிதராக மலைக்குடிகளால் கருதப்படும் மலே மாதேஸ்வரர் வேங்கைப்புலி மேல் ஏறி இங்கே வந்ததாகவும் இங்கே பலவகையான பேய்கள் வாதைகளை விரட்டி நோய்களை அகற்றி மக்களை காப்பாற்றியதாகவும் செய்திகள் சொல்கின்றன. மைசூர் பகுதி மலைகளில் வாழ்ந்த பழங்குடிகளை லிங்காயத்துகளாக ஆக்கியவர் அவர்தான். இன்று மைசூர் முதல் சத்யமங்கலம் வரையிலான மலைகளில் சோளகர் உட்பட பல குடிகளில் இருந்து வந்த லிங்காயத்துக்களே மிகுதி. அவர் அம்மக்களுக்கு தன்னம்பிக்கையை, உயர்வுணர்வை அளித்தார். அவர்கள் இன்று மிக ஆசாரமான சைவக்குடியினர்
மலை மாதேஸ்வரர் பற்றிய தொன்மம் அவரை பற்றிய மலேமாதெஸ்வர சரிதா என்னும் வாய்மொழிக் கதையில் உள்ளது. இன்று நூலாகியிருக்கிறது. மாதேஸ்வரர் வருவதற்கு முன்பு இம்மலைமக்களின் எல்லா தேவர்களையும் ஷ்ராவன என்ற பூதம் பிடித்து ஏழு மலைகளிலாக கட்டி வைத்திருந்தது. தன் தவ வல்லமையால் அவர்களை விடுவித்த மாதேஸ்வரர் மலைமக்களுக்கு தெய்வங்களை திருப்பி அளித்தார். அவர்களின் நிலங்கள் மீண்டும் செழிப்படைந்தன
[இந்தக்கதை அப்படியே திபெத்திய பௌத்தத்தின் முதல் ரிம்போச்சே எனப்படும் பத்மசம்பவர் கதைக்குச் சமானமாக உள்ளது. அவரும் புலிமேல் சென்று பூட்டானில் இறங்கி ஏழு மலைகளில் இருந்த ஏழு பூதங்களை வென்று பூட்டான் மக்களை விடுவித்து பௌத்தத்தை நிறுவினார். புலிமேல் அவர் வந்திறங்கிய இடம்தான் புலிக்குகை விகாரை.வடகிழக்கு நோக்கி 9, ஒரு மாவீரரின் நினைவில்]
இந்த ஏழு மலைகளில் ஒன்று மேட்டூருக்குமேலே இருக்கும் மாதேஸ்வரன் மலை. ஈரட்டி, தாமரைக்கரை , தேவர்மலை பகுதிகளிலேயே மூன்று மாதேஸ்வரர் ஆலயங்கள் உள்ளன. இந்த ஆலயங்கள் மாதேஸ்வரர் நிறுவிய சாலூர் மடத்தின் பொறுப்பில் இருந்தன. இன்று அரசு நிர்வாகத்தில் உள்ளன. மாதேஸ்வரர் பொயு பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்திருக்கலாம்.
மாதேஸ்வரர் ஆலயம் மலைக்குடிகளால் எப்போதும் மொய்க்கப்பட்டிருக்கும். மொட்டைபோடுதல் வழக்கம். கொரோனோ காலமாக இருந்தாலும் நல்ல கூட்டம் இருந்தது. சிறிய கற்கோயில். சமீபகாலமாக அதை கான்கிரீட்டில் விரிவாக்கி கட்டியிருந்தனர். சென்ற செப்டெம்பரில் சென்ற மலைமாதேஸ்வரா கோயில் [பி.ஆர்.ஹில்ஸ்] போலவே தோன்றியது. ஒரு மலையுச்சியில் காடு சூழ அமைந்த கோயில் இது
மாதேஸ்வரர் ஆலயத்தின் பூசகர்கள் மலைக்குடிகளில் இருந்துவந்தவர்கள். மையப்பிரதிஷ்டை சிவலிங்கம். பூசனை முறைகளும் முழுமையாகவே வீரசைவ மரபைச் சேர்ந்தவை. ஆனால் இன்று இது லிங்காயத் மரபுக்குள் ஒரு தனிமரபாக நிலைகொள்கிறது. மிகப்பெரிய பொதுக்கூடம், அன்னதான சத்திரம்.
நாங்கள் சென்றபோது நல்ல வெயில். அந்த கொதிக்கும் தரையில் ஒருவர் உருள்வேண்டுதல் செய்துகொண்டிருந்தார். உடன் அவருடைய மகனும் உருண்டுகொண்டிருந்தான். மனிதன் தனக்கு நேர்ந்த துயரை தண்டனை என நினைக்கிறான். தன்னைத்தானே தண்டித்துக்கொள்வதன் வழியாக தன்னை மேற்கொண்டு தண்டிக்காதபடி செய்கிறான். மூடநம்பிக்கை எனலாம், ஆனால் உலகம் முழுக்க இவ்வழக்கம் உள்ளது. கனடாவில் மாண்ட்ரியல் குன்றில் முழந்தாளிட்டே மேலேறும் வெள்ளையரை கண்டிருக்கிறேன்
மாதேஸ்வரரை தரிசித்துவிட்டு மீண்டும் ஈரட்டிக்கு திரும்பினோம். மலைக்காடுகளின் வழியாக சுழன்று சுழன்று சென்று வானில் இருந்த ஓர் ஆலயத்தை வழிபட்டு திரும்பிவந்ததுபோல் உணர்ந்தோம்