வணக்கம் ஜெமோ,
அபயா வழக்கு குறித்து நீங்கள் எழுதியிருக்கும் Post ல் இரண்டு நாயகர்கள் என்று எழுதியுள்ளீர்கள். ஒரு முக்கியமான திருத்தம். மூன்று நாயகர்கள். Adakka Raju என்ற திருடனை நீங்கள் விட்டுவீட்டிற்கள்.
அடைக்கா ராஜு தான் இந்த Crime scene ன் முக்கிய சாட்சி. அதாவது மிஞ்சி இருந்த ஒரே சாட்சி. இது குறித்து எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன்
தருண் வாசுதேவ்
அன்புள்ள தருண்,
இங்கே கொலையை துப்பறிந்து உண்மையை கண்டறிவது வேறு. நீதிமன்றத்தில் அதை ஐயம் திரிபற நிரூபிப்பது வேறு. நீதிமன்றம் வைத்திருப்பது நூற்றைம்பது ஆண்டு பழைமையான குற்றவியல்சட்டம். அங்கே எங்கே எந்த குற்றம் நடந்தாலும் கண்ணால் பார்த்த சாட்சி இல்லையேல் குற்றவாளிகள் விடுதலை செய்யப்படுவார்கள். ஆகவே பெரும்பாலான வழக்குகளில் திருடர்களே சாட்சிகளாகிறார்கள்.
இவ்வழக்கை திறம்பட நீதிமன்றம் வரை கொண்டுவந்த எஸ்பி. நந்தகுமார் பாராட்டுக்குரியவர். ஆனால் அது அவர் தொழில், நான் சுட்டுவது அறத்தையும் தன் கடமையாக கொண்டவர்களைப்பற்றி மட்டுமே
அன்புள்ள ஜெ,
அபயா கொலைவழக்கு போலவே தமிழகத்தில் அதிகாரக் கைகள் ஊடாடிய பெரிய வழக்குகள் சங்கர்ராமன் கொலை வழக்கு, தா.கிருஷ்ணன் கொலைவழக்கு, தினகரன் இதழாளர்கள் எரிப்பு வழக்கு, சாதிக்பாட்சா சாவு வழக்கு. இவை அனைத்திலுமே சாட்சிகள் அனைவருமே பிறழ்சாட்சி ஆனார்கள். இறந்தவர்களின் குடும்பத்தினரே வாக்குமூலத்தை மாற்றிக்கொண்டார்கள். ஒரு மாற்றுக்குரல்கூட எழவில்லை. அரசியல்வாதிகள் கத்தினார்களே ஒழிய நீதிக்காக எவரும் பொதுவில் துணிந்து நிலைகொள்ளவுமில்லை. உங்கள் கட்டுரையை வாசிக்கையில் அதைத்தான் நினைத்துக்கொள்கிறேன்
எஸ். சங்கர்