[ராத்ரிமழை. கே.எஸ்.சித்ரா]
அஞ்சலி- சுகதகுமாரி
இரவுமழை
வெறுமே விம்மியும் சிரித்தும்
விசும்பியும் நிறுத்தாமல்
முணுமுணுத்தும் நீள்கூந்தல் சுழற்றியும்
குனிந்து அமர்ந்திருக்கும்
இளம் பித்தியைப்போல
இரவுமழை
மெல்ல இந்த மருத்துவமனைக்குள்
ஒரு நீண்ட விம்மலென
பெருகிவந்து
சாளரவிரிசலின் வழியாக
குளிர்ந்த கைவிரல் நீட்டி
என்னை தொடும்
கரிய இரவின்
துயர் நிறைந்த மகள்
இரவுமழை
நோவின் முனகல்கள்
அதிர்வுகள்
கூரிய ஓசைகள்.
திடீரென்று ஓர் அன்னையின்
அலறல்.
நடுங்கி செவிகளை மூடி
நோய்ப்படுக்கையில் உருண்டு
நான் விசும்பும்போது
இந்த பேரிருளினூடாக
ஆறுதல் வார்த்தைகளுடன்
வந்தணையும்
பிரியத்திற்குரிய எவரோ போல.
யாரோ சொன்னார்கள்
வெட்டி அகற்றலாம்
சீர்கெட்ட ஓர் உறுப்பை.
சீர்கெட்ட இந்த
பாவம் நெஞ்சத்தை என்ன செய்ய?
இரவுமழை
முன்பு என் இனிய இரவுகளில் என்னை
சிரிக்கவைத்த
மெய்சிலிர்க்கவைத்த
வெண்ணிலவைவிட அன்பை அளித்து
உறங்கவைத்த அன்றைய காதல்சாட்சி
இரவுமழை
இன்று என் நோய்ப்படுக்கையில்
துயிலற்ற இரவுகளில்
இருளில்
தனிமையில்
அழவும் மறந்து
நான் உழலும்போது
சிலையென உறையும்போது
உடனிருக்கும்
துயரம்நிறைந்த சாட்சி
இரவுமழை!
இரவுமழையிடம் நான் சொல்லிக்கொள்கிறேன்
உன் துயரத்தின் இசையை நான் அறிகிறேன்
உன் கருணையும்
அடக்கிக்கொண்ட சீற்றமும்
இருளில் உன் வருகையும்
தனிமையின் விம்மல்களும்
விடியும்போது முகம்துடைத்து
திரும்பிச்செல்லும் உன் அவசரமும்
ரகசியப்புன்னகையும் பாவனைகளும்
எனக்குத்தெரியும்
எப்படி அறிகிறேன் என்கிறாயா
தோழி
நானும் உன்னைப்போலத்தான்.
இரவுமழைபோலத்தான்.
ராத்ரி மழை. கே.எஸ்.சித்ரா
படம் ராத்ரிமழை
இசை ரமேஷ் நாராயண்