மலையாளக் கவிஞர், சூழியல் களப்போராளி, பெண்ணுரிமைப்போராளி, ஆதரவிழந்தோர் சேவையின் முன்னோடி என பலமுகங்கள் கொண்ட சுகதகுமாரி இன்று மறைந்தார். கோவிட் தாக்குதல் இருந்தது. நலமடைந்துவந்ததாகச் சொன்னார்கள். கோவிட்டுக்குப் பிந்தைய உடற்சிக்கல்களால் இறப்பு.
1934ல் சுதந்திரப்போராட்ட வீரரும் முன்னோடிக் கவிஞருமான போதேஸ்வரனின் மூன்று மகள்களில் ஒருவராகப் பிறந்தார். அன்னைபெயர் வி.கே.கார்த்தியாயினி. சுகதகுமாரியின் தமக்கை ஹ்ருதயகுமாரி கல்வியாளர், பண்பாட்டு ஆய்வாளர். தங்கை சுஜாதா கவிஞர், சூழியல்போராளி. மூவருமே பேராசிரியைகளாகப் பணியாற்றியவர்கள்.
மலையாளத்தின் புதியகவிதை இயக்கத்தின் பெண்குரல் சுகதகுமாரி. 1962ல் வெளிவந்த புதுமுளகள் [புதியகுருத்துகள்] என்னும் நவீனக்கவிதை தொகுதியில் இடம்பெற்ற அன்றைய புதியகவிஞர்களில் சுகதகுமாரி மட்டுமே பெண். பின்னர் கவிஞராக பெரும்புகழ்பெற்றார். சூழியல்போராட்டத்திற்காக பிரகிருதி சம்ரக்ஷண சமிதி என்னும் அமைப்பை உருவாக்கினார். ஆதரவற்ற பெண்களுக்காக அபயா என்னும் அமைப்பையும் உருவாக்கினார். இன்று கேரளத்தின் முதன்மையான சேவை அமைப்புகளாக அவை செயல்படுகின்றன.
சுகதகுமாரிக்கு அஞ்சலி.