எம்.வேதசகாயகுமார் அஞ்சலிக்கூட்டம்-நாகர்கோயில்

வேதசகாயகுமார்- ஒரு நூல்

வேதசகாயகுமார் மறைந்து ஐந்து நாட்களே ஆகின்றன. அதற்குள் அவர் இன்னொருவராக மாறிவிட்டார். மறைவு ஒருவரை தொகுத்துவிடுகிறது. முக்கியமானவற்றை மட்டும் எஞ்சவைத்து கூர்கொள்ளச் செய்கிறது. இறந்த நாளில் இறந்துவிட்டார் என்னும் எண்ணம் மட்டும்தான். அது ஓர் அலைக்கழிதல், ஒரு வகை திணறல். அதை எப்படியாவது கடந்துவிடவேண்டும் என்னும் தவிப்பு

அதைக் கடந்தபின் அவருடைய நினைவுகள் செறிவுகொண்டு நின்றிருக்கின்றன. அவருடைய இன்மையை அவை வந்து நிறைக்கின்றன. அவரை மீண்டும் மீண்டும் வெவ்வேறு தருணங்களுடன் தொடர்புபடுத்தி நினைத்துக்கொண்டே இருக்கிறேன்.

அவருக்கு ஓர் அஞ்சலிக்கூட்டம் நடத்தவேண்டும் என எண்ணினேன். அவருக்கு 60 ஆண்டு நிறைவுவிழாவை இந்நகரில் நானும் அருண்மொழியும் பொறுப்பேற்று நடத்தினோம். 2009 செப்டெம்பரில். அவருடைய மாணவர் சஜனிடம் கேட்டேன். இலைகள் அமைப்பும் இன்று ஓரு அஞ்சலிக்கூட்டத்தை நடத்துவதாகச் சொன்னார். அதற்குச் செல்லலாம் என்று முடிவுசெய்தேன். முடிந்தால் இம்மாதமே கோவையில் விஷ்ணுபுரம் அமைப்பின் சார்பில் ஓர் அஞ்சலிக்கூட்டம் நடத்தலாமென எண்ணம்.

வேதசகாயகுமார் கடைசி பத்தாண்டுகளில் நாகர்கோயிலில் இரண்டு இலக்கிய அமைப்புக்களில் தீவிரமாக ஈடுபடுபவராக இருந்தார். ஜே.ஆர்.வி எட்வர்ட் நடத்தும் அனக்கம் என்னும் அமைப்பு. வழக்கறிஞர் பாலசுப்ரமணியம் நடத்தும் இலைகள் என்னும் அமைப்பு.

இலைகள் அமைப்பின் சார்பில் இன்று [22-12-2020]  வேதசகாயகுமாருக்கு ஓர் அஞ்சலிக்கூட்டம் நாகர்கோயிலில் ராமவர்மபுரத்தில் அமைந்துள்ள பாரதி புத்தகாலய வளாகத்தில் நடந்தது. கூட்டத்தில் முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்

பாலசுப்ரமணியம் முகப்புரை நிகழ்த்தினார். முறையான பேச்சாளர் அறிவிப்பு ஏதுமில்லை, வேதசகாயகுமார் குறித்த நினைவுகளை பகிர்ந்துகொள்ளலாம் என்றார். வேதசகாயகுமாருடன் எப்போதும் விவாதத்திலும் அணுக்கத்திலும் இருந்தவரான குமாரசெல்வா முதலில் தன் அனுபவங்களை பகிர்ந்துகொண்டார் பச்சைத்தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் [கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராளி] வேதசகாயகுமார் அவருடைய கல்விக்கு உதவியது முதலிய நினைவுகளை முன்வைத்தார்

நான் பத்துநிமிடம் வேதசகாயகுமாருடன் எனக்கிருந்த நெருக்கத்தையும் நாங்கள் இணைந்து சொல்புதிதை நடத்தியதையும் பற்றிப் பேசினேன். தொடர்ச்சியாக நண்பர்கள் வேதசகாயகுமார் குறித்த நினைவுகளை முன்வைத்தனர். பெரும்பாலானவர்களுக்கு அவர் ஆய்வு முன்னோடியாக, ஆசிரியராகவே அறிமுகம். அவருடைய நூல்கள் கட்டுரைகள் சார்ந்து எவரும் கருத்துக்களை முன்வைக்கவில்லை. அவருடைய உரையாடல்கள் வழியாக தாங்கள் அடைந்தவை, முரண்பட்டவையே அவர்களால் கூறப்பட்டன

என் உரையிலும் அதையே சொன்னேன். வேதசகாயகுமார் முதன்மையாக ஓர் பேராசிரியர். வகுப்பெடுப்பதே அவருடைய வெளிப்பாட்டு வடிவம். வகுப்பிலும் தேர்ந்த மாணவர்களுடனான அந்தரங்கமான நீண்ட உரையாடலே அவருடைய வழி. அவருடைய ஆசிரியர் பேராசிரியர் ஜேசுதாசனின் வழியும் அதுவே. ஓய்வுக்குப் பின்னரும், வாழ்நாள் முழுக்க அவர் பேராசிரியராகவே வாழ்ந்தார். பேசிக்கொண்டே இருந்தார். மாணவர்களையே தேடிக்கொண்டிருந்தார்.

அவரிடம் முனைவர் பட்ட ஆய்வுசெய்ய உதவிகோரி வந்துகொண்டே இருந்தனர். உயிர்நீத்த நாள் அன்றுகூட வந்திருந்தனர். அவருடன் வெவ்வேறு பேசுபொருட்கள் சார்ந்து விவாதித்தபடியே இருந்தனர். அவருடைய ஆசை என்பது கற்பித்தபடியே உலகுவிட வேண்டும் என்பது, அது நிகழ்ந்தது என்றே கொள்ளவேண்டும்

அவர் பெரிதாக எழுதவில்லை என்பதுதான் உண்மை. அவர் செய்த ஆய்வின் ஐந்துசதவீதம்கூட நூலாகவில்லை. எழுதுவதற்குச் சலிப்புள்ளவர். சொல்லிச் சொல்லி நான் சொல்புதிதில் எழுதவைத்த கட்டுரைகளே அவருடைய முதன்மைக்கொடைகளாக இன்று தெரிகின்றன. தமிழ்ச்சிறுகதை வரலாறு அவர் இளைமையில் எழுதிய கூர்மையான விமர்சன நூல்.

நான் என் உரையில் சொன்னேன். அவர் எழுதாதுபோனமை வருத்தமளிப்பது. ஆனால் அப்படித்தான் சென்றகால பேராசிரியர்கள் பலரும் இருந்தனர். வகுப்பில் முழுமையாக வெளிப்பட்டனர். தங்கள் மாணவர்களிலேயே பதிவுகளை விட்டுச் சென்றனர். மாணவர்கள் வழியாகவே வாழ்ந்தனர். வேதசகாயகுமார் அவ்வண்னம் வாழ்வார்

 

முந்தைய கட்டுரைசுரேஷ்குமார இந்திரஜித்- அகதைசொல்லியின் பாதை
அடுத்த கட்டுரைஅஞ்சலி- சுகதகுமாரி