சுரேஷ்குமார இந்திரஜித்- அகதைசொல்லியின் பாதை-1
[ 2 ]
நகுலனின் கதைகளில் இருந்து சுரேஷ்குமார இந்திரஜித் கதைகளுக்கான பொதுச்சரடுகள் என்னென்ன? ஜீரோ நெரேஷன் என்று சொல்லப்படும் குறைவாகச் சொல்லும், ஒன்றுமே சொல்லாத கதைசொல்லல்முறை. வெறும் கூற்று [ account ]ஆகவே நிலைகொள்ளும் புனைவுமொழி. கதைமாந்தர், கதைச்சூழல் இரண்டையுமே தெளிவாக நிறுவுவதில்லை.ஆகவே பெரும்பாலான கதைகள் தன்னிலைக்கூற்றாக அமைந்துள்ளன. இந்த ‘கூற்று’ முறை புனைவு தமிழின் புனைவெழுத்தாளர்களில் சுரேஷ்குமார இந்திரஜித்திலேயே பெரும்பாலும் காணக்கிடைக்கிறது. இதுவே அவருடைய தனித்தன்மை, அது நகுலனிடமிருந்து தொடர்ச்சி கொண்டது
நகுலனுக்கு அப்பால் ஏதேனும் முன்தொடர்ச்சியை கண்டடைய முடியும் என்றால் மௌனியின் சிலகதைகளச் சொல்லலாம். அதாவது கற்பனாவாத வீச்சு இல்லாமல் யதார்த்தச் சித்தரிப்பாக மௌனி எழுதிப்பார்த்த கதைகள். மௌனியின் கற்பனாவாதக் கதைகளிலேயே கூட, அந்த உளஎழுச்சியும் அகமர்மங்களும் துலங்காத இடங்களில் கதைகளின் மொழிநடையும் கூறுமுறையும் நகுலனுக்கு அணுக்கமானவையாக, குறைவுபடச் சொல்லும் தன்மைகொண்டவையாகவே உள்ளன.
வாழ்க்கையைச் சித்தரிக்காமல் வாழ்க்கையின் ஒரு தருணத்தை, அதன் உள்ளடுக்குகளில் சிலவற்றை மட்டுமே சொல்லமுயல்பவை இக்கதைகள். அவ்வாறென்றால் வாழ்க்கைப்புலத்தை வாசகன் எங்கிருந்து எடுத்துக்கொள்வது? க.நா.சு, நகுலன் ஆகியோர் ஏற்கனவே எழுதப்பட்ட புனைவிலக்கியங்களை பின்னணியாக அமைக்க முயல்கையில் சுரேஷ்குமார இந்திரஜித் ஏற்கனவே எழுதப்பட்ட பலவகையான கதைகளும் அன்றாடச் செய்திகளும் சேர்ந்து வனைந்து நம்முன் நிறுத்தியிருக்கும் பொதுப்புனைவான சமகாலத்தை தன்னுடைய சுட்டுவெளியாகக் கொண்டிருக்கிறார். இதுவே வேறுபாடு
சுரேஷ்குமார இந்திரஜித்தின் அலையும் சிறகுகள் என்ற முதல் தொகுதி வெளியானபோது எழுந்த முதல்வினாவே ‘இந்தக்கதைகள் எங்கே நிகழ்கின்றன?’ என்பதுதான். அக்கதைகள் நின்றுபேசும் நிலவெளி, வாழ்க்கைப்பின்னணி தமிழுக்கு முக்கியமானது. ஏனென்றால் தமிழின் நிலவெளி பெரிதாக எழுதப்பட்டது அல்ல. ஐரோப்பாவில் அனேகமாக எல்லா நிலப்பரப்பும், வாழ்க்கைவெளியும் புனைவால் மிகப்பெரிய அளவில் சித்தரிக்கப்பட்டுவிட்டது. சொல்லப்போனால் ஐரோப்பாவின் நிலத்தை விட அதன்மேல் உருவான புனைவுவெளி மிகப்பெரியது. புனைவுகளால் ஐரோப்பாவை அறிந்த ஒருவன் நேரில் சென்று பார்க்கும்போது துணுக்குறச்செய்யும் அளவுக்கு அது சிறிதாக இருப்பதையே உணர்வான்.
இந்தியநிலம், தமிழ்நிலம் மிகக்குறைவாகவே சித்தரிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் நவீன இலக்கியம் இங்கே உருவாகியே நூறாண்டுகள்தான் ஆகின்றது.நிலத்தையும் வாழ்க்கையையும் யதார்த்தமாக, நிகரனுபவமாக சித்தரிப்பது நவீன இலக்கியத்தின் வழிமுறை. பண்டைய இலக்கியங்கள் அவற்றிலிருந்து குணம்சார்ந்த ஒரு அகவயச்சித்திரத்தையே உருவாக்கிக் கொள்கின்றன. அவற்றிலிருந்து நுட்பமாக விரித்துக்கொண்டே செல்கின்றன. பலாப்பழம் தாழைமரத்தில் விழுந்து நீரில் விழுந்து வாளைகளுக்கு உணவாகும் நிலம் தமிழகத்தில் எங்கும் இருந்திருக்க வழியில்லை.
மதுரையையே எடுத்துக்கொள்வோம். மதுரையின் நிலவெளியை, வாழ்க்கையைச் சித்தரித்த நவீன எழுத்தாளர் யார்? ஜி.நாகராஜன் மதுரையில் வாழ்ந்தவர். ஆனால் அவருடைய புனைவுலகில் வரும் ஊர் திருநெல்வேலிதான். குறத்திமுடுக்கு, நாளை மற்றுமொருநாளே இரண்டுமே திருநெல்வேலியின் பின்னணிகொண்டவை- அவற்றில் குறிப்புகள் உள்ளன. நா.பார்த்தசாரதி குறிஞ்சிமலர் போன்றநாவல்களில் மதுரையின் ஒரு சித்திரத்தை அளித்திருக்கிறார். ஆனால் தமிழகத்தின் மிகத்தொன்மையான மாநகர் மதுரை இலக்கியத்தில் மிகக்குறைவாகவே சித்தரிக்கப்பட்டுள்ளது
ஆகவேதான் க.நா.சு நிலச்சித்தரிப்பு வாழ்க்கைச் சித்தரிப்புக்காக வாதாடினார். அவ்வண்ணம் எழுதப்பட்ட எல்லா படைப்புக்களையும் உடனே ஏற்றுக்கொண்டார். ஆர்.ஷண்முகசுந்தரத்தின் நாவல்களை அவர் உடனடியாக ஏற்றுக்கொண்டார்- அவற்றில் வெறுமே நிலமும் மக்களும்தான் இருந்தன. அப்பாதையையே வெங்கட் சாமிநாதனும் சுந்தர ராமசாமியும் தொடர்ந்தனர். உண்மையான நிலமும் வாழ்க்கையும் இருந்தமையால்தான் வெங்கட் சாமிநாதன் கு.சின்னப்பபாரதியின் தாகம், சோ.தர்மனின் கூகை போன்ற நாவல்களையும் சுந்தர ராமசாமி ஹெப்சிபா ஜேசுதாசனின் புத்தம்வீடு, இமையத்தின் கோவேறுகழுதைகள் போன்ற நாவல்களையும் விதந்துரைத்தனர்
ஏற்கனவே எழுதப்பட்ட நிலச்சித்தரிப்பின் வாழ்க்கைச் சித்தரிப்பின் பின்னணியில்தான் சார்பிலக்கியங்கள் நிலைகொள்ள முடியும். உதாரணமாக கல்கி,சாண்டில்யன் வகை சரித்திரமிகைபுனைவுகளை சார்ந்து ஓர் அங்கத எழுத்துவடிவே தமிழில் நிலைகொள்ளமுடியும். நகர்ப்புறப் பெண்களின் மென்பாலியல் கதைகளான லக்ஷ்மி இந்துமதி சிவசங்கரி ரமணிசந்திரன் முத்துலட்சுமி ராகவன் வகை எழுத்தின்மேல் ஒரு பகடியுலகையே எழுப்பிக்கொள்ளமுடியும். ஆனால் மதுரையின் பின்னணியில், மதுரையைச் சொல்லாமல் எப்படி ஒரு கதையை இன்று எழுதமுடியும்?
ஆகவேதான் ஆரம்பகட்டத்தில் சுரேஷ்குமார இந்திரஜித்தின் கதைகள் ஓர் அந்தரவெளியில் அலைவதாக கருதப்பட்டன. நிலமில்லாத, உருவகவெளியே நிலமென்று தோன்றும், மௌனியின் கதைகளுடன் அவை ஒப்பிடப்பட்டன.ஆனால் மௌனியின் கதைகளிலுள்ள கனவுத்தன்மை சுரேஷ்குமார இந்திரஜித் கதைகளில் இல்லை. மௌனியின் அகக்கொந்தளிப்பும் அவரிடமில்லை. அவை இல்லாத ஒரு நிலத்தில் எவரென்றே அறியாத மனிதர்களிடம் நிகழும் சில நிகழ்வுகள். அவற்றில் சிலவற்றுடன் வாசகர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள முடிந்தமையால் அவற்றுக்கு இலக்கிய கவனம் கிடைத்தது, ஆனால் அவற்றை தெளிவாக வரையறைசெய்துகொள்ள முடியவில்லை, அவற்றின் அகவுலகுக்குள் நுழைவதும் இயல்வதாக இருக்கவில்லை.
இந்த எல்லையை சுரேஷ்குமார இந்திரஜித்ரும் உணர்ந்திருக்கலாம். அவரும் அவ்வகையில் நிறைய எழுதவில்லை. அவருடைய எழுத்துலகு குறுகிவந்து தேய்ந்து நின்றுவிட்டது. அவருடைய படைப்புலகம் என்பது இருபது சிறுகதைகளுக்குள் தேங்கிவிட்ட ஒன்றாகவே இருந்தது. அதன்பின் ஓர் இரண்டாம்கட்டம் அவரிடம் தொடங்கியது. அதில் அவர் தன் கதைகளுக்கான சுட்டுவெளி ஒன்றை கண்டடைந்தார். அவை நிலைகொண்டன. அச்சுட்டுவெளியை இலக்கியப் புனைவுகளிலிருந்து எடுக்கமுடியாது என்று அவர் கண்டுகொண்டார். அதை அவர் சமகாலச் செய்திகள், சினிமாக்கள், மற்றும் பொதுவான பேச்சுக்ளில் இருந்து எடுத்துக்கொண்டார். அவை கூட்டாகப்புனையும் ஒரு நிலவெளியில் வாழ்க்கைப்புலத்தில் அவர் கதைகள் நிகழ்கின்றன
அலையும் சிறகுகள் கதை ஏன் மௌனி கதைகளுடன் ஒப்பிடப்பட்டது என்பதை இன்று வாசிக்கையில் உணரமுடிகிறது. ஒருவன் இரவில் வானைப்பார்த்து நிற்கிறான், நினைவுகளில் அலைகிறான். அவ்வளவுதான் கதை. அது மௌனியின் ‘டெம்ப்ளேட்’. அவன் [அவனுக்குப் பெயர்கூட இல்லை கதையில்] விடிந்ததுமே அந்த ஊரைவிட்டுக் கிளம்பிச் செல்லவிருப்பவன். குடியிருக்கிற வாடகைஅறையின் பால்கனியில் நின்றபடி வானத்தையும் நட்சத்திரங்களையும் தெருவையும் பார்த்தபடி எண்ணிக்கொள்கிறான். அவன் அந்த ஊரில் பார்த்த அனுபவங்கள், சில முகங்கள் ஆகியவை சார்ந்து நினைவுகள் ஓடுகின்றன. அவையும் அரிய அனுபவங்கள் அல்ல. சாதாரணமான உதிரி எண்ணங்கள்தான். நாளை என்ற ஒன்று அந்த நேற்றை முழுக்க இல்லாமலாக்கிவிடும்.
கதையில் அவன் புறாக்களை பார்ப்பதைப்பற்றி நினைத்துக்கொள்கிறான். ஜோடிப்புறாக்கள் என நினைவுகள் விரிகின்றன. அருகே உள்ள கிணற்றில் நீர் இறைக்கவரும் பெண்கள், பழைய செங்கல்பட்டு பயணம் ஒன்று, அதில் பார்த்த ஒரு புதுமணப்பெண். வேறொரு அழகியபெண். அப்படியே பலநினைவுகள். அருகிலிருக்கும் திரைப்பட அரங்கிலிருந்து மருமதமலை மாமணியே என்ற பாட்டு கேட்கிறது. முதல் காட்சி முடிந்து இரண்டாம் காட்சி தொடங்க இருப்பதன் அடையாளம் அது. சில கணங்களுக்குப் பிறகு, அவன் அறைக்குள் சென்று தயாராக விரித்துவைக்கப்பட்டிருந்த படுக்கையில் படுக்கிறான்.
இக்கதையில் ஒர் இரவின் உள்ள அலைவு மட்டுமே உள்ளது. மௌனிகதைகள் விதந்தோதப்பட்ட காலம் அது [அதற்கு முதன்மைக்காரணம் அன்று தமிழில் பெரிய செவ்வியல்நாவல்கள் வாசிக்கப்படவில்லை. மௌனிகதைகளின் அகப்பயணங்களை மிக எளிதாக அவற்றில் நாம் காணமுடியும்] அவற்றுடன் சுரேஷ்குமார இந்திரஜித்த்தின் இக்கதைகள் ஒப்பிடப்பட்டன. ஆனால் திரும்பத்திரும்ப இதை நிகழ்த்த முடியாது. ஏனென்றால் இவை மௌனி கதைகள்போலவே சார்புநிலை புனைவுகள்.
மௌனி கதைகள் எதன்மேல் நிகழ்கின்றன? அன்று தமிழில் வாசிக்கபட்ட புனைவுகளில் வரும் தனிமைப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட கதைநாயகனின் அகவுலகையே அவை சொல்கின்றன. மௌனியின் ‘அவன்’ ஏற்கனவே சரத்சந்திரர் முதல் கு.ப.ரா வரையிலான புனைவெழுத்தாளர்களால் நிறுவப்பட்டுவிட்டவன்.அவனுடைய அகக்குலைவுகளில் சொல்லப்படாத ஒரு மர்மப்புள்ளியை மௌனி சிலகதைகளில் தொட்டுவிடுகிறார் என்பதே அவற்றை இலக்கியமாக்குகிறது. பிறகதைகள் அளிக்கும் புறவுலகில் மௌனி அகவுலகின் ஓர் ஏட்டை செருகிவிடுகிறார்.
சுரேஷ்குமார இந்திரஜித்தின் அலையும் சிறகுகளில் உள்ள ‘அவன்’ யார்? அவன் அன்றைய இளைஞன், அன்று அத்தனை புனைவுகளிலும் வெவ்வேறுவகையில் அவன் வந்துகொண்டிருந்தான்.எழுபது எண்பதுகளின் தனிமைப்படுத்தப்பட்ட, ஒதுங்கிக்கொண்ட, கற்பனையும் நுண்ணுணர்வும்கொண்ட இளைஞன் அவன். தோல்வியடைந்தவன், தன் புண்களை வருடிக்கொள்பவன். வெவ்வேறு வகையில் அவன் அன்றைய புனைவுகளில் வந்துகொண்டிருந்தான்.வணிக இலக்கியங்களில்கூட. சுப்ரமணியராஜு, பாலகுமாரன்,தேவகோட்டை வா மூர்த்தி என ஓர் இளைஞரணி வணிக இலக்கியத்தில் புகுந்து அந்த அகவுலகை சற்று மிகைப்படுத்தி அங்கே எழுதி வாசகர்களைக் கவர்ந்தது
நான் அலையும்சிறகுகளை வாசிக்கையில் அன்று இயல்பாக இணைந்துகொண்ட ஒரு படைப்பு உண்டு, புஷ்பா தங்கத்துரையின் ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது.பின்னர் அதை நானே விலக்கிக் கொண்டேன். ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது கதைநாயகன் ஒருவகையான இலட்சியக்காதலை கனவுகாண்பவன், இக்கதையின் கதைநாயகன் வேறு. ஆனால் இன்று இக்கதையும் அந்த உணர்வுவெளியைச் சேர்ந்தது என்று படுகிறது. ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது மிகையானது, செயற்கையானது. ஆனால் அந்த உணர்வுநிலை அன்றைய யதார்த்தம். ஒரு புகையும் சிகரெட்டுடன் தனிமையிலாழ்ந்து, நினைத்துமகிழ ஓர் இனிய துயரத்துடன் அல்லது வெறுமையுடன் நின்றிருக்கும் இளைஞன்.அவ்விளைஞன் மேல் ஏற்றிவைக்கப்பட்டிருக்கிறது அலையும்சிறகுகள். ஆகவேதான் அது வாசகர்களால் அடையாளப்படுத்திக் கொள்ளப்பட்டது, விரும்பப்பட்டது.
சுரேஷ்குமார இந்திரஜித் அந்த முதற்காலகட்டத்திலிருந்து எழுந்து உருவாக்கிக்கொண்ட இரண்டாவது காலகட்டத்தில் அவருடைய கதைகள் புறவயமானவை என்றும் தெளிவானவை என்றும் வாசகர்களால் உணரப்பட்டன. ஆனால் உண்மையில் அப்படி அவை புறவயமாகவோ தெளிவாகவோ ஆகவில்லை. மாறாக அவற்றின் சுட்டுதளம் மட்டுமே தெளிவடைந்திருக்கிறது. அவை ஒரு சமகாலத்தன்மை கொண்டுவிட்டிருக்கின்றன, சமகாலப் பொதுவான புறவுலகப்புனைவில் அவை ஓர் இடத்தை கண்டடைந்து அங்கே தங்களை அமைத்துக்கொண்டிருக்கின்றன.
உதாரணமாக “முற்றுப்புள்ளி”. அமெரிக்காவில் வசதியாக வாழும் ராமசுப்பிரமணியன் விடுமுறையில் இந்தியாவிற்கு வரும்போது தனது இளமைப்பருவ நண்பனை சந்தித்து அவனிடம் தன் சின்னவயசு ஆதர்சமான ஒரு நடிகையைப் பற்றிச் சொல்கிறான். ஜெயசுந்தரி என்ற அந்நடிகை பொருளாதார ரீதியாக வீழ்ச்சி அடைந்து எங்கோ வாழ்கிறாள். அவளை தேடிக்கண்டுபிடிக்கச் செல்கிறார்கள். அவன் அவளுடைய விதவிதமான கவற்சிப்படங்களை ஒட்டிய ஒரு ஆல்பம் வைத்திருக்கிறான். அது பதின்பருவத்தினருடைய ஒரு மனநிலை. பதின்பருவத்தை விடாமல் வைத்திருக்கிறான் என்று பொருள். அவளைச் சந்திக்கிறார்கள். சாதாரணமான ஓர் உரையாடல். அந்த ஆல்பத்தை அவளிடமே விட்டுவிட்டு வருகிறான். பதின்பருவத்திலிருந்து விடுபட்டுவிடுகிறான்
இக்கதையை முந்தைய கதையிலிருந்து வேறுபடுத்தும்கூறு என்ன? இதில் கதைநாயகனுக்கு பெயர் இருக்கிறது. ராமசுப்ரமணியன் என்றபெயரே தமிழ்ச்சூழலில் பல அர்த்தங்களை அளிப்பது. அது உயர்சாதிப்பெயர்.சாதாரணமான நடுத்தரவர்க்கத்தை சுட்டும் ஒருபெயர். ஜெயசுந்தரி என்றபெயர் ஒரு புனைவுப்பெயர் என்பது தெளிவு. ஜெயசுந்தரி என பெயரிடுவதன் வழியாக ஜெயமாலினி, விஜயலலிதா என அன்றுவந்த நடிகைகளின் ஒரு நிரையை நினைவில் கிளற முடிகிறது. அந்நடிகையின் ஆளுமை, அவள் வாழ்க்கை எல்லாமே நாம் வழக்கமாகக தமிழ் சினிமாச்செய்திகளில், அரட்டைகளில் காணும் அதே சித்திரம்தான். ஆகவே எளிதாக இக்கதையின் புறவுலகை நாம் சமைத்துக்கொள்ள முடிகிறது.
சுரேஷ்குமார இந்திரஜித்தின் பிற்காலக் கதைகளின் முக்கியமான அம்சமே இதுதான். அவை பெரும்பாலும் செய்திகளை சுட்டுகின்றன. சமகால அரட்டையில் திகழும் பொதுச்சித்திரங்களிலிருந்து தொடர்கின்றன. ரெட்டைக்கொலை என்னும் கதை ஓர் உதாரணம். தமிழக தலித் அரசியல் முன்வைக்கும் ஒரு பெருஞ்சித்திரத்தின் மேல் கட்டப்பட்டுள்ளது இக்கதை. கொலையாளியாக காட்டப்பட்டிருக்கும் தலித் நிரபராதியாக இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். ஆனால் இக்கதையை வாசிப்பவர் எந்தவகையான ஊகத்தைச் செய்கிறார், எதை நிறுவ விரும்புகிறார் என்பதே முக்கியமானது.
இருகட்டங்களில் இரண்டாவது கட்டத்தில்தான் சுரேஷ்குமார இந்திரஜித் மிக அதிகமாக எழுதியிருக்கிறார்.அது இயல்பானது, புறவுலகம் என ஒரு சுட்டுகளத்தை கண்டடைந்ததுமே அது கருக்களை அள்ளிக்கொடுக்கத் தொடங்குகிறது. தினத்தந்தி ஒருவரின் புனைவின் சுட்டுகளமாக இருந்தால் ஒருநாளுக்கு ஐம்பது கதைகளை கண்டடையமுடியும். முன்பு அகத்திலிருந்து அகத்தை சுட்டவேண்டியிருந்தது. ஒரு புள்ளியில் மனம் கொள்ளும் சுழற்சி அன்றி வேறேதும் அதில் நிகழ முடியாது. ஆடி ஆடியை பிரதிபலித்தால் உருவாவது வெறுமைதான், அதன் வெற்றுச்சுழிப்புதான். இப்போது கலைடாஸ்கோப்புக்குள் சில வண்ணப்புள்ளிகள் வெளியே இருந்து போடப்படுகின்றன
ஆனால் சுரேஷ்குமார இந்திரஜித் அவருடைய புனைவுலகில் புறவுலகச் சிக்கல்களை பேசவே இல்லை. இரண்டாம் கட்ட கதைகளில் புறவுலகச் சித்தரிப்பை கொண்ட பல கதைகள் உள்ளன என்பது உண்மை.இரண்டு உதாரணங்கள். ஒரு திருமணம், அரங்கனை மணக்க கோதை சென்றதைப் பற்றிய கதை. அகவயமான உலகமேதும் இல்லை. அரங்கன் -கோதை உறவில் வழக்கமாக இருபார்வைகள் உள்ளன. ஒன்று அதன் தொன்மச்சித்திரம். இன்னொன்று அதன் பகுத்தறிவுச்சித்திரம். சுரேஷ்குமார் அந்த பகுத்தறிவுச் சித்திரத்தை ஒட்டிய ஒரு பார்வையை அளிக்கிறார், அது வழக்கமானதுதான்.
இன்னொரு கதை கணியன்பூங்குன்றனார். இதுவும் தமிழ் சமூகவியல் யதார்த்தத்தின் முகங்களாக சித்தரிக்கப்படும் பல காட்சிகளில் ஒன்றெனவே நிலைகொள்கிறது. திராவிட இயக்கம் உருவாக்கிய பிராமண எதிர்ப்பின் அடியில் இரண்டு அம்சங்கள் உள்ளன. ஒன்று, என்ன இருந்தாலும் பிராமணன் சாதுவானவன் கல்விகொண்டவன் ஆகவே உயர்ந்தவன் என்னும் மரபான பார்வை. அவனும் மனிதன் அல்லவா என்னும் நவீன மனிதாபிமானப் பார்வை. இரண்டுக்கும் நடுவே ஓரிடத்தில் கதையின் முடிவு நிகழ்கிறது. இதுவும் வழக்கமான ஒன்றே
இத்தகைய புறவயமான சித்தரிப்பு கொண்ட கதைகளில் ^ புதியதாக ஒன்றும் சொல்லவில்லை என்பதையே காண்கிறேன். மரபான பார்வையை மறுத்து அடியிலிருந்து பகுத்தறிவு அல்லது மனிதாபிமானம் சார்ந்த ஒரு பார்வையை மேலெடுக்கிறார். அல்லது ஒரு பகடியை கூறிநின்றுவிடுகிறார். மகாமகக்குளத்தில் பல்லாயிரம்பேர் ஓரே நாளில் நீராடவேண்டும் என முண்டியடிப்பதை காணும்போது அந்தக் குறியீட்டை, அந்த மனநிலையின் விசையை தவிர்த்து அந்தச் செயலில் இருக்கும் ஒட்டுமொத்தமான அபத்தத்தை மட்டும் பார்க்கும் பார்வை அவருடைய உலகில் நிகழ்கிறது
இரண்டாம்கட்ட கதைகளிலும் சிறப்பானவை என்று சொல்லத்தக்கவை அனைத்தும் அகவயமாக திரும்பிக்கொள்பவைதான். புறவயச் சித்தரிப்பை take for granted ஆக எடுத்துக்கொண்டு, அதன் நிகழ்வடுக்குகளுக்குள் புனைவால் நுழைந்து, அங்கே ஓர் அகவெளியைச் சமைக்கும் கதைகளிலேயே அவருடைய வெற்றி நிகழ்ந்திருக்கிறது. அவற்றைக்கொண்டே நாம் சுரேஷ்குமார இந்திரஜித்தை மதிப்பிடுகிறோம்.
[மேலும்]