உலகுக்குப் புறங்காட்டல்- கடிதங்கள்

உலகுக்குப் புறம்காட்டல்

பெண்கள் எழுதுதல்

பெண்கள் எழுதுவது- கடிதம்

உலகுக்கு புறம்காட்டல்- ஒரு கடிதம்

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
சில காலமாக தங்கள் இணையத் தளத்தை வாசித்து வருகிறேன். பல வேளைகளில் என்னையும் அறியாது கைகூப்பி, உளம் திறந்து உங்கள் எழுத்திலிருந்து ஞானத்தைப் பெறுகிறேன்.

“உலகுக்குப் புறம்காட்டல்” எனும் பகுதியில் சொல்லப்பட்ட பிரச்சனையும் எனது பிரச்சனையும் ஒன்றுதான். நான் விரும்பிய தளம் வேறு. நான் இன்று நிற்கும் தளம் வேறு. இந்தச் சமனற்ற தன்மையில், தனித்திருக்கையில், எனக்கு நானே என்னை உற்று நோக்குகையில், வெறுமையும், வருடங்களை இழந்த சோகமும், கதறி அழும் நிலையுமே மிஞ்சுகிறது. ஆனால், நான் உற்றார் உறவினர் கண்களுக்கு பெரும் வெற்றியாளன். இதற்கு, என்னைத் தவிர எல்லோரும் எனது வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்கள் எனும் பொருளன்றி, வேறெதுவுமில்லை.

இதைப்பற்றி நண்பர்களிடத்தில் பேசினால், உனக்காவது உனக்கு என்ன வேண்டுமென்று தெரிகிறது, எங்களுக்கு அதுவும் தெரியவில்லை – என்பதோடு வேறு பேச்சுக்குத் தாவி விடுகிறார்கள்.

இவ்வேளையில் “உலகுக்குப் புறம்காட்டல்” படித்தேன். அதை உள்வாங்கி அச்சிந்தனையில் நான் இருந்துகொண்டிருந்த தருணத்திலேயே, அதன் தொடர்ச்சியாக “வாசிப்பவர்கள் கடிதம்” – “செல்வேந்திரன் வாசித்தது எப்படி?” எனும் பகுதி வந்து, மேலும் என்னை அச்சிந்தனையில் நிலை நிறுத்தியது.

எனது இன்றைய சுழலிருந்து விடுபட்டு நான் விரும்பிய தளத்திற்குச் செல்வேன் எனும் எண்ணம் வலுப்பட்டு அதற்கான திட்டமும், காலவரையறையும் செய்யும் வேளையில் மிகுந்த அவநம்பிக்கையும், மனச்சோர்வும் ஏற்பட்டது. காலை எழுந்ததிலிருந்து எவ்வேளையும் செய்யாமல் கிடந்தபோது, எதுவோ ஒன்று உந்தித் தள்ள உங்கள் தளத்திற்கு வந்தேன்.

“உலகுக்குப் புறம்காட்டல்” எனும் பகுதியில், இன்னுமொரு தொடர்ச்சியாக “பெண்கள் எழுதுதல்” பகுதி எழுதியிருந்தீர்கள்.

“எச்செயலிலும் முழு ஆர்வம் இருக்காது. ஓரத்தில் கொஞ்சம் அவநம்பிக்கையும் ஆர்வமின்மையும் இருக்கும். ஆனால் அவற்றை சொல்லக்கூடாது. நமக்குநாமே கூட சொல்லிக்கொள்ளக் கூடாது. எவ்வகையிலும் வளர்க்கக்கூடாது. கூடுமானவரை வெல்ல, கடக்க முயலவேண்டும். இல்லையேல் அந்த ஆர்வமின்மை வளர்ந்து உங்களை ஆட்கொள்ளும். செயல்களை பொருளற்றதாகக் காட்டும்.”

“தீவிரத்தன்மைகுறைவு, முழுமையாக செயலில் தன்னை ஒப்படைத்துக்கொள்வதில்லை”

“உள்ளத்தை அளிக்கவேண்டியதுதானே? நீங்களே மகிழும்படி எதையாவது சாதித்துவிட்டால் உங்கள் உலகப்பார்வையே மாறிவிடும். அதன்பின் இன்றிருக்கும் அக்கறையற்ற, தன்னை சலித்துக்கொள்ளும் உளநிலையே அகன்றுவிடும். உங்களைச் சூழ்ந்திருக்கும் உலகமே இன்னொன்றாகத் தெரியத்தொடங்கும். இன்றுவரை சுவாரசியமற்றவை எனத்தோன்றிய பலவும் மகிழ்ச்சிநிறைந்தவையாக மாறிவிடும். அதற்கு நீங்கள் உங்கள் ஆர்வமும் திறமையும் எங்கே என கண்டடையவேண்டும்.“

“அதற்கு தொடர்ந்த உழைப்பை அளித்தேயாகவேண்டும்.”

“இன்னும் பெரிதாக கனவுகாணுங்கள். இன்னும் தீவிரமாக முயலுங்கள். முட்டையின் கூட்டை உடைக்க கருவடிவிலிருந்து முளைக்கும் குஞ்சுக்கு ஒரே வழிதான் உள்ளது – வளர்வது, சிறகுகொள்வது”

இவை எனக்காகவே எழுதப்பட்ட எழுத்துக்கள். உத்வேகமும் எழுச்சியும் பெற்றேன். கரம் கூப்பி நன்றி சொல்கின்றேன் ஆசானே.

இதுவே நான் உங்களுக்கு எழுதும் முதல் கடிதம். பல வேளைகளில் எழுத நினைத்தாலும் ஒரு தயக்கம் இருந்தது. இன்று, உங்கள் எழுத்தின் மூலமாக இந்த உத்வேகத்தையும், எழுச்சியையும் பெற்ற பின்னரும் கடிதம் எழுதாமல் இருப்பது நீதியாகாது என்பதனால் தயக்கம் உடைத்து எழுதிவிட்டேன்.

நன்றியுடன்
செல்வக்குமார்.

அன்புள்ள செல்வக்குமார்,
நான் பார்த்தவரை இத்தகைய தயக்கநிலை ஒரு கட்டத்தில் வராதவர்கள் இல்லை. 1982 வாக்கில் எனக்கும் இந்நிலை இருந்தது. பின்பு அதை உடைத்துக்கொண்டு விரும்பிய அனைவரையும் சென்று தயக்கமில்லாமல் சந்தித்தேன். இந்தியாவின் மாபெரும் ஆளுமைகளைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இன்று எண்ணும்போது திகைப்பும் நிறைவும் எஞ்சுகிறது. முழுவீச்சுடன் செயலில் புகுந்தேன். நான் விழைவதை இயற்றினேன். இன்று நினைக்கையில் பொழுதுவீணாகவில்லை என்னும் நிறைவு உள்ளது

தயக்கம் இயல்பானது. வென்று முதல் அடி எடுத்துவைப்பது எத்தனை விசையுடன் எத்தனை விரைவாக என்பதே கேள்வி. அதை உண்மையில் அப்பா அம்மாவே சொல்ல முடியும். ஆனால் பலசமயம் அக்குரல் நமக்கு மிக வெளியே இருந்து வரவேண்டுமென நாம் எதிர்பார்க்கிறோம். ஆகவே ஓர் ஆசிரியர், எழுத்தாளர் அதைச் சொல்லவேண்டுமென்று தோன்றுகிறது.

ஜெ

 

அன்புள்ள ஜெ
உலகுக்குப் புறம்காட்டல் ஒர் அரிய கட்டுரை. நான் கதை, கவிதைகள் எழுதுபவள் அல்ல. ஆனால் அந்தக்கட்டுரையின் சாராம்சம் எனக்கு நிறைவை அளித்தது. அது முக்கியமான ஒன்று என்று தோன்றியது. நம் வாழ்க்கையின் மிக அந்தரங்கமான ஒரு பக்கம் உண்டு. அங்கேதான் நாம் வாழ்கிறோம். நம் கனவுகளின் உலகம் அது. அங்கே நாம் எவர் என்பதை நாம் எவருக்கும் காட்டவேண்டியதில்லை. அது தேவையில்லாமல் சிக்கல்களைத்தான் உருவாக்கும். அந்த இடத்தை பாதுகாப்பதற்காக மற்றவாழ்க்கையை ஒரு கோட்டைபோல கட்டிக்கொள்ளலாம். அங்கே கேட்கிற அனைவருக்கும் அவர்கள் கேட்கிற கப்பத்தை எல்லாம் கட்டிவிடலாம். நம் ஆத்மாவை நாம் பாதுகாத்துக்கொள்வதே முக்கியமானது.
நன்றி
வி

முந்தைய கட்டுரைகுழந்தைகளும் குருதியும்
அடுத்த கட்டுரைமும்பை எனும் மகாலட்சுமி