முதற்கனலும் நீலமும் – முனைவர் ப. சரவணன்


‘வெண்முரசு’ நாவல்தொடரில் முதல் நாவல் ‘முதற்கனல்’. இந்த நாவலைப் பொறுத்தவரை ‘கனல்’ என்பது, நெருப்பால் ஆனது அல்ல; வெறுப்பால் ஆனது. பெருந்துயருற்றவர் அடையும் வெறுப்பு அவருக்குள்ளாகவே மிகுந்து மிகுந்து அளவு மீறிச் செல்லும்போது, அது ஆலகாலவிஷமென அவரின் நெஞ்சில் இறங்கி, தங்கி விடுகிறது. அவரின் உடலைச் சிதையில் எரித்தபோதும்கூட அந்த வெறுப்பின் விஷம் மட்டும் காய்ந்து, அழியாமல் தாமரையிலையின் மீது உருளும் நீர்த்துளியென உயிர்ப்போடு, தான் உருப்பெற காரணமாக அமைந்தவர்களை அழித்தொழிக்கத் தருணம் பார்த்துக்கொண்டு, காலவெளியில் நிலைகொண்டிருக்கும்.

‘திரௌபதியின் கண்ணீர்தான் மகாபாரதம்’ என்று பொதுவாக நாம் புரிந்து வைத்திருப்போம். துரௌபதி போன்றே காலவெளியில் நிறைந்து ததும்பும் நூற்றுக்கும் மேற்பட்ட துரௌபதிகளின் நெஞ்சில் வடியும் கண்ணீரே ‘மகாபாரதம்’ என்பதை ‘முதற்கனல்’ நாவல் கோடிட்டுக் காட்டுகிறது. இந்தக் கனலை நாம் வள்ளுவரின் துணைகொண்டு அறியலாம்.

“அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.” (திருக்குறள், 555)

அரசன் அறம் செய்யாமையால் குடிகள் துன்பமுற்று அதனைப் பொறுக்க மாட்டாது அழுத கண்ணீரே, அரசனின் செல்வத்தைக் குறைக்கும் கருவியாக மாறிவிடுகிறது. அல்லற்படுத்திய பாவத்துக்குக் காரணமாகிய கண்ணீரைவிடக் கொடிது வேறு இல்லை. அந்தக் கண்ணீர் நீர்த்துளியாக வடிந்தாலும் நெஞ்சில் தீத்துளியாக நிலைபெற்றுவிடுகிறது. அது கனன்று கனன்று கடும் சூட்டுடன், தகித்து, கனலாகிறது. இது நெஞ்சில் கனல்வதால் அகக்கனலாகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட அகக்கனல்களின் மீதே மகாபாரதம் உருவாகி, தழலாடி இருக்கிறது.

மகாபாரதத்தில் ஓர் இழையாக மட்டுமே வந்து இணையும் ஒவ்வொரு பெண்ணும் ஏதோ ஒரு வகையில் அடக்க முடியாத கண்ணீருடன்தான் வாழ்ந்து மறைகிறார். ஒவ்வொரு கண்ணீர்த் துளிக்குப் பின்னாலும் சமாதானப்படுத்த முடியாத துயர் துள்ளிக் கொண்டிருக்கிறது.

‘மகாபாரதத்தின் முதற்கனல் எது?’ என்று கேள்வியை நாம் நமக்குள் எழுப்பிக் கொண்டால், அது ‘மகாபாரதத்தோடு தொடர்புடைய ஒவ்வொரு பெண்ணின் ஆற்ற முடியாத துயரங்களின் திரள்’ என்பதையே விடையாக ஏற்க நேரும்.

மகாபாரதத்தில் கண்ணீரை வெளிப்படுத்தும் பெண்களுக்கு நிகராகக் கண்ணீரைக் கட்டுப்படுத்திக்கொண்டு செய்வதறியாது திகைத்து நிற்கும் ஆண்களும் நம் கவனத்திற்கு உரியவர்களே. குறிப்பாக, மகாபாரதத்தில் இடம்பெறும் குரு வம்சத்து அரசர்கள், அவர்களுக்கு அணுக்கத் துணையாக நிற்கும் மதியமைச்சர்கள், அவர்களை உருகி உருகிப்பாடும் சூதர்கள், நிமித்தர்கள், அரசகுடியினருக்குத் தொண்டூழியம் செய்து தன் வாழ்வையே அவர்களுக்காக அர்ப்பணித்துள்ள எளிய மக்கள் போன்றோரைக் குறிப்பிடலாம்.

‘மகாபாரதத்தை ஒருவேள்வித்தீ’ என நாம் மனத்தில் கற்பனை செய்துகொண்டால், அந்த வேள்வித்தீயில் முதல் கனலாக இருப்பவர் ‘அம்பை’. அம்பை தனக்கு இழைக்கப்பட்ட அவமானங்களால் தன்னையே கனலாகவும் தன்னைத்தானே ஊதிப் பெருக்கித் தழலாகவும் மாற்றிக் கொண்டவர். தன்னைப் போலவே கண்ணீர்ச் சிந்துவோரையும் அணைத்து அவர்களுக்குள்ளும் தனது சினத்தீப் பற்றி எரியுமாறு செய்து, அவர்களும் தொடர்ந்து எரிய தன்னையே இடு பொருளாக ஆக்கிக் கொள்கிறார் அம்பை.

வாழ்நாள் தோறும் அழும் பெண்களுக்குத் தோன்றாத் துணையாகவும் அணைத்துத் தேற்றும் தோழியாகவும் ஆதரவு அளிக்கும் அன்னையாகவும் அம்பை விளங்குகிறார். அம்பை தனித்த ‘முதற்கனல்’ மட்டுமல்ல, மகாபாரதம் முழுக்கப் பற்றி எரியக் கூடிய அனைத்துத் திரிகளையும் ஏற்றி வைக்கும் முழு முதற்பெருங்கனலும் ஆவார்.

அணையாத் தீயாக நின்றெரியும் பெண்களின் கண்ணீருக்கு முடிவற்ற காலத்திடம்கூட விடை இல்லை. வரலாற்றில் ஆண்களின் கண்ணீர்த் தடத்தைக் காணமுடிகிறது. பெண்களின் கண்ணீர் இன்றும்  உருளும் துளியாகவே இருக்கிறது. ‘ஒட்டுமொத்த மகாபாரதமும் கண்ணீர்த் துளிகளால் எழுதப்பட்டதே!’ என்று உணரமுடிகிறது.

அரசு தன் அதிகார நிலைநிறுத்தத்திற்கு வெளிப்படையான பலிகளாகப் பெண்களின் மனதும் மறைமுகமான ஆகுதிகளாக ஆண்களின் குருதியும் தேவைப்படுகின்றன போலும். அறத்தை நிலைநாட்ட வேண்டி உருவாக்கப்பட்ட ஒவ்வொரு பேரரசும் அறமற்ற சக்கரங்களைக் கொண்டே நகருகின்றன. அந்தச் சக்கரங்களில் சிக்கிச் சிதைவுறும் பெண்களைக் கொன்று, தெய்வமாக்கி முன்னகர்கிறது பேரரசு. அம்பையும் அப்படித்தான் தெய்வமாகப்படுகிறாள். ‘மகாபாரதம்’ எனும் அறத்தேரின் நெடுவழியில் அம்பையைப் போன்ற எத்தனையோ தெய்வங்களைக் காண நேரும். அவர்களுக்குக் ‘கட்டியம்’ கூறுவதாகவே இந்த ‘முதற்கனல்’ நாவல் அமைந்திருக்கிறது.

அம்பையின் அகம் எந்த அளவுக்குப் பீஷ்மர் மீது சினம் கொள்கிறதோ அதே அளவுக்கு அவரை நேசிக்கவும் செய்கிறது என்பதை ஒரு குறிப்பின் வழியாக அறிய முடிகிறது.பீஷ்மர் காசிநகரின் மூன்று இளவரசிகளையும் சிறையெடுத்து, கங்கைநதியில் படகில் அஸ்தினபுரிக்குச் செல்லும்போது, அம்பைதான் சால்வரையே விரும்புவதாகக் கூறுகிறார். ஆனால், அப்போதே அவளின் அகம் பீஷ்மரை விரும்பத் தொடங்கிவிடுகிறது.

தன்னுடைய தாயகமும் தன்னைப் புறக்கணித்தபோது அம்பை கங்கையில் விழுந்து தற்கொலை செய்துகொள்ள நினைக்கிறாள். அப்போது ‘விருஷ்டி’ என்ற தேவதை, அம்பையிடம் ‘உன் அகம் பீஷ்மரை விரும்புகிறது’ என்பதைக் குறிப்புணர்த்துகிறது. அதனால்தான் அவள் பீஷ்மரை நாடிச் செல்கிறார். அவரும் புறக்கணித்தபோது அவர் மீது அவளுக்கு மாறாச் சினம் ஏற்படுகிறது. ஆனாலும் அவர் மீது அவளின் அகம் கொண்ட பற்று சிறிதும் குன்றவில்லை. இதனைப் பீஷ்மர் சப்தசிந்து நாட்டில் அதிதியாகத் தங்கும் இரவில் உர்வரை காணும் கனவிலிருந்து உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

சிகண்டி வராஹியாக மாறி உர்வரையின் கனவில் வந்து பீஷ்மரைக் கொல்வதாகக் கூறப்படுகிறது. அதே கனவு சிகண்டிக்கும் வருகிறது. சிகண்டிக்குக் கனவில் வரும் உர்வரை தன்னுடைய அன்னை அம்பையாகவே தெரிகிறது. மறுநாள் விடியலில் உர்வரை பீஷ்மரை மணந்துகொள்ள விரும்புவதாகக் கூறுகிறாள். ‘நீங்கள் என்னை மணந்துகொண்டால் வராஹி உங்களைக் கொல்வதிலிருந்து தப்பிவிடலாம்’ என்று கூறுகிறார் உர்வரை.

சிவன் அம்பைக்குக் கூறிய அருளுரையின்படி, அம்பை தன் அகக் கனலை முழுமையாகச் சிகண்டியிடம் கையளித்து, பீஷ்மரைக் கொல்லுமாறு கூறுகிறாள். அதே அம்பைதான் பீஷ்மர் மீது தன் அகத்தில் இருக்கும் காதலின் காரணமாக உர்வரையின் கனவில் வந்து, பீஷ்மரை மணக்க விரும்புகிறாள். அதனால்தான் அவள் தன் மகன் சிகண்டிக்கும் உர்வரையின் வடிவில் தானே வெளிப்பட்டு நிற்கிறாள். ஒரு மனிதரை ஒரே நேரத்தில் முற்றிலும் கொல்லவும் முழுமுதலாக விரும்பவும் அம்பையால் மட்டுமே முடிகிறது.

அன்னையின் அல்லது தந்தையின் ஆணைகளைச் சிரமேற்கொண்டு செய்து முடிக்கும் மைந்தர்களாகப் பலரை நாம் இந்த நாவலில் காணமுடிகிறது. தன் தாயின் அல்லது தந்தையின் கனலைத் தன் நெஞ்சில் சுமந்து சென்று, ஏற்றுக்கொண்ட செயலை முடித்து அந்தக் கனலை அவிக்கும் மகன்களாக நாம் மனசாதேவின் மகன் ஆஸ்திகனையும் (நாகர்குலத்தைக் காக்கும் பொறுப்பு) பிரதீபரின் இரண்டாவது மகன் சந்தனுவையும் (கங்கர்களுடன் மணஉறவை ஏற்படுத்தும் பொறுப்பு), சத்யவதியின் மூத்தமகன் வியாசரையும் (அஸ்தினபுரிக்கு வாரிசுகளைத் தோன்றச் செய்யும் பொறுப்பு) குறிப்பிடலாம்.

அம்பையைப் போலவே வாழ்க்கையில் மிகுந்த சினத்தை ஏந்தி அலைபவராக நாம் சிகண்டியையும் (அம்பைக்கு ஏற்பட்ட இழிவு) பால்ஹிகரையும் (தன் அண்ணன் தேவாபிக்கு ஏற்பட்ட இழிவு), கங்காதேவியும் (சந்தனு தனக்குக் கொடுத்த வாக்கை மீறியதால்), வியாசரையும் (அவரின் அன்னை சத்யவதி மச்சகுலம் என்பதால் அவர் ஞானம் பெறுவதற்கு அதுவே தடையாக இருப்பதால்) எண்ணிக் கொள்ளலாம். அவர்களிடம் இறக்கி வைக்க இயலாத சினம் பெருகியபடியே இருக்கிறது. அது அவர்களின் மனத்தைப் பிறழச் செய்து, உயிரைக் குடித்துவிடுகிறது.

இந்த நாவலில் அம்பையின் கனல் அடிநாதமாக இருந்தாலும் எண்ணற்றவர்களின் அகக்கனல்களும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. ஆக மொத்தத்தில் இந்த நாவல் எண்ணற்றவர்களின் முதற்கனலின் தொகுப்பு என்றும் கூறலாம்.

நன்மையைச் செய்வதாலேயே எண்ணற்றவர்களின் அகக்கனல்களைத் தன் மீது ஏற்றிக்கொண்டு, வாழ்நாள் முழுவதும் பழிசூழ்ந்த மனிதராகவே இந்த மகாபாரதத்தில் வலம்வரும் தனிப்பெரும் ஆளுமையாகப் பீஷ்மர் காட்டப்பட்டுள்ளார்.

‘புகழையும் பழியையும் சமஅளவில் பெறுவதுதான் எட்டாவது குழந்தையாகப் பிறந்தோருக்கு விதிக்கப்பட்டுள்ளதோ!’ என்றும் நினைக்கத் தோன்றுகிறது. அதற்குச் சான்றுகளாக நாம் இருவரைக் குறிப்பிடலாம். ஒருவர் ஸ்ரீகிருஷ்ணர். மற்றொருவர் பீஷ்மர்.

‘முதற்கனல்’ நாவல் வழியாக நாம் அறியும் அறுதி உண்மை, ‘எந்தக் கனலும் தான் உருவாகக் காரணமானவரை அழிக்காமல் அவிவதில்லை’ என்பதே. பெருந்துயர்களுக்கு நீதிதேடி, கண்ணீர்த் துளிகளுக்குப் பெருமை சேர்க்கும் நாவலாக ‘முதற்கனல்’ நம் நெஞ்சில் கனலென எரியத் தொடங்குகிறது.

‘வெண்முரசு’ நாவல்தொடரில் நான்காவது நாவல் ‘நீலம்’. இந்த நாவலைப் பொறுத்தவரை ‘நீலம்’ என்பது, வெறும் நிறமல்ல; அது பரம்பொருள். பூமியில் மனிதர்களின் நிழல் உள்பட, எல்லாவற்றின் நிழலும் கரிய நிறத்தில் படிகிறது. அதுபோலவே, பரம்பொருளின் நிறம் இந்தப் பிரபஞ்சம் முழுவதும் நீலநிறத்தில் படிகிறது. தன் அகம் திறந்து, இயற்கையைப் பார்ப்போருக்கு அந்த நீல நிறம் தெளிவாகத் தெரியும். அதனை உணர்ந்து, அதன் அடிபணிவதே மானுடம் செய்யத் தக்க ஒரே செயல். மற்ற அனைத்தையும் அந்த நீலமே செய்துகொள்ளும். ஸ்ரீகிருஷ்ணரின் பிறப்பு முதல் அவரின் பதினைந்தாவது வயதுவரை நிகழ்ந்தவற்றை ஆழ்நிலைக் கண்ணோட்டத்தோடு எழுதியுள்ளார் ஜெயமோகன். ஸ்ரீகிருஷ்ணர் பிறந்து புலம்பெயர்வது தொடங்கி, மதுராவின் முடிசூடுவது வரையிலான நிகழ்ச்சிகளே இந்த நாவலின் மையச் சரடு. இதுவே, மையச் சரடாக இருந்தபோதிலும் ‘ஸ்ரீகிருஷ்ணர் இந்த நாவலில் வந்துபோகிறார்’ என்றுதான் கூறத் தோன்றுகிறது. அந்த அளவுக்கு இந்த நாவல் முழுக்க ராதையே நிறைந்திருக்கிறார். ராதையின் அகமும் புறமும் ஸ்ரீகிருஷ்ணரே நிறைந்திருக்கிறார். ராதையின் ஸ்ரீகிருஷ்ணரைப் பற்றிய நினைவுகள் மிகப்பெரிய நீர்க்கொடி போல இந்த ‘நீலம்’ நாவலைச் சுற்றிப் படர்ந்திருக்கிறது. ராதையின் வழியாகவே ஸ்ரீகிருஷ்ணரை நாம் அறியமுடிகிறது. அதுவே, ஸ்ரீகிருஷ்ணருக்கான ‘ராஜபாட்டை’.

இந்த நாவல் 12 பகுதிகளையும் அவற்றுனுள் 38 அத்யாயங்களையும் உள்ளடக்கி, 288 பக்கங்களில் புத்தகமாக உருப்பெற்றுள்ளது. ‘வெண்முரசு’ நாவல்தொடரில் இந்த நாவல் மட்டுமே பக்க அளவில் குறைந்தது. சங்க இலக்கியத் தொகுப்பில் பத்துப்பாட்டுத் தொகுதியில் ‘முல்லைப்பாட்டு’ அடிகளின் எண்ணிக்கை அளவில் சுருங்கியிருப்பது போல, இதுவும் பக்க அளவில் சுருங்கி இருக்கிறது எனலாம்.

முல்லைப்பட்டில், ‘இன்ன பருவகாலத்தில் வருவேன்’ என்று சொல்லிப் பிரிந்த தலைவனுக்காகத் தலைவி அந்தப் பருவகாலம் கடந்த பின்னரும் காத்திருக்கிறாள். நீளும் காத்திருப்பால் ஏற்படும் மனத்துயர் குறித்து முல்லைப்பாட்டில் நப்பூதனார் விரிவாகக் கூறியுள்ளார். ‘நீலம்’ நாவலில் ராதையின் ‘காத்திருப்பு’ யுகங்களைக் கடந்ததாகவும் அளக்க முடியாத விரிவும் ஆழமும் கொண்டதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீகிருஷ்ணருக்காக ராதை கணந்தோறும் முடிவின்றிக் காத்திருக்க நேர்கிறது. மின்னி மின்னி மறையும் ஒளிபோல ஒரு கணம் ஸ்ரீகிருஷ்ணர் ராதைக்குப் புலப்படுகிறார். மறுகணம் மறைந்து மாயமாகிறார். ஸ்ரீகிருஷ்ணரின் வருகைக்காகவே, அவரைப் பார்ப்பதற்காகவே ராதை தன் இருவிழிகளையும் இமைக்காமலிருக்க நேர்கிறது. ராதையின் மனத்திற்குள் ஓடும் முடிவற்ற கற்பனையில், கனவில் ஸ்ரீகிருஷ்ணரின் பாதச்சுவடுகளும் குழலிசையும் அழியாமல் இருக்கின்றன. அவற்றைப் பார்த்தபடியேயும் கேட்டபடியேயும் ராதை காத்திருக்கிறார்.

‘நீலம்’ நாவலைப் படிப்பது ஓர் இசைப்பாடலைப் படிப்பதுபோல இருக்கும். ‘திருப்புகழை வாசிப்பதுபோல’ என்றும் கூறலாம். ஸ்ரீகிருஷ்ணரின் புல்லாங்குழல் இசை போலவே, மனத்தை மயக்கும் தேர்ந்த செவ்வியற்தமிழ்ச் சொற்களால் மட்டுமே இந்த நாவல் எழுதப் பெற்றுள்ளது. இந்த நாவலின் அத்தனை வரிகளும் தேர்ந்த செவ்வியற்கவி வரிகளே! உவமைகளும் உருவகங்களுமாகச் சுழித்தோடும் ‘சங்கச்சொற்கவியாறு’ இந்த நாவல்.

ஒட்டுமொத்தத்தில், ‘வெண்முரசு’ நாவல்தொடரில் உள்ள பிற நாவல்களைவிடச் சொல்லாழத்திலும் பொருளாழத்திலும் மிகப் பெரியது இந்த நாவலே என்று கூறுவது பொருத்தமானதே. ஜெயமோகனுக்குப் பரம்பொருள் கையளித்துள்ள சொல்வளத்தை இந்த நாவலில் கண்டுணர்ந்து, வியக்க முடிகிறது. சங்க இலக்கிய வாசிப்புப் பயிற்சி இல்லாமல் ‘நீலம்’ நாவலை வாசிக்க இயலாது. அத்தகைய பயிற்சி அற்றவர்களுக்கு இந்த நாவல் வெறும் சொற்குவியலாகத்தான் தெரியும். தொடர்பயிற்சியாலும் முயற்சியாலும் இரண்டு செந்தமிழ்ச் சொற்கள் இணைவதால் உருப்பெறும் படிமத்தை உணரக் கற்றுக்கொண்டால், இந்த நாவல் கற்கண்டாக இனிக்கத் தொடங்கிவிடும்.

மகாபாரதத்துக்கும் இந்த நாவலுக்குமான நேரடித் தொடர்பு நான்கு வரிகள் மட்டுமே! ஆயர்குல மலைமருத்துவரும் நிமித்திகருமான ஒருவர் மதுராவின் அரசர் ஸ்ரீகிருஷ்ணரை அணுகி, அவரின் கையைப் பற்றி, நாடியைத் தொட்டு நோக்கி, தியானித்து, “பாண்டவர் முடிமீட்ட கைகள். பார்த்தனுக்கு உரைத்த இதழ்கள். பாரதப்போர் முடித்த கண்கள். அரசர்குழாம் பணியும் அடிகள். ஆற்றுவது ஆற்றி அமைந்த நெஞ்சம்” (நீலம், பக்கம் 286) என்று கணித்துக் கூறுகிறார். இந்த நான்கு வரிகள் கொண்டே, ‘இந்த நாவல் ‘வெண்முரசு’ நாவல்தொடரில் இணைகிறது’ என்று கூறுவது, நமக்கு வியப்பை ஏற்படுத்தும்.

ஒட்டுமொத்த மகாபாரதமும் உருவாகி, நிலைநிற்க மூலக்காரணம் ஸ்ரீகிருஷ்ணரே!. விதையை உருவாக்கி, அதிலிருந்து மரத்தை உருவாக்கி, அதிலிருந்து ஆயிரமாயிரம் விதைகளை உற்பத்தி செய்தது இயற்கை என்றால், அந்த இயற்கை செய்த பங்களிப்புக்கு நிகரானதுதான் மகாபாரதம் உருப்பெறுவதற்கு ஸ்ரீகிருஷ்ணரின் பங்களிப்பு. அவரின் அதிதிறனை வெளிப்படுத்தும் களமாகவே ‘நீலம்’ நாவல் திகழ்கிறது. அந்த வகையில் ஒட்டுமொத்த மகாபாரதத்துக்கும் அச்சாணியாக விளங்குவது இந்த ‘நீலம்’ நாவல்தான்.

“உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து” (திருக்குறள் – 667)

‘அச்சாணி’ அளவில் சிறியதாகத்தான் இருக்கும். ‘நீலம்’ நாவலும் பக்க அளவில் மிகச் சிறியதே! மிகக் குறைந்த வயதில் ஸ்ரீகிருஷ்ணர் மதுராவின் மணிமுடியைக் கைப்பற்றுகிறார். அச்சாணியின் முக்கியத்துவம் பெருந்தேரைக் குடைசாயாமல் உருளச்செய்வதிலும் நிர்ணயித்த இலக்கை அடையச் செய்வதிலுமே அடங்கி இருக்கிறது. ‘மகாபாரதம்’ என்ற உருள்பெருந்தேருக்கு ஸ்ரீகிருஷ்ணரே ‘அச்சாணி’. அவர் இல்லாமல், ‘மகாபாரதம்’ ஒரு வரி கூட நகர முடியாது.

ஸ்ரீகிருஷ்ணர் தன் குழந்தைப் பருவத்தில் செய்த கோடிக் குறும்புகளையும் அவர் வளர வளர புரிந்த அரும்பெருஞ்செயல்களையும் தொட்டு தொட்டு வளர்ந்துள்ளது இந்த நாவல். ஸ்ரீகிருஷ்ணரை மையமாகக் கொண்ட இந்த நாவலில் முழுக்க நிறைந்திருக்கிறார் ராதை. ஸ்ரீ கிருஷ்ணரின் மையம் ராதைதானே! ஸ்ரீ கிருஷ்ணரை நிறைத்ததும் அவருக்கு ஓர் அடி முன்னின்று, உலகுக்கே பேரன்னையாகத் திகழ்பவரும் அந்த ராதையே!

ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியை இதனோடு தொடர்புபடுத்தினால், ‘ராதையே ஸ்ரீகிருஷ்ணரைவிட உயர்ந்தவர்’ என்பதை எளிதில் புரிந்துகொள்ள முடியும்.

‘கௌரிமா’ என்ற பக்தை ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரையும் அன்னை ஸ்ரீ சாரதாதேவியையும் தன்னுடைய தாய்-தந்தையராகவே எண்ணி, போற்றி வந்தார். ஒருமுறை கௌரிமா நகபத்தில் அன்னை ஸ்ரீ சாரதாதேவியுடன் தங்கியிருந்தார். அப்போது ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் அங்குச் சென்றிருந்தார். பேச்சின் இடையில் அவர் கௌரிமாவிடம், “கௌரி! எங்கள் இருவருள் யாரை நீ அதிகம் நேசிக்கிறாய்? என்னையா? அவளையா? என்று கேட்டார் அதற்கு கௌரிமா நேரடியாகப் பதில் கூறாமல் பின்வரும் இனிய பாடலைப் பாடினார்.

“கண்ணா! நீ ஒன்றும் ராதையை விடப் பெரியவன் அல்ல.
துன்பத்தில் மக்கள் உன்னை அழைக்கின்றனர்.
உனக்குத் துன்பம் வரும்போதோ
‘ஓ! ராதே’ என்று நீ அவளை அழைக்கிறாய்”.
(கடவுளுடன் வாழ்ந்தவர்கள் பகுதி – 2, பக்கம் 324)

சங்க இலக்கியங்களுள் ஒன்றான திருமுருகாற்றுப்படையினை நக்கீரர் எழுதும்போது, அவர் முருகனின் செம்மைப் பேரெழிலைத் தன் மனத்தால் தொட்டு உணர்ந்திருப்பார். அதுபோலவே ஜெயமோகனும் இந்த ‘நீலம்’ நாவலை எழுதும்போது, ஸ்ரீகிருஷ்ணரின் நீலப் பேரெழிலைத் தம் சொற்களால் தீண்டியிருப்பார் என்று நிச்சயமாக உணரமுடிகிறது.

திருமுருகாற்றுப்படையினைப் படிப்பவர்கள் முருகனை நினைந்து நினைந்து பரவசமாகி, உருகுவது போலவே, இந்த ‘நீலம்’ நாவலைப் படிப்பவர்கள் கோடான கோடி மாயங்கள் ஒன்றுகூடி உறையும் ஸ்ரீகிருஷ்ணரையும் உலக அன்னையர்கள் அனைவரும் ஒன்றுகூடி உறையும் ராதையையும் மனத்தால் நினைந்து, உருகிப் பரவசமடைவர். அதற்கு வழிசெய்யும் வகையில்தான் சொல்லடுக்கி சொல்லடுக்கிச் சொல்லில் சொல்லிவிட முடியாத பரம்பொருளைச் சொல்ல முனைந்திருக்கிறார் ஜெயமோகன். எவர் நாவிலும் படாத பிரம்மத்தைத் தித்திக்கும் தமிழ்ச் சொற்களில் நனைத்துத் தந்திருக்கிறார்.

இந்த நாவல் முழுவதும் ஆயிரம் அன்னையர் வந்துசெல்கின்றனர். அனைவருமே ராதைதான். காலந்தோறும் உள்ளத்தாலும் கருத்தாலும் காதலாலும் கருணையாளும் மாறாத ராதையர்கள். ஆனால், வெவ்வேறு உருக்கொண்ட ராதையர்கள். அவர்களுள் ஒரு ராதையை மட்டும் எடுத்து, அவளுக்குள் உறையும் ஆயிரம் ராதைகளை நமக்குக் காட்டியுள்ளார் ஜெயமோகன்.

இந்த நாவலின் களங்கள் பர்சானபுரி, கோகுலம், விருந்தாவனம், மதுரா. முல்லைப்பாட்டிலும் கலித்தொகையில் முல்லைக்கலியிலும் நாம் காணும் அதே ஆயர்குலமே இங்கும் சூழந்துள்ளது. இதற்கு முன்னர் எந்த இலக்கியமும் விரிவாக எடுத்துரைக்காத ஆயர்குலத்தின் வாழ்வியல் பெருநெறியை இந்த நாவல் தன்போக்கில், கதைநகர்வுக்காகச் சொல்லிச் செல்கிறது. ஆயர்குலத்தின் வீரம், தொழில்நேர்த்தி, கற்புநெறி எனப் பலவற்றை விளக்கி, அந்தக் குலத்தினர் மீது நம்மைப் பொறாமைகொள்ளச் செய்துவிடுகிறார் ஜெயமோகன்.

இந்த நாவலில் ராதையில் உறையும் ஸ்ரீகிருஷ்ணருக்குத்தான் ‘திருப்பல்லாண்டு’ வாழ்த்து கூறப்பெற்றுள்ளது. ராதையே ஸ்ரீகிருஷ்ணர் உறையும் ஆலயமாகவும் ராதையே ஸ்ரீகிருஷ்ணரை நிறைக்கும் பெரும்பொருளாகவும் அமைகிறார். இந்த நாவல் ராதையின் அதிகனவுகளாலும் அவற்றை அவள் நினைவாக, சொல்லாக மாற்றிப் பார்க்கும் நிகழ்வுகளாலும் கட்டமைக்கப் பட்டுள்ளது. அதனால், ஸ்ரீகிருஷ்ணரின் பிறப்புக்கு முன்னரும் பின்னரும் நடந்த அனைத்தும் வரிசை மாறியே இந்த நாவலில் இடம்பெற்றுள்ளது. இந்த நாவலின் கதை பெரும்பாலும் ராதையின் மனப் போக்கிலும் இடையிடையே சூதர்கள், குறமகள்கள், நிமித்திகர்கள், முதுபெண்டிர்கள் போன்றோரின் சொற்களிலும் தேய்ந்து தேய்ந்து நகர்கிறது.

இந்த நாவலின் தொடக்கமே சில வாசகர்களைத் துரத்தியடித்துவிடும் தன்மையில்தான் அமைந்துள்ளது. அதாவது, தனக்குரிய வாசகரை மட்டுமே இந்த நாவல் தன்னுள் ஏற்கிறது. வாசிப்புப் பயிற்சி அற்றவர்களையும் சொற்களை அனுபவமாக மாற்றிக்கொள்ளப் பழகாதவர்களையும் இந்த நாவல் புறக்கணித்துவிடும்.

நீலம் நிழலாய், ஒளியாய் இந்தப் பிரபஞ்சத்தில் பட்டு, உலகம் தூக்கத்திலிருந்து மீள்வதில் தொடங்குகிறது இந்த நாவல். தூக்கம் நீங்கி எழும்போது ஏற்படும் சோம்பல் பர்சானபுரியில் உள்ள யாருக்கும் எவற்றுக்கும் ஏற்படுவதில்லை. காரணம், அவர்கள் ஸ்ரீகிருஷ்ணரின் அறாத குழலிசையில் மயங்கி, தியானத்தில் அல்லவா இருக்கிறார்கள்!.

பர்சானபுரியில் உள்ள ஒவ்வொரு உயிரும் மாயக் குழலிசையைக் கேட்டு, தியானத்தில் மூழ்கியுள்ளன. தியானத்தில் இருந்து எழுபவர்கள் சோம்பல் அடைவதில்லையே! இந்த நாவலின் தொடக்கம் உலகம் தியானம் கலைந்து எழுவதைக் காட்டுகிறது. தென்றல் தவழ்ந்து வந்து ராதையை எழுப்புகிறது.

ஆண்டாளின் திருப்பாவையில், விடியற்காலையில் ஆயர்குலப் பெண்களை எழுப்புவதாகப் பாடல் அமைந்திருக்கும். முன்னெழுந்தவர்கள் திருமாலின் புகழைப் பாடி உறக்கத்தில் உள்ள அனைத்து ராதையர்களையும் (பெண்களையும்) எழுப்புவார்கள். இந்த நாவலில் தென்றல் பர்சானபுரிக்குள் நுழைந்து, ஸ்ரீகிருஷ்ணருக்காகவே உடற்கனிந்துவரும் ராதையை, அவளுக்கு அவளின் அகவிழிப்பினை அறிவிக்க எழுப்புகிறது. காலந்தோறும் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, இறந்துபடும் எண்ணற்ற ராதையர் வரிசையில் அவளும் ஒருத்தி.

கிருஷ்ணரைக் கொல்ல கம்சன் பூதனையைப் பயன்படுத்துகிறார். பூதனையை நாம் அரக்கியாகத்தான் அறிந்திருக்கிறோம். ஆனால், ஜெயமோகன் பூதனையைப் பிள்ளைப் பித்தேறியவளாகக் காட்டுகிறார். அந்தப் பித்தினை நாம் ‘அதீத தாய்மைநிலை’ என்றும் கொள்ளலாம். அதாவது, பூதனையை நமக்கு அரக்கியாகக் காட்ட ஜெயமோகனுக்கு விருப்பம் இல்லை. அவளையும் தாயாகவே நம் முன் நிறுத்த அவர் விரும்பியுள்ளார்.

கோகுலத்திலுள்ள பெண்களும் பர்சானபுரியிலுள்ள பெண்களும் விருந்தாவனத்திலுள்ள பெண்களும் சிறுவன் ஸ்ரீகிருஷ்ணர் மீது பேரன்பு கொள்கின்றனர். அவனின் குறும்புகளை எண்ணி எண்ணி வெறுத்து ஒதுக்கும் மனங்களே மறுபுறம் திரும்பி, அவனை நினைத்து நினைத்து விரும்பி ஏங்குகின்றன. இதையே ‘ஸ்ரீகிருஷ்ணரின் திருவிளையாடல்’ (‘ஸ்ரீகிருஷ்ணலீலா’) என்றும் கொள்ளலாம்.

கலித்தொகை முல்லைக்கலியில் ‘ஏறு தழுவுதல்’ என்னும் முல்லை நில வழக்கம் இடம் பெறக் காணலாம். ‘ஆயர்மகள் தனது துணைவன் ஏறு தழுவ துணிவு கொண்டவனாக இருக்க வேண்டும்’ என்றே விரும்புவாள் என்று கூறப்படுகிறது.

“கொல்லேற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும்
புல்லாளே ஆயமகள்.” (கலித்தொகை, 103; 63-64)

தன்மகள் தேவகியைக் கம்சனின் நண்பர் வசுதேவருக்குத் திருமணம்செய்து தர விரும்பாத தேவகர், சற்றுச் சிந்திக்கிறார். தன் மகளுக்குத் தன் மண ஏற்பினை நடத்த விரும்புகிறார். ‘வசுதேவருக்கு உடல்வலிமை இல்லை’ என்பதை நன்கு அறிந்தவர் என்பதால், தன் மகளின் திருமணத்திற்கு ‘ஏறுதழுவுதலை’ ஒரு விதியாக முன்வைக்கிறார் தேவகர். ஆனால், தன் மண ஏற்பு நிகழ்வின்போது, ஏறுதழுவும் களத்தில் முதுசேடி வேடத்தில் நுழையும் கம்சன், ஏறுதழுவி, காளையின் கொம்பில் சுற்றப்பட்டுள்ள மங்கல நாணை எடுத்து, “இது என் நண்பன் வசுதேவனுக்காக நான் வென்ற மங்கலநாண்!” என்கிறான்.

உடல் வலுமிக்க, நெஞ்சில் துணிவு மிகுந்த ஆண்மகனை திருமணம் செய்ய வேண்டும் எனப் மணப்பெண் விரும்புவதால்தானே ‘ஏறுதழுவுதல்’ நிகழ்ச்சியே, போட்டியே நடத்தப்படுகிறது!. அதில் ஒருவர் மற்றவருக்காக ஏறுதழுவுவதை எவ்வகையில் ஏற்க இயலும்?. ஒருவருக்குப் பதிலாக மற்றவர் தேர்வு எழுதுவதை ஏற்றுக்கொள்வதைப் போலல்லவா இது ஆகிவிடுகிறது?

ஆனால், இங்கு நிகழ்வது தேவகியின் ‘தன்மண ஏற்பு’. அதனால்தான், கம்சன் காளையை அடக்கியதும் சூதகர் வேடத்தில் ரதத்தில் அங்கு வந்த வசுதேவரை நோக்கி, ஓடிச் சென்று, அவரின் கைகளைப் பற்றிக் கொள்கிறாள் தேவகி.

‘மதுராவின் மணிமுடி யாருக்கு?’ என்ற நிலை ஏற்படும்போது, கம்சனின் சதித்திட்டத்தால் ஒரு யானைக்கு மது புகட்டப்படுகிறது. அந்த யானையின் துதிக்கையில் வரவேற்புமாலையைக் கொடுத்து ஸ்ரீகிருஷ்ணரின் முன்பாக அனுப்புகின்றனர். அந்த யானைக்கும் ஸ்ரீகிருஷ்ணருக்குமான சண்டையில் கம்சன் தன்னையே அந்த யானையாக மனத்துக்குள் நினைத்து, ஸ்ரீகிருஷ்ணருடன் சண்டையிடுவதாக அந்தக் காட்சியை உருவாக்கியுள்ளார் ஜெயமோகன்.

அந்தக் காட்சியில் உளவியல் அடிப்படையிலான மிகச் சிறந்த ‘நாடகீயம்’ அங்கு நிகழ்த்தப்பட்டுள்ளது. போர் என்பதும் சண்டை என்பதும் ஆயுதங்களில் இல்லை; மாறாக உள்ளத்தில்தான் மூர்க்கத்தனமாக நடைபெறுகின்றன. அவற்றின் நிழல்களைத்தான் நாம் களத்தில் போராகவும் சண்டையாகவும் காண்கிறோம்.

‘நீலம்’ நாவல் வழியாக நாம் அறியும் அறுதி உண்மை, ‘ராதை என்றுமே கன்னியும் அன்னையுமானவள்’ என்பதே. அதனால்தான், ‘ஸ்ரீகிருஷ்ணர் ஒருகணம் அவளை அணைத்தும் மறுகணம் அவளைத் தொழுதும் நிற்கிறார்’. பெண்மையைப் போற்றி, பெண்களுக்குப் பெருமை சேர்க்கும் நாவலாக ‘நீலம்’ நம் நெஞ்சில் நிலைகொள்கிறது.

முனைவர் ப. சரவணன், மதுரை.

முந்தைய கட்டுரைகுரு நித்யா எழுதிய கடிதம்
அடுத்த கட்டுரைவேதசகாயகுமார் அஞ்சலிக்கூட்டம்