திபெத்- ஓர் ஒற்றரின் கதை

கரு, இணைவு- கடிதங்கள்

அன்புநிறை ஜெ,

பயணம் ஒரு தெய்வம், அதை உபாசனை செய்பவர்களுக்கே அமையும் – இந்த வரி இன்றைய காலையை மிக அழகாக்கியது.

பயணங்கள் இல்லாத இந்த ஒன்பது மாதங்களை வெண்முரசின் பயணங்களை எழுதுவதிலும், பழைய பயணங்களை நினைவுகூட்டி சிறு குறிப்புகள் எழுதுவதிலும், நீண்ட கால பயணத்திட்டங்கள் இடுவதிலும், சிங்கையிலேயே இதுவரை சென்று பார்த்திராத சில பகுதிகளை சென்று பார்க்கவும், வேறு பல பயணம் சார்ந்த நூல்களை வாசிப்பதிலுமாக கழித்திருக்கிறேன். அவற்றில் ஒன்று சரத் சந்திர தாஸ் எழுதிய ‘A Journey to Lhasa and Central Tibet’.

பயணங்களில் மலைநிலங்கள் தரும் பித்து அலாதியானது. அதிலும் இமயப் பகுதியெனும் மீளமுடியாக் கனவொன்றில் அமைந்திருப்பது இனிது.  இந்நூலை வாசித்து விட்டு மீண்டும் கரு, மற்றும் தங்கப்புத்தகம் கதைகளை வாசித்தேன். திபெத் எத்தனை எத்தனை மனிதர்களை ஈர்த்து அழைத்திருக்கிறது என எண்ணிக்கொண்டேன். அந்த ஈர்ப்பே ஒரு விசையாகி ஷம்பாலாவின் ஒளியாகி அனைவரையும் அழைத்துக் கொண்டே இருக்கிறது.  அறிவியல் கொண்டு இப்புவியில் ஒவ்வொரு அங்குலமும் பதிவு செய்யப்பட்டு கைவிரித்து இங்கே ரகசியம் ஏதுமில்லை எனச் சொன்னாலும் கனவுகளில் வரும் இந்த நுண்நிலத்தை என்ன செய்வது! அந்த மாயவசீகரமின்றி,  எப்படியாவது அறிந்துகொள்ள வேண்டுமென பித்துகொள்ளச் செய்யும் ஒரு  உச்ச கனவு இன்றி என்ன செய்யும் மானுடம் என்று தோன்றியது.

பாரத நிலத்தின் ஒவ்வொரு மலையையும், நதிப்பெருக்கையும், அதன் ஊற்று முகங்களையும், கழிமுகங்களையும், ஒவ்வொரு வனத்தையும், பாலை விரிவெளியையும் அலைந்து திரிந்து பார்க்க வேண்டும். என்றோ ஒருநாள் ஒவ்வொன்றாய் அகல எங்கோ ஒரு வான் நோக்கிய விழியென மலர்ந்த சுனை ஒன்றின் கரையில் அந்த எல்லையற்ற வெளியில் அனைத்தையும் கரைத்துவிட வேண்டும். அதுவரை கணம் ஓயாது தேடித்திரிவதெல்லாம் தேன் என்ற ஒன்றை அறிந்துவிட்ட பித்தினாலேயே, அதைத்தேடுக என்று விதிக்கப்பட்ட ஆணையினாலேயே!

தங்கப்புத்தகம் சிறுகதையில் இவர் பெயரைப் பார்த்து இந்தப் புத்தகத்தைத் தேடிக் கண்டுபிடித்தேன். முதலில் பெயரை சரத் சந்திரர் எனத் தவறாகப் புரிந்து கொண்டேன். கிளி சொன்ன கதையில் அனந்தன் சொல்லும் சரத் சந்திர சட்டர்ஜி என நினைத்து விட்டேன்.

சரத் சந்திர சட்டர்ஜி அதைவிட நல்ல பெயர். பெரிய ஆளாக மாறியதும் அதைவிடபெரிய புஸ்தகம் எழுதவேண்டும் என்று அனந்தன் முடிவுசெய்தான். அந்த புஸ்தகத்தை தூக்கவே முடியாது. அதை தரையில் விரித்து வைத்து பக்கத்தில் ஒரு ஸ்டூல் போட்டு உட்கார்ந்துதான் படிக்க முடியும்-  கிளி சொன்ன கதை. அனந்தனிடம் அடுத்த கனவு என்ன எனக் கேட்க வேண்டும்

புத்தகத்தில் ‘சரத் சந்திர தாஸ்’ புகைப்படத்தையும் பெயரையும் பார்த்ததும் இது அவரல்ல, இவர் வேறு எனப் புரிந்தது.சிட்டகாங்கில்(இன்றைய பங்களாதேஷ்) பிறந்த சரத் சந்திர தாஸ் கல்கத்தா ப்ரெசிடென்ஸி கல்லூரியில் படித்தவர். திபெத் மொழிப் புலமை கொண்டவர். டார்ஜிலிங்கில் பூட்டியா உறைவிடப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்திருக்கிறார். பிரெசிடென்சி கல்லூரியில் அவருக்கு அறிமுகமாகும் தத்துவத்துறைப் பேராசிரியர் சர் ஆல்ப்ரட் க்ராப்ட்டின் உதவியுடன் இந்த திபெத் பயணத்துக்கான அனுமதிகளைப் பெற்று திபெத்திய லாமா உக்யென் கியாட்ஸோவுடன் லாசாவுக்கு பயணமாகிறார்.

1879-ல் முதல் முறையும் பிறகு 1881-82ல் இரண்டாவது முறையும் திபெத் சென்று வருகிறார். இது 1881ல் அவரது இரண்டாவது திபெத் பயணத்தின் குறிப்புகள்.  அங்கிருந்த திபெத்திய மடாலயத்தில் மெய்யியல் படிப்பதற்கான அனுமதி பெற்று பயணம் செய்கிறார்.இவருக்கு முன்னர் இந்தியர்களில் நயன் சிங் ராவத், கிஷன் சிங் ஆகியோர் மட்டுமே லாசாவுக்குச் சென்று அப்பகுதியை ஓரளவு ஆய்ந்திருக்கிறார்கள்.

கரு, தங்கப்புத்தகம் கதைகளில் வருவது போல திபெத் அப்போது ரகசியங்களின் நிலம். அங்கே ஊடுருவுவது குறித்த கனவு ஆங்கிலேயர்களுக்கு இருந்திருக்கிறது. இதன் ஒரு முயற்சியாக அறியமுடியாமையின் வெளியாகிய திபெத் நிலப்பகுதி மேல் ஆங்கிலேயர்களின் கவனம் திரும்புகிறது. அதன் வணிகச் சாத்தியங்களை, பிரிட்டிஷ் மேல்கோன்மையை நிலைநாட்ட முயற்சிகள் மேற்கொள்கிறார்கள்.

1802-ல் இந்திய நிலத்தை அறிவியல் துல்லியத்தோடு முழுமையாக அளக்க முற்பட்ட “The Great Trigonometric Survey” என்ற முயற்சி வில்லியம் லாம்டன் என்பவர் தலைமையில் தொடங்குகிறது. முதலில் இந்த அளவீடு சென்னையில்தான் துவங்கியது என்பது கூடுதல் தகவல். இதன் அடுத்த நிலஅளவையராக ஜார்ஜ் எவரெஸ்ட்(எவரெஸ்ட் சிகரத்துக்கு இவர் பெயரே இடப்படுகிறது) பொறுப்பேற்கிறார். எவரெஸ்ட், கஞ்சன்சங்கா, கே2 என பல இமையச்சிகரங்கள் அப்போதுதான் அளவிடப்படுகின்றன.   அதன் ஒரு பகுதியாக திபெத் பகுதி குறித்து நன்கறிந்த அப்பகுதியை சேர்ந்த  நயன் சிங் ராவத், கிஷன் சிங் ஆகியோர் வேலை பார்க்கின்றனர்.

இதில் நயன் சிங் பிரிட்டிஷாருக்காக முதல் முறையாக நேபாளம்-திபெத் வணிகப்பாதையை ஆராய்ந்திருக்கிறார்.  பிரம்மபுத்திராவின் பெரும் பகுதியை ஆய்வு செய்திருக்கிறார். 1580மைல்கள் இவர் இதற்காக நடந்திருப்பதாகக் கூறுகிறார்கள்.  குமாவோன் பகுதியின் ஜோகர் பள்ளத்தாக்கை சேர்ந்த நயன் சிங் திபெத்திய மொழியை அறிந்திருந்தது ஆங்கிலேயர்களுக்கு மிக உதவிகரமாக இருந்திருக்கிறது. கிஷன் சிங் என்பவர் அப்பகுதிக்கான விரிவான வரைபடமும் தயாரித்திருக்கிறார். ஐந்து வருடங்களில் நிறைவேற்ற வேண்டியதாகத் தொடங்கப்படும் இம்முயற்சி எழுபது வருடங்களுக்கு நீடிக்கிறது.  இம்முயற்சிக்கு இந்திய நிலவரைபடவியலில் பெரும்பங்கு இருக்கிறது.

சரத் சந்திரதாஸ் ஆறுமாத காலம் அங்கு தங்கி திபெத்தின் புவியியல் சார்ந்த தகவல்களையும், பால்டி ஏரியை முழுமையாக மிகத் துல்லியமாக நிலஆய்வு செய்து முடித்திருக்கிறார். அதைவிட முக்கியமாக பல திபெத்திய, சமஸ்கிருத நூல்களை அங்கே பல மடாலயங்களில் கண்டடைந்திருக்கிறார்.

திபெத் ஒரு விதைத் தொகுதி. இங்கே விதைகளை கலசங்களில் அடைத்து கோபுரங்களின் உச்சிகளில் சேமிக்கிறார்கள். அதைப்போல மானுட இனத்தின் உச்சிக்குமேல் சேமிக்கப்பட்ட விதைக் களஞ்சியம் அது. கரு சிறுகதையில் வருவது போல திபெத் மடாலயத்தின் நூலகங்களில் இருந்து, பல நூற்றாண்டுகளாக நாம் இழந்திருந்த பல சமஸ்கிருத புத்தகங்களை, கையெழுத்துப் பிரதிகளை, கொண்டு வந்து சேரக்கிறார். திபெத்தில் பௌத்தம் வேரூன்றுவதற்கும் முந்தைய காலகட்டத்தின் வரலாறையும், திபெத்தின் தொன்மையான ‘போன்’ மதம் குறித்த தகவல்களையும் அவற்றின் வழியாகவே அறிய முடிந்தது. திபெத்திய மொழிப் புலமை கொண்ட சரத் சந்திரர் திபெத்-ஆங்கில அகராதியும் (பௌத்த மறைச்சொற்களுக்கான சமஸ்கிருத-ஆங்கில பின்னிணைப்போடு) வெளியிட்டிருக்கிறார்.

இந்த ‘Journey to Lhasa and Central Tibet‘ என்ற புத்தகம் அவர் 1881 நவம்பர் டார்ஜிலிங்கில் துவங்கி லாசா சென்றடைந்து, 1882 டிசம்பரில் மீண்டு வருவது வரையுமான பயணம் குறித்த நூல்.

டார்ஜிலிங்கில் இருந்து தாஷிலம்போவுக்கு அவர் செல்லும் பயணப் பகுதி விரிவான இயற்கை வர்ணனை கொண்டது. டார்ஜிலிங் தாண்டியதும் சிறிது தூரத்தில் பிரிட்டிஷ் ஆட்சியில் இல்லாத சுதந்திர மாநிலமான சிக்கிம்( சரத் சந்திர தாஸின் பயணம் 1881-82. 1890ல் சிக்கிம் பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு பகுதியாகிறது) எல்லை வந்துவிடுகிறது.வழியெங்கும் அந்த மலைக்குடியினரையும், அங்கு வளரும் தாவரங்களையும், அவர்களது உணவு மற்றும் வாழ்க்கை முறைகளுயும் குறித்த கூர்ந்த அவதானிப்புகளைப் பதிவு செய்கிறார்.வழியில் கிடைத்ததைக் கொண்டு சமைத்து, கிடைத்த இடத்தில் உறங்கி பயணம் செய்கிறார்கள். அந்த மலைப்பகுதிகளில் சமதளமற்ற தரையில், பூச்சிகள் மேலே ஊர்ந்து செல்லும் உணர்வோடு உறங்குவது மலைப்பயண அனுபவங்களை நினைவுறுத்தியது. இன்றைய பயணங்கள் எவ்வளவு வசதி நிரம்பியதாகிவிட்டது என ஒவ்வொரு கணமும் எண்ணிக்கொண்டேதான் இப்புத்தகத்தை வாசிக்க முடிகிறது.

டார்ஜிலிங்கில் ஓடும் ரங்கித் நதிக்கு நீர் கொணரும் ரம்மாம் நதி மேற்கு சிக்கிமின் சிங்லி மலைகளில் தொடங்கி, பிரிட்டிஷ் இந்தியாவுக்கும் அப்போது சுதந்திர சிக்கிமாக இருந்த நிலத்துக்கும் இடையே ஓடுகிறது. பொங்கிப் பெருகும் வெள்ளத்தின் மீது மூங்கில் கால்கள் பெரும்பாறைகளில் நடப்பட்டு அதன்மீது நடந்துசெல்லும் நடைபாலமாக இருக்கிறது. சால மரங்கள் நிறைந்த மலைச்சரிவில் ஏலமும் பருத்தியும் விளைந்து காத்திருக்கின்றன. மூங்கிலால் ஆன காவல் பரண்களில் குரங்குகளையும் கரடிகளையும் விரட்ட மூங்கில் கழிகளோடு காவலுக்கு அமர்ந்திருக்கிறார்கள். மண்ணின் குடிகளாகிய லெப்சர்கள், லிம்புக்கள், பூட்டியாக்கள் குறித்து பல தகவல்கள் தருகிறார். ஆங்காங்கே மலைக்குடிகளோடு பிராமணர்களும் சேத்ரிக்களும்(Chetris – நேபாள மொழியில் சத்ரியர்களும்) கிராமங்களில் பாலும் வெண்ணையும் விற்று வாழ்கிறார்கள். மலைச்சரிவில் ஏருழுது நெல் விளைக்கிறார்கள். பூட்டியாக்கள் பழமையான முறையில் ஓக் தடிகளால் ஆன மண்வெட்டி, களைக்கொத்திகளை பயன்படுத்தியே விவசாயம் செய்கிறார்கள். லிம்புக்கள் மூன்று தொடர் வருடங்கள் உழுது பயிரிட்டு அடுத்த மூன்று வருடங்கள் பயிரிடாமல் களைகளை எரித்து வெட்டி மீண்டும் வேளாண்மை செய்கிறார்கள்.ஒவ்வொரு குடியும் தங்களுடையதே மூத்த தொன்மையான குடி என்று சொல்லிக்கொள்கிறார்கள்.

பல சுவையான தகவல்கள் – உதாரணமாக லிம்புக்களின் திருமணம் குறித்த தகவல் மிக சுவாரசியமானது. ஒரு ஆண் தனக்கு மனதுக்குப் பிடித்த பெண்ணைத் திருமணம் செய்வதற்கு முதலில் வீட்டினர் அறியாமல் வேறொரு இடத்தில் அதே பெண்ணை விரும்பும் வேறு ஆண்மகன் இருப்பின் அவனோடு போட்டியில் ஈடுபட வேண்டும். போட்டி என்பது சாதுரியமான பாடல்கள் பாடி ஒருவரை ஒருவர் வெல்வதுதான். தோற்றவன் வெட்கி காட்டுக்குள் சென்று விட, வென்றவன் பெண்ணின் வீட்டாரிடம் சென்று மணம் பேசுவான். இன்னொரு முறை என்பது அவளது வீட்டுக்கு சென்று பன்றியின் இறைச்சியைக் கொடுத்து பெண் கேட்பது. அதில் மேலும் சில முறைமைகளும் பரிசுகளும் இருக்கின்றன.

டார்ஜிலிங் ஆங்கிலேயர்களால் ஒரு சானடோரியமாக முதலில் இருந்திருப்பது பற்றிய ஒரு அடிக்குறிப்பையும் தருகிறது.இப்புத்தகம் முழுவதும் மையப் பகுதி வர்ணனைகளுக்கு நிகராக இந்த அடிக்குறிப்புகள் வருகின்றன. மிக விரிவான செய்திகளைச் சொல்லும் அடிக்குறிப்புகள், Hooker எழுதிய Himalayan Journals போன்ற வேறு சில நூல்களையும் குறிப்பிடுபவை.

கூர்கா படையெடுப்பின்போது லெப்சர்கள் மலை மீதிருந்து பாறைகளை உருட்டி விட்டு எதிர்த்திருக்கிறார்கள் என்று வாசித்ததும் வெண்முரசின் கிராதத்தில்  கின்னர ஜன்யர்கள் அதே போன்ற தாக்குதல் முறையைக் கையாள்வது நினைவு  வந்தது. கிராத குடிகளைப் பற்றிய செய்திகளும் இப்புத்தகத்தில் வருகிறது.

உப்பு, கம்பளி, தேயிலை, திபெத்திய மண்பாண்டங்கள் போன்றவற்றை வாங்கவும் மலையில் விளையும் ராகி, சோளம், சாயக்கொடிகள் போன்றவற்றை விற்கவும் மலைக்குடிகள் டார்ஜிலிங் சந்தைக்கு செல்கிறார்கள். மலையில் உப்பு மிகவும் அரிய தேவையான பொருளாக இருக்கிறது. அங்கு கீழ்நிலத்தில் இருந்து வரும் பயணிகளிடம் உப்புக்கு பதிலாக தங்களிடம் உள்ள பொருட்களை விற்கத் தயாராக இருக்கிறார்கள்.  அங்கே மலைப்பகுதியில் தேன்கூடுகள் பெரிய வெண்ணிறக் காளான்கள் போல இருக்கின்றன. ஆழ்ந்த கருமையில் தேங்கிய நீருக்கடியில் பொன்னும் அருமணிகளும் இருப்பதாக கருதப்படும் செல்வவளத்தின் ஏரி, ஒரு மைல் சுற்றளவு கொண்ட அந்த ஏரியின் ஆழத்துக் கருநீரில் நீர்யானைகள் இருப்பதாக நம்பப்படுகிறது. மேலும் காங்க் லா சிகரங்களில் இருந்து வரும் நீரால் நிரம்பிய ஒரு அழகிய ஏரி, கருநீலக் கரையில் வெண்பளிங்கு போன்ற உறைபனிப்பாளங்களோடு இருப்பதால் மயக்கும் மயில் தோகை (TSO DOM-DONG-MA) என்றழைக்கப்படுகிறது. கர்னல் லாரன்ஸ் ஆஸ்டின் வாடேல் எழுதிய Among the Himalayas (1899) புத்தகத்திலும் இந்த ஏரி குறித்த குறிப்புகள் வருகின்றன. அந்த உறைந்த ஏரியை நடந்து கடக்கிறார்கள். அது சிக்கிம் மக்களுக்கு புனிதமான நீராக கருதப்படுகிறது. தாஷிலம்போ நெருங்கும் போது மண்ணின் நிறமும் மாற்றமடைகிறது. இந்திய இமயப் பகுதிகளில் காணப்படும் வெண்ணிறமான மண் நிறம் மாற்றமடைந்து திபெத்தின் ஆழ்ந்த கருஞ்சிவப்பு நிறமான மண் காணப்படுகிறது.

தாஷிலம்போவுக்கு அவர்களது சிறிய பயணக்குழு செல்லும் பாதை மிக ஆபத்தானதாக எந்நேரமும் உயிர் குடிக்கும் சாத்தியங்களோடு இமயத்தின் பருவநிலை மாற்றங்கள் தரும் அறைகூவல்களோடு இருக்கிறது. மிக எளிய உணவும், பனிக்காற்றில் குளிரில் போதிய குளிராடைகள் இன்றி கழியும் இரவுகளும், பொருட்களை சுமக்கும் பணியாட்கள் சிலசமயம் மனிதர்களையும் சுமந்து செல்வதும், அறியா நிலங்களில் உடல் நிலை மோசமாகி, முன்பின் அறியா மனிதர்களின் கருணையை நம்பி அவர்களது உதவி பெற்று அங்கேயே தங்கி அந்நிலத்துக்குரிய முறையில் சிகிச்சைகள் பெறுவதும் மிக அரிய அனுபவங்கள். யம்பங் லா என்னும் பனிப்பகுதியை இவர்கள் ஏறிக் கடப்பது மெய்நிகர் அனுபவத்தை தருகிறது. பல நாள் பயணத்துக்குப் பிறகு தாஷிலம்போவுக்கு சென்று அங்கு சில காலம் மடாலயத்தில் இருக்கிறார்கள். அதன் பிறகு மீண்டும் லாசாவுக்கான பயண ஆயத்தங்கள், அங்கே அவர் சந்திக்கும் மனிதர்கள், திபெத்திய ஷிகாட்சே-சீன  அரசியல் நிலைகள் என அனுதினம் எழுதிய நாட்குறிப்புகள். அந்த மடாலயத்தில் அவருக்கு வாசிக்கக் கிடைக்கும் அரிய நூல்கள் – Dsam Ling Gyeshe (உலகு பற்றிய ஒரு பொதுக்குறிப்பு)  எனப்படும் முக்கியமான நூலின் கையெழுத்துப் பிரதி கிடைக்கிறது. ஆச்சார்ய ஸ்ரீதண்டி இயற்றிய காவ்யதர்சம், சந்திரகோமின் எழுதிய சமஸ்கிருத இலக்கண நூலாகிய சந்திர வியாகரணம், ஆச்சார்ய ஆமி எழுதிய ஸ்வரஸ்வத் வியாகரணம் போன்ற சமஸ்கிருத நூல்களின் திபெத்திய விளக்கங்கள் கொண்ட நூல்கள் கிடைக்கின்றன.

வறுத்த பார்லி அல்லது கோதுமை மாவில் செய்யப்படும் ட்சம்பா (tsamba)வும் வெண்ணையிடப்பட்ட தேநீருமே பெரும்பாலும் காலை உணவு . அவர்களது அன்றாட உணவு வகைகள் குறித்தும், மாஹுவா பிஸ்கட் என்ற சீன வகை தின்பண்டம் குறித்தும், நீண்ட மலைப்பயணங்களுக்காக சேகரிக்கப்படும் உலருணவுகள் குறித்தும் பல தகவல்கள். லாமாக்களுக்குரிய மடாலயத்தேர்வு என்பது அவர்களது புனித நூல்களில் இருந்து பல நூறு பக்கங்கள் கொண்ட வரிகளை பிழையின்றி நினைவுறுத்திக் கூறுவது. லாமாவாக பயிற்சி பெற்று இதில் தேர்ச்சி அடைய முடியாமல் போகும் மனிதரையும் இப்புத்தகத்தில் சந்திக்க முடிகிறது. அந்த மடாலயத்தில் அவரது நாட்களை அந்த நூல்களை வாசிப்பதிலும் கைப்பிரதிகள் எடுப்பதிலும் செலவழிக்கிறார். அங்கு வருவதற்கான உதவிகள் செய்த அமைச்சருக்கு கடிதம் எழுதுவதன் முறைமைகள் சுவாரசியமானவை. கடிதம் எழுதப்படும் காகிதத்தின் வடிவம், கடிதத்தின் மேலேயும் கீழேயும் விடவேண்டிய இடம், அதில் பயன்படுத்தும் முறைமைச்சொற்கள் என அனைத்தும் கவனத்தில் கொள்ளப்பட்டு கடிதம் எழுதப்படுகிறது.

அந்த காலகட்டத்தில் லடாக் முதலான காஷ்மீரத்தின் பகுதிகளுடனான திபெத் உறவு குறித்த வரலாற்றுக் குறிப்புகளும் வருகிறது. அதற்கு முன்னர் காஷ்மீரோடு நிகழ்ந்த ஒரு போருக்கு பின்னர் உருவான ஒப்பந்தப்படி மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை ஒரு அரச முறையான ஊர்வலம் காஷ்மீரிலிருந்து கிளம்பி தலைமை லாமாவுக்கு பரிசுப்பொருட்களோடு லாசாவுக்கு வருவதை பதிவு செய்திருக்கிறார். நாட்குறிப்புகள் என்பதால் பலவிதமான கலவையான குறிப்புகள் – ஜோமோ என்ற யாக்-பசு கலப்பின வகை குறித்த குறிப்பு ஒன்று – யாக்கின் பால் இனிமையானாதாகவும் சத்துமிக்கதாகவும் இருப்பினும் யாக்கைப் போல இரு மடங்கு பால் தருகின்ற, பசுவைப் போல நாங்க மடங்கு பால் தருகின்ற ஜோமோ வகை மாடுகளையே அங்கு விரும்பி வளர்க்கிறார்கள். திபெத் முழுவதும் கடைகளில் பெண்களே அதிகமாக வியாபாரத்தில் ஈடுப்பட்டிருப்பதைப் பதிவு செய்கிறார்.

ஒரு தாய்க்குப் பிறந்த சகோதரர்களை ஒரே பெண் மணந்து கொள்ளும் வழக்கம் குறித்தும், அங்கு அவர் சந்திக்கும் ஒரு திபெத்திய அரச குடித் தொடர்புடைய ஒரு பெண், இந்தியப் பெண்களை விட இந்த வழக்கம் எவ்வளவு மேம்பட்டது என்று குறிப்பிடுவதையும் எழுதி இருக்கிறார். திபெத்தில் ஒரு அன்னை வயிற்றில் பிறந்த அனைத்து சகோதரர்களையும் ஒரே பெண் மணந்து கொள்வதன் வாயிலாக அக்குடும்பத்தின் அனைத்து செல்வங்களுக்கும், உடைமைகளுக்கும் உரிமையுடையவளாகிறாள். அவர்களைப் பொறுத்த வரை ஒரு வயிற்றில் பிறந்த சகோதரர்கள் ஒருவரே என்றும் அவர்களது ஆன்மாக்களே வேறு என்றும் கூறுகிறாள்.

அங்கிருந்து சரத் சந்திர தாஸ் டாங்சே, யாம்டோ சாம்டிங் வழியாக லாசாவுக்குப் பயணமாகிறார்.  டாங்சேவில் திபெத்திய பௌத்தத்தின் முக்கியமான காலசக்ர மண்டல உபாசனை தொடக்க நிகழ்வைக் காண்கிறார்.  அப்பகுதியெங்கும் பெரியம்மை முழுவீச்சில் பரவியிருக்கிறது. இவருக்கு செல்லும் வழியில் கடுமையான காய்ச்சலும் உடலையே உலுக்கும் தீவிரமான இருமலும் தொற்றிக் கொண்டு உடல் நிலை கெடுகிறது. வழியில் யாம்டோ ஏரிக்கரையில் சாம்டிங் மடாலயத்தில் சென்று சில நாட்கள் சிகிச்சை பெறுகிறார். திபெத்திய முறைமையிலான சிகிச்சை முறைகள், நோய்தீர்க்கும் பரிகாரங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன.  பிரஞ்ஞான பரமிதாவை பாராயணம் செய்வது(8000 ஸ்லோகங்கள்), திபெத்திய இந்திரனுக்கும், அக்னிக்கும், வாயுவுக்கும் என பலவகையான தானங்கள் போன்றவை. மெல்ல குணமடைந்து மீள்கிறார். திபெத்தில் இறந்தவர்கள் உடலை கழுகுகளுக்கு படைத்துவிடும் வழக்கம் இருக்கிறது. அதே போல அந்த யாம்தோ ஏரியில் இறந்தவர்கள் உடலை விடும் பழக்கமும் இருந்திருக்கிறது. அந்த ஏரியில் சென்று முடியாது உயிர் பிழைத்து லாசாவுக்கு செல்வது குறித்து மகிழ்ச்சி அடைகிறார்.

அவர் லாசாவுக்கு சென்று சேரும் போது அங்கே பெரியம்மை முழுவீச்சில் பலருக்கும் பரவி இருக்கிறது. அதற்கிடையே அவருக்கிருந்த உயர் குடி நட்புகள் வாயிலாக அப்போதிருந்த எட்டு வயதே நிரம்பிய தலாய் லாமாவை நேரில் சந்திக்கிறார். தலாய் லாமாக்கள் எவ்விதம் அடையாளம் காணப்படுகிறார்கள் என்பது குறித்த விவரங்களும் வருகிறது. லாசாவில் இருந்து பீகிங் (பெய்ஜிங்) எட்டு முதல் பத்து மாத பயணத் தொலைவில் இருக்கிறது. எனவே லாசாவுக்கும் பீகிங்கிற்கும் இடையே விரைவு அஞ்சல் சேவை போன்ற பணியில் ஈடுபடுத்தப்பட்ட படையினர் குறித்த அரிய தகவல்களை பதிவு செய்கிறார். அந்தப் பணி- மிகக் கடுமையான வாழ்க்கை முறை, அளவு வரையறுக்கப்பட்ட உணவு,  ஒரு நாளைக்கு மூன்றே மணி நேரம் உட்கார்ந்த நிலையிலேயே தூங்க அனுமதி, ஒவ்வொரு நாளும் பயணம் செய்து முடிக்கவேண்டிய தொலைவு என மிகக் கடுமையான வேலையாகத் தெரிகிறது.

அதன் பிறகு இரு அத்தியாயங்கள் லாசாவின் முறைமைகள், திருவிழாக்கள் குறித்தும், திபெத்தின் திருமணங்கள், இறப்புச்சடங்குகள், மருந்துகள், விழாக்கள்  போன்ற பலவற்றைப் பற்றிய குறிப்புகளும் கொண்டிருக்கின்றன. குற்றங்களும், அதற்கான விசாரணை முறைகளும், தண்டனைகளும் பற்றிய விவரமான குறிப்புகள் வருகின்றன.

கைமுக்கு கதையில் வருவது போல கொதிக்கும் எண்ணெய் அல்லது நீரில் வெண்ணிறம், மற்றும் கருநிறம் கொண்ட கற்களைப் போட்டு, குற்றவாளியை கொதிக்கும் திரவத்தில் கைவிட்டு அந்தக் கல்லை எடுக்கச்செய்து, கை புண்ணாகாமல் வெள்ளை நிறக் கல்லை எடுத்தால் நிரபராதி என்றும், சிறிய கொப்பளங்களோடு வெள்ளை நிறக் கல்லை எடுத்தால் சிறிதளவு குற்றத்தில் பங்குண்டு எனவும், கை மிகவும் புண்ணாகி விட்டாலோ, கரிய நிறக் கல்லை எடுக்க நேர்ந்தாலோ குற்றம் செய்தவர் என்றும் தீர்மானிக்கிறார்கள். இதே போல இன்னும் சில முறைகள். அதே போல இறந்தவர் சடலத்தை கழுகுகளுக்கு படைக்கும் போது கழுகுகள் கூட்டமாக வந்தால் உயர்ந்த வாழ்வை மேற்கொண்டவர் என்றும், நாய்கள் கூட உண்ணவில்லை என்றால் பாவம் செய்தவர் என்றும் முடிவு செய்கிறார்கள். திபெத்தின் சிறை வர்ணனை மிகவும் கொடுமையானது. கதவை எடுத்துவிட்டு வாயிலை மொத்தமாக அடைத்துவிடுவார்கள். உணவுக்கு சிறு துவாரம். உள்ளே சேரும் கழிவை வெளியேற்றுவதற்கு கூரையில் சில துளைகள். பலரும் சில மாதங்களிலேயே உயிரிழந்து விடுவார்கள் என்றும், அரிதாக ஒரு சிலர் இதில் இரண்டு வருடங்கள் வரை உயிரோடிருந்தவர்களும் இருக்கிறார்கள் என்றும் குறிப்பிடுகிறார். எனில் இவை சற்று மிகையாக்கப்பட்ட குறிப்புக்கள் என்றும், செவி வழி அறிந்த செய்திகளே என்பதால் கூற்றின் உண்மைத்தன்மை சற்றுக் குறைவென்றும் அடிக்குறிப்புகள் இருக்கின்றன.

இத்தனை நெடிய பயணத்துக்குப் பிறகு இரண்டு வாரங்களே லாசாவில் இருக்கிறார். மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பி வருகிறார். அவர் பிரிட்டிஷார் அனுப்பி வைத்த உளவாளி என்றும், அவருக்கு இப்பயணத்தில் திபெத்தில் உதவியதாக அறியப்பட்ட அனைவரும் சீன அரசாங்கம் கொன்றழித்ததாகவும் வேறு கட்டுரைகள் சொல்கின்றன. “Journey to Lhasa: The Diary of a spy” என்றே மறுபதிப்பு வெளியாகி இருக்கிறது. வெளி உலகுக்கு எதுவுமே அறியப்படாமல் இருந்த நிலத்தின்மேல் முதல் வெளிச்சம் இந்தக் குறிப்புகள் என்ற வகையிலும், அதன் பிறகு 1903-ல் நிகழ்ந்த “Younghusband expedition”க்கு இவரது இந்தப் பதிவுகள் மிகவும் உதவின என்ற வகையில் இது ஒரு உளவுச் செயலாக கருதப்படலாம். ஆனால் இந்தப் புத்தகத்தில் அந்தப் பயணத்தை, அந்த மண்ணை ரசித்த ஒருவரது பார்வையாகவே இக்குறிப்புகள் இருக்கின்றன. அவர் ஒற்றறிந்தார் என்பது ஒரு உண்மையாக இருக்கலாம். அறிவுப்புலன் சார்ந்த தேடலுக்கு அப்பால் அவரை ஒரு ஒற்றர் என்றும் இந்தப் பயணத்தை ஒரு உளவறிதல் என்றும் வாசிப்பதில் ஏதோ ஒன்று குறைந்துவிடுவதாகத் தோன்றுகிறது. டார்ஜிலிங் மீண்டு வந்து அவர் தனது இல்லத்திற்கு “லாசா வில்லா” என்றே பெயரிடுகிறார். ஒரு மனதுக்கினிய கனவை டைரியில் குறித்து வைப்பது போன்றது அது. அவ்வளவே வாசகராக எனக்கு முக்கியமாகப் படுகிறது.

மிக்க அன்புடன்
சுபா

***

அன்புள்ள சுபா

இந்த நூலை இளமையில் வாசித்திருக்கிறேன். திபெத் பற்றிய கனவை உருவாக்கிய நூல் இது. 1985ல் டார்ஜிலிங் சென்றபோது இவருடைய இல்லத்தை நேரில் சென்று பார்த்தேன். பாதி இடிந்து மரச்சட்டங்கள்மேல் நின்றிருந்த்து. ஒரு மலைப்பாதை சுழன்று இறங்கும் சரிவில் இடப்பக்கமாக இருந்த பங்களாவைச் சுற்றி சருகுகள் குவிந்து மலைக்காற்று ஊளையிட்டுக்கொண்டிருந்தது.

நூறுகதைகளில் ஒன்றாக இதையும் எழுதினேன், முடிக்கமுடியவில்லை. சரத்சந்திர தாஸ் அந்த வீட்டில் நிறைவுறாத ஆவியாக இருப்பதாக கதை. ஏனென்றால் உண்மையில் சரத் சந்திரதாஸ் பிரிட்டிஷ் ஒற்றராகவே சென்றார். திபெத்தியரின் நம்பிக்கையைப் பெற அவரை பயன்படுத்திக்கொண்டனர்.அவர் அங்கே சென்று ஆராய பிரிட்டிஷாரி பயன்படுத்திக்கொண்டார்

கர்னல் யங்ஹஸ்பெண்டின் படையெடுப்புக்கு தேவையான அடிப்படைச் செய்திகளை அளித்தவர் அவர். அவர் அந்தப்படையெடுப்பால் மனமுடைந்தார். பிரிட்டிஷ் ஆட்சியை கண்டித்தார். அதனால் பிரிட்டிஷாரால் ஒதுக்கப்பட்டு தனிமையில் தன் திபெத் ஆய்வுகளுடன் முடங்கி கைவிடப்பட்டு மரணமடைந்தார்

ஜெ

முந்தைய கட்டுரைநிறைவின் குரல்கள்
அடுத்த கட்டுரைதீபம்- போகன் சங்கர்