பேய்ச்சி வாங்க
வணக்கம்.
“பேய்ச்சி” நாவல் மலேசிய உள்துறை அமைச்சால் தடை செய்யப்பட்டுள்ளது.
ம. நவீன் – தமிழ் இலக்கியம் வாசிப்பவர்கள் அனைவருக்கும் அறிமுகமான இளைய தலைமுறை எழுத்தாளர். கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கும் மேலாக படைப்பிலக்கியத்தில் தீவிரமாகவும் தனித்துவத்தோடும் இயங்கி வருபவர். படைப்பிலக்கியத்துடன் இலக்கிய முன்னெடுப்புகளையும் அதற்கு ஈடாகச் செய்துவருபவர். மலேசிய நவீன இலக்கியத்தின் வரலாற்றினை, முகங்களை தொடர்ந்து ஆவணப்படங்கள் வழி பதிவு செய்பவர். அதே சமயம் விருதுகள் வழியாகவும் இணைய இதழ் வழியாகவும் இளம் படைப்பாளிகளை ஊக்கப்படுத்துபவர். அவர் நடத்தும் யாழ் பதிப்பகம் வாயிலாக அங்கிருக்கும் தமிழ் பயிலும் மாணவர்களுக்காக அரசின் பாடத்திட்டங்களுக்கான வழிகாட்டிகளை தயாரித்து வருபவர்.
யாவரும் பப்ளிஷர்ஸ் நான்காண்டுகளாக கிட்டத்தட்ட 20 நூல்களை ம.நவீன் மற்றும் வல்லினம் நண்பர்களோடு இணைந்து வெளியிட்டுள்ளது. அவற்றில் எந்த புத்தகத்திலும் சமரசங்கள் செய்துகொண்டு வெளியிட்டதும் இல்லை அதேவேளை மலேசியாவில் சமகால இலக்கியங்களை முன்னெடுத்துச் செல்ல தேவையான அத்தனை முன்னெடுப்புகளும் அவர் தம் நண்பர்களோடு முன்னெடுத்து வருகிறார். அதன்வாயிலாகவே இந்தியாவிலிருக்கும் பலரும் மலேசிய எழுத்தாளர்களின் படைப்புகளை வாசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
இத்தகைய சூழலில், அண்மையில் வெளியாகிவந்த “பேய்ச்சி” நாவல் ஒரு காத்திரமான இலக்கியமாக பல்வேறு எழுத்தாளுமைகளால் பாராட்டப்பட்டு வருகிறது. மலேசியாவின் எளிய மக்களின் வாழ்வை வரலாறு மற்றும் தொன்மப் பின்புலத்தின் வழியே யதார்த்தமான மக்கள் மொழியில் சொல்லும் அப்புனைவை அண்மையில் மலேசிய அரசின் உள்துறை அமைச்சு தடை செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ம.நவீன் அவர்களது செயல்பாடுகள் மீது தனிப்பட்ட காழ்ப்புணர்வு கொண்டவர்கள் ஏற்படுத்திய வலை பின்னலின் விளைவு, அரசியல் நெருக்கடியாக உருப்பெற்று இன்று புத்தகத்திற்கே தடை என்று நீண்டுவிட்டது.
உலகெங்கும் படைப்புச் சுதந்திரத்திற்கு எதிரான அடிப்படைவாதக் குரல்கள் எழுந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அதைவிட வீரியமானது ஒரு படைப்பு. ஒவ்வொரு வாசிப்புமே அதன் நீட்சி, ஒவ்வொரு கருத்துமே அதன் நீட்சி. பேய்ச்சி நாவல் ஒரு மலேசிய நாவல் என்கிற குறிப்பினையும் மீறி அது ஒரு தமிழ் நாவல் என்றே குறிப்பிட வேண்டும் என்று விருப்பமுண்டு எனக்கு. மேலும் ஒரு தமிழ் எழுத்தாளன் தமது படைப்பின் பொருட்டே நசுக்கப்படுகிறான் என்பதை உலகிற்கு எடுத்துச் சொல்லவும், ம.நவீனுக்காகவும் அவரது எழுத்துக்காகவும் குரல் கொடுக்க இலக்கிய படைப்பாளுமைகளும், தமிழ் ஆர்வலர்களும், ஆசிரியர்களும், ஊடகங்களும், வாசகர்களும் மாணவர்களும் எழுத்தாளர் ம.நவீன் அவர்களுக்கு ஆதரவு வழங்க கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு
ஜீவ கரிகாலன்
யாவரும் பப்ளிஷர்ஸ்
அன்புள்ள நண்பர்களுக்கு,
மலேசியாவில் ம.நவீன் எழுதிய பேய்ச்சி நாவலுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது என்ற செய்தியை அறிந்தேன். இச்சூழலில் அந்நாவல் மீதான நம் ஆதரவை, நவீனுக்கான பின்துணையை நாம் அளித்தாகவேண்டும். தமிழ்நவீன இலக்கிய உலகம் அவருக்குப்பின் நிலைகொள்கிறது என்பதை தெரிவிக்கவேண்டும். இது ஒரு நீண்ட பண்பாட்டுப்போராட்டத்தின் ஒரு கட்டம்
ஆனால் அவ்வெதிர்ப்பு மலேசிய அரசுக்கு அல்லது கலாச்சார அமைச்சகத்துக்கு எதிரானதாக அமைவதில் பொருளில்லை. இன்றுள்ள சூழலை நாம் சற்று புரிந்துகொள்ளவேண்டும்
மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு ஒரு பிரச்சினை உள்ளது. அவை சென்ற இருநூறாண்டுகளில் அந்நிலத்தில் குடியேறி வாழும் மூன்று வகை மக்களாலான சமூகங்கள். மூன்று வெவ்வேறு மனிதஇனங்கள், முற்றிலும் மாறுபட்ட வாழ்க்கைமுறைகள், ஒன்றையொன்று மறுக்கும் மூன்று மதங்கள், ஒன்றுடனொன்று தொடர்பே அற்ற மூன்று மொழிகள். ஏற்கனவே இனக்கலவரங்கள் நிகழ்ந்த வரலாறும் அவர்களுக்குண்டு
ஆகவே அங்குள்ள அரசுகள் மிக கவனமாக இனங்களுக்கிடையேயான புரிதல்களை குலைக்கும் பேச்சு எழுத்து செயல்பாடுகளை ஏற்பதில்லை.எந்த இனமும் சீண்டப்படுவதை அனுமதிப்பதில்லை.பண்பாட்டுச் செயல்பாடுகளில் ஒரு மிதமிஞ்சிய கவனம் அங்குள்ளது.
இதேபோன்ற பல்லினச் சூழல் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ளதே என்று கேட்கலாம், ஆனால் அங்கே வெள்ளைய இனம் அன்றி மற்ற இனங்கள் மிகச்சிறுபான்மை. வெள்ளைப் பெரும்பான்மையினர் பெரும்பாலும் நவீனநோக்கும் ஜனநாயக அணுகுமுறையும் கொண்டவர்கள். ஆனால் ஐரோப்பாவில் இன்று வேறு இனங்கள் அதிக எண்ணிக்கையில் குடியேறத்தொடங்கியபின் மிகவேகமாக இனப்பூசல் உருவாகி வலுப்பெறுவதை நாம் காண்கிறோம்.
இச்சிக்கல் இந்தியாவில் இல்லையா என்றால், உள்ளது. இந்தியச் சட்டங்களும் இதைப்பற்றிய எச்சரிக்கையுடன் உள்ளன. ஆனால் இங்குள்ளது முதன்மையாக சாதிப்பூசல். அப்பூசல் தொடங்கி இரண்டாயிரமாண்டுகள் ஆகின்றது. பூசலும் சமரசமுமாக ஒரு முன்னகர்வுக்கு நம் சமூகம் பழகியிருக்கிறது. நமக்கு எத்தனை முரண்பாடுகளிருந்தாலும் சேர்ந்து வாழ்ந்த ஆயிரமாண்டு வரலாற்று- பண்பாட்டுப் பின்புலமும் இருக்கிறது. நாம் ஒட்டுமொத்தமாக ஒரே இனம்.மலேசியாவும் சிங்கப்பூரும் புதியதாக உருவாகிவந்த சமூகங்களைக்கொண்டவை.
ஆகவே மலேசியாவும் சிங்கப்பூரும் கொண்டிருக்கும் இந்த கவனம் புரிந்துகொள்ளத் தக்கது. ஆனால் நடைமுறையில் இது எல்லாவகையான பண்பாட்டுச் செயல்பாடுகளையும் ஐயத்துடன் பார்ப்பதிலும், எல்லாவகையான விமர்சனங்களையும் தடுப்பதிலும் சென்று முடிகிறது. ஒட்டுமொத்தமாக கலையிலக்கியச் செயல்பாடுகளையே ஒருவகையான நாசூக்குப்பேச்சு, தற்பெருமைக்கூறுகளாகவும் மாற்றிவிடுகிறது
இதற்குக் காரணம் அங்குள்ள அரசு அல்லது கலாச்சார அமைச்சகம் அல்ல. அப்படி எளிமைப்படுத்திக்கொண்டால் நாம் மெய்யான சிக்கல்களை பார்க்க மறுத்து எளிய உணர்வுகளை வெளிப்படுத்துகிறோம். பிரச்சினையாக இருப்பது அரசின் எச்சரிக்கையை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் பண்பாட்டுத்தளத்திலுள்ள சிலர்தான்.
அந்நாடுகளில் எந்த நூலையும் பல்லினப்புரிதலுக்கு ஊறுவிளைவிக்கிறது என்று புகார்சொல்லமுடியும். அப்படி ஒரு குற்றச்சாட்டு வந்தால் அதை அரசுசார்ந்த அமைப்புகள் புறவயமாக விசாரிக்க இயலாது. ஏனென்றால் ஓர் இனத்தின் பண்பாட்டுச்சிக்கல்களை இன்னொரு இனத்தவர் புரிந்துகொள்ள முடியாது. இலக்கியம் அகவயமானது. ஒரு சொல் புண்படுத்துகிறது என்றால் ஏன் புண்படுத்துகிறது என அச்சூழலில் இல்லாத இன்னொருவருக்கு புரியவைக்க முடியாது.
ஓர் இனத்தின் சிக்கலில் இன்னொரு இனத்தவர் எந்த நடவடிக்கை எடுத்தாலும் விமர்சனமே எழும். ஆகவே அதே இனத்தைச் சேர்ந்த ஒரு குழுவிடம் முடிவெடுக்கச் சொல்கிறார்கள். அந்தக்குழு எப்படிப்பட்டது என்பதே கேள்வி. அது அதிகாரமையம் சார்ந்த குழு என்றால் “எதுக்கு வம்பு?” என்ற முடிவையே எடுக்கும். மலேசியாவில் மட்டுமல்ல உலகம் முழுக்கவே அரசுகள் பிரச்சினைகள் ஏதும் இல்லாமல் சமூக ஒழுங்கை அப்படியே கொண்டுசெல்லவே முயல்கின்றன. அவற்றின் அன்றாடத்தில் இதெல்லாம் சில்லறைப்பூசல்கள் மட்டுமே. அதுதான் நிகழ்ந்திருக்கிறது.
பேய்ச்சி நாவல் தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்துவதாகவும், அதிலுள்ள வசைச்சொற்கள் குடும்பச் சூழலுக்கு ஒவ்வாதனவாக இருப்பதாகவும் அங்குள்ள தமிழ்மக்களில் அதிகாரத்துக்கு அணுக்கமான ஓர் உயர்வட்டம் கருதுகிறது. அவர்கள் அரசுக்கு மனுகொடுத்தார்கள். அரசு விசாரித்தபோது ஆலோசகர் வட்டமும் அவ்வாறே கூறியது. தமிழ்மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு வட்டம் அவ்வண்ணம் கருதினால் அரசு அதை ஏற்றுத்தான் ஆகவேண்டும் என்பதே அரசியல் நடைமுறை.
அவ்வண்ணம் அவர்கள் முடிவெடுத்தது பிழையானது. கலையிலக்கியச் செயல்பாடுகளில் அவ்வண்ணம் எடுக்கப்படும் முடிவுகள் நீண்ட நோக்கில் பெரிய தேக்கங்களை உருவாக்கும். இளைஞர்களின் கனவுகளை மட்டுப்படுத்தும். தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொண்டு எழுதப்படுவது இலக்கியத்தின் தீவிரத்தை அடைவதில்லை. எந்த அரசும் இத்தகைய நடவடிக்கைகளை துறைத்தேர்ச்சியாளர் குழு [Peer Review] ஒன்றைக்கொண்டே எடுக்கவேண்டும்.
பேய்ச்சி மலேசியத் தமிழிலக்கியத்தில் எழுதப்பட்ட மிகச்சிறந்த நாவல், தமிழில் சென்ற சில ஆண்டுகளில் வெளிவந்த மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்று. அது ஒரு நவீன இலக்கியம். நவீன இலக்கியம் மரபான ஒழுக்கநெறிகளை பேணி எழுதப்படுவது அல்ல. யதார்த்தத்தைச் சித்தரிக்கவும், விமர்சனத்தை முன்வைக்கவும் அது பொதுநாகரீக -ஒழுக்க எல்லைகளைக் கடந்து செல்வது எப்போதும் நிகழ்கிறது.
ஏனென்றால் நவீன இலக்கியம் ஒரு சூழலில் ஏற்கனவே புழக்கத்திலிருக்கும் அறத்தையோ ஒழுக்கத்தையோ சார்ந்து எழுதப்படுவதல்ல. எதிர்காலத்திற்கான அறத்தையும் ஒழுக்கத்தையும்தான் அது முன்வைக்கிறது. அது நிகழ்காலத்தில் மீறல் என்று கருதப்படலாம். ஆசாரவாதிகள்,மரபுவாதிகள், நிலைச்சக்திகள் அதை எதிர்க்கலாம்.
நவீன இலக்கியம் தொடங்கிய காலம் முதலே இது இருந்துள்ளது. பாரதியின் படைப்புகளிலேயே ‘விரசம்’ என்ற குற்றச்சாட்டு இருந்துள்ளது. கதைத்தலைவனும் தலைவியும் முத்தமிட்டதாக அவர் எழுதியதை கண்டித்திருக்கிறார்கள். கண்ணன் பாட்டு எல்லைமீறிவிட்டது என்று சொல்லப்பட்டது. அந்த குற்றச்சாட்டுகளுக்கு வ.வெ.சு.அய்யர் பதிலளித்துள்ளார்.
புதுமைப்பித்தனின் சாபவிமோசனம் ஆசாரவாதிகளின் எதிர்ப்பைச் சந்தித்தது. அவருடைய பொன்னகரம் ஆபாசம் என விமர்சனம் செய்யப்பட்டது. ஜெயகாந்தனின் அக்னிப்பிரவேசம் போன்ற கதைகள் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டன.
நவீன இலக்கியத்தில் அப்படைப்பின் பொதுவான தளம் என்ன, அதன் கலைத்தரம் என்ன என்பதைக்கொண்டே அதன் மீறல்கள் மதிப்பிடப்படவேண்டும். தமிழக இலக்கிய சூழலை வைத்துப்பார்த்தால் பேய்ச்சியில் அப்படி எந்த பெரிய மீறலும் இல்லை. அன்றாடப்பேச்சுவழக்கிலுள்ள சில வசைச்சொற்கள் யதார்த்தத்தின்பொருட்டு பதிவுசெய்யப்பட்டுள்ளன, அவ்வளவுதான்.
ஆனால் நவீன இலக்கியம் பற்றிய இந்தப்புரிதலை மலேசியாவின் தமிழ்க்கலாச்சார மையங்களிடம் இயல்பாக எதிர்பார்ப்பது சரியா? தமிழ்ச்சூழலில் நவீன இலக்கியம் பெருவாரியாக வாசிக்கப்படுவதில்லை. அதன் அழகியல்,அறவியல் எதைப்பற்றியும் தமிழர்களுக்கு பெரும்பாலும் எதுவும் தெரியாது. மலேசியாவில் மட்டுமல்ல, தமிழகத்திலும் இதுவே நிலைமை. அப்படியிருக்க எளிமையான ஒழுக்கப்பார்வையை அவர்கள் வெளிப்படுத்துவது இயல்பானதே.
இன்றுகூட கல்லூரிகளில் நவீன இலக்கியவாதிகள் பேசப்போனால் இலக்கியத்தில் உயராய்வுசெய்யும் பேராசிரியர்களே அதிலுள்ள ஒருசில வசைச்சொற்களையோ, மெல்லிய பாலியல்காட்சிகளையோ சுட்டிக்காட்டி எழுத்தாளனைக் கண்டிப்பது சாதாரணமாக நிகழ்வதுதான். ரப்பர் நாவல் முதல் எல்லா படைப்புகளுக்காகவும் நான் அவ்வண்ணம் கண்டிக்கப்பட்டிருக்கிறேன்.
இன்றுகூட இங்குள்ள பெருவாரியான தமிழ்மக்கள், கல்வித்துறையினர் குறுகிய ஒழுக்கப்பார்வையுடன்தான் நவீன இலக்கியத்தைப் பார்க்கிறார்கள். இந்த தளத்திலேயே நான் மதுரையில் ஒரு கல்லூரியில் கி.ராஜநாராயணனின் புகழ்பெற்ற சிறுகதையை மேற்கோள்காட்டியது ‘ஆபாசம்’ என கண்டனம் தெரிவித்து பேராசிரியை ஒருவர் எழுதியிருக்கிறார் [பாத்திமா கல்லூரி- ஒரு கடிதம்]
தமிழ்நாட்டில் தமிழிலக்கியங்கள் இதுவரை தடைசெய்யப்பட்டதில்லை. ஏனென்றால் இங்குள்ள சட்டம் அதை அனுமதிப்பதில்லை. பெரும்பாலும் நீதிமன்றங்களை நம்பியே இங்கே இலக்கியம் எழுதப்படுகிறது. எந்த ஒரு வழக்கிலும் நீதிமன்றம் வரைச் சென்றால் கருத்துரிமை அனுமதிக்கப்படும். அந்த நம்பிக்கை இருப்பதனால் அரசுகளும் நிரந்தரத் தடைகளை விதிப்பதில்லை
பொதுவாகச் சொல்லப்போனால் இந்தியச் சமூகத்தின் பொதுப்பண்பாட்டுக்கும் பொதுவான உளநிலைக்கும் மிகமேலே, ஒரு வழிகாட்டி விண்மீன் போல, நின்றிருப்பது நமது அரசியல்சட்டம். நம் மக்கள் பொதுவாக சாதி,மதம், மொழி,இனம் என பிரிந்து பூசலிடுபவர்களாகவே உள்ளன. ஜனநாயகம், கருத்துரிமை, அனைவருக்கும் நிகரிடம் ஆகியவை சார்ந்து அவர்களுக்கு புரிதலோ நம்பிக்கையோ இல்லை.ஆனால் நம் அரசியல் சட்டம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மாபெரும் கனவுகளுடன் எழுதப்பட்டுள்ளது. அதுவே நம்மை ஓர் ஜனநாயக நாடாக காப்பாற்றி வைத்திருக்கிறது.
அந்த மாபெரும் இலட்சியக்கனவு எந்த நாட்டுக்கும் ஒரு பெரும்செல்வம். நமக்கு தந்தையர் அளித்த ஆசி அது. ஆனால் அதை இந்தியாவின் சிறுபான்மையினர் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் தங்கள் மதப்பார்வையின் சிறியவட்டத்திற்குள் உழன்றபடி எந்த விமர்சனத்தையும் மதநிந்தனை என எடுத்துக்கொண்டனர். பூசல்களை தவிர்க்கும்பொருட்டு அவர்கள் சுட்டிக்காட்டும் படைப்புகள் எல்லாமே இங்கே தற்காலிகமாக தடைசெய்யப்பட்டன். அது பெரும்பான்மையினர் மீதான ஓரவஞ்சனை எனறு ஒருசாரார் விளக்கினர். அந்த ‘புண்படும் உரிமை’ ‘தடைகோரும் உரிமை’ ஆகியவற்றுக்காக பெரும்பான்மையினர் குரல்கொடுக்கலாயினர்.
இந்தியாவின் பெரும்பான்மையினருக்கே இந்தியாவின் அந்த மாபெரும் மரபுச்செல்வத்தை காக்கும்பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதை ஒரு தளை என்று புரிந்துகொள்கிறார்கள். அதை உதறி மத்தியகால மதவாத அரசுகளின் கருத்துமேலாதிக்கநிலை நோக்கிச் செல்ல விரும்புகிறார்கள். இந்தியாவில் இன்று நூல்களை தடைசெய்வதற்கான கோரிக்கைகள் நாளும் எழுந்து வருகின்றன. இந்தியா மிகப்பெரிய பின்னோக்கிய அலையில் உள்ளது.
சென்ற பத்தாண்டுகளில் நம் சூழலில் படைப்புகளுக்கு எதிராக எந்தெந்த எதிர்ப்பலைகள் எழுந்தன என்று பாருங்கள். எம்.எஃப்.ஹுசெய்னின் ஓவியங்களுக்கான எதிர்ப்பு ஒரு தொடக்கம். எம்.எம்.பஷீர் ராமாயணம் பற்றி எழுதியபோது உருவான எதிர்ப்பு உட்பட எத்தனை குரல்கள். முகமது என்ற பெயர்வந்த ஒரு கவிதையை பாடத்திட்டத்தில் இருந்து சுட்டி கேள்விகேட்டதற்காக ஓர் ஆசிரியரின் கை வெட்டப்பட்டது வரை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.
தமிழ் நவீன இலக்கியம் மிகச்சிறிய வட்டத்துக்கு வெளியே கவனிக்கப்படுவதுமில்லை என்பதே அதன் பாதுகாப்பாக இதுவரை இருந்து வந்தது. இன்று சமூகவலைத்தளச் சூழல் அந்தப் பாதுகாப்பையும் அழிக்கிறது. இன்று ஒரு படைப்பிலுள்ள ஒருவரியை எடுத்து போட்டு அதை ஒரு மதக்கலவரத்தை தூண்டுவதாக ஆக்கிவிடமுடியும்.
இலக்கியவட்டத்துக்கு வெளியே கவனிக்கப்படும்போதெல்லாம் நவீன இலக்கியம் பொதுமக்களின் எதிர்ப்பை சந்தித்திருக்கிறது. இதற்கு மதவாதிகள் முற்போக்காளர்கள் எல்லாருமே வழிவகுத்து அளித்திருக்கிறார்கள். 96 வயதான கி.ராஜநாராயணன் பேச்சில் சொன்ன ‘அவன்’ என்ற ஒரு சாதாரணசொல்லுக்காக தமிழ்நாட்டு முற்போக்கு எழுத்தாளர்சங்கத்தின் இணைஅமைப்பான தீண்டாமை ஒழிப்பு முன்னணி அவரை வன்கொடுமை ஒழிப்பு வழக்கில் சிக்கவைத்ததை நாம் அறிவோம்.நீதிமன்ற பாதுகாப்பு இல்லையென்றால் அவர் முதியவயதில் சிறைசென்றிருக்கநேரிட்டிருக்கும்
அதற்கு முன்பு சுந்தர ராமசாமி எழுதிய பிள்ளைகெடுத்தாள்விளை என்ற கதையை வேண்டுமென்றே தவறாக விளக்கி அவருக்கு எதிராக ஒரு காழ்ப்புப் பிரச்சாரத்தை இடதுசாரிகள் நடத்தினர். அவர்மேல் வன்கொடுமை வழக்கு தொடுக்கவேண்டுமென அறைகூவினர்.
தமிழ் எழுத்தாளர்கள் இங்கிருக்கும் சூழலை அறிந்து மிகக்கவனமாகவே எழுதுகிறார்கள். இங்கே எவரும் வலுவான இடைநிலைச் சாதிகளுக்கு எதிரான விமர்சனங்கள் எழுவதே இல்லை. அதை எழுத்தாளன் தாளமுடியாது.சுஜாதா ‘கறுப்பு சிவப்பு வெளுப்பு’ நாவல் பிரச்சினையின்போது அந்த எதிர்ப்பைச் சந்திக்க நேர்ந்தது அனைவருக்கும் ஓர் எச்சரிக்கையாக அது அமைந்தது.
இங்கே உள்ள இடைநிலைச்சாதியின் எழுத்தாளர்கள்கூட எவ்வகையிலும் தங்கள் சாதிப்பின்புலத்தை விமர்சனம் செய்வதில்லை — ஆணவக் கொலைகளின்போதுகூட. பலர் சாதியவாதிகளாக, சாதியமைப்புகளின் பாதுகாப்பிலேயே, திகழ்கிறார்கள். தனிப்பட்ட பேச்சுக்களில் விமர்சனமே சாத்தியமில்லை, ஊரில் வாழவே விடமாட்டார்கள் என்று அவர்கள் சொல்லக்கேட்கையில் அதை மறுக்கவும் முடிவதில்லை.
விதிவிலக்குகள் உண்டு. ஜோ டி குரூஸ் தான் சார்ந்த மீனவச்சமூகத்தின் வாழ்க்கையை எழுதினார். அதில் அவர்களின் பெருமிதமும் பாடுகளுமே சொல்லப்பட்டிருந்தன. சற்றே விமர்சனமும் இருந்தது. அச்சிறு விமர்சனத்தின் பொருட்டே அவர் ஊர்விலக்கம் செய்யப்பட்டார். தன் தந்தையின் இறுதிச்சடங்குகளுக்குச் செல்வதே கூட இயலாத நிலை ஏற்பட்டது.
கவிதையில் எழுதிய மிக எளிமையான ஒரு வரிக்காக ஹெச்.ஜி.ரசூல் மதவிலக்கம் செய்யப்பட்டார். பல ஆண்டுகள் நீதிமன்றத்தில் அலைந்து அவர் அதற்கு சட்டபூர்வ தடையைப் பெற்றார். அவருடைய மரணமே அப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவந்தது. பெருமாள் முருகன் மிரட்டப்பட்டு ஊரில் வாழமுடியாத நிலை ஏற்பட்டது. சட்டபூர்வமாக அவர் நிவாரணம் பெற்றார். அவருடைய பதிப்பகம் உறுதியாக அவருடன் நிலைகொண்டமையால் அவரால் தாக்குப்பிடிக்க முடிந்தது.
இங்கே கருத்துக்கள் எப்படி எதிர்கொள்ளப்படுகின்றன? மிக எளிமையான ஒரு கருத்துக்காக குஷ்பு நீதிமன்றங்கள்தோறும் இழுக்கப்பட்டார். வரலாற்றாய்வுத் துறையில் சொல்லப்படும் ஒரு சாதாரணமான கருத்தைச் சொன்னதற்காக பா.ரஞ்சித் நீதிமன்ற வழக்கைச் சந்தித்தார். குஷ்புவுக்கு எதிராக வழக்குதொடுத்தவர்களில் தலித் இயக்கத்தவரும் உண்டு. பா.ரஞ்சித்துக்கு இங்கே இடைநிலைச் சாதி அடையாளத்தை அவர் சீண்டமுடியாது என்பது உணர்த்தப்பட்டது.அவருக்கு எந்த தலித் அமைப்பும் உதவ முடியவில்லை.
இந்தியாவில் நீதிமன்றவழக்குகள் என்பவை நீதிக்கான கோரிக்கைகள் அல்ல, அவை ஒருவகை தண்டனைகளே. குற்றம்சாட்டப்பட்டவர் நீதிமன்றங்கள் தோறும் அலையவேண்டும். உறுதியாக இந்தியாவில் எவரும் கருத்து சொன்னமைக்காக தண்டிக்கப்படமாட்டார்கள். குற்றம்சாட்டியவர்களை நீதிமன்றம் கண்டிக்கவும்கூடும். ஆனால் அதற்குள் குற்றம்சாட்டப்பட்டவர் நீதிமன்றப்படிகளைல் ஏறி இறங்கி, வழக்கறிஞர்களுக்குச் செலவழித்து சலிப்புறுவார். அவருடைய கலையிலக்கியச் செயல்பாடுகள் சீரழியும்.
இங்கே உள்ள அரசியல் அமைப்புக்கள். தனிநபர்களான எழுத்தாளர்களுக்கு விடுக்கும் எச்சரிக்கை இது. இதில் முன்னணியிலிருப்பது இடதுசாரிகளின் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்பது கீழ்மையின் உச்சம். சமீபத்தில் எனக்கும் அவர்களிடமிருந்து மிரட்டல் வந்தது.[ஆதவன் தீட்சண்யாவின் வழக்கறிஞர் அறிவிக்கை ]
இங்கே இதுவே தொடர்ந்து நடைபெறுகிறது. ஒரு கருத்து தங்களுக்கு எதிரானது என்றால் அதைச் சொன்னவரின் கருத்துச் சுதந்திரம் ஒரு பொருட்டல்ல, அவர் ஒடுக்கப்படவேண்டியவர் என்னும் நிலைபாடு இங்குள்ள மதவாதிகள், முற்போக்காளர்கள், தனித்தமிழ்த்தேசியர்கள், தலித்தியர்கள் என அனைவரிடமும் உள்ளது.
கருத்து என்பது கருத்தால் சந்திக்கப்படவேண்டியது என்பது ஜனநாயகத்தின் அடிப்படைகளில் ஒன்று. கருத்துச்செயல்பாட்டின் ஆதாரம் அது. அது இங்கு எவருக்குமே பொருட்டல்ல. தனிநபர்களை அமைப்புக்கள் மிரட்டுவதென்பது உச்சகட்ட வன்முறை என்பதை இங்கே எவரும் கவனிப்பதில்லை.
ம.நவீன் மலேசிய இலக்கிய எழுத்துக்களைப் பற்றிச் செய்த விமர்சனங்கள் வழியாக உருவான காழ்ப்பே இந்த புகாருக்கும் நடவடிக்கைகளுக்கும் காரணம். நவீன் ஒருபோதும் தனிநபர் தாக்குதல்களில் இறங்குவதில்லை. இலக்கிய மதிப்பீடுகளையே முன்வைக்கிறார். அவை ஒருநூற்றாண்டாக தமிழிலக்கியச் சூழலில் முன்வைக்கப்படுபவையும் கூட. அதைப் பொறுக்கமுடியாதவர்களின் செயல் இது
உண்மையில் இனங்களுக்கிடையே கசப்பையும் மோதலையும் உருவாக்குவதை தடுக்கும் இந்த சட்டப்பாதுகாப்பு என்பது சிறுபான்மையினரான தமிழர்களுக்கு மிகப்பெரிய அரண். அவர்கள் தங்கள் பண்பாடு வாழ்க்கைமுறை ஆகியவற்றின் மீதான தாக்குதல்களில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான சட்டபூர்வ உறுதிமொழி அது.
ஆனால் நான் பார்த்தவரை தமிழர்கள் இதை தங்களுக்கிடையேயான பூசல்களில் மாறிமாறி தாக்க ஆயுதமாகவே பயன்படுத்திக்கொள்கிறார்கள். தனிப்பட்ட சண்டைகளில் இச்சட்டத்தை இழுத்து திரித்துக்கொள்கிறார்கள். அந்நாட்டு அரசுகளிடம் தங்களைத்தாங்களே குற்றம்சாட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதிலுள்ள கீழ்மை அவர்களுக்கு உறைப்பதே இல்லை.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இங்குள்ள பிரச்சினை மலேசிய அரசின் தடை அல்ல. அது ஒருவகையில் அங்குள்ள தமிழ்ச்சமூகம் தன் படைப்பிலக்கியத்திற்கு தானே விதித்துக்கொண்ட தடை. நவீன இலக்கியத்தின்மீதான அடிப்படைப்புரிதல் தமிழர்களிடம் இல்லை என்பதற்கான ஆதாரம் இது. எதிர்காலத்தில், கல்வியும் பண்பாட்டுவிழிப்புணர்வும் உருவாகும்போது, இலக்கியம் சார்ந்த புரிதல் பிறக்கும் என எதிர்பார்க்கலாம். அன்று பேய்ச்சி மீண்டும் கொண்டாடப்படும். அவ்வண்ணம் சமகாலத்தில் தடைசெய்யப்பட்டு பின்னர் கலைப்படைப்பு என கொண்டாடப்பட்ட எத்தனையோ ஆக்கங்கள் உலக இலக்கியத்தில் உள்ளன.
இது நவீன இலக்கியத்திற்கும் அதைப்பற்றிய அடிப்படைப்புரிதலே இல்லாத ஒரு தேங்கிப்போன சமூகத்திற்கும் இடையேயான போராட்டம். இது நிகழ்ந்தபடியேதான் இருக்கும்.
———————————————————————————————–
பேய்ச்சி: மலேசியா -சிங்கை வட்டாரத்தின் முதன்மையான நாவல்- கனகலதா
ம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு
ம.நவீனின் பேய்ச்சி- அருண்மொழி நங்கை
‘பேய்ச்சி’ முதல் நாவல் – குறித்து வல்லினம் ம.நவீன் தமிழக ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல்
பேய்ச்சி நாவலை முன்வைத்து- ஜெயஸ்ரீ
அன்னை ஆடும் கூத்து- கடலூர் சீனு
பேய்ச்சி -காளிப்பிரசாத்
பேய்ச்சி: அன்னையின் பேய்மையும் அதீதத்தின் திரிபும்- அழகுநிலா
பேய்ச்சி: பேருரு அன்னையுள் பேயுரு- கி.இ.உதயகுமாரி
உள்மடிப்புகளால் உயிர்க்கும் பேய்ச்சி-பவித்ரா
எனவே அந்தப் புத்தகத்தைத் தடை செய்வீர்– விஜயலட்சுமி
ஹெ.ஜி.ரசூல் பற்றி
எச்.ஜி.ரசூல்
அஞ்சலி ஹெச்.ஜி.ரசூல்
எம்.எஃப்.ஹுசெய்ன் பற்றி
ஹூசெய்ன் இந்துதாலிபானியம்
எம்..எஃப்.ஹுசெய்ன்
எம்.எ·ப்.ஹ¤செய்ன் கடிதம்
ஹூசெய்ன், ஒரு கடிதம்
சுந்தர ராமசாமியும் பிள்ளைகெடுத்தாள்விளையும்
பிள்ளைகெடுத்தாள் விளை -சுந்தர ராமசாமியின் பிற்போக்குப் பார்வையா?
ஆதவன் தீட்சண்யாவின் வழக்கறிஞர் அறிவிக்கை
சுந்தர ராமசாமி,பிள்ளைகெடுத்தாள்விளை -கடிதங்கள்
கி.ராஜநாராயணன் வன்கொடுமை வழக்கு
கி.ரா- வன்கொடுமைச்சட்டம்- நீதிமன்றத்தீர்ப்பு
அவதூறுகள்,முற்போக்கு எழுத்தாளர் சங்கம்
முற்போக்கு எழுத்தாளர் சங்கம்- கடிதங்கள்
எம்.எம்.பஷீர் – ராமாயணம் விவாதம்
பஷீரும் ராமாயணமும்
பஷீரும் ராமாயணமும்- கடிதம்
சகிப்பின்மை -கடிதங்கள்
பெருமாள் முருகன் விவாதம்
பெருமாள் முருகன் தீர்ப்பு- சட்டத்தின் நோக்கில்…
பெருமாள் முருகன் தீர்ப்புக்குப்பின்…
பெருமாள் முருகன் – 12 [கடைசியாக]
கருத்துரிமை பற்றி