தல்ஸ்தோய் மலர்- தமிழினி
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம் விழைகிறேன்.
தல்ஸ்தோய் பற்றிய தங்களது (தல்ஸ்தோய் மனித நேயரா?) நீண்ட அரிய கட்டுரையை வாசித்தேன். காலக்கோட்டினை நூலாக வைத்துக் கொண்டு அதன் மீது மலர்சரத்தினைத் தொடுத்தபடி செல்லும் இலாவகத்தில் தல்ஸ்தோயை உருவாக்குகிறீர்கள். உங்கள் மனதில் சில தசாப்தங்களாக உறிய நறவத்தினை ஓரிலையில் படையல் செய்திருக்கிறீர்கள். சிறிய நூல் என்று சொல்லத்தகுந்த இந்த கட்டுரையின் முதல் பகுதியில் மானுடவாதம் என்ற கருத்தாக்கத்தின் வரலாற்று ஆக்கிரமிப்பை நீங்கள் வரிசைக்கிரமமாக விளக்கிவரும் பாங்கு வாசித்த பிறகு ஆழமாக நிலை கொண்டுவிடுகிறது. அது ஒரு பாதையை உருவாக்கிச் செல்லும் புதுநதி என்றே அகத்தில் விரிகிறது. அங்கிருந்து தல்ஸ்தோயை வைத்து கவனிக்க வேண்டிய இடங்களும் தெளிவு கொள்கின்றன.
தங்களுக்கு முன் தல்ஸ்தோய் குறித்து பெருமளவில் எழுதிக் குவிக்கப்பட்ட கருத்துக்களை எல்லாம் தொகுத்து அவை உங்கள் மனதில் ஆடிப்பிம்பமாய் வெவ்வேறு குவியங்களில் வீழ்ந்த வினைகளைப் பொருத்தி புதிய பார்வையை அளித்துள்ளீர்கள். தங்களிடம் ஒவ்வொரு முறை நேர்பேச்சின் போதும் சில உரைகளின் போதும் தல்ஸ்தாய் ஜெயமோகன் என்ற ஒப்பீடு உங்கள் மனதில் நிகழ்ந்தபடியே இருப்பதை கற்பனை செய்து மகிழ்ந்திருக்கிறேன். அவை அனைத்தும் என் மனதில் இருந்து வினைபுரிந்தவாறே இருக்கின்றன. தல்ஸ்தோயின் அனைத்து படைப்புகளையும் வாசித்தபிறகு என்றோ ஒரு தினம் என் மனதின் ஆடிப்பரப்பில் வீழ்ந்து என்னுடன் கனியக் கூடிய தல்ஸ்தோய்க்கு உங்கள் கட்டுரையின் முகச்சாயல்நிறையவே இருக்கக் கூடும்.
ஒரு எழுத்தாளனை, அதிலும் மகத்தான எழுத்தாளுமையை சிறிய பூச்சாக்கி அழித்துவிடக் கூடிய நுட்பம் அவர்களை ஒற்றைபடையாகப் புரிந்து கொள்வதில் உள்ளது என்று நீங்கள் சொல்லும் இடம் முக்கியமானது. ’வலது கையில் வாட்ச் கட்டியிருப்பாரே அவர்தான்’ என்று சாமான்யதனமான அடையாளங்களை மகத்தான எழுத்தாளர்களுக்கும் தொடர்ந்து போட்டுவிட்டவாறே இருந்திருக்கிறோம். அதிலிருந்து விடுவிக்கும் பொருட்டு பல திசைகளில் விரிந்து போகும் சாத்தியமுள்ள ஒரு சித்திரப் புரிதலை எழுப்பி இருக்கிறீர்கள். தமிழில் வரலாறு குறித்த புரிந்துணர்வு எந்த நிலையில் இருந்தது, அந்த பார்வையின் வழியே தல்ஸ்தோய் எப்படி வாசிக்க மறுக்கப்பட்டார் என்பது இன்னொரு அரிய அவதானிப்பு.
மானுடவாதத்தை ஐரோப்பிய மதங்களும் தத்துவமும் எவ்வாறெல்லாம் சுவீகரித்துக் கொண்டன என்பதில் இருக்கும் பலனும் தல்ஸ்தோய் வெளிப்படுத்தி உயர்த்தி வைத்த மானுடவாதமும் அவர் முழுபார்வை தந்திருக்கும் மானுட உணர்ச்சிகளும் தனக்குள் முரண்பட்டு புது அறிதலைத் தருபவையாக இருந்திருக்கின்றன. கூடவே தல்ஸ்தோயின் படைப்புகளின் அடித்தளமாக இருந்த ஷோபன்ஹோவரின் மெய்யியல் கருத்தாக்கங்கள் என்ன என்பது இன்னும் அணுகி அவரை புரிந்து கொள்ள வாய்ப்பினை நல்குகின்றன. அதாவது மானுட நேயத்தை விடவும் மானுட மனத்தின் அலைவுகளையே காட்சிப்படுத்தியவர் தல்ஸ்தோய். அதை அவர் ஷோபன்ஹோவரிடமிருந்து பெற்றுக் கொண்டார் என்பதும் இதில் வருகிறது.
தல்ஸ்தோயின் படைப்பாக்கம் கீழ்மையை நோக்கிச் செல்லும் ஒளிவிளக்கு என்று புரிந்து கொண்டேன். அது மிளிர்வுகளையும் இருளையும் ஒருசேர பதிவு செய்கிறது. இதை இத்தனை நுட்பத்துடன் எடுத்தியம்பும் தங்களது நீள்கட்டுரை தல்ஸ்தோய் என்ற விக்கிரக்தின் முன் துலக்கம் தரும் ஒரு ஒளிவிளக்கு.
அன்பும் நன்றியும் கொண்ட
கோ.கமலக்கண்ணன்.
அன்புள்ள ஜெ,
தல்ஸ்தோய் பற்றிய கட்டுரையை வாசித்து முடிக்க எனக்கு இத்தனை நாட்கள் தேவைப்பட்டன. நான் அதை முதலிலேயே வாசித்துவிட்டேன். ஆனால் முழுக்க வாசித்துவிட்டேனா என சந்தேகப்பட்டுக்கொண்டே இருந்தேன். சும்மா கட்டுரை சிறப்பு என்று சொல்லிவிடலாம்தான். ஆனால் சாராம்சமாக ஏதாவது பிடிகிடைக்கவேண்டும். அதைப்பற்றித்தான் சொல்லவேண்டும் என்று நினைத்தேன்.
இந்தக்கட்டுரையின் முக்கியமான அம்சம் என்று நான் நினைத்தது மனிதாபிமானம் என்பதைப்பற்றி நாம் சாதாரணமாக கொண்டிருந்த எண்ணத்தை இது உடைக்கிறது என்பது. மனிதாபிமானம் அல்லது மானுடநேயம் என்பது மனிதனின் இயல்பான ஒரு விழுமியம் என்றும் அது மனிதனிடம் இருந்துகொண்டே இருக்கிறது என்றும் நாம் நினைக்கிறோம். அதாவது அன்பு காதல் பாசம் தியாகம் போல அதுவும் ஒரு விஷயம் என்று. அல்லது நீதிபோல மிகவும் பழைய காலத்திலேயே ஏதோ ஒருவடிவில் உருவாகி நம்மிடம் நின்றுகொண்டிருப்பது என்று.
அப்படி அல்ல என்று இக்கட்டுரை சொல்கிறது. மனித சிந்தனை வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு புள்ளிகளைச் சுற்றி நிகழ்ந்துள்ளது. அதில் கடைசியாக வந்த ஒன்றுதான் மனிதநேயம் என்பது. அதாவது மனிதனின் சிந்தனையில் கடவுளுக்கு இடமில்லாமல் ஆனபோது மனிதநேயம் உருவானது. பாவபுண்ணியம் நீதி போன்றவை எல்லாம் கடவுளை மையம்கொண்டே இருந்தன. கடவுள் மையமில்லாமல் ஆனபோது மனிதன் மையமாக ஆனான். அதன்பிறகே மனிதநேயம் உருவானது.
இங்கே முன்பு இருந்தது மானுடனின் வெற்றி என்றும் இப்போது பேசப்படுவது மானுடநேயம் என்றும் சொல்லும் இடம் மிகப்பெரிய ஒரு சிந்தனையை அளித்தது. கம்பராமாயணம் சொல்லும் மானுடம் என்பது மானுடவெற்றி. வெற்றிபெற்றவர்களே கிளாஸிக்குகளுக்கு முக்கியமானவர்கள். அனைவருமே முக்கியம் என்பது இன்றைய மானுடநேயச் சிந்தனை. மனிதனாக பிறந்தமையாலேயே ஒருவனுக்கு வாழும்உரிமை ,சமநீதி ஆகியவை கிடைத்தாகவேண்டும். இந்த சிந்தனைக்கு முந்நூறான்டு சரித்திரம்தான். இந்த சிந்தனையின் வட்டத்துக்குள் தல்ஸ்தோய் வருவதில்லை. அதைத்தான் இக்கட்டுரை சொல்கிறது என நினைக்கிறேன்.
தல்ஸ்தோய் ஏன் அந்த சிந்தனைக்குள் இல்லை என்றால் அந்த சிந்தனை ஒருவகையான ரிடக்ஷனிசம் என்பதுதான் காரணம். அதற்கு பலவகையான நன்மைகள் உண்டு. அதனால் உலகில் நீதியும் கருணையும் வந்தது. ஆனால் அது மனிதனை சிறியவனாக ஆக்கிவிடுகிறது மினிமலைஸ் செய்து வரையறுக்கிறது. அதை தல்ஸ்தோய் போன்ற ஒரு பெரும்படைப்பாளி ஏற்கமுடியாது. அவர் யதார்த்தவாதி. உண்மையை பார்க்க யதார்த்தமே முக்கியமானது என நினைத்தவர்
ஆனால் ஏன் அதை டிக்கன்ஸும் ஹ்யூகோவும் ஏற்றுக்கொண்டார்கள் என்றால் அவர்கள் ரொமாண்டிஸ்டுகள் என்பதனால்தான். ரொமாண்டிசிசம் அப்படித்தான். அதற்கு ஒரு உண்மை போதுமானது. அந்த ஒற்றை உண்மையை நோக்கி அது முழுவீச்சில் முன்னால் போகும். மனிதனை அல்லது இயற்கையை அல்லது கடவுளை அது முழு உண்மையாக நினைத்து உச்சகட்ட உணர்ச்சியை அடையும். தல்ஸ்தோய் அப்படி எதையுமே உச்சகட்ட உண்மையாக ஏற்கமுடியாதவர்.
பலகோணங்களில் யோசிக்கவைத்த முக்கியமான கட்டுரை. தமிழினி இதழில் எழுதப்பட்ட எல்லா கட்டுரைகளுமே முக்கியமானவை. போகன் கட்டுரை முக்கியமான சில கேள்விகளை எழுப்புகிறது. தல்ஸ்தோய் ஒழுக்கவாதியா என்று அந்தக்கட்டுரைக்கு தலைப்பு வைத்திருக்கலாம்.
ராஜசேகர்