இன்ஃபெர்னோ

மும்பை பாந்த்ரா பகுதியில் இருக்கிறது மும்பை கிரிக்கெட் அசோஷியேஷன். இங்கே உறுப்பினராக இருப்பவர் என்னுடைய ஒரு படத்தின் தயாரிப்பாளர். ஆகவே இங்கே தங்க ஏற்பாடு செய்திருந்தார்கள். இந்த கொரோனா காலகட்டத்தில் வழக்கமாக நிகழும் போட்டிகள் இல்லாத காரணத்தால் இங்கே அறைகள் காலியாக இருக்கின்றன. ஐந்துநட்சத்திர வசதி கொண்டவை.

இந்த அமைப்பு கிட்டத்தட்ட ஒரு குட்டி நகரம். உள்ளேயே கிரிக்கெட் மைதானங்கள், தங்கும் விடுதிகள், உணவகங்கள் என அமர்ந்துபேச ஏராளமான இடங்கள்.பயிற்சி பெற்ற ஊழியர்கள். அத்துடன் கொரோனா பரிசோதனைகள் மிகத்தீவிரமாகச் செய்யப்படுகின்றன.

12 ஆம்தேதி இங்கே வந்தேன். முதலில் எனக்கு இது எந்த இடம் என்று தெரியாது. எம்சிஏ என்றபோது ஏதோ நட்சத்திரவிடுதி என்றுதான் நினைத்திருந்தேன். வந்து அறைக்குச் செல்லும்வழியில் ஒரு காபி சாப்பிட அமர்ந்தபோது ஏராளமான இளைஞர்கள் கிரிக்கெட் சம்பந்தமான பொருட்களுடன் செல்வதை கண்டேன். கேட்டபோதுதான் இது எந்த இடம் என்று தெரிந்தது.

1930ல் பாம்பே கிரிக்கெட் அசோஷியேஷன் என்ற பேரில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு ஓர் அரசுசார் நிறுவனம். இதன் இன்றைய உருவாக்கத்தில் சரத் பவார் பெரும்பங்கு வகித்திருக்கிறார். நீண்டகாலம் இதன் தலைமைப்பொறுப்பிலும் இருந்திருக்கிறார். இப்போது அப்பொறுப்பில் அவர் இல்லை என்றாலும் இங்கே எங்கே பார்த்தாலும் நுண்வடிவமாக பவாரின் இருப்பு உள்ளது. ‘சரத்பவார் கிரிக்கெட் அக்காடமி’யின் ஏதோ பயிற்சிவகுப்பு வேறு நடந்துகொண்டிருந்தது.

இங்கே நிகழும் கிரிக்கெட்டை சாமானியர் நினைத்துப்பார்க்க முடியாது. நான் வேடிக்கை பார்த்த கிரிக்கெட்டெல்லாம் நம்மூர் பையன்கள் மட்டையை வைத்துக்கொண்டு ஆடுவது. இங்கே விற்பனையகத்தில் இருக்கும் கிரிக்கெட் உடைகள், மட்டைகள், பந்துகள் எல்லாமே பத்தாயிரத்துக்குமேல்தான் விலை. ஆடுபவர்கள் நடிகர் நடிகைகள் போலிருந்தனர். விலைமிக்க செயற்கை புரத உணவுகள். பயிற்சிக்கருவிகள்.

கிரிக்கெட் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது – அதிகபட்சமாக தெரிந்தது அதில் பந்தை மட்டையால் அடித்துவிட்டு அங்குமிங்கும் ஓடுவார்கள் என்பதுதான். ஆனால் இங்கே சுற்றிக்கொண்டிருந்தபோது என் நினைவுகள் சொடுக்கிக் கொண்டே இருந்தன. ஒரு சில முகங்கள் பார்த்தவை போலிருந்தன.

சுவரெங்கும் படங்களில் கிரிக்கெட் வீரர்கள். அவர்களின் பெயர்களை அந்நாளில் தினத்தந்தியில் பார்த்திருக்கிறேன். அகர்க்கர், திலீப் வெங்சர்க்கார், அசோக் மன்காட். புதைவிலிருந்து எழுந்து வந்துகொண்டே இருந்த முகங்கள். திலீப் சர்தேசாயின் மகன் ராஜ்தீப் சர்தேசாய் இப்போது புகழ்பெற்ற இதழாளர். 1992ல் கதா விருதை அவருடன் நானும் பெற்றேன். அன்று வெறும் தொலைக்காட்சித் தொகுப்பாளர்தான்.

மிகப்பெரிய கிரிக்கெட் அரங்கு ஒன்று வெளியே இருக்கிறது. அங்கே ஏதோ மராமத்துப் பணி. உள்ளே ஓர் அரங்கு. அதில் புல்வெளி கண்நிறைக்கும் பசுமையுடன் விரிந்து கிடந்தது. அதை நோக்கியபடி அமர்ந்து காபி சாப்பிடும்படி அரைவட்டவடிவில் ஒரு காபிஷாப். அதில் எந்நேரமும் கொஞ்சபேர் சாய்ந்து அமர்ந்து காபி சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். ‘பிசினஸ்’ பேச உகந்த இடம் என நினைக்கிறேன்.

அதில் நான் பார்த்த ஒருவரை எங்கோ டிவியில் பார்த்த நினைவு. கொஞ்சம் உருண்டையான ஆள். அவர் போனபின் ஞாபகம் வந்தது சச்சின் டெண்டுல்கர். அவர் நினைவுக்கு வந்தவிதமே வேடிக்கையானது. ”அவர் விஜய் டெண்டுல்கர் தானே?” என்று கேட்டேன். “விஜய் அல்ல, சச்சின்” என்றார் நண்பர். அவருக்கு நாடக ஆசிரியர் விஜய் டெண்டுல்கர் பற்றி சொன்னேன். கேள்விப்பட்டிருக்கவில்லை. அவரும் மகாராஷ்டிரத்தின் நட்சத்திரங்களில் ஒன்றுதான்.

இங்கே முதல்கட்ட பரபரப்பு மறைந்து இயல்பாக உணரத்தொடங்கியபோது ஒன்றைக் கவனித்தேன், கிரிக்கெட் ஒரு மனநோயாக பீடித்திருக்கிறது ஒவ்வொருவரையும். கிரிக்கெட்டை விளையாட்டாக அல்லாமல் ஒரு தொழிலாக நினைக்கிறார்கள். பொழுதுபோக்காக அல்லாமல் வாழ்க்கையாகக் கொண்டிருக்கிறார்கள். அப்படியானால் ஒரு விளையாட்டு அளிக்கும் கொண்டாட்டமும் விடுதலையும் அமையுமா? அதில் போரில், வணிகத்தில், தேர்வுகளில் இருக்கும் பதற்றம்தானே மிஞ்சும்? தெரியவில்லை.

இரண்டுவகையான கிரிக்கெட் மனிதர்களை பார்த்தேன். உயர்குடிப் பையன்களும் பெண்களும் இங்குள்ள பயிற்சிவகுப்புகளுக்கு வருகிறார்கள். சிவந்த உடலும் போஷாக்கான தசைகளும் தன்னம்பிக்கை கொண்ட சிரிப்புமாக. இன்னொரு சாரார் சிற்றூர்களின் வெவ்வேறு அணிகளிலிருந்து தெரிவுசெய்யப்பட்டவர்கள். இங்கே அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்களின் நிறமும் பாவனைகளும் வேறு. தன்னம்பிக்கைக்குப் பதிலாக ஒருவகை வேகம்.

கிரிக்கெட் ஒரு மதம்போல இப்படி பரவியிருக்கிறது என்பதனால்தான் மகாராஷ்டிரம் கிரிக்கெட்டில் இத்தனை முன்னணி இடம் வகிக்கிறது. அதன்பொருட்டே வாழ்கிறார்கள். தமிழகத்திலும் கிரிக்கெட் ஒரு பொதுக்கிறுக்காக உள்ளது. ஆனால் இதைப்போல ஒர் உயர்தர அமைப்பு, செல்வவளம் மிக்க அமைப்பு இருக்கிறதா என்று தெரியவில்லை.

இங்கே எங்குபார்த்தாலும் நிறைந்திருக்கும் பணம் கிரிக்கெட்டின் மூச்சுக்காற்று என்று நினைக்கிறேன். கோடீஸ்வரர்கள் என்று தோன்றுபவர்களே அமர்ந்து கிரிக்கெட் ஆடுவதை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஆச்சரியமாக, எந்த நட்சத்திரவிடுதிகளிலும் தென்படும் தொந்தி தொப்பை ஆட்கள் அனேகமாக இல்லை. பெரும்பாலானவர்கள் உறுதியான தசைகள் கொண்ட விளையாட்டுவீரர்கள் போல தெரிந்தனர்.

பொதுவாகவே உயர்குடிகளில் கொழுப்புடல் குறைந்துவிட்டது என்பதை காண்கிறேன். ‘ஹெல்தி ஃபுட்’ என்ற சொல் அடிக்கடி காதில் விழுகிறது. பயிற்சியாளர்கள் வைத்து உடற்பயிற்சி செய்வது. செயற்கை புரத உணவுகளை அருந்துவது. வீட்டிலேயே விரிவான உடற்பயிற்சி அமைப்புகளை நிறுவிக்கொள்வது போன்றவை புழக்கத்திலிருக்கின்றன. மோஸ்தராக. மோஸ்தர் என்றால் அது உடனே பரவிவிடும். பெரும்பாலும் அனைவருமே கட்டுடலர்கள்.

அதற்கு ஒரு கதை சொல்கிறார்கள். முகேஷ் அம்பானி ஏதோ தொழில்முதலீட்டு திட்டம் குறித்து அமெரிக்காவில் ஒரு சந்திப்பில் விளக்கி முடித்தாராம். அதிலிருந்த வயதான யூதர் கேட்டாராம் “சன், உன் திட்டம் சிறப்பு. ஆனால் இதை நிறைவேற்ற இருபதாண்டுகளாகும். அதுவரை நீ ஆரோக்கியமாக இருப்பாயா? உன் உடலைப் பார்த்தால் அப்படி தோன்றவில்லையே” அதன் பின் முகேஷ் கடும் பயிற்சியால் ‘அத்லெட்’ உடலை அடைந்தாராம்.

ஆனால் உண்மையிலேயே தொழில் – வணிகத்துறையில் இருப்பவர்கள் கட்டுடலுடன் இருப்பது ஆழமான உளச்செல்வாக்கை உருவாக்குகிறது. அவர்களுக்கு ஒரு நம்பகத்தன்மை அமைகிறது. இதை உணர்ந்திருப்பதனால் உயர்நிலை நிர்வாகிகளும் விளையாட்டுவீரர்களாக தோற்றம் கொள்கிறார்கள்.

அரை நூற்றாண்டுக்கு முன் இது வேறுமாதிரி இருந்தது என நினைக்கிறேன். இருபதாண்டுகளுக்கு முன் நான் ஒரு தொழிலதிபரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் சொன்னார். ‘உடல் எடையை குறைக்கும்படி மருத்துவர்கள் சொல்கிறார்கள். ஆனால் உடல் எடை குறைந்தால் மரியாதை போய்விடும். தொழில் சரியாகப்போகவில்லை என்ற மனப்பிம்பம் உருவாகிவிடும். எல்லாரும் துக்கம் விசாரிக்க ஆரம்பிப்பார்கள்” என் அப்பாவுக்கெல்லாம் தொந்திதான் உயர்குடி அடையாளம்.

இந்த வளாகத்திலிருந்துகொண்டு கண்சுழற்றி நோக்கினால் இது ஐரோப்பாவின் ஏதோ ஒரு பகுதி என்று தோன்றும். சுற்றிலும் பல அடுக்கு மாளிகைகள். வெவ்வேறு நிறுவனங்களின் மாபெரும் கட்டிடங்கள். இன்று கட்டிடம் என்பதன் இலக்கணம் மாறிவிட்டது. பல கட்டிடங்கள் உள்ளே சிறிய நகரங்கள் போல. ஏராளமான அலுவலகங்களும் சாலைகளும்கூட கொண்டவை. நேர் எதிரில்தான் ஓ.என்.ஜி.சியின் கட்டிடம்.

நான் வந்தது முதலே இளமழை பெய்கிறது. வட இந்தியாவில் அரிதாகப்பெய்யும் குளிர்கால மழை. இருநூறாண்டுகளுக்கு முன்பு வடகிழக்குப் பருமமழையிலும் வட இந்தியா மழை பெற்றுக்கொண்டிருந்தது என பதிவாகியிருக்கிறது. ஆகவே வானம் முகில் மூடியிருக்கிறது. புல்வெளியில் வெளியே அவ்வப்போது அமரமுடிகிறது.

வெளியே சென்றால் மும்பை ஒரு நரகம் போலிருக்கிறது. மையச்சாலையில் வண்டிகள் தேங்கி கிடக்கின்றன. பெரும்பாலான இடங்கள் ஒருவழிப்பாதை. ஆகவே எங்கெங்கோ சுற்றவேண்டியிருக்கிறது. அது மும்பையை காட்டித்தருகிறது. மொத்த மும்பையையும் வெவ்வேறு கட்டுமானப்பணிகளுக்காக அகழ்ந்தும் கிளறியும் போட்டிருக்கிறார்கள். ஆனால் கட்டுமானப்பணிகள் தேங்கிக்கிடக்கின்றன. சிமிண்ட் பூதங்கள் இரும்பு எலும்புகளுடன் எழுந்து நிற்கின்றன. அவற்றைச் சுற்றி சாக்கடைத்தேக்கம்.

மும்பையில்தான் உலகிலேயே அதிகமான பழைய ஊர்திகள் இருக்குமென நினைக்கிறேன். துருப்பிடித்த கார்கள், உடைந்த பேருந்துகள், குப்பையிலிருந்து எடுத்தவை போன்ற இருசக்கரவண்டிகள். பல இடங்கள் ஊர்திகளின் சவக்கிடங்குகள் என்று தோன்றின. நீலநிற தார்ப்பாய் இழுத்துக்கட்டிய குடிசைகள். எங்கும் குப்பை மலை. அவை நீரில் ஊறிக்கிடந்தன. எங்கும் எவரும் ஏதேதோ தின்றுகொண்டிருந்தனர். ஆனால் சுவைக்காக தின்பவர்கள் அல்ல, பசிக்காக விழுங்குபவர்கள்.

அத்தனை அடுக்குமாடி குடியிருப்புகளும் மழைப்பாசியில் கருமைகொண்டு, ஈரத்தில் மேலும் அழுக்காகி செங்குத்தான குப்பைமேடுகளாக தெரிகின்றன. பால்கனிகளில் துருப்பிடித்த பொருட்களை சேமிப்பது மும்பையின் பண்பாடு. ஆகவே பத்தடுக்கு மாளிகை என்பது இருநூறடி உயரமான துருப்பிடித்த பொருட்களின் குவியல்தான்.

ஐம்பதாண்டுக்கால கட்டிடங்கள் பாழடைந்து விரிசல்விட்டு நிற்கின்றன. நூறாண்டு பழமையான கட்டிடங்கள் கூட உள்ளன. மரத்தாலான தூண்கள்மேல் அமைந்த மாடிகள். மும்பையில் எந்த கட்டிடத்திலும் வெளிப்புறப் பராமரிப்பு என்பதே கிடையாது. உள்ளேயும் மனிதக்குப்பைகள் செறிந்திருக்கலாம்.

குப்பைக்கூடை என்றே தோன்றிக்கொண்டிருந்தது. ‘Eyesore’ என்று ஆங்கிலத்தில் ஒரு சொல் உண்டு. அதற்கு இலக்கணமே இந்த நகர்தான். அப்படியல்லாத ஓர் இடம்கூட இல்லை. ”மும்பையில் கொஞ்சமாவது அழகான ஏதாவது இடம் உண்டா?” என்று கேட்டேன். “இதுதான் இருக்கிறதிலேயே நாகரீகமான இடம்” என்றார் நண்பர்.

தெருவில் எந்நேரமும் கூச்சல். முட்டிமோதும் பாழடைந்த வண்டிகள் நடுவே பிஎம்டபிள்யூ கார்களும் தெரிந்தன. ஒரு மையத் தெருவில் கிழிந்த அழுக்கடைந்த ஆடைகள் அணிந்த இத்தனபேர் உலவும் இன்னொரு நகரத்தை உலகில் எங்கும் பார்க்கமுடியும் என நான் நினைக்கவில்லை – ஆப்ரிக்காவில்கூட கண்டதில்லை. மையச்சாலையிலேயே சாக்கடை ஓடுவதை ஆப்ரிக்கர்களே கற்பனைசெய்து பார்க்கமுடியாது.

ஆனால் மும்பையிலிருக்கும் தமிழர்கள்கூட மும்பையை விரும்புகிறார்கள். ஏதேனும் ஒரு வேலையின்பொருட்டு இங்கே வந்தவர்கள் இங்கேயே நீடிக்க விரும்புகிறார்கள். “இங்கே புரஃபஷனலிசம் உண்டு. சாதி மதம்லாம் பெரிசா கிடையாது. தொழிலுக்கு மதிப்புண்டு” என்றார் நண்பர். “இந்தியாவிலேயே சரியான காஸ்மாபாலிட்டன் நகரம்னா இதுதான். ஃப்யூடலிசத்தோட எந்த அம்சமும் இல்லை. தொழில். வியாபாரம், அவ்ளவுதான்”.

தெருவில் மகாராஷ்டிர முகங்களே குறைவு. பெரும்பாலும் பார்ஸி, பஞ்சாபி, குஜராத்தி முகங்கள். “மகாராஷ்ட்ராக்காரங்க வாழுற எடங்கள் வேறே இருக்கு” என்று நண்பர் சொன்னார். ஒரு நகரம் ‘காஸ்மாபாலிடன்’ ஆக மாறும்போது அங்குள்ள மக்கள் தொல்குடிகளாக மாறி ஒதுங்கநேர்கிறது. ஏனென்றால் வருபவர்கள் வெற்றி பெற்றவர்கள், வெல்லத் தெரிந்தவர்கள். செல்வம் கொண்டவர்கள்.

ஆள்பவர்களால், குடியிருப்பவர்களால் முற்றாகவே கைவிடப்பட்ட நகரம். Godforsaken என இன்னொரு ஆங்கில வார்த்தை உண்டு. அதைக்கொண்டு இதை மிகச்சரியாக விவரிக்கலாம். எங்கும் எந்த திட்டமிடலும் இல்லை. எந்த நிர்வாகமும் இல்லை. குப்பைகளை காற்றும் மழையும் ஒதுக்கிக் கொண்டுபோனால் உண்டு. அரசு காவல் என ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.

தெருக்களில் மலமும் செத்துமட்கிய எலிகளுமாக சாக்கடைகள் ஓட தலைக்குமேல் இடிந்த பழங்காலக் கட்டிடங்களும் இருபத்தோராம் நூற்றாண்டின் நவீன கட்டிடங்களும் கலந்து எழுந்துநிற்க எவரையோ நோக்கி ஏளனம் செய்வதுபோல நின்றிருக்கிறது. நான் உலகின் அழகான பல நகர்களை கண்டவன். மாபெரும் சிற்பிகளின் கட்டிடங்களை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தவன். இந்நகரம் அவர்களை நோக்கி இந்தியா காட்டும் பழிப்பு.

தாந்தேயின் நரகம்[இன்ஃபெர்னோ] Bartolomeo Di Fruosino Inferno, from the Divine Comedy by Dante (Folio 1v)

சிற்பக்கலை, அழகுணர்வு, ஒழுங்குணர்வு, தூய்மை என மானுடம் இதுவரை உருவாக்கிக்கொண்ட அத்தனை விழுமியங்களையும் நோக்கி காறி உமிழும்பொருட்டு உருவாக்கப்பட்ட ஓரிடம் போல் உள்ளது மும்பை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மானுடனில் உருவாகித்தேங்கி நாறும் கீழ்மைகள் ஒன்றெனக் குவிந்தால் மட்டுமே இப்படி ஓர் இடம் திரண்டு எழமுடியும்.

இதை ஆவணப்படுத்தவேண்டும். ஒருவேளை சிலநூறாண்டுகளுக்குப்பின்பு இப்படி ஒரு நரகத்தில், பிரம்மாண்டமான குப்பைக்குழியில் மனிதர்கள் மலப்புழுக்களைப்போல திளைத்து வாழ்ந்தனர் என்பது நம் சந்ததிகளுக்கு துணுக்குறச்செய்யும் செய்தியாக இருக்கக்கூடும். தாந்தே அலிகிரி அவருடைய உச்சகட்ட கற்பனையில்கூட இப்படி ஓர் இடத்தை உருவாக்கிக்கொண்டிருக்க மாட்டார். மானுடன் எந்த உயிரைவிடவும் இயற்கையால் சபிக்கப்பட்டவன்.

மும்பை கேட்வே இலக்கிய விழா

முந்தைய கட்டுரைஇன்று பவா செல்லத்துரை இணையச் சந்திப்பு
அடுத்த கட்டுரைசென்னை வெண்முரசு விவாதக்கூட்டம்