உலகுக்குப் புறம்காட்டல்
பெண்கள் எழுதுதல்
பெண்கள் எழுதுவது- கடிதம்
அன்புள்ள ஜெமோ,
வேதபண்டிதர் ஒருவருக்கும் ஒருசில பெண்களுக்கும் நீங்கள் அளித்திருக்கும் ஆலோசனையைக் கண்டேன். உங்களைப்பற்றிய என்னுடைய எண்ணங்கள் நாலைந்து ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் உயர்வாக இருந்தன. இப்போது அந்த எண்ணங்கள் மாறிவிட்டன. ஆனாலும் ஒவ்வொருமுறையும் ஏமாற்றங்கள்தான் ஏற்படுகின்றன. நீங்கள் ஒரு ‘அத்தாரிட்டி’ போல ஆலோசனை சொல்கிறீர்கள். வாழ்க்கையைப் பற்றி ஆலோசனைகள் சொல்ல உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? தகுதி என்பது பிறப்பாலும் கல்வியாலும்தான் வரவேண்டும். அந்த தகுதி இருக்கிறதா என்று நீங்களே உங்களை ஆராய்ந்து பார்க்கவேண்டும்.
நீங்கள் ஒரு எழுத்தாளர் மட்டும்தான். கதைகள் எழுதுகிறீர்கள். அது தகுதி அல்ல. வாழ்க்கையைப்பற்றி சொல்ல சாஸ்த்ரக் கல்வி வேண்டும். முதிர்ச்சி வேண்டும்.நீங்கள் மகாபாரதத்தை உங்கள் இஷ்டப்படி மாற்றி எழுதினீர்கள்.அதற்கு எந்த ஆதண்டிசிட்டியும் இல்லை. அதேபோல இப்போது எல்லாவற்றிலும் சொல்ல ஆரம்பித்திருக்கிறீர்கள். இது ஒழுக்கத்தையும் தர்மத்தையும் அழிக்கும் விஷயம். இது கண்டிக்கத்தக்க விஷயம். நீங்கள் இந்துமத ஆதரவாளர் போல பேசி இந்துமதத்தை அழிக்கும் விஷயங்களைச் செய்துகொண்டிருக்கிறீர்கள். இந்துதர்மத்தின் சாஸ்த்ரங்களைப்பற்றி அறியாமையால் பேசிக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் ஒரு இந்துதர்ம எதிரியாகவே இப்போது செயல்படுகிறீர்கள்.
வைதிகர் ஒருவர் கதைகள் எழுத விரும்புகிறார். அவர் ஏன் பெயரை ஒளித்து எழுதவேண்டும்? அவர் வைதிக தர்மத்தின் சிறப்பையும் யக்ஞஹோமாதிகளின் சிறப்பையும் எழுதுவதாக இருந்தால் அந்த பெயரிலேயே எழுதினால்தானே அவருக்கு பேரும் புகழும் ஸம்பத்தும் வந்து சேரும். ச்ரேயஸும் ப்ரேயஸும் வேதமே என்றுதானே சொல்லியிருக்கிறது? அவர் எதற்காக ஒளியவேண்டும்? அப்படி முகம் மறைத்து எழுதுவதாக இருந்தால் அவர் வேதத்தையும் சாஸ்த்ரங்களையும் பாரம்பரியங்களையும் இழித்தும் பழித்தும் எழுதப்போகிறார் என்றுதானே அர்த்தம்? அப்படி அவருக்கு அபிப்பிராயம் இருக்குமென்றால் அவர் உடனே குடுமியை வெட்டிவிட்டு பூணலை அறுத்துவிட்டு போகவேண்டியதுதானே? நம்பிக்கையில்லாத ஒரு விஷயத்தை ஏன் செய்யவேண்டும்? வாத்யாரிடம் முகத்தை ஒளித்துக்கொண்டு அவர் என்ன செய்யப்போகிறார்?
பெண்கள் வேறுபேரில் எழுதவேண்டும் என்கிறீர்கள். உங்கள் வீட்டுப்பெண்கள் அப்படியெல்லாம் எழுத விடுவீர்களா? பெண்கள் கணவன் புகுந்தவீடு குடும்பம் பற்றியெல்லாம் சிறப்பாகவும் பாராட்டாகவும் எழுதினால் தன் பெயரிலேயே எழுதலாமே? தர்மத்தையும் ஒழுக்கத்தையும் கடைப்பிடித்து எழுதினால் ஏன் வேறுபெயரில் எழுதவேண்டும்? ஏற்கனவே ஏராளமான பெண்கள் அப்படி எழுதி நல்லபெயர் சம்பாதித்திருக்கிறார்கள்தானே? லக்ஷ்மி போன்றவர்களெல்லாம் குடும்பப்பாங்காக எழுதினார்களே. இல்லை ஏறுக்குமாறாகத்தான் எழுதப்போகிறோம் என்று எழுதமுன்னாடியே முடிவுசெய்துவிட்டார்களா என்ன? அப்படியென்றால் அவர்கள் செய்வது சோரம். அதற்கு நீங்கள் வழிகாட்டுகிறீர்கள் இல்லையா?
ஒழுக்கமில்லாத செயல்களை செய்வதை விட பாவம் ஒழுக்கமில்லாத விஷயங்களைச் செய்வதற்கு வழிகாட்டுவது. நீங்கள் செய்துகொண்டிருப்பது அதுதான்
வெங்கட்
அன்புள்ள வெங்கட்
உங்கள் பழைய மின்னஞ்சல்களைப் பார்த்தேன். இளவயதுதான். ஆனால் சென்றநூற்றாண்டில் வாழ்கிறீர்கள். புனைபெயரில் எழுதுவது உங்களைப்போன்றவர்களிடமிருந்து தப்புவதற்காகத்தான். உங்களைப்போன்றவர்களின் எண்ணிக்கை அபாயகரமாக கூடிக்கூடி வருகிறது. உங்களுக்கு அதிகாரமும் கூச்சலிடும் பலமும் உருவாகியிருக்கிறது
எழுத்தாளர் எழுதுவதே விமர்சனத்திற்காகத்தான். போற்றி எழுதுவதற்கு எழுத்தாளர் தேவையில்லை. ஒரு பேச்சுக்காக சொல்கிறேன், அந்த வைதிகர் வேதகர்மங்களில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர், அந்த நெறிகள் ஒழுங்காக கடைப்பிடிக்கப்படவில்லை என்ற விமர்சனத்தை எழுதினால் நீங்கள் விட்டுவிடுவீர்களா என்ன?
நீங்கள் ஒருவகை சிரஞ்சீவி. என்றுமிருப்பீர்கள். உங்களை மீறித்தான் எல்லா வளர்ச்சியும் நிகழவேண்டும்.
ஜெ