உலகுக்குப் புறங்காட்டல்- கடிதங்கள்

உலகுக்குப் புறம்காட்டல்

பெண்கள் எழுதுதல்

அன்புள்ள ஜெயமோகன்,

உங்களுடைய “தொள்ளாயிரம் மின்னஞ்சல்” சூழ்நிலையை ஓரளவு யூகித்தே வருடத்துக்கு ஒரு கடிதம் அனுப்பினால் போதும் என்று கட்டுப்படுத்தியிருக்கிறேன். “அனுப்பினால்” என்று ஏன் சொல்லுகிறேன் என்றால் எழுதுபவை பல.  அனுப்புவதில்லை. எழுதுவது என் சிந்தனையைத் தெளிவிக்கிறது. போன வாரம் கூட “இயற்கையின் சான்று “க்கு எதிர்வினையாக எழுதினேன். பல வருடங்களாக அண்டை வீடுகளில் செல்லமாக வளர்க்கும் நாய் பூனைகள் எங்கள் சென்னை குடியிருப்பில் அசிங்கம் பண்ணுகின்றன; இரவில் தூங்க முடியாமல் ஊளை ,அவல அழுகை. இன்னும் பல கஷ்டங்களை எழுதினேன். கடிதம் எழுதியதும் எனக்கு ஒரு ஞானோதயம். இது என் கர்மா. எதோ ஒரு பிறவியில் நான் நாயாக வாழ்ந்து பிறர் அமைதியைக கெடுத்திருக்க வேண்டும்! கடிதம் பலன் அளித்து விட்டது.

நிற்க,

அர்ச்சகர்கள், வேதபண்டிதர்கள் பொருளியல் வல்லமை இல்லாதவர்கள். அவர்களுக்கு பெருமிதமாக உள்ளது சாதி மட்டுமே. ஆகவே அவர்கள் கொஞ்சம் மிகையான மேட்டிமைப்பாவனை கொண்டவர்கள… சாதியப்பாவனைகளை கறாராக கடைப்பிடிக்கிறார்கள். “

என்ற வரிகள் படித்தவுடன் ஒரு சில கருத்துக்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று தோன்றியது. நான் இந்த வர்க்கத்தைச் சேராதவன் என்றாலும் நாட்டின் பல மூலைகளிலும் இவர்களோடு பரிச்சயம் ஏற்பட்டது. வங்கி அதிகாரியாக நான்கு மாநிலங்களில் பதிநான்கு ஊர்களில் நான் கண்டவர்களைப் பற்றி எழுதுகிறேன்.

  1. அர்ச்சகர் புரோஹிதர்களில் 99% சல்லிக்காசு இல்லாதவர்கள் தான். அந்த குறையை மேட்டிமைப்பாவனை எப்படி ஈடு செய்யும்? எந்த கடையிலும் “கணக்கு வைத்து” உப்பு கூட வாங்கமுடியாது. இல்லானை இல்லாளும் வேண்டாள். மனைவி பஞ்சாங்க பிராமணன் என்றுதான் கணவனை குறிப்பிடுவாள். வேறு எங்கு எந்த பாவனை செல்லும்? இதையெல்லாம் சோ அவர் கதைகளில் விலாவாரியாக சித்திரம் தீட்டியுள்ளார்.

அர்ச்சக புரோஹிதர்களில்  1% தொழிலை வாணிகமாக்கி பொருளாதார வல்லமை பெற்றவர்கள். அவர்களுக்கு வாடிக்கையாளர்கள் உண்டு. விளம்பரம் உட்பட எல்லா வணிக உத்திகளும் உண்டு. ஏற்றுமதி வாய்ப்பும் உண்டு. “பெரிய மனிதர்”களின் patronage உண்டு. தற்போது online இல் நன்றாக தொழில் நடக்கிறது. தேவை கொஞ்சம் சமரசம் அவ்வளவு தான். தெய்வ அனுக்ரஹத்தாலும், தொழில் சுத்தத்தாலும் வெகு சில அர்ச்சகர், புரோஹிதர்களுக்கு கேட்காமலே செல்வம் வந்து சேருகிறது என்பதும் உண்மை.

  1. Youtube இல் திருப்பதி பெருமாள் திருமஞ்சன காட்சியைப் பார்த்தேன். தலைமை பட்டாசாரியர் அவ்வப்போது படிக்கத்திலிருந்து நீரை தம் தலையில் தெளித்துக் கொள்வார் (படிக்கம் என்பது அர்க்யம்,பாத்யம்,ஆசமநீயம் நீர்களை சேகரிக்கும் பாத்திரம். அதாவது பெருமாள் கை கால் கழுவி வாய் கொப்பளித்த நீர்). இது ஏன் என்று வைகாநஸ ஆகம பரிச்சயம் உள்ள ஒருவரைக் கேட்டேன். அவர் கூறிய விளக்கம் தத்வபரமானது. எளிமையாக சொன்னால்,

பட்டாசாரியர் பெருமாளுடைய மேன்மையையும் தம் தாழ்வையும் எப்போதும் சிந்திக்க வேண்டும். பெருமாள் இருக்கும் இடம் வைகுந்தம். அவரை அணுகி பணிவிடை செய்வது பெரும் பாக்யம். உண்மையில் யாராவது அந்த தகுதியை சம்பாதிக்க முடியுமா? பெருமாள் திருமேனி பஞ்ச உபநிஷத்மயம். மனித உடல் பஞ்சபூதமயம் ; ரத்தமும் சதையுமானது; எப்போதும் கழிவு வியர்வையாக வெளியேறுகிறது. பெருமாள் கல்யாண குணபூர்ணன். நாமோ ஸம்ஸார தாப எண்ணங்கள் அலை மோதும் நெஞ்சினர்….. ஆசார்யன் நியமனப்படி கைங்கர்யம் நடக்கிறது..   தோஷங்களுக்குப் பரிஹாரமாக திருவடி விளக்கிய நீர் அர்ச்சகர் தெளித்துக் கொள்கிறார்.

சாஸ்திரங்கள் பிராமணனுக்கு மேன்மையைக் கற்பிப்பதற்கு மாறாக ஞானத்தையும், பணிவையுமே கற்பிக்கின்றன. ஒரு சிலர் தவறாகப் புரிந்து கொண்டிருக்கலாம்.

மேட்டிமை ,சாதிய பாவனை எல்லா சாதியினரிடமும் தான் இருக்கிறது என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் பிராமணன் என்ற சொல் வித்யா விநயம் என்ற இரண்டு குணங்கள் இருந்தால் தான் தகும். இவை இல்லாத பிராமணர் ப்ரம்ஹபந்து என்று இழிவாக அழைக்கப்படுவர்.

மேலும் பல விஷயங்கள் எழுதலாம். ஆனால் ஏற்கனவே கடிதம் நீண்டுவிட்டது.

கடைசியாக, வேத பண்டிதர்களையும் இந்த கோஷ்டியில் சேர்த்திருக்கறீர்கள்.  வேத பண்டிதர்கள் என்ற சொல் வேதங்களோடு சில வேதாங்கங்களையும் வேதாந்தத்தையும் வடமொழியையும் முறையாக பயின்றவர்களைக் குறிக்கும். இவர்கள் எண்ணிக்கை மிகக்குறைவு. முன்னாள் ஜமீந்தார்கள், பிந்தைய அரசாங்கம், அண்டை நாடுகள் கூட இவர்களுக்கு ஆதரவு அளிக்கின்றன. ஓரளவு வசதியோடு வாழ்கிறார்கள்.

அன்புடன்,

எஸ். கிருஷ்ணன்

அன்புள்ள ஜெ

உலகுக்குப் புறங்காட்டல் என்ற கட்டுரை படித்தேன். இதற்கு முன்பு நீங்கள் யாருக்கெல்லாம் அப்படி ஆலோசனை சொல்லியிருக்கிறீர்கள் என்று பார்த்தேன். ஓரினச்சேர்க்கையாளர்கள், சில உடல்நிலைச்சிக்கல் கொண்டவர்கள், பெண்கள். இப்போது புரோகிதர்கள். இது இங்கே எத்தனை பேருக்கு எவ்வகையிலெல்லாம் சிக்கல்கள் உள்ளன, இங்கே பாதிக்கப்படும் தரப்பு என்னென்ன என்பதைக் காட்டுகிறது. நானும் அப்படி ஒரு தரப்புதான். நான் இந்த பட்டியலில் உள்ளவன் அல்ல. ஆனால் புத்தகம் வாசிப்பதையே ஒரு மாபெரும் வாழ்க்கைப்போராட்டமாக செய்யவேண்டிய நிலையில் வாழ்பவன்.

என்னுடையது விவசாயக்குடும்பம். கஷ்டப்பட்ட பின்னணி. ஆனால் இன்றைக்கு நல்ல அரசு வேலையில் இருக்கிறேன். சிக்கனமாக வாழ்கிறேன். நன்றாக சேமிக்கிறேன். என் மனைவியும் வேலைபார்க்கிறாள். ஆனால் என் அப்பா அம்மா மனைவி எல்லாருக்குமே புத்தகம் படிப்பது என்றால் எரிகிறது. சன்னியாசியாக போய்விடுவேன், மனநிலைச் சிக்கல் வந்துவிடும், வீட்டை கவனிக்க மாட்டேன், பிள்ளைகளை கவனிப்பதில்லை என்று எல்லாவகையான குற்றச்சாட்டும் உண்டு. என் அண்ணா ஒவ்வொரு நாளும் ஒருமணிநேரம் பைக் கழுவுவுவான். இரண்டு மணிநேரம் டிவி பார்ப்பான். அது இயல்பானது. ஒருநாளில் ஒருமணி நேரம் நான் புத்தகம் படித்தால் அத்தனைபேரும் சேர்ந்துகொண்டு எதிர்ப்பார்கள். அவமானப்படுத்துவார்கள். அதைவிட கதறி அழுது ஆர்ப்பாட்டம் செய்வார்கள். பலமுறை பிரச்சினை வந்து குடும்பப்பெரியவர்களிடம் வரை பஞ்சாயத்து போயிருக்கிறது.

எழுத்தாளர் மட்டுமல்ல வாசகனுமே இங்கே தலைமறைவாகத்தான் வாழவேண்டியிருக்கிறது.

ராஜ்குமார் செல்லையா

முந்தைய கட்டுரைஓபோஸ்- ஒரு சமையல்முறை
அடுத்த கட்டுரைதற்சிறை