அஞ்சலி- கலை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி

கலை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தியை நான் முதன்முதலில் சந்தித்தது இயக்குநர் பரதனுடன் அவருடைய அறையில். பரதனும் சரி, கிருஷ்ணமூர்த்தியும் சரி பேசும் வழக்கம் இல்லாதவர்கள். என்னை அழைத்துச்சென்ற நண்பர் பேசிக்கொண்டிருந்தார். நான் கேட்டுக்கொண்டிருந்தேன். பின்னர் அவரை அறிமுகம் செய்துகொண்டு அணுக்கமானது நான் கடவுள் படப்பிடிப்பின்போது.

’நான் கடவுள்’ படத்துக்கு கலை இயக்குநர் கிருஷ்ணமூர்த்திதான். அந்தப்படத்தில் வரும் காசி சுடுகாட்டுப் படிக்கட்டுகள் கிருஷ்ணமூர்த்தியால் அமைக்கப்பட்டவை என்பது அப்படத்துக்கு விருது கொடுத்தவர்களுக்கேகூட தெரியவில்லை. மணிகர்ணிகா கட்டிலும் அரிச்சந்திரா கட்டிலும் படப்பிடிப்பு நடத்துவது அங்கே துயருடனிருப்பவர்களை அவமதிப்பதாகும். தொலைவிலிருந்து எடுக்கலாம், அல்லது மறைவாக எடுக்கலாம். அது பாலாவுக்கு உடன்பாடானதாக இருக்கவில்லை. படிக்கட்டே கங்கையின் அருகே செயற்கையாக போடப்பட்டது.

ஓவியரான கிருஷ்ணமூர்த்தியின் சினிமாப்பயணம் ஜி.வி.அய்யரின் படங்களுக்கு கலையமைப்பு செய்தபோது தொடங்கியது. அவருடைய முதல்படம் ஹம்சகீதே. ஜி.வி.அய்யர் பற்றி எப்போதும் பெருமதிப்புடனேயே பேசுவார். ‘வெறுங்கால் இயக்குநர்’ ஆன ஜி.வி.அய்யர் மிகக்குறைவான செலவில் படங்களை இயக்கியவர். அவருக்கு மேலும் குறைந்த செலவில் கலை அமைத்து அளித்தார் கிருஷ்ணமூர்த்தி. பின்னர் பெரிய முதலீடு கொண்ட படங்களுக்கு கலை அமைப்பு செய்தார்.

அவருடைய பெரிய படங்களில் முக்கியமானது பரதனின் வைசாலி. மகாபாரதப்பின்னணி கொண்ட சினிமா அது. வழக்கமான அலுமினியப்பொன்வண்ணம் கொண்ட மணிமுடிகளும் சரிகைகளும் இல்லாமல் எளிமையான ஆனால் விரிவான காட்சியமைப்புகள் கொண்ட படம் அது. தமிழக ஆயங்களின் கல்மண்டபங்களை சற்று திருத்தியமைத்து அதில் அரண்மனைகளை உருவாக்கியிருந்தார்.

கிருஷ்ணமூர்த்தி தமிழின் சிறந்த கலை இயக்குநர்களில் ஒருவர். ஆனால் கலை இயக்குநர் என்பது தமிழில் ஒரு கட்டுமானநிபுணரின் பணியும்கூட. முதலீடு செய்து லாபமீட்டவேண்டிய தொழில். அதை திறமையாகச் செய்து பெரும்பணம் ஈட்டியவர்கள் உண்டு. கிருஷ்ணமூர்த்தி எளிமையான, அப்பாவியான மனிதர். அவரால் அது இயலவில்லை. அவரை சினிமாவுக்கு வெளியேயும் பலர் ஏமாற்றினர். அவர் கட்டிய வீட்டையே இழக்க நேரிட்டது. இறுதிக்காலத்தில் வறுமையில் இருந்தார் என்று அறிந்தேன்

2005ல் கிருஷ்ணமூர்த்தியுடன் காசியில் நாற்பத்தேழு நாட்கள் இருந்தேன். வேடிக்கையும் விளையாட்டுமாகச் சென்ற இனிய நாட்கள் அவை. சுகா கிருஷ்ணமூர்த்தியை ‘கலாய்த்து’ உருவாக்கிய பல குட்டிக்கதைகள் நினைவிலெழுகின்றன.

கிருஷ்ணமூர்த்திக்கு அஞ்சலி

முந்தைய கட்டுரைஅஞ்சலி- யூ.ஏ.காதர்
அடுத்த கட்டுரைதிரௌபதி