பொழுதுபோக்கின் எல்லைகள்- கடிதங்கள்

பொழுதுபோக்கின் எல்லைகள்

பொழுதுபோக்கின் எல்லைகள் பற்றி…

அன்புள்ள ஜெ,

சென்ற உலக கோப்பை கால்பந்து விளையாட்டின் பொது சூதாட்டத்தில் ஈடுபட்டு நான் உணர்ந்தவற்றைச் சொல்கிறேன்.

சூதாட்டத்தில் இரண்டு அடுக்குகள் உள்ளன. உங்களை ஏமாற்ற வேண்டுமென்றால் உங்கள் பயத்தையோ அல்லது பேராசையையோ உபயோகிக்க வேண்டும் (பயத்திலிருந்தே ஆசை எழுகிறது, அது வேறு). முதல் அடுக்கில் உங்கள் பேராசை தூண்டப்படுகிறது. ஒன்றை வைத்து பலவற்றைப் பெறலாம். ஆனால் இது மட்டும் இருந்தால் அது நேரடி மோசடி, அதில் சுவை இல்லை.

இரண்டாவது அடுக்கில் உங்கள் ஆணவம் தூண்டப்படுகிறது. உங்களிடம் ஒரு சவால் முன்வைக்கப்படுகிறது. எல்லோரிடமும் நான் மற்றவரை விட சிறந்தவன் என்கிற எண்ணம் இருப்பதால் அந்த சவால் நமக்கு ஏற்புடையதாக இருக்கிறது.

இதில் உள்ள சூட்சுமம், அந்த சவால் நமக்கு வெல்ல இயன்றதாகத் தோன்ற வேண்டும் – மிகவும் கடுமையானதாக இருந்தால் நாம் அதில் ஈடுபட மாட்டோம் – மிகவும் எளிதாக இருந்தால் சூதாட்ட நிறுவனம் நஷ்டப்பட்டு விடும். உதாரணமாக, இந்தியாவிற்கு எதிராக பிரேசில் வெல்லுமா என்பது மிகவும் எளிதான சவால், ஆகவே அது கேட்கப்படுவதில்லை. 1-0ல் வெல்லுமா அல்லது 3-0ஆ, 4-1ஆ என்பவை சற்றுக் கடினமான கேள்விகள், ஆனால் நம் மூளையை பயன்படுத்தி விடை சொல்ல முடியும் என்ற நம்பிக்கையைத் தூண்டுபவை.

இதில் நிறுவனம் மிகவும் தேர்ந்து இருப்பதால், அதை சிலரால் சில சமயங்களில் வெல்ல முடியும், ஆனால் பலரால் பல சமயங்களில் வெல்ல முடியாது. இதுவே அவர்களின் பலம். இது எல்லா வகையான சூது வகைகளுக்கும் பொருந்தும். நம் முழு வாழ்க்கைக்கும் கூட இதை பொருத்தலாம்.  வெல்லவே முடியாது என்று தோன்றும் வாழ்க்கையை நாம் வாழ மாட்டோம் ஆனால் வெல்ல முடியும் என்கிற நம்பிக்கையைக் கடைசி வரை அது கொடுத்துக் கொண்டிருக்கிறது.

சூதை புரிந்து கொள்வது என்பது நம் எல்லைகளை புரிந்து கொள்வது. இதை உணர்ந்தவர்களுக்கு சூது என்பது முடிந்து, இந்த விஷயம் நம்மால் முடியுமா, முடியாதா என்று சுருங்கி விடுகிறது. இதை உணர எனக்கு இரண்டாயிரம் ருபாய் செலவானது. என் நண்பனுக்கு பத்தாயிரம். இருந்தாலும் இது சல்லிசான விலையே.

சூதில் வரும் வெற்றி தோல்வி பொருட்டல்ல, அதன் சாகசமே பிரதானம் என்று அத்வைதமாக விளையாடுவது சிறப்பு.

அன்புடன்,

சொக்கலிங்கம்

***

அன்புள்ள ஜெ

பொழுதுபோக்கின் எல்லைகள் கட்டுரையை வாசித்தேன். என் அனுபவத்தைச் சொல்கிறேன். நான் இந்த ஊரடங்குக் காலகட்டத்தில் சினிமா பாக்க ஆரம்பித்தேன். ஒருநாளைக்கு மூன்று சினிமாக்கள் வரை. நாநூறு சினிமாவுக்குமேல் பார்த்தேன். சலித்துவிட்டது. ஒருநாளைக்கு பலமணிநேரம் நெட்ஃப்ளிக்ஸிலும் அமேசானிலும் சினிமாவை தேடுவதுதான் வேலை. அப்படியே கம்யூட்டர் கேம்ஸ் போனேன். சுூடுபிடித்துக்கொண்டது.மூன்றுமாதம் முழுநேரமாக விளையாடினேன். ஒருநாளுக்கு எட்டுமணிநேரம் வரைக்கும்கூட. ஆனால் அதுவும் சலித்துவிட்டது. அதன்பிறகு கம்ப்யூட்டர் கேமிலேயே போர்ன் விளையாட்டு. அதன்பிறகு ஜப்பானிய கொரிய சூதுவிளையாட்டு. கம்ப்யூட்டர் கேம் மாதிரியே.

நாலரைலட்சம் ரூபாய் இழந்தேன். உடனே சுதாரித்துக்கொண்டேன். அப்படியே தூக்கி அப்பால் வைத்தேன். உடல்களைக்க பேட்மிண்டன் விளையாட ஆரம்பித்தேன். ஒருமணிநேரம் படிக்கிறேன். மீண்டுவிட்டேன். நல்லவேளையாக பிசினஸும் முன்புபோல ஆரம்பித்துவிட்டது. பொழுதுபோக்கு எதுவானாலும் கடைசியில் சூதாட்டத்தில்தான் வந்து நிற்கும். எல்லா பொழுதுபோக்கிலும் சூதாட்டம்தான் உள்ளே ஒளிந்திருக்கிறது. சினிமாகூட நாம் பணம்வைக்காமல் ஆடும் ஒரு சூதாட்டம்தான்

ஆர்.கே

***

முந்தைய கட்டுரைமீண்டும் நோய், மீண்டும் உறுதி
அடுத்த கட்டுரைவண்ணக் கனவு-கடலூர் சீனு