அ . சமூகப்பரிணாமமும் நீதிநூல்களும்
வியாச மகாபாரதத்தைக் கூர்ந்து வாசிக்கும் வாசகனுக்கு உண்மையில் அது சாதியைப்பற்றி என்னதான் சொல்கிறது என்ற குழப்பம் எழாமலிருக்காது. மகாபாரதக்கதையே பிரம்மாண்டமான குலக்கலப்பின் வரலாறு என்றால் அது மிகையல்ல. அதன் கதைசொல்லியும் குருவம்சபிதாமகருமான மகாவியாசன் கிருஷ்ண துவைபாயனனே குலக்கலப்பில் பிறந்தவர்தான். பராசர முனிவருக்கு காளி என்ற மீனவப்பெண்ணில் பிறந்தவர் அவர். காளி என்றால் கறுப்பி என்று பொருள். கிருஷ்ணன் என்றாலும் கருப்பன்தான். மாறாகவும் நிகழலாம். மதங்க ரிஷி பிராமணப்பெண்ணுக்கு ஒரு சவரக்காரர் உறவில் பிறந்தவர்.
மகாபாரதம் சாந்திபர்வத்தில் நான்குவர்ணங்களையும் ஒருவனின் செயல்களை மட்டுமே வைத்து வரையறுக்கவேண்டும் என்ற குரலை நாம் மீண்டும் மீண்டும் காணலாம். பிறப்பால் எந்த மனிதனையும் சாதியடையாளம் செய்யக்கூடாது என்று பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. ‘பிராமணனின் குணமில்லாதவன் பிராமணன் அல்ல. க்ஷத்திரியனின் குணமில்லாதவன் க்ஷத்ரியனல்ல’ [மகாபாரதம் சாந்திபர்வம் 189/8] பிராமணனின் மகனாகப்பிறந்த ஒருவன் தன் இயல்பாலும் சூழலாலும் பிராமணனாக வாழமுடியவில்லை என்றால் அவன் க்ஷத்ரிய குலத்தவனாகி அச்செயலைச்செய்யலாம். அல்லது வைசியகுலத்தவனாகி அச்செயல்களைச் செய்யலாம்’ என்கிறது மகாபாரதம்.
மகாபாரதத்தில் போரிடும் பிராமனர்களை நாம் காண்கிறோம். அரசியல்த்தொழில் செய்பவர்களை நாம் காண்கிறோம். மகாபாரதத்தின் ஒருபகுதியாக விளங்கும் கீதையில் அர்ஜுனன் அர்ஜுனவிஷாத யோகத்தில் ‘குலக்கலப்பு ஏற்பட்டால் தர்மம் அழியும்’ என்கிறான். ஆனால் அவனே குலக்கலப்பால் பிறந்தவன். அவனுக்கு விளக்கமளிக்கும் கிருஷ்ணன் ‘நான்குவர்ணங்களும் இயல்புகள் செயல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் படைக்கப்பட்டவை’ என்று சொல்கிறான். கீதையின் வேதாந்தப்பகுதி மகாபாரதத்தைவிட பழமையானது என்பது என் எண்ணம். அர்ஜுனன் வரும் முதல்பகுதி மகாபாரதகாலத்துக்கு நெடுங்காலம் கழித்து உருவானது.
க்ஷத்ரியனாகிய விஸ்வாமித்திரன் பிரம்மரிஷியாக ஆனார். ஒட்டுமொத்தமாக சாதிமாறும் நிகழ்ச்சிகளைக்கூட புராணங்களில் நாம் காணலாம். க்ஷத்ரிய மன்னராகிய ரிஷபதேவரின் நூறு மகன்களில் 81 பேர் பிராமணர்களாக ஆனார்கள் என்று விஷ்ணுபாகவதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. க்ஷத்ரியனாகிய பிரஷாக்னன் சூத்திரனாக ஆனான் என்றும் இன்னும் பலவிதமான வருண,சாதி மாற்றங்களையும் நாம் விஷ்ணுபாகவதத்தில் காணலாம்.
சூத்திரர்கள் வேதம் ஓதலாமென பண்டைய நெறிகள் சொல்லின. மீமாம்சா சூத்திரத்தில் பாதராயணர் அனைவருக்கும் வேதம் ஓதும் உரிமை உண்டு என்று சொல்கிறார். அதை சபரர் இன்னும் விரிவாக நிறுவுகிறார். வேள்வியில் அவி அர்ப்பிப்பவன் பிராமணன் என்றால் அவனை ‘ஏஹி’ என்றும், க்ஷத்ரியன் என்றால் அவனை ‘அகோஹி’ என்றும், வைஸியன் என்றால் அவனை ‘ஆத்ரவ’ என்றும், சூத்திரன் என்றால் அவனை ‘ஆதாவ’ என்றும் அழைக்கவேண்டுமென்று சதபதப் பிராமணம் சொல்கிறது. ‘பஞ்ச ஜனா மம ஹோத்ரம் ஜுஷத்வ’ என்று ரிக்வேதமே சொல்கிறது. ஐந்துவகை மக்களும் வேள்வி அர்ப்பிக்கவேண்டும் என்று அச்சொற்களுக்குப் பொருள். பெண்களுக்கும் அவ்வுரிமை இருந்தது.
இந்து சிந்தனை மரபில் சுருதிகள் ஸ்மிருதிகள் என மூல நூல்களை இரண்டுவகையாகப் பிரிப்பதுண்டு என நாம் அறிவோம். சுருதிகள் அடிப்படையான பிரபஞ்ச தரிசனங்களை முன்வைக்கும் நூல்கள். ஸ்மிருதிகள் என்பவை வாழ்க்கைநெறிகளை அறிவுறுத்துபவையும் சமூகச்சட்டங்களை வகுத்துரைப்பவையும் ஆகும். வேதங்கள் உபநிடதங்கள் பிரம்மசூத்ரம் போன்றவை சுருதிகள். பற்பல ஸ்மிருதிகள் இந்திய மரபில் இருந்துள்ளன. மனுஸ்மிருதியின் பெயர் நாம் அனைவரும் அறிந்தது. மனுஸ்மிருதிக்குப் முன்னரே நாரத ஸ்மிருதி, யாக்ஞ வால்கிய ஸ்மிருதி, யமஸ்மிருதி போன்ற பல நூல்கள் இருந்துள்ளன. பராசர ஸ்மிருதி முதலிய சிலநூல்கள் உண்மையில் மனுஸ்மிருதிக்குப் பின்னர் வந்தவை என்று ஆய்வாளர் சொல்வதுண்டு.
இந்துமரபின் கொள்கையின்படி சுருதிகள் முழுமுதன்மையான விஷயங்களை முன்வைப்பவை. ஆகவே அவை காலச்சார்பு கொண்டவை அல்ல. ஆனால் ஸ்மிருதிகள் காலச்சார்பு கொண்டவை. விவாதத்துக்கு உரியவை. ஸ்மிருதிகள் சுருதிகளின் ஞானதரிசனங்களை நடைமுறைப்படுத்தும் நோக்கம் கொண்டிருக்கவேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. பல நூல்களில் மகாபாரதம், ராமாயணம் என்னும் இரு இதிகாசங்களையும் ஸ்மிருதிகளாக, அதாவது நெறிநூல்களாக, எடுத்துக்கொள்ளலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அப்படியானால் மகாபாரதம் முன்வைக்கும் குலக்கலப்பின் முன்னுதாரணம் என்பது ஒரு நெறியே.
ஆனால் மிக விரைவிலேயே அந்த குலக்கலப்பின் சாத்தியங்களை நெறிநூல்கள் நிராகரிப்பதை நாம் காணமுடிகிறது. ‘பிராமணன் தீயவனானாலும் வழிபாட்டுக்குரியவன். சூத்திரன் முனிவனாக இருந்தாலும் மதிக்கப்பட வேண்டியவனல்ல’ என்று பராசர ஸ்மிருதி வகுக்கிறது.[ பராசர ஸ்மிருதி 8/33] தாழ்ந்த குலத்துக்குரிய செயல்களைச் செய்தாலும் பிராமணன் பிராமணனே என்கிறது மனுஸ்மிருதி. பிராமணனின் அதிகாரம் மன்னனின் அதிகாரத்தைவிட மேலானது, அவனே தன்னிடம் தவறு செய்தவர்களை தண்டிக்கலாம் என்று வகுக்கிறது. [மனுஸ்மிருதி X/32] வேதம் ஓதுவது மட்டுமல்ல காதால் கேட்பதுகூட சூத்திரனுக்கு விலக்கப்படுகிறது மனுவால். அதாவது இவ்விரு ஸ்மிருதிகளின் படி பழங்காலத்தின் ரிஷிகளும் மகாபாரத பிதாமகர்களும் தண்டிக்கப்படவேண்டியவர்கள்!
இந்த மாற்றம் எப்படி நடந்தது? எந்த ஒரு சமூக மாற்றமும் எளிதாக நடந்துவிடாது என்று நாம் இன்று அறிவோம். சீரான ஒரு பரிணாம மாற்றம் அதற்கு தேவையாகிறது. ஒரு பரிணாம காலகட்டமும் அதற்குத் தேவையாகிறது. ஒரு நீண்ட உரையாடல் மூலமே இந்த மாற்றம் நிகழ்ந்திருக்க முடியும். வேதகாலத்தில் இருந்து மனுஸ்மிருதியின் காலம்வரையிலான சமூகநீதியைப்பற்றிய மொத்தக் கருத்துக்களையும் தொகுத்து அவற்றில் இருந்துதான் நாம் அந்த விவாதச்சூழலை இன்று உருவாக்கி பார்க்க முடியும்.
எந்த ஒரு சமூகத்திலும் நீதி ஓர் உரையாடலாகவே நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும். நீதி என்று வகுத்துச்சொல்லப்படுவதென்பது அந்த உரையாடலின் சமரசப்புள்ளியாகும். ஒரு பெரும் புனைவுவெளி என்ற வகையில் மகாபாரதம் எல்லாவகையான குரல்களுக்கும் இடமளிக்கும் கருத்துப்பரப்பாகவும் இருக்கிறது. அங்கே நாம் இந்த உரையாடலின் சித்திரத்தை வாசித்தறிய முடியும். ஒருபக்கம் செயல்கள் மூலமே ஒருவனை அடையாளப்படுத்தும் தரப்பு, மறுபக்கம் பிறப்பை மட்டுமே அளவீடாகக் கொள்ளும் இன்னொரு தரப்பு. நடுவே பலநூறு நீதிமுறைகளின் தனிக்குரல்கள்.
நாம் நம்முடைய நீதிநூல்களைப்பற்றிப் பேசும்போது இத்தகைய ஒரு விரிந்த சித்திரத்தை உருவாக்கிக் கொண்டோமென்றால்தான் அவற்றை புரிந்துகொள்ள முடியும். அந்நூல்களை ஓர் ஆசிரியனுடைய, அல்லது ஒரு குழுவினுடைய, அல்லது ஓர் அதிகார மையத்தினுடைய சதிகள் என்று புரிந்துகொள்ளும் தட்டையான நோக்கு நம்மிடையே இருந்ததென்றால் நாம் அடைவது மிகத்திரிபுபட்ட சித்திரத்தைத்தான். நம் அரசியல் தளத்தில் உருவாக்கப்பட்ட சதிக் கோட்பாடு நம் அறிவுத்துறைகளையும் பீடித்திருப்பதை நாம் காண்கிறோம். விரிவான ஓர் வரலாற்றுப்பார்வைக்கு அது பெருந்தடையாக அமைந்து நம் ஆய்வுகளை எல்லாம் வெற்று கூக்குரல்களாக ஆக்கிவிடிருக்கிறது.
அவ்வகையில் நான் டி.டி.கோஸாம்பியின் மரபைச்சேர்ந்த இந்திய மார்க்ஸிய வரலாற்றாசிரியர்களின் அணுகுமுறையையே பெரிதும் ஏற்றுக்கொள்கிறேன். அவர்களின் முன்முடிவுகளும் பிழைகளும் கோட்பாட்டுவிசுவாசமும் எனக்கு உடன்பாடாக அமையாத சந்தர்ப்பங்கள் உண்டு என்றாலும் அவர்கள் ஒவ்வொன்றையும் ஒரு விரிந்த வரலாற்றுப்புலத்தில் வைத்துப்பார்க்க முனைந்ததை இந்திய தத்துவ சிந்தனை வரலாற்றின் பெரும் பாய்ச்சலாகவே எண்ணுகிறேன். மிக விரிவாக ஏற்கனவே இதைப்பற்றிய என் கருத்துக்களை பதிவுசெய்துமிருக்கிறேன்.
நம் நீதியுணர்வில் மேற்குறிப்பிட்ட நகர்வு எப்படி நிகழ்ந்தது? அதற்கான சமூகவியல் காரணங்கள் என்ன? அதற்கான அரசியல் காரணங்கள் என்ன? அதற்கான பொருளியல் காரணங்கள் என்ன? இந்திய வரலாற்றாய்வில் செய்யப்பட்டுள்ள பல்வேறு ஊகங்களுக்குள் செல்ல இப்போது நான் முனையவில்லை, இக்கட்டுரையின் பேசுபொருள் அதுவல்ல. அந்த ஆய்வுமுறையைச் சுட்ட பிரபலமான ஊகத்தை மட்டும் சொல்கிறேன்.
செயல்வழியாக மனிதர்களைப் பகுக்கும் நோக்கானது சிறிய சமூகங்களுக்கே சரியாக இருந்தது. பல்வேறு வகையான மனிதர்களின் கூட்டான ஒத்துழைப்பின் மூலம் இயங்கிய சமூகங்கள் அவை. சுரண்டலின் மூலம் இயங்கும் அதிகார அமைப்புகள் கொண்ட பிரம்மாண்டமான சமூகங்கள் உருவானபோது அது சாத்தியமில்லாமல் ஆயிற்று. காரணம் அந்த முறையில் உள்ள நிலையின்மைதான். பெரும் சமூகங்களுக்கு இன்னும் திட்டவட்டமான உறுதிப்பாடுகள் தேவை. ஆகவே பிறப்பின் அடிப்படையிலான பகுப்பு ஏற்கப்பட்டது. அதில் ஐயங்கள் இல்லை. ஒருவன் சூத்திரனா பிராமணனா என்பதை தீர்மானிப்பதில் சிக்கலே இல்லை.
மேலும் பெரும்சமூகங்களுக்குள் மேலும் மேலும் சிறிய இனக்குழுச்சமூகங்கள் உள்ளிழுத்துக்கொள்ளப்பட்டபடியே இருந்தன. அச்சமூகங்களை எப்படி ஒன்றின் கீழ் ஒன்றாக அடுக்கி ஒரு சமூகக்கட்டமைப்பை உருவாக்குவது என்ற வினா எழுந்தது. அதற்கும் பிறப்பின் அடிப்படையிலான பகுப்பே உதவியாக இருந்தது.
பிறப்பை அடிப்படையாகக் கொண்ட தொழில்பிரிவினையானது உறுதியான மாறாத பொருளாதார அமைப்பை உருவாக்குகிறது. அதன்மூலம் சீரான பொருள்திரட்டல் நிகழ்ந்து விளைவாக வலிமையான மைய அதிகாரம் உருவாகிறது. இதன் விளைவாகவே பேரரசுகள் உருவாயின. இந்திய நிலத்தில் பேரரசுகளின் உருவாக்கத்துக்கும் சாதிமுறையின் உருவாக்கத்துக்கும் நேரடியான தொடர்பு உண்டு என்பதே டி.டி.கோஸாம்பி போன்ற ஆய்வாளர்களின் ஊகம். பெரும் கட்டிடங்களுக்கு உறுதியான அடித்தளம் தேவை.
அதாவது மகாபாரதம் பேசும் குலக்கதைகளின் காலத்தில் தொழிலும் இயல்பும் மனிதர்களை தீர்மானித்தன. அந்தப்போரின் காலத்தில் பிறப்பு தீர்மானித்தது — அதை நாம் கர்ணனின் கதையில் தெளிவாகவே காண்கிறோம். மகாபாரதம் சொல்லும் கதைக்களம் என்பது மனுஸ்மிருதியை நோக்கி மெல்ல மெல்ல நகர்ந்து வரும் ஒரு சமூகத்தின் சித்திரமே.
நாம் நீதியைப்பற்றி பேசும்போது அது ஒரு சமூகக்கருவி என்ற அளவில் எடுத்துக்கொண்டு பேச ஆரம்பிப்பதே நேர்மையானது. ஒரு சமூகம் தன்னை தொகுத்துக்கொள்ளவும் திறம்படச் செயல்படச்செய்யவும் தனக்குத்தானே உருவாக்கிக் கொண்டிருக்கும் நெறிகளையும் நம்பிக்கைகளையும்தான் நாம் நீதி என்கிறோம். ஏதோ ஒருவகையில் பயனில்லாத ஒன்றை எச்சமூகமும் ஏற்றுக்கொள்ளாது என்றே கொள்ள வேண்டும்.
சாதிப்பிரிவினையை எடுத்துக்கொண்டால் அதனால் உறுதியான உற்பத்திக்கட்டுமானம் உருவாயிற்று. அந்த உற்பத்தியின் உபரியைச் சுரண்டி மைய அதிகாரம் வலிமைபெற வழி அமைந்தது. அதன் மூலம் பேரரசுகள் உருவாயின. கலைகளும் இலக்கியங்களும் சிந்தனைகளும் உருவாயின. மானுட நாகரீகத்தின் சில உச்சநிலைகள் சாத்தியப்பட்டன. சுரண்டலும் நாகரீகமும் ஒன்றுக்கொன்று பிரிக்கமுடியாதபடி இணைந்தவை என்கிறார் டி.டி.கோசாம்பி. கூடவே அடிமைமுறை இல்லாமல் கிரேக்க நாகரீகம் இல்லை என்ற மார்க்ஸின் மேற்கோளையும் சுட்டிக் காட்டுகிறார். [பண்டைய இந்தியா]
இதற்கு இன்னுமொரு கோணம் உண்டு. நாம் மகாபாரதத்திலேயே பார்த்தால்கூட ஏராளமான இனக்குழுச் சமூகங்கள் வருகின்றன. அவையெல்லாமே தங்கள் உதிர அடையாளத்தைப் பேணக்கூடியவையாகவே உள்ளன. உலகமெங்கும் பழங்குடிகளும் இனக்குழுச்சமூகங்களும் அப்படித்தான் இருக்கின்றன. இந்தியச் சாதியமைப்பு என்பது இந்த பல்லாயிரம் இனக்குழுச்சமூகங்கள் மையச்சமூகத்தில் தொடர்ச்சியாக உள்ளிழுக்கப்பட்டு நால்வகை வருணங்களின் படிக்கட்டில் ஒரு இடத்தில் வைக்கப்பட்டு கட்டப்பட்டதேயாகும். நால்வருணப்பிரிவினையை பிறப்படையாளமாக ஆக்கிக் கொண்டாலொழிய இந்த பழங்குடிகளை எல்லாம் உள்ளிழுக்கும் ஓர் மாதிரி அமைப்பை உருவாக்க முடியாது.
ஆகவே நீதி என்பது ஒருவகையில் சமூகம் மெல்ல திரட்டிக்கொள்ளும் ஒரு கருத்துக்கருவிதான்.தொடர்ச்சியான உரையாடல் மூலம்தான் நீதி அவ்வாறு திரட்டிக்கொள்ளப்படுகிறது. அதன் பின்னரும் நீதி ஒரு உரையாடல் தரப்பாகவே இருக்கிறது. வலிமையான தரப்பாக இருக்கலாம், ஒருபோதும் முழுமையாக ஏற்கப்பட்டதாக இருக்காது.
அப்படிப்பார்த்தால் மனுநீதி உள்பட எல்லா நீதிநூல்களும் நம் சமூகத்தின் நீதி சார்ந்த விவாதத்தின் குரல்கள் மட்டுமே. மனுநீதி உட்பட எந்த ஒரு நீதிநூலும் இந்தியாவின் எப்பகுதியிலும் முழுமையாக செயல்படுத்தப்பட்டதில்லை. மனுநீதியை கூர்ந்து கவனித்தாலே அதை அறியலாம். அதில் பிராமணர் உள்ளிட்ட சாதிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள வாழ்க்கைநெறிகள் எப்போதுமே நடைமுறைப்படுத்தச் சாத்தியமல்லாதவை.
உதாரணமாக பிராமணர்கள் வேதம் ஓதுதல், வேள்விசெய்தல், கற்றல் கற்பித்தல் அல்லாமல் பிற தொழில்கள் எதையும் செய்யலாகாது என்று விலக்கப்பட்டிருந்தார்கள். அவர்களுக்கு தானமாக செல்வம் அளிக்கப்படும்போது அவர்கள் அவற்றை உடனடியாக மீண்டும் பகிர்ந்தளித்துவிடவேண்டும். இந்தியாவில் எந்த ஊரிலும் எப்போதும் பிராமணர்கள் அப்படி இருந்ததில்லை என நாம் அறிவோம். அதேபோல சூத்திரர்கள் அவர்களால் இயன்றாலும்கூடச் செல்வம் சேர்க்கக் கூடாது என்று மனுஸ்மிருதி தடை விதிக்கிறது. [மனு X/ 129] மகாபாரதத்திலும் சரி கதாசரித சாகரம் போன்ற பிற்கால நூல்களிலும் சரி நாம் செல்வந்தர்களான சூத்திரர்களைப் பார்த்துக்கொண்டேதான் இருக்கிறோம்.
ஆனால் மனுநீதி போன்ற ஸ்மிருதிகள் சொல்லும் பிறப்புவகைப்பட்ட பகுப்புமுறையானது பின்னர் ஒர் ஓட்டுமொத்தத் தரிசனமாகவே மாறிவிடிருப்பதைக் காண்கிறோம். அதை ஒரு சமூகநெறியாக மட்டும் காணாமல் மொத்தப்பிரபஞ்சத்தையே புரிந்துகொள்ளும் ஒரு வழிமுறையாக அவர்கள் மாற்றிக்கொண்டார்கள். மிருகங்களும் தாவரங்களும் பூச்சிகளும்கூட நான்குவர்ணப்பிரிவினைக்கு ஆளாயின. பிங்களசந்தஸ் சாஸ்திரம் என்ற நூலில் வெள்ளாடு பிராமண வர்ணம் என்றும் செம்மரியாடு க்ஷத்ரியன் என்றும் பசு வைசியன் என்றும் குதிரை சூத்திரன் என்றும் பிரிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
இன்னொன்றும் இங்கே கவனிக்கத்தக்கது. ஒரு நீதிநூலுக்குள்ளேயே உரையாடலும் சமசரமும் இருக்கும். ஒரு நீதிநூல் என்பதேகூட தன்னளவில் நீதி சார்ந்த ஒரு விவாதம்தான். பெரும்பாலான தருணங்களில் பல்வேறு வகையான மக்கள்குழுக்கள் ஒரு சமூகமாகத் திரளும்போது அவர்களின் நெறிகளுக்கு நடுவே ஒரு பொதுத்தளத்தை உருவாக்கும்பொருட்டே நீதிநூல்கள் உருவாகின்றன. அவற்றுக்குள் பல்வேறுவகையான நெறிகள் ஒன்றுடன் ஒன்று சமப்படுத்தப்பட்டும் இணைக்கப்பட்டும் காட்சியளிக்கும்.
மனுஸ்மிருதி, யாக்ஞவல்கிய ஸ்மிருதி போன்றவற்றில் உள்ள குலநெறிகள் புதிதாக உருவாக்கப்பட்டு முன்வைக்கப்பட்டவையாக இருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் அது சாத்தியமே இல்லை. அவை ஏற்கனவே நடைமுறையில் இருந்த நெறிகளின் தொகுக்கப்பட்ட வடிவமாக்வே இருக்க முடியும். மனுஸ்மிருதி முடிவெட்டிக்கொள்வதைப்பற்றிக்கூட ஆசாரங்களை வகுக்கிறது. அவையெல்லாமே பழக்க வழக்கங்களாக இருந்த¨வையே. இவ்வாறு ஒரு நீதி நூலுக்குள்ளேயே நீதிக்கான ஒரு விவாதம் ஒரு தொகுப்புத்தன்மை செயல்படுகிறது.
இந்த இடத்தில் நம்முடைய மார்க்ஸிய வரலாற்றாய்வாளர்களின் ஆய்வுநோக்கைத்தாண்டி அப்பால் செல்லும் ஒரு தளம் திறக்கிறதென நான் எண்ணுகிறேன். நீதி என்பது தேவையிலிருந்து உருவாகிவரும் ஒரு வெறும் கருவி மட்டும்தானா? அது ஒரு அடிப்படையான மானுடக்கனவு அல்லவா? நீதி நூல்கள் முன்வைக்கும் நீதி என்பது நடைமுறைசார்ந்த ஒரு தொகுப்பு மட்டுமல்ல, அவை நீதி பற்றிய ஓர் எதிர்பார்ப்பும்கூடத்தானே? உலகில் மகத்தான நீதிநூல்கள் முன்வைக்கும் நீதியின் பெரும்பகுதி உண்மையில் எப்போதுமே மண்மீது நிலவியிராத ஒன்றுதானே?
ஆம், மண்ணில் மானுடத்தின் சாரமாக திரண்டுவந்திருக்கும் நீதியுணர்வு என்பது ஒரு பெரும் வியப்பு என்றே நான் எண்ணுகிறேன். மனிதனை உருவாக்கிய சக்திகளுக்கு அவன் மீது நம்பிக்கை இருக்கிறதென்பதன் ஆதாரம் அதுவே. நீதி என்பது தேவையிலிருந்து கண்டடையப்படும் ஒரு சாத்தியக்கூறு மட்டும் அல்ல. அது மானுடத்தின் மிகச்சிறந்த மனங்கள் தங்கள் மன எழுச்சியின் உச்சங்களில் கண்டடையும் தரிசனம் ஆகும். அந்த தரிசனங்களில் சிலவற்றை தேவைகருதி அச்சமூகம் எடுத்து தன் நடைமுறை நீதியாக மாற்றிக்கொள்கிறது.
அதாவது நீதிசார்ந்து ஒரு சமூகத்தில் நடந்துகொண்டிருக்கும் தீராத விவாதத்தின் முதன்மையான தரப்பென்பது அச்சமூகத்தின் ஆகச்சிறந்த மனங்களின் இலட்சியக்கனவாக இருக்கும் அழியாத நீதி என்னும் தரப்பேயாகும். அப்படி ஒரு ஆன்மீகக்குரல் எப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கும் சமூகங்களே முன்னேற்றம் கொள்கின்றன. மேலான தொழில்நுட்பத்தை உருவாக்கிக் கொண்ட சமூகங்கள் அல்ல மேலான நீதியை உருவாக்கிக்கொண்ட சமூகங்களே வெற்றி கொள்கின்றன.
அந்த மாபெரும் இலட்சியக்கனவு எப்போதும் ஓர் அகத்தரிசனமே. ஆகவேதான் அது சமூகச்சட்டங்களை உருவாக்கும் நீதியாளர்களாலும் ஆட்சியாளர்களாலும் உருவாக்கப்படுவதில்லை. சமூகத்தின் சராசரித் தளத்தை விட மேலான தளத்தில் இருப்பவர்களால் அது கண்டடையப்படுகிறது. ஆன்மீக ஞானிகளாலும் பேரிலக்கியப்படைப்பாளிகளாலும். அவர்களின் மெய்ஞானமே நீதியாக முதலில் வெளிப்பாடுகொள்கிறது. ஞானக்கூற்றாகவும் கவித்துவமாகவும் அது தன்னை நிகழ்த்திக்கொள்கிறது. அதன் பின்னரே அது நீதியாளர்களால் கண்டடையப்படுகிறது.
ஆகவேதான் பண்டைய பெரும் நீதி நூல்கள் பேரிலக்கியங்களாகவும் இருந்தன. பேரிலக்கியங்களில் தரிசனங்களாக ஊறிவந்த நீதியையே பின்னர் சட்டநூல்கள் விதிகளாகத் தொகுத்தன. அடிப்படை மானுடதரிசனங்களை நிகழ்த்தும் சுருதிகள் என்னும் மூலநூல்களுக்கு முதன்மையை அளித்து அவற்றின் வழிநடக்கும் வழிநூல்களாக மட்டும் நீதி -சட்ட நூல்களை நம் மரபு வகுத்துரைத்தது இதனாலேயே. நம் மரபில் எப்போதுமே ஆன்மீகமும் இலக்கியமும் முதன்மையாக எண்ணப்பட்டன. அவையிரண்டும் வேறுவேறாகக் கருதப்பட்டதுமில்லை.
இதனால்தான் மனுநீதியோ பராசரநீதியோ முன்வைக்கும் நீதிச்சட்டங்களுக்குக் கட்டுப்படாததாக இருக்கிறது மகாபாரதத்தின் நீதியுணர்வு. அது நேரடியாகவே வாழ்க்கையில் இருந்து திரட்டிக்கொண்டதாக இருக்கிறது. மகத்தான மானுட நுண்ணுணர்வால் கண்டடையப்பட்டதாக இருக்கிறது. மகாபாரதத்தில் அரசநீதியும் அதிகார அரசியல் பேசப்படுகிறது, ஆனால் அதற்கு எதிரான சாமானியர்களின் குரலும் ஒலிக்கிறது. சமூகநலம் சார்ந்த நெறிகள் பேசப்படுகின்ற, அதேசமயம் தனிமனிதர்களின் அந்தரங்கக்குரலும் எழுகிறது. ஒரு எளியவனின் குரல்கூட அதில் மறைக்கப்படவில்லை.
மகாபாரதத்தை ஒரு ஸ்மிருதியாகவும் கொள்ளலாம் என்று சொல்லும் முன்னோர் அதை ஒரு சுருதியாகவும் கொள்ளலாம் என்கிறார்கள். ஏனென்றால் ஒருபக்கம் உள்ளுணர்வின் ஒளியால் முன்னகர்வதாகவும் மறுபக்கம் அந்த உள்ளுணவை நீதியாக வகுத்துச்சொல்ல முயல்வதாகவும் அது உள்ளது. பேரிலக்கியங்களின் இடம் அத்தகையது. நீதி என்பது எப்போதும் பேரிலக்கியங்களின் சிறகுகள் சென்ற வழியில் தன் குளம்படித்தடத்தை பதித்துச் செல்வதாக இருக்கவேண்டும்.
ஒரு நீதிநூல் என்பதை இவ்வாறு வகுத்துக்கொள்ளலாம் என்று நான் எண்ணுகிறேன்.
1. அது ஒரு சமூகத்தில் நிகழும் நீதிசார்ந்த உரையாடலின் ஒரு தரப்பு. ஆகவே அச்சமூகத்தின் வளர்ச்சிப்போக்கின் ஆவணம் அது.
2 அது நீதிசார்ந்த உரையாடலின் சமரசப்புள்ளிகளைத் தொகுத்து வைக்கும் ஒரு தளம். ஆகவே அது ஒரு சமூகத்தின் நெறிகளின் சட்டங்களின் ஆவணம். அச்சமூகத்தின் வாழ்க்கைநோக்கின் ஆவணம் அது.
3. அது நீதிக்கான இலட்சியக்பெருங்கனவை பதிவுசெய்துள்ள ஓர் இலக்கியம். மாபெரும் நீதிநூல் அச்சமூகத்தின் பிரதிபலிப்பு மட்டும் அல்ல, அச்சமூகத்தின் கனவின் பிரதிபலிப்பும்கூட.
29- ஜனவரி௨009 அன்று நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் நிகழ்த்திய தமிழ்நாடு மெர்க்கனைல் வங்கி அறக்கட்டளைச் சொற்பொழிவு பகுதி 1