அன்புள்ள ஜெ
புனைபெயரில் எழுதும்படி நீங்கள் ஒருவருக்குச் சொன்ன ஆலோசனையை கண்டு ஆச்சரியமடைந்தேன். நீங்கள் துணிந்து எழுதும்படிச் சொல்வீர்கள் என்றுதான் எதிர்பார்த்தேன். நீங்கள் அப்படித்தான் எல்லா வம்புகளையும் எதிர்கொள்கிறீர்கள். ஒரு சில தனிப்பட்ட வம்புகளை எதிர்கொள்ள முடியவில்லை என்றால் ஓர் எழுத்தாளன் எப்படி சமூகச்சிக்கல்களை எதிர்கொள்ள முடியும்? எப்படி அவன் ஒரு திறந்த விமர்சனத்தை சந்திக்கமுடியும்? நீங்கள் தொடர்ச்சியாக உரையாடலில் இருந்துகொண்டிருக்கிறீர்கள். அதுதான் உங்கள் பலமே. அந்த துணிவு எழுத்தாளர்களுக்கு வேண்டும் அல்லவா?
அர்விந்த்குமார்
அன்புள்ள அர்விந்த் குமார்
சில ஆண்டுகளுக்கு முன்பு நாஞ்சில்நாடன் ஒரு கருத்து சொன்னார். அப்போது நான் அவரை அழைத்துச் சொன்னேன். “நீங்கள் ஏன் கருத்துக்கள் சொல்கிறீர்கள்? உங்களை எனக்குத் தெரியும். வம்புகளால் நீங்கள் அமைதியிழப்பீர்கள். உங்கள் எழுத்துத்திறன் பாதிக்கும். எனக்கு அந்தப்பிரச்சினையே இல்லை, நான் வம்பர்களை சிற்றுயிர்களாகவே எடுத்துக்கொள்வேன்”
இதையே யுவன் சந்திரசேகருக்கும், எஸ்.ராமகிருஷ்ணனுக்கும் எல்லாம் சொல்வேன். எழுத்தாளனுக்கு இந்த வம்புகள் பெரிய தடைகள். அவன் அவனுக்கே உரிய அகச்சிக்கல்களில் உழலவேண்டியவன். ஆனால் இதை போகனுக்குச் சொல்லமாட்டேன். வம்புகளில் நீந்த அவருக்கு தெரியும். இதுதான் வேறுபாடு.
ஆனால் என்னதான் வம்புகளை பொருட்படுத்தாமலிருந்தாலும் சின்னச் சிக்கல்கள் வந்துகொண்டே இருக்கும். ஏனென்றால் வம்பர்களுக்கு வேறுவேலையே இல்லை.
இன்று சற்றுமுன் ஒரு வம்பு. ஒரு வாசக- சினிமா நண்பர் வேறொரு விஷயமாக அழைத்துப்பேசிக்கொண்டிருந்தார். பேச்சுவாக்கில் அவர் ஒன்று சொன்னார். தமிழினி தல்ஸ்தோய் சிறப்பிதழ் பற்றி நான் எழுதிய குறிப்பில் ஆசிரியர் குழுவுக்கு பாராட்டுக்கள் என்று சொல்லியிருந்தேன், அந்த இணையதளம் கோகுல் பிரசாத்தால் மட்டுமே நடத்தப்படுவது, அவரை பெயர்சொல்லி நான் பாராட்டாததனால் அவர் புண்பட்டு முகநூலில் ஏதோ எழுதியிருக்கிறார் என்று.
நான் தமிழினி தல்ஸ்தோய் இதழ் வந்தபின் பலமுறை கோகுல் பிரசாத்திடம் பேசியிருக்கிறேன். அவர் அப்போது ஒன்றும் சொல்லவில்லை. கருத்துவேறுபாடுகள் இருக்கலாம். மோதல்களும் விமர்சனங்களும் வரலாம். அதெல்லாம் இயல்பு. ஆனால் இப்படி ஒரு ‘புண்படும்’நிலை இருக்குமென்றால், அதை ரகசியமாக வைத்து எழுதுவதென்றால் அது எந்தவகையிலும் அறிவியக்கத்தில் இருப்பவனுக்கு கௌரவம் அல்ல. எனக்கு அவர்மேல் இருந்த மதிப்பே சட்டென்று குறைந்தது. எரிச்சல், கோபம். எழுத்தாளனென்றால் ஒரு நிமிர்வு வேண்டாமா என்ற எண்ணம்.
உடனே அவரை ஃபோனில் அழைத்தேன். அப்படி எழுதினாரென்றால் சற்று கடுமையாகப் பேசவேண்டும் என்று நினைத்தேன். எனக்கு தனிப்பட்ட நெருக்கம் அவர்மேல் இல்லை, இருந்திருந்தால் கடுமையாகவே திட்டியிருப்பேன். ஆகவே முதலில் அவர் அப்படி எழுதியது ,அதுவும் முகநூலில், உண்மையா என்று கேட்டேன். அவருக்கு அதிர்ச்சி. அவர் அப்படி எழுதவில்லை. வேறு யாரோ எழுதியிருக்கிறார்கள். அல்லது எங்கோ பேசியிருக்கிறார்கள். நண்பர் செவிவழி செய்தியாக கேட்டு குழப்பி விட்டுவிட்டார்
நான் கேட்டது கோகுல் பிரசாத் மீதான அவநம்பிக்கையால் என ஆகிவிட்டது. ஆகவே மன்னிப்பு கேட்டுக்கொண்டேன். அவருடைய குறிப்புடன் தமிழினி இதழ் சார்ந்த அறிவிப்பு என் தளத்தில் வந்தது. உண்மையாக அந்த இணையதளம் அவர் ஒருவரால் மட்டுமே நடத்தப்படுகிறது. ஆசிரியர்குழுவுக்கு பாராட்டு என நான் எழுதியதை அவர் பலர்செய்யவேண்டிய வேலையை ஒற்றையாள் செய்திருப்பதாக நான் சொல்வதாக எடுத்துக்கொண்டு, பாராட்டாகவே புரிந்துகொண்டிருந்தார்.
நான் அது ஒற்றைமனிதரின் பணி என நினைத்திருக்கவில்லை. ஏனென்றால் தமிழினி இணைய இதழ் ஏற்கனவே என் நண்பர் வசந்தகுமாரால் தொடங்கி நடத்தப்பட்ட ஒன்று. நான் பல இணைப்புகள் அளித்திருக்கிறேன்.அக்குழு கோகுல் பிரசாத் தலைமையில் தொடர்கிறது என்றே நினைத்திருந்தேன்.
எல்லா இணைய இதழ்களும் ஒரு நபரின் முன்னூக்கத்தாலும் முயற்சியாலும்தான் நிகழும் . ஆனால் சிறு நண்பர்குழு ஒன்று உடனிருக்கும். அந்த நண்பர்குழுவின் பங்களிப்பு சிறிதாக இருந்தாலும் அவர்களையும் உள்ளடக்கிக் கொண்டு தன்னை முன்வைப்பதையே அந்த முகப்புமனிதர் செய்யவேண்டும்.முன்பு சிற்றிதழிலும் அப்படித்தான். சொல்புதிது நான் நடத்திய இதழ் என நான் ஒருபோதும் சொன்னதில்லை.
பொதுவாக ஓர் இதழில் மைய இடம் வகிப்பவரே நமக்கு தெரிகிறார் [கனலி- க.விக்னேஷ்வரன், ஓலைச்சுவடி- கி.ச.திலீபன், யாவரும் -ஜீவ கரிகாலன், வல்லினம்- நவீன்] நண்பர்குழுவின் உதவி சிறிதாக இருக்கலாம், ஆனால் பாராட்டு பொதுவாக சொல்லப்பட்டால் அனைவருக்குமாகவே இருக்கவேண்டும்.
உதாரணமாக , என்னுடைய வலைத்தளம் என்னுடைய எழுத்துக்களாலானது. என் முகமே முகப்பில் உள்ளது. ஆனால் இதை நடத்துவதில் ஒரு குழுவின் பங்களிப்பு உண்டு. ஆகவே இணையதளத்துக்கான பாராட்டு எப்போதும் அனைவருக்கும் உரியதாகவே எடுத்துக்கொள்ளப்படுகிறது.
தமிழினி இணையதளத்தில் வசந்தகுமார், பாதசாரி ஆகியோரின் பங்களிப்பும் இருக்கும் என்பதே என் எண்ணமாக இருந்தது. முழுக்கமுழுக்க கோகுல் பிரசாத்தே பார்த்துக்கொள்கிறார் என்று அவர் சொல்லித் தெரிந்தபோது வியப்பும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது. அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டேன். அது ஒரு பெரும்பணி.
ஓர் இணையதளத்தை நடத்துவதன் சிக்கல்கள் ஏராளமானவை. தொழில்நுட்பச்சிக்கல்கள் முதலில். எங்கள் இணையதளத்தில் ஒரு captcha வந்துகொண்டிருந்ததை கண்டிருப்பீர்கள். அது இணையதளத்தின் வேகத்தை குறைத்தது. அதை சரிசெய்ய நான்குநாட்கள் வேலைபார்த்தனர். மறைமுகமாக பிரதிகளை மேம்படுத்துபவர்கள் பலர் உண்டு. அவர்களும் இணைந்ததே ஓர் இணையதளம். அவர்கள் எவருக்கும் பணம் அளிக்கப்படவில்லை. பெயர்களும் வெளியே தெரிவதில்லை.
இணையதளத்தில் கடிதங்களை வெளியிடுவதேகூட சாதாரண வேலை அல்ல. இன்று வந்த கடலூர் சீனுவின் கடிதம் பிரசுரமாகும்போது பத்திப்பிரிவினை இல்லாமல் இருந்ததை கண்டிருப்பீர்கள். உடனே அது சரி செய்யப்பட்டது. மின்னஞ்சலில் இருந்து வெட்டி நேரடியாக ஒட்டினால் அப்படி ஆகும்.
இன்று பலர் செல்பேசியில் நேரடியாக தட்டச்சு செய்து அனுப்புகிறார்கள். அவற்றை ஒருமுறை வேர்ட் பக்கத்தில் ஒட்டி திரும்ப வெட்டி அனுப்பவில்லை என்றால் ஒரே நீண்ட வரியாக, சொற்களுக்கிடையே இடைவெளியே இல்லாமல் இருக்கும். அவற்றை சில இணையப்பக்கங்களில் வெட்டி ஒட்டி ‘அலைன்’ செய்து மீண்டும் வெளியிடவேண்டும்.
பலகடிதங்களை முப்பது சதவீதம் வரை திருப்பி எழுதவேண்டியிருக்கும். இப்போது ஒரு வேடிக்கை செல்பேசியில் தட்டச்சு செய்வதில் நிகழ்கிறது. தோராயமான இன்னொரு சொல்லை கூகிள் அளித்துவிடுகிறது. ‘குறிப்பிடத்தக்க’ என்ற சொல்லை ‘கூப்பிட்டுவிட்டு’ என்று ஒரு கடிதத்தில் கூகிள் மாற்றியிருந்தது. அனுப்பியவருக்கும் அது பிழையாக இருப்பது தெரியவில்லை.அதை தட்டச்சு செய்பவருக்கு பொதுவாக அது கண்ணில் படாது. ஏனென்றால் அவர் மனதில் அவர் எண்ணியதுதான் இருக்கிறது, அதையே அவர் காண்பார். வாசித்தபோது அது என்னவென்றே தெரியவில்லை. நானே ஊகித்து மாற்றவேண்டியிருந்தது.
கோகுல் பிரசாத் தனியொருவராக கதைகட்டுரைகளை தெரிவுசெய்து, பிழைநீக்கம் செய்து, பக்கவடிவமைப்பு செய்து, இணைப்புகள் அளித்து, படங்கள் தெரிவுசெய்து அளிக்கிறார் என்றால் அது மிகப்பெரிய பணி. தல்ஸ்தோய் சிறப்பிதழும் ,சமீபத்தில் கனலி வெளியிட்ட இரு சிறப்பிதழ்களும் [ ஜப்பானியச் சிறப்பிதழ், தி.ஜானகிராமன் சிறப்பிதழ்] வல்லினம் வெளியிட்ட நாவல் சிறப்பிதழும் தமிழிலக்கியத்தின் முதன்மை நிகழ்வுகள். இளைஞர்கள் இத்தனை தீவிரமாக இலக்கியத்தில் செயல்படுவது மிகுந்த ஊக்கமளிக்கிறது.
ஆனால் கோகுல் பிரசாத் ஒருவராக இதைச் செய்யக்கூடாது என்பது என் எண்ணம், அதை அவரிடம் சொன்னேன். முக்கியமான காரணம், நீண்டகாலம் செய்ய முடியாது. ஏதோ ஒரு கட்டத்தில் சலிப்பு உருவாகலாம். இரண்டாவது, எப்படியானாலும் ஏற்கப்பட்ட படைப்புகளை விட மறுக்கப்பட்ட படைப்புகளே கூடுதலாக இருக்கும். மோசமான உரைநடையை ஏராளமாக வாசிப்பது நம் அகமொழியை வலுவிழக்கச் செய்யும்– என்னைப்போல தனிமொழி உருவானபின் அது சிக்கல் அல்ல.
இப்படித்தான் அலையலையாக வம்புகள் வருகின்றன. பெரும்பாலும் பொருட்படுத்தாமல் போனாலும் அரிதாக நட்புகள் நடுவே பிரிவினைகள் உருவாக்கப்பட்டுவிடும். இத்தகைய வம்பாளர்களுக்கு முன்பெல்லாம் மேடை இல்லை. அச்சிதழ்களில் ஒருசிலர் இருந்தனர், ஆனால் அவர்களுக்கு இடம் குறைவு. முகநூல் வம்பாளர்களின் உலகம்.
ஆண்களைப் பற்றி இப்படிப்பட்ட வம்புகளை உருவாக்குபவர்கள் பெண்கள் என்றால் வேறுபெயரில் ஆபாச மின்னஞ்சல் அனுப்புவார்கள். அவதூறு செய்து அவர்களின் கணவர்களுக்குச் செய்தி அனுப்புவார்கள். திட்டமிட்டே உளம்சோர்வடையச் செய்வார்கள்.ஓரிருமுறை நடந்துள்ளது. ஆகவேதான் கடிதம் அனுப்புபவரின் ஊர் அல்லது மின்னஞ்சலை வெளியிடுவதில்லை. பெண்கள் என்றால் பெரும்பாலும் பெயர்களையும் வெளியிடுவதில்லை.
அதையெல்லாம் கடந்து எழுத சிலரால் முடியலாம், எல்லாராலும் முடியாது.கடக்கும் திராணி கொண்டவர்களுக்குக் கூட அதற்காகச் செலவிடும் பொழுதும் உள்ளமும் வீண்தான். வம்பர்களுக்கு முழுநேர வேலையே இதுதான். இலக்கியவாதி அதைநோக்கினாலே அவனுடைய தீவிரம் மட்டுப்படும். அவனுடைய உள்ளம் ஆழங்களை, உன்னதங்களை நோக்காமலாகிவிடக்கூடும். அது பேரிழப்பு
ஜெ