சாதி, இருகேள்விகள்

ஜெ ,

பகவதிக்கு சாதி குறித்து நீங்கள் எழுதிய கடிதம் கண்டேன் , சாதியை பற்றி எனக்குள் இருந்த ஐயங்களைத் துடைத்தவை சிறிலுக்கு அளித்த பதில்கள் ,

தொடர்புடைய , நீண்ட நாட்களாகக் கேட்க நினைத்த கேள்வி உண்டு,

படைப்பில் சாதி பற்றிய வசைகள் ஏன் வருகின்றன ? பாத்திரங்கள் பேசுவதை ஜெயமோகன் பேசுவதாக நினைத்துகொண்டு கேட்கவில்லை .

உதாரணமாக காடு நாவலில் குட்டப்பன் பேசும் ஜாதி , மதம் குறித்த வசைகள், இவை ஏன் தேவை நாவலில் ?

என்னைத் தெளிவாக்கிக் கொள்ள உதவுங்கள் .

(காடு நாவலுக்கு இணையத்தில் யார் விமர்சனம் எழுதினாலும் கோவை இணையர்கள் இரண்டு பேர் ஜெயமோகன் சாதிவெறியர் என ”நிரூபிக்க” இதைக் குறிப்பிடுவார்கள், சாதியை ஒழிக்கவாம் , தமிழகத்தில் இரட்டை டம்ளர் முறையை 2 வருடங்கள் முன்புவரை பேணிவந்த மாவட்டம் இது , இன்னும் எந்த கிராம கோவில்களிலும் தலித்கள் நுழையவிடாமல் வருடம் இரண்டு முறை பிரச்ச்னை நடக்கும் மாவட்டம் இது , இந்த ஜாதியை எல்லாம் ஒழிக்க தோன்றாது போல , இலக்கியத்தில் ஜாதியை ஒழித்தால் எல்லாம் சுபம் )

அரங்கசாமி

அரங்கசாமி,

நம் சூழலில் மக்கள் சாதிகளாகவே வாழ்கிறார்கள். சாதிக்குள் நின்றே சிந்திக்கிறார்கள். சாதியையே தங்கள் சுயம் என்று அடையாளப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். ‘நாங்க நாடாக்கமாரு அப்டி நெனைக்கிறதில்லை’ என்று பேசாத ஒரு சாதாரண நாடாரை நீங்கள் பார்க்கமுடியாது.

இந்த சுய அடையாளத்தை நகைச்சுவையாக ஆக்குவதன் மூலம் அதில் உள்ள வேறுபாட்டை அல்லது இடைவெளியை தாண்டிச்செல்ல முயல்வதையும் கிராமத்தில் காணலாம். பத்மநாப புரத்தில் ஒரு காட்சி . பஸ் நின்றதும் மூன்று பேராக நின்றவர்களில் ஒருவர் கேட்டார். [மூன்று ஐட்டமுமே நல்ல பூஸ்]. ‘ஒருநாயருக்கும் ரண்டு நாடான்மாருக்கும் சீட்டு உண்டா சார்?’ நெல்லைப்பக்கம் மரைக்காயர்களும் பிள்ளைவாள்களும் மாறி மாறி நக்கல் செய்து பேசுவதை ’கௌரவமாக’ பதிவு செய்துகொள்ள முடியாது.

ஒருவரை அவரது சாதி சார்ந்து அடையாளப்படுத்துவது நம் சூழலில் வழக்கம். சாதிப்புத்தி என்ற கருதுகோள்தான் இங்கே மனிதர்களைத் தீர்மானிக்கக்கூடியதாக இருக்கிறது. ‘சமயவேல் வீட்டிலே சாப்பிட்டேன். ஆசாரிமார் மீன்குழம்பு நல்லா வைப்பாங்க’ என்று கோணங்கி சொன்னான். இயல்பான கிராமத்து மனிதனாக அவன் எனக்கு அறிமுகமான நாட்கள். ‘ஏல, இது நாயுடு ஓட்டல். இவனுக கறிக்குழம்பு வச்சு வெளங்கினாப்லதான். பாயி ஓட்டல் இருந்தா சாப்பிடுவோம். இல்லேன்னா தயிர்சாதம் போரும்’ என்றான் ஒருமுறை. இதெல்லாமே ஒருவகை நாட்டுப்புற யதார்த்தங்கள்.

சாதிப்புத்தி என்பதை எதிர்மறையான ஒரு விஷயமாகப் பார்க்க நாம் சொல்லப்பட்டிருக்கிறோம். கிராமத்தில் அது அப்படி அல்ல. மக்கள் சாதிகளாக வாழும்போது, அவர்களின் குலதெய்வங்களும் குடும்பதொன்மங்களும் அவர்கள் ஆழ்மனங்களைத் தீர்மானிக்கும்போது அவர்களின் மனமும் ஆளுமையும் பழக்கவழக்கங்களும் அதையொட்டி உருவாகின்றன. கையில் வாளுடன் நிற்கும் குலதெய்வங்களைக் கொண்ட நாயரும் தேவரும் மஞ்சள்பொங்கல் நைவேத்யம் சாப்பிடும் குலதெய்வத்தைக் கொண்ட ஆசாரிமாரிடமிருந்து வேறுபடத்தான் செய்வார்கள். [ பிள்ளைமார் உளுந்தங்களி சாப்பிட்டாலே போதையாயிடுவானுக- பின் தொடரும் நிழலின் குரல் நாவலில் கதிர்] அவர்களின் மனமும் உணர்ச்சிகளுமல்ல இவர்களுடையது.

இந்த அடிப்படையில் உறவுகளையும் மனிதர்களையும் சாதி சார்ந்து அணுகுவது கிராமத்து மக்களுக்கு ஒரு நடைமுறை யதார்த்தமாக , அவர்களே வாழ்க்கையில் இருந்து பழகிக் கற்ற ஓர் உண்மையாக இருக்கிறது. குட்டப்பனும் செல்லையா பெருவட்டரும் எல்லாருமே அந்த உலகுக்குள் வாழ்பவர்கள். அவர்கள் அப்படித்தான் வாழ்க்கையை அணுகினார்கள். அப்படித்தான் பேசுவார்கள். அதுவே யதார்த்தம். அதை நுட்பமாகவும் முழுமையாகவும் பதிவு செய்வதற்கு பெயர்தான் இலக்கியம். வாழ்க்கை அப்படி இருக்கும் வரை இலக்கியம் அதைக் காட்டத்தான் செய்யும். குட்டப்பன் ஒரு கணம் கூட தன்னை நாடார் என உணராமலில்லை. அவன் வாழ்க்கைப்பார்வையே அதிலிருந்துதான். அவன் விருப்பும் வெறுப்பும் அதை வைத்துத்தான். அதை இல்லாமலாக்கிவிட்டு அவனை இலக்கியத்திற்குள் கொண்டு வரமுடியாது.

இலக்கியம் வாழ்க்கையைக் காட்டுகிறது. எழுத்தாளனின் விருப்பு வெறுப்புகளைக் காட்டும் உதாரணங்களை அல்ல. அவனுடைய சொந்தக் கருத்துக்களின் அடிப்படையில் செய்யப்பட்ட செயற்கையான நிகழ்வுகளுக்கு இலக்கியத்தில் இடமில்லை. சாதி மத அடையாளம் அற்ற ‘கந்தன் ஓர் உழவன். இவன் தினமும் ஏர் பூட்டுவான்’ என்பது போன்ற கதைகளைப் பள்ளிக்கூட பாடப்புத்தகத்தில் வாசித்தற்கு மேலே ஒன்றும் தெரியாத வாசகர்கள் உருவாக்கும் அபத்தமான கருத்துக்கட்டுப்பாடுகளுக்குள் இலக்கியம் நிற்காது. இலக்கியம் எளிமையான ’நாலாப்பு’ கருத்துக்களை இடம்சுட்டி பொருள் விளக்கம் தருவதற்குரிய களம் அல்ல. வாழ்க்கையை உண்மையின் வீச்சுடன் காணவும் அதைப்பற்றி விரிவாக சிந்திக்கவும் மூளைத்திராணி உள்ள முதிர்ந்த மனிதர்களுக்கானது.

மேலும் ஒன்று, இந்த கருத்துக்களில் உள்ள மிகப்பெரிய முட்டாள்தனம் என்பது, ஒருகதையில் உள்ள எல்லா கதாபாத்திரங்களின் பேச்சுகளையும் ஆசிரியரின் ‘கருத்துக்களாக’ வாசித்து புரிந்துகொள்வது. ஆம், ’நாலாப்பு’ மனநிலை.

ஒரு புனைகதை என்பது பல்வேறு குரல்களால் ஆனது. எழுத்தாளன் ஒரு கருத்தை எழுதுவதில்லை, ஒரு வாழ்க்கைச்சூழலை எழுதுகிறன். அதில் உள்ள பல்வேறுபட்ட கருத்துநிலைகள், பல்வேறு உணர்ச்சிநிலைகள், பல்வேறு வாழ்க்கைத்தருணங்கள் வாழ்க்கையில் இருந்து எடுக்கப்பட்டு செறிவாக்கம் செய்யப்பட்டவை. அவை வாசகனுக்கு உண்மையான வாழ்க்கைக்கு நிகரான ஒரு வாழ்க்கையனுபவத்தை அளிக்கின்றன. உண்மையான ஒரு வாழ்க்கையனுபவத்தை அந்த வரிகளில் இருந்து கற்பனை செய்து அனுபவிக்க வேண்டியது வாசகனின் பொறுப்பு. ஓர் உண்மையான சொந்த வாழ்க்கையனுபவத்தில் இருந்து எப்படி சிந்தனைகளை விரிவாக்கம் செய்துகொள்வானோ அப்படிச் சிந்தனைகளை விரிப்பது அவன் செய்யவேண்டியது.

தமிழிலக்கியத்தில்,  என்று யதார்த்தவாதம் நேர்மையான தீவிரத்துடன் எழுதப்பட்டதோ,  அன்றே அது நம் மக்களின் சாதிசார்ந்த வாழ்க்கைநோக்குப் பற்றிய நுண்ணிய அவதானிப்புடன் பதிவுசெய்வதாகவே இருந்தது. இன்றே இந்த அசடுகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை இருக்கிறதென்றால் புதுமைப்பித்தனை என்னதான் சொல்லியிருக்க மாட்டார்கள்? கு.அழகிரிசாமி, ந.பிச்சமூர்த்தி,கி.ராஜநாராயணன் வரை நம்முடைய எல்லா எழுத்தாளர்களும் இந்த இணைய அசடுகள் கண்ணில் படாமல் சிற்றிதழ்களில் எழுதித் தப்பினார்கள் என்று தோன்றுகிறது.

இவை இலக்கியவாசிப்புக்கு அல்ல, சாதாரணமான ஐந்தாம் வகுப்பு கதை வாசிப்புக்கே தேவையான வழிமுறைகள். கொஞ்சம் புத்திசாலியான ஒரு ஐந்தாம் வகுப்பு குழந்தைக்கு இவற்றைச் சொல்லித்தரவேண்டியதில்லை. ஆனால் தமிழில் நாம் இலக்கியமும் கருத்தியலும் விவாதிக்க கிளம்பி வரும் மக்குகளுக்கு இந்த ஆரம்பப் பாடத்தைத்  திரும்பத் திரும்பச் சொல்லவேண்டியிருக்கிறது. இந்த நிலை வேறு எந்த சூழலிலும் இருக்குமா எனத் தெரியவில்லை. தமிழின் பொது அறிவுச்சூழல் எந்த அளவுக்கு சூம்பிப்போன நிலைக்கு கொண்டு வந்து விடப்பட்டிருக்கிறது என்பதற்கு இது சிறந்த உதாரணம்

ஜெ

 

ஜெ,

எந்த தர்கத்திலும் ஒரு பக்க நிலைப்பாடு எடுப்பது எண்ணங்களைக் கட்டுப்படுத்தி விடும் என்று எப்பொழுதும் எனக்கு நானே சொல்லி வருபவன். ஆனால் சில சமயம் என்னையும் அறியாமல் ஒரு பக்கம் சாய்ந்து விடுகிறேன். ஜாதியின் சமூக பங்களிப்புகளைக் கணக்கிலெடுக்கத் தவறிவிட்டேன்.

மேலும் “மனிதர்கள் ஜாதியை புறக்கணித்தாலொழிய ஜாதியம் ஒழியாது. ஜாதியம் சம்பந்தப்பட்ட ஏற்ற தாழ்வுகள் உண்மையாக நீங்க வேண்டுமென்றால், ஜாதியைப் பற்றி பேசாமலிருப்பதுதான் அதற்குச் சிறந்த வழி.” என்று நான் கூறியது நீங்கள் சொல்வது போல் ”புனிதக் கடமை” என்று கையிலெடுத்துக் கொள்ளும் ”அகந்தை” தான். அதற்கு தகுந்த, தெளிவான பதில் – ”சாதி எதற்காக உருவானதோ அந்த நோக்கம் இல்லாமலாகும்போது அது அழியும். அதை அழிக்கவேண்டுமென்றால் அந்த நோக்கம் காலாவதியாகும்படிச் செய்வது மட்டுமே வழி.”- இந்த மொத்தக் கட்டுரையின் சுருக்கமாக இதை பார்க்கிறேன். ஆனாலும் இந்த இடத்தில் எனக்கு எதிர்மறையாக ஒரு கேள்வி தோன்றுகிறது – ”அப்படியென்றால் சமூக பங்களிப்பு உள்ள ஜாதி அமைப்பை கட்டி காப்பது நம் கடமையாக அல்லவா இருக்க வேண்டும்? இது பற்றி சிந்தித்து வந்த அறிவுலகம் (உங்களைப் போல் அல்லாமல்) ஏன் இதை துணிந்து முன் வைக்கத் தயங்குகிறது?” அல்லது அறிந்திருந்தும் “பழமைவாதி” என்ற முத்திரை பதிந்துவிடும் என்ற பயத்தினாலா?

இலக்கியத்தில் சாதி இல்லாமல் எழுதுவது என்பது என்னுடைய விதண்டாவாதம் தான் என்று மிக சமீபத்தில் ”புலி நகக் கொன்றை” நாவலை படிக்கும் பொழுது புரிந்துக் கொண்டேன். அங்கே ஜாதி இல்லாமல் அந்தக் கதையே பி.ஏ.கிருஷ்ணன் உருவாக்கியிருக்கமுடியாது.

பகவதிப்பெருமாள்

பக்ஸ்,

சாதியின் சமூக- பண்பாட்டு பங்களிப்பு என்பது இப்போதும் நீளக்கூடிய ஒன்று அல்ல. நேற்று நிகழ்ந்தது. நம் கையில் வந்துசேர்ந்துள்ள பண்பாட்டில் ஆழமாக வேரூன்றியிருப்பது. இன்றைய காலகட்டத்தில் வேகமாக பிடி தளர்வது.

சாதி சார்ந்த பாரம்பரியத்தில் இரு கூறுகள் உள்ளன. ஒன்று அதன் பண்பாட்டு அடையாளத்தின் இறந்த கால நீட்சி. அது நம்மை நம்முடைய வரலாற்றுக்கு முற்பட்ட தொன்மையில் கொண்டுபோய் பிணைக்கிறது. அது நம் சுயத்தை ஒருவகையில் வரலாற்றின் போக்கில் வைத்து தீர்மானிக்கிறது. இதை அறிவதும், அதன் உணர்வுகளை உள்வாங்குவதும் நம்மை நாம் அறிய உதவும். இலக்கியம், கலைகள் எல்லாமே அதற்கான கருவிகள்.

ஆனால் சாதி இன்றும் வாழ்நதாக வேண்டிய ஒன்றல்ல. அது நிலப்பிரபுத்துவ கால அமைப்பு. இது முதலாளித்துவம். சாதி தன் பங்களிப்பை ஏற்கனவே செய்துவிட்ட ஒன்று. காலாவதியான ஒன்று ஒரு நிகழ்காலச்சூழலில் எதிர்மறையான பங்களிப்பை ஆற்றக்கூடும். நேற்றைய அதே சுரண்டல் அடுக்கதிகாரம் இன்றும் நீடிக்கவேண்டும் என்று கோருவதற்கு வழிகோலக்கூடும். அது பழைமைவாதம், மூடத்தனம்.

ஆகவேதான் நான் என் வாழ்கையில் சாதி அடையாளத்தை ஏற்கவில்லை. சாதிக்குள் மணம் செய்துகொள்ளவில்லை. சாதிக்குள் பிள்ளைகளை வளர்க்கவில்லை.சாதியை எவ்வகையிலும் கடைப்பிடிக்கவில்லை. நாளை கடைப்பிடிக்கப்போவதுமில்லை.

அதேசமயம் சாதியின் வரலாற்றையும், அதன் தொடர்ச்சியையும் அறிய எப்போதுமே கவனம் கொள்வேன். ஆம், அறிவது அதை கடந்துசெல்வதற்காகத்தான்.

சாதியும் கதைகளும்

சாதியுடன் புழங்குதல்


சாதி பேசலாமா?

சாதி பற்றி மீண்டும்

காந்தியும் சாதியும்

 

முந்தைய கட்டுரைசாதியும் கதைகளும்
அடுத்த கட்டுரைமதமாற்றம்-கடிதங்கள்