மரியாதைக்குரிய எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு,
மறைந்த மூத்த எழுத்தாளர் கோவை ஞானி அவர்களுக்கும் உங்களுக்கும் இடையே இருந்த நினைவுகளை உங்கள் தளத்தில் படிக்க நேர்ந்தது. அதில் நீங்கள் ஆரம்ப காலங்களில் கவிதை எழுதியிருப்பதாக எழுதுயிருந்தீர்கள். எனக்கான கேள்வி இங்கு என்னவெனில் ஒரு கவிஞன் எந்த இடத்தில் தன்னைக் கண்டடைகிறான். தற்போது எழுதவருபவர்களிடம் ‘போல செய்தல்’ பாணி அதிகம் இருப்பதாக நினைக்கிறேன் மற்றும் இன்னொரு மூத்த கவிஞரின் வடிவம் புதிதாக கவிதை எழுதுபவர்களிடம் தொற்றிக்கொள்கிறது.
இந்தத் தன்மையை நீங்கள் கவிதை எழுதும்போது உணர்ந்ததுண்டா? தனக்கான வடிவத்தை கவிஞன் எத்தருணத்தில் உள்வாங்கி உருவாக்குகிறான்? மேலும் தன் பழைய வடிவத்தை அதே பாணியில் எழுதி எழுதிதான் உடைக்க முடியுமா?
இப்படிக்கு,
தமிழ்மணி,
அருப்புக்கோட்டை.
அன்புள்ள தமிழ்மணி,
எழுதவருபவர் எவராயினும் அவரிடம் இருவகை மொழிநடைகள் இருக்கும். ஒன்று, சூழலில் புழங்கும் பொதுநடை. இன்னொன்று, அவருடைய அணுக்கத்திற்குரிய முன்னோடிப் படைப்பாளியின் நடை. ஏனென்றால் அவை இரண்டுமே வெளியே திகழும் மொழிநடைகள்.
பொதுநடையில் எழுதுவதே 99 விழுக்காடு எழுத்தாளர்களின் வழக்கம். அவர்கள் பெரும்பாலும் ஆற்றலற்ற படைப்பாளிகள். ஓரிரு சராசரிப் படைப்புகளுக்கு அப்பால் எழமுடியாதவர்கள். இதழியல்நடை, வணிகஎழுத்தின் நடை, சிற்றிதழ் நடை என இத்தகைய பொதுநடைகள் பல உண்டு.
சூழலில் உள்ள ஆற்றல்மிக்க எழுத்தாளரின் மொழிநடையால் ஆட்கொள்ளப்பட்டவர்கள் மிகப்பெரிய ஓர் அலையால் அடித்துச் செல்லப்படுகிறார்கள். அந்தக் கோட்டைக்குள் சிறைவைக்கப்படுகிறார்கள். ஆனால் அவர்களே நீந்தி, உடைத்து மீண்டு எழுந்தால் பெரும்படைப்பாளிகள். ஏனென்றால் அந்த ஆற்றல்மிக்க நடையிலிருந்து அவர்கள் மேலெழுகிறார்கள். மேலும் தீவிரமான ஒன்றை அடைகிறார்கள்.
எவராயினும் தங்கள் அகத்தே ஓடும் மொழியை புறமொழியில் பதியவைக்கையிலேயே தங்களுக்கான நடையை அடைகிறார்கள். அகமொழியை அப்படியே எழுதமுடியாது. அதை ஒருவகை அச்சாக ஆக்கி அதை புறமொழியில் அழுத்தி தனது நடையை உருவாக்கவேண்டும். அது புறமொழிதான் ஆனால் அகமொழியின் வடிவை அடைந்திருக்கும். அதற்கு தொடர்ச்சியான பயிற்சி தேவை. முழுமுனைப்பான, சலிக்காத முயற்சி.
அத்தகைய முயற்சி அற்ற எழுத்தாளர்கள் உண்டு. அவர்களே மிகுதி. அவர்களின் நடை இரண்டு அம்சங்களுடன் இருக்கும். ஒன்று, அது ஒழுக்கு இல்லாததாகவும் கூர்மையும் அழுத்தமும் அற்றதாகவும் இருக்கும். ஒருவகையான கரடுதட்டிய பயிலாநடை அது.
இன்னொன்று, முகநூல்நடை அல்லது வணிக எழுத்தின் நடை. அது அங்கிருந்து பேச்சுத்தன்மை, கிண்டல்கேலி ஆகியவற்றை எடுத்துக்கொண்டிருப்பதனால் ஒழுக்கு கொண்டிருக்கும். ஆனால் அந்த ஒழுக்குக்கு எந்த இலக்கியமதிப்பும் இல்லை. அதைக்கொண்டு எந்த உணர்ச்சியையும் உருவாக்க முடியாது. எந்தச் சிந்தனையையும் முன்வைக்க முடியாது. ஆழத்தை அடையவே முடியாது
இவ்விரு நடைகளுமே ஆசிரியனுக்குரிய தனித்தன்மை அற்றவையாக இருக்கும். நல்ல நடை என்பது கைரேகை போல. ஒருவரை அடையாளம் காட்டுவது, பிறிதொன்றிலாதது.
ஆகவே இன்னொருவரின் பாதிப்பு குறித்து அஞ்சவேண்டியதில்லை. அதை வெங்களிற்றைப் பழக்குவதுபோல் வென்றெடுக்க முயல்க. அது உங்கள் நடையை நீங்கள் அடைவதற்கான வழி. அந்த அறைகூவல்தான் உங்கள் ஆற்றலை குவிக்கச்செய்கிறது, உங்களை உச்சகட்டவிசையுடன் நிகழ்த்துகிறது.
பெரும்பாலான புனைவெழுத்தாளர்கள் எழுதவரும்போது கவிதைகளை எழுதுகிறார்கள். தன் மொழிநடையின் கூரிய பகுதிகளை தீட்டிக்கொள்ளும் பயிற்சி அது. புனைவாக விரியாத அனுபவப்புள்ளிகளை பதிவுசெய்யும் நோக்கம் கொண்டவர்களும் உண்டு. பல எழுத்தாளர்களின் கவிதைகள் புனைவுத்துளிகள்மட்டுமே
அவர்கள் கவிதையை விட்டு நகர்வது இரண்டு காரணங்களால். முதலில் உள்ள சிக்கல் கவிதைக்கு தேவையான அகஇசைத்தன்மை, மொழியால் மட்டுமே தொடர்புறுத்தும்தன்மை, தர்க்கங்களற்ற பித்துநிலை ஆகியவை அவர்களுக்கு அமைவதில்லை என்பது. ஆகவே உரைநடைப்புனைவுக்குச் செல்கிறார்கள்.<
அதைவிட முக்கியமானது ஒன்றுண்டு. கவிதைக்கு சுட்டுவெளி என்பது அக்கவிதை எழுதப்படும் கவிச்சூழலும் மொழிச்சூழலும்தான். கவிதையை ஒரு நாடகத்தின் ஒரு வசனம் மட்டுமே என்று கொள்வோம். அந்நாடகமே சுட்டுவெளி. அதை கவிதை முன்வைப்பதில்லை. அந்த நாடகத்தின் ஒட்டுமொத்தத்தை கொண்டுதான் கவிதைகள் பொருள்கொள்ளப் படுகின்றன.
எவர் எவரிடம் ஏன் எப்போது சொன்னது என்று கவிதையெனும் கூற்றுக்கு பின்புலம் அமைவது அவ்வாறே.
தவறாகக் கால் வைத்துவிட்டோமோ
என்று பதறி
ஒரு கட்டம் பின் வாங்குகிறேன் நான்.
‘சிப்பாய்க்கு பின்வாங்கல் அனுமதி கிடையாது”
என்று நகைக்கிறாள் ராணி.
என்ற போகன் சங்கரின் வரிகள் எப்படி கவிதையாகின்றன? இவற்றைச் சொல்வது யார்? இவ்வரிகளுக்கு பொருள் அளிக்கும் புலம், இந்த வசனத்தை பொருத்திக்கொள்ளும் நாடகம் கவிதைக்கு வெளியே நம் வாசிப்பில் இருக்கிறது. இங்கே ராணி என்பது எதை சிப்பாய் என்பது எதை கட்டம் என்பது எதை என்பதை அதுதான் தீர்மானிக்கிறது
அந்த புலத்தில் வைக்கையில் எளியவரிகள் கவிதையாகின்றன
நடக்க வராத குழந்தைக்கு
நீந்த வரும்
என்ற லக்ஷ்மி மணிவண்ணனின் வரி எளிமையான ஓர் உண்மை. ஆனால் இந்த பின்புலத்தில் நடத்தல் என்பது ஓரு தனிப்பொருள் கொள்கிறது. நீந்தல் என்பது பிறிதொரு பொருள் கொள்கிறது.
ஆனால் புனைவெழுத்தாளர்கள் பலர் அந்த பொதுவான ’நாடகப்புலத்தை’ ஏற்றுக்கொள்ளாதவர்கள். அவர்கள் தங்கள் கவித்துவத்தை நிகழ்த்த தங்களுக்குரிய புலத்தை புனைந்து உருவாக்கிக் கொள்கிறார்கள். தங்கள் கவிதைகளை தாங்களே எழுதும் பெருநாடகத்தின் வசனங்களாக அமைத்துக்கொள்கிறார்கள். அவை சூழலின் கவிதையுலகில் திகழ்வதில்லை. கவிதைகளாக தனித்து நிற்பதில்லை. ஆனால் அவர்களின் புனைவுலகுக்குள் கவிதைகளுக்குரிய திறப்புகளுடன் நிலைகொள்கின்றன
காவியங்களின் அழகியல் அதுதான். மேலான கவித்துவத்திற்கான களத்தை கதையால் உருவாக்கி அளிப்பதே சிறந்த காவியம் என்று சொல்லலாம். கம்பனின் சொற்பெருவெளியில்தான் ஆயிரக்கணக்கான கவிதைகள் திகழ்கின்றன. சங்கப்பாடல்களின் கவித்துவம் சங்கப்பாடல் என்னும் புலத்தில் பொருளேற்றம் கொள்கிறது. கம்பனின் வரிகள் கம்பராமாயணத்தின் புலத்தில் நிலைகொள்கின்றன
உலகமெங்கும் கவிஞர்களில் பலர் நாவலாசிரியர்களாக உருமாறியது அவ்வண்ணம்தான். விக்டர் ஹ்யூகோ, வால்டர் ஸ்காட் முதல் போரிஸ் பாஸ்டர்நாக் முதல் ராபர்ட்டோ பொலோனா வரை. அவர்களின் கவித்துவம் முழுமையாக நிகழ அவர்களே மொழியால் புனைவுப்புலத்தையும் அமைக்கவேண்டியிருந்தது.
நான் எழுதவந்தபோது கவிதைகளே எழுதினேன். ஆனால் கவிதைகள் எனக்கு போதவில்லை. நான் காவியகர்த்தன் என உணர்ந்தேன். ஆகவே நாவலுக்கு, நவீன காவியங்களுக்கு நகர்ந்தேன். கவிதை கணத்தின் மின்னல். எனக்கு கடுவெளியின் விண்மீன்பெருக்கை உருவாக்கவேண்டியிருந்தது. அதற்குரிய வடிவை தேர்வுசெய்தேன்.
ஆனால் ஒருவர் மெய்யாகவே கவிதையை அறிந்தவர் என்றால் தமிழிலுள்ள எந்த கவிஞரை விடவும் ஆற்றல்மிக்க கவிதைவரிகள், கவித்துவக் கணங்களை என் புனைவுலகில் கண்டடையமுடியும்.நேரடிக் கவிதைகளையே காணமுடியும். தமிழ் நவீனக்கவிதையின் ஒட்டுமொத்தத்தை விடவும் பெரியது அவ்வுலகு. அளவிலும் வீச்சிலும் கம்பனுடன் மட்டுமே ஒப்பிடத்தக்கது
ஜெ