டிஜிட்டல் மாயை- கடிதம்

Joan Miró. Femme

இனிய ஜெயம்

புதுவை நண்பர் தாமரைக்கண்ணன் அழைத்திருந்தார். புதுவை வெண்முரசு கூடுகையை zoom வழியே நடத்திப் பார்க்க ஒரு வெள்ளோட்டம் செய்து பார்ப்போமா என வினவினார். செய்யுங்கள் நான் வந்து கலந்து கொள்வது குறித்து பின்னர் தெரிவிக்கிறேன் என்றேன்.  எனது எதிர்பார்ப்பு வேறு. இதோ அடுத்த வாரம் சிறிய கோவில்களில் பக்தர்கள் வழிபாடு செய்ய அரசு தளர்வு கொண்டு வந்து விட்டது. இன்னும் சில நாட்கள் அனைத்தையும் விட்ட இடத்திலிருந்து துவங்கி விட முடியும். அதற்குள் ஏன் இத்தனை பதற்றம்?

உண்மையில் இத்தகு சூம் சந்திப்புகளில் பிறர் ஈடுபடுவதில் எனக்கு எந்த புகாரும் இல்லை. என்னை அதில் ஈடுபடுத்திக்கொள்ள சற்றே தயக்கம். சுருங்க சொன்னால் எனது மனிதார்த்த அம்சத்தில் கொஞ்சத்தை இந்த டிஜிட்டல் மாயை சுரண்டி மழுங்கடிப்பதை இன்னும் கொஞ்ச நாளேனும் தள்ளிப்போடுவோமே என்றொரு நப்பாசைதான்.

இனிய ஜெயம் ஒரே ஒரு அற்ப மாயை போதும் ஆயுளுக்கும் அதிலிருந்து வெளியேற விடாமல் நம்மை  தளைத்து வைக்கும் ஆற்றல் அதற்கு உண்டு. நான் முதலில் சென்று விழுந்த மாயை சினிமா. எல்லா நெல்லைவாசிகளையும் போல என் குடும்பமும் சினிமா பைத்தியம். நான் பிறப்பதற்கு முன்பே எனக்கு படம் காட்ட வந்த ப்ரொஜெக்டர் எனக்காக காத்திருந்தது. அப்பா ஆபரேட்டர் அறைக்கு சென்று ப்ரொஜெக்டர் இயங்கும் முறையை பயின்று, தனக்கே தனக்கு என லேத்தில் அமர்ந்து எளிய ப்ரொஜெக்டர் ஒன்றை செய்து வைத்திருந்தார். சுரைக்காய் அளவில் பல்பு மாட்டி( மின்சாரம் சும்மா பிய்த்துக்கொண்டு பறக்கும்) மேலே உள்ள ரீலில் உள்ள பிலிமை இழுத்து ஒளி பாயும் சிறிய செவ்வகம் வழியே இழுத்து கீழே உள்ள ரீலில் மாற்றுவார். கீழே உள்ள ரீல் கத்திரி சாணை பிடிக்கும் பெடல் வைத்த சக்கரத்தில் இணைந்து இருக்கும். பெடலை மிதித்தால் சக்கரம் சுழலும். படச் சுருள் சரியாக 24 பிரேம் காட்டும் வண்ணம் ஒரு பல் சக்கரம் வழியே சுழலும். பத்து நிமிடம் ஐம்பது அங்குலத்தில் நீள் வட்டமாக அழுக்கு மஞ்சள் வண்ணத்தில் மௌனப்படம் பார்க்கலாம்.

அப்பா பார்த்து சலித்து கைவிட்டிருந்த ப்ரொஜக்டரை எனக்கு விளையாட்டு காட்ட அவ்வப்போது ஓட்டிக் காட்டுவார். மூர் மார்க்கெட்டில் சேகரித்த நாடோடி மன்னன் சண்டை காட்சி ஒன்றும் சாப்ளின் எலைட் க்ளாஸ் படத்தின் சில காட்சிகளும் திரும்ப திருப்ப ஓடும். அங்கிருந்து சினிமா தியேட்டர். பஜாரில் எங்கள் கடைக்கு எதிரே உள்ள திரையரங்கின் முதலாளி அப்பாவின் நண்பர். (இப்போது அந்த முதலாளி மகன் எனக்கு நெருங்கிய நண்பன்) என் பால்யத்தின் பெரும்பாலான மாலைகளை அந்த அரங்கின் ஆபரேட்டர் அறையில்தான் கழித்திருக்கிறேன். ஆம் சினிமா பாரடைஸோவின் அதே சிறுவனின் அதே பால்யம். அங்கே துவங்கியது என் சினிமா பைத்தியம். அது வெறும் பகல் கனவினை கையாளும் கேளிக்கை என்று புரிய கால்நூற்றாண்டு ஆனது. அங்கிருந்து ஹாலிவூட். அது வேறு விதமான கேளிக்கை. ஹாலிவுட்டுக்கும் கலைக்கும் உள்ள தொலைவு, ஷஷாங்க் ரிடம்ப்ஷனுக்கும், தி மான் எஸ்கேப்ட் கும் உள்ள தொலைவு என்பதை உணர மேலும் பத்து ஆண்டு பிடித்தது. என்னை பிடித்து ஆட்டிய மாயையில் இருந்து கலை போதம் அடைய இத்தனை நாள் தேவையாக இருந்தது.

என்னை அடிப்படையாக கொண்ட எளிய உதாரணம் இது. போதமே அடையாத மாயையில் உழலும் சமூகம் இது. இதன் அடுத்த படியே சைபர் வெளி உருவாக்கும் தோற்றநிலை மெய்மை எனும் மாயையில் விழும் மனம்.  நான் எப்படி ப்ரொஜக்டர் வைத்து விளையாடி, ப்ரொஜெக்டர் அரங்கில் விளையாடி வளர்ந்தேனோ அப்படித்தான் 2000 கு பிறகான குழந்தை இந்த டிஜிட்டல் மாயை உலகில் கண்விழித்து விளையாடி வளருகிறது. அது பிறக்கும்போதே மனிதார்த்தம் என்பதை உணரும் உணர் கொம்பை ஒடித்துக்கொண்டே பிறக்கிறது.

மனிதார்த்தம் என்பதை மெய்நிகர் மாயை எந்த அளவு இடம் பெயர்க்கும் என்றால் அது மாயை என்பதையே  மறந்து, அது நமது மனிதார்த்தத்தின் ஒரு பகுதி என்று நாம் நம்பிக் கொண்டிருப்போம். உதாரணமாக நமது தொலைபேசி உரையாடல். ஒரு  மூளை இல்லாத பொறி மறுபதிப்பு செய்து அளிக்கும் ஒன்று அது. இன்று நமது மூளைக்குள் அந்த போதம் மழுங்கடிக்கப்பட்டு விட்டது. ஏதேனும் தூர தேசத்தில் இருந்து வரும் அழைப்பு இரு வினாடிகள் இடைவெளி விட்டு விட்டு கேட்கும்போது மட்டுமே நமது மூளை சற்றேனும் அதை உணரும். மற்றபடி அந்த மாயையை நாம் எப்போதோ மனிதார்த்தம் என்று நம்ப துவங்கி விட்டோம்.  இந்தப் புள்ளி அதை மையம் கொண்டே இன்றைய மொத்த டிஜிட்டல் உலகும் இயங்குகிறது.

இருபத்தி ஐந்து வருடத்துக்கு முன்பான lkg குழந்தை கட்டை விரலை பயன்படுத்தும் நுட்பத்தை விட இன்றைய lkg குழந்தை பயன்படுத்தும் நுட்பம் ஆழமானது. மொபைல் வழியே தோற்ற நிலை மெய்மை உலகு அடுத்த தலைமுறை மூளை அமைப்பை வடிவமைக்கத் துவங்கி விட்டது.

இந்தத் தலைமுறையில் இந்த டிஜிட்டல் மாயை எதை மறைக்கும்? ஒரு எளிய உதாரணம் தருகிறேன். தனிமனித வாதம். நுகர்வு கலாச்சாரம் இந்த இரண்டின் கலவையான காலம் இந்த டிஜிட்டல் மாயையால் நிலை நிற்கும் ஒன்று. நமது மொபைலில் டேட்டா தீர்ந்து போனால் ஆன்லைனில் புதுப்பித்துக் கொள்கிறோம். முகவரை நேரில் கண்டு புதுப்பிக்கும் நிலையை விட இருபது சதவீதம் லாபம்.

ஒரு பெரிய நிறுவனம். அதன் இந்திய ஏஜென்சி. அதிலிருந்து பொருள் வாங்கும் மாநில ஏஜென்சி. அதிலிருந்து பொருளை வாங்கும் மாவட்ட ஏஜென்சி. அங்கிருந்து நகர ஏஜென்சி. அங்கிருந்து நமது தெருமுனை பெட்டிக்கடை. ஒரு பெட்டிக்கடையில் காசு கொடுத்து நாம் செய்யும் ரீசார்ஜ் இந்த வரிசையின் படி உள்நாட்டு பொருளாதார சுழற்சியை அதன் ஸ்தரத்தன்மையை நிர்வகிக்கும் ஒன்று. அந்த சுழற்சியை அறுத்தே நுகர்வோன் அடையும் லாபம் நிகழ்கிறது. ஜட்டி முதல் மொபைல் tv வரை டிஜிட்டல் உலகு வழியே  நுகர்வோன் அடையும் லாபம் இறுதியாக அந்த பெட்டிக்கடைக்காரனை கொல்வதில் சென்று முடியும். அதை இந்த டிஜிட்டல் பதப்படுத்திய மூளைகள் ஒரு போதும் உணராது.  பத்து ரூபாய்க்கு காப்பி குடித்து விட்டு பெட்டிக்கடையில் டிஜிட்டலில் பணம் செலுத்தி விட்டு செல்வது தனிமனிதன் என ஒரு நுகர்வோரின் லாபம் மட்டுமே. கடந்த ஆறு மாதங்களாக 2000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் இல்லை என்பது அவனது காவனத்துக்கே வராது. அதான் நாலு 500 ரூபா atm ல வருதே அப்புறம் என்ன? என்றும் வினவும் மேதையே இன்றைய டிஜிட்டலன்.

இப்படிப் பல்வேறு கண்ணிகளில் ஆதிக்கம் செலுத்தும் இந்த நெடிய வரிசையில் ஒரு நுகர்வோனுக்கு லாபமோ நட்டமோ எங்கும் ஒரே ஒரு மனித பொறுப்பும் கிடையாது டிஜிட்டல் செய்திகள் மட்டுமே வழிநடத்தும். கடலூரில் ஏர் செல் டீலர் இறுதி நாளில் காசு கட்டிய  ரீசார்ஜ் கூப்பன்கள் இரண்டு லட்சம் ரூபாய். அன்று மதியம் ஏர் செல் திவால். மொத்த காசும் நாமம். கடந்த இரு வருடங்களில் டிஜிட்டல் செய்திகளில் மட்டுமே இயங்கி சென்று எய்திய நிலை இது. அடிப்படை ஒன்றுதான் டிஜிட்டல் மாயையை அது மாயை என்பதையே நாம் மறந்து அதனுடன் புழங்கிகொண்டிருக்கிறோம் என்பதே இதன் மையம்.

பல்வேறு உள்ளோட்டங்கள் அடங்கிய இந்த மாயைக்கடலின் ஒரு அலையே இலக்கியத்திலும் வீசுகிறது. எல்லாமே எழுத்துதான் அது புத்தகத்தில் இருந்தால் என்ன டிஜிட்டலில் இருந்தால் என்ன என்று 2000 ஐ சேர்ந்த குழந்தை சொல்லலாம். அதற்க்கு முந்தியவர் சொல்கிரார் எனில் இந்த டிஜிட்டல் மாயையில் அவர் தன்னை இழந்துவிட்டார் என்றே பொருள். எல்லாமே எழுத்துதான். புத்தகத்தில் கிண்டியில் மொபைலில் எதில் படித்தாலும் அதே இலக்கிய அனுபவம்தான். நான் மறுக்க வில்லை (நான் கிண்டிலிலும் வாசிப்பவன்) ஆனால் எதை இழக்கிறோம் என்றால், புத்தகம் எனும் “மேலதிக” அனுபவத்தை. விஷ்ணுபுரம் புத்தகத்தைnநெஞ்சில் போட்டபடி நான் கனவு கண்ட நாட்கள் என் பொக்கிஷ தினங்கள் என்று இன்று உணர்கிறேன். கிண்டிலை நெஞ்சில் போட்டு கனவு காண இருக்கும் தடையை நீக்க அதற்க்கு புத்தகம் போலவே அட்டை (செம்மணி வளையல்) போட்டு வைத்திருக்கிறேன். இந்த மேலதிக ஒன்று அது ஒன்றும் அவ்வளவு முக்கியம் இல்லை என்று சொல்லும் ஒருவர் உயர் தளத்தில் இலக்கியம் என்றல்ல எந்த கலைக்குமே தேவையற்றவர். மேலதிகமான ஒன்றுதான் எக்கலைக்கும் ஆணி வேர். அதன் ஒரு பகுதியே புத்தகம்.

இந்த மேலதிகம்  எனும் அம்சம் பெரிதும் மனிதார்த்தம் எனும் நிலையுடன் தொடர்பு கொண்டது. ஆகவேதான் இந்த மேலதிக அம்சத்தை அது சார்ந்த உணர்வுகளை மழுங்கடிக்கும் மெய்நிகர் உலகில் கேள்விகளே இன்றி சென்று விழும் நிலையை நான் ஐயத்துடன் பார்க்கிறேன்.

இந்த உள்ளிருப்பு சூழலில் கொரானா வைவிட வேகமாக இந்த டிஜிட்டல் மாயை பரவுகிறது. அதன் பிடிக்குள் சிக்காதவரிகளையும் அதன் பிடிக்குள் கொண்டு வர அரசு முயலுகிறது. உதாரணமாக என் பெரியம்மா நேரில் சென்று பணம் கட்டி துவங்கிய ஒன்று, அது நின்று போக இணைய பரிவர்த்தனை வழியாக மட்டுமே பணத்தை திரும்ப பெற முடியும் எனும் நிலையை நிர்வாகம் அவர் தலையில் சுமத்தியது.

இப்படி கொரானா போல பரவும் டிஜிட்டல் மாயையே zoom மீட்டிங் எனும் பெயரில் இலக்கியத்தயும் ( குறைந்த பட்சம் நுண்ணறிவு செயல்படும் ஒரே களம்) இப்போது வந்து கெளவி இருக்கிறது. மக்கள் அடித்துப் புடைத்து இலக்கிய காளனை நிலை நிறுத்த zoom இல் குவிவது பார்க்க சந்தோஷமாகத்தான் இருக்கிறது. இதன் இணை செயல்பாடாக இலக்கியத்தில் மட்டுமே பெற இயன்ற மேலதிக ஒன்றை அது சார்ந்த போதத்தை இழக்கப்போகிறோம் என்பதும் உண்மை.

எனக்கு இலக்கியம் என்பது கதைகளை பிரித்து அடுக்கும் ஒரு இன்டலெக்சுவல் விவாதம் மட்டுமே அல்ல அது மேலதிகங்களால் ஆனது. தேவதேவனின் ஒட்டு மொத்த இருப்பு அதனுடன் இணைந்ததே அவரது ஒரு சொல். ஒரு மூளையற்ற கணிப்பொறி அசட்டு சட்டகத்துக்குள் காட்டும் தேவ தேவனின் துண்டு அதனுடன் பேச எனக்கு என்ன இருக்கிறது? உத்வேகம் கொண்டு பேசுகையில் யுவன் சந்திரசேகர் கை முத்திரைகளை கண்ட ஒருவனுக்கு அந்த மேலதிக யுவன் இல்லாத யுவனுடனான இலக்கிய அமர்வு எதற்கு ? ஜெயமோகனின் கண்கள், அவர் கட்டை விரலை மடித்து பிற விரல்களால் உள்ளங்கைக்குள் பொதிந்து பிடிக்கும் முத்திரை, உரையாடலை சட்டென இடைவெட்டி எழும் நகைச்சுவை இத்தனையும் கொண்டதுதான் ஜெயமோகனுடனான இலக்கிய சந்தப்பு. ஜெயமோகன் உத்வேகம் கொண்டு வினாக்களுடன் திரிந்த காலத்தில் இப்போ கொரானா இதோ இந்த செவ்வகத்தில் தெரியும் குரு  நித்யாவுடன் உரையாடிக்கொள் என்று புற சூழல் சொன்னால் அவர் ஒப்புக்கொள்வாரா.? டிஜிட்டல் சதுரம் வழியே அடைய முடியாதது அந்த மேலதிகம். அந்த மேலதிகம் அதுவே சாராம்சம் கொண்டது.

செயற்கை அறிவு மனித குலத்தை வழிநடத்துமா எனில் வழிநடத்தும். மூளை மழுங்கிய மனித குளத்தை நிச்சயம் செயற்கை அறிவே வழிநடத்தும். அப்படி வழிநடத்தும் செயல்திட்டத்தின்  ஒரு பகுதியாக மேலதிகம் என்பதில் உறையும் சாராம்சம் உள்ளிட்ட மனிதார்த்த பண்புகளை கொஞ்சம் கொஞ்சமாக அது அழிக்கும்.

அதற்க்கு எதிரான கூருணர்வு கொஞ்சமேனும் எஞ்சி இருக்க வேண்டிய இலக்கியக் களத்தில் ai ஊடுருவுவதை  ஐயத்துடன் தான் பார்க்கிறேன். நான் எனக்கான இலக்கிய சந்திப்பை எப்படி வகுத்துக் கொள்வது என்பதை கொரானா வரையறுப்பதை என்னால் இக் கணம் வரை ஏற்றுக்கொள்ள இயலவில்லை.  மாறும். எல்லாம் நலம் மீளும். நண்பர்களுடன் நேரில் இலக்கியம் பேசுவேன். நம்புகிறேன். இந்த நம்பிக்கையும் இன்றைய சூழலில் மேலதிகமான ஒன்றுதான்.

கடலூர் சீனு

அன்புள்ள சீனு,

நான் அப்படி சட்டென்று டிஜிட்டல் மாயை என்றெல்லாம் சொல்ல மாட்டேன். ஏனென்றால் இந்த டிஜிட்டல் உலகு அளித்திருக்கும் கொடைகளும் அளப்பரியவை. ஒரு மாபெரும் நூலகத்தையே செல்பேசி வடிவில் கையில் கொண்டுசெல்ல முடிகிறது. தேடியவை அக்கணமே சிக்குகுகின்றன. நினைத்த கணத்தில் கம்பராமாயணம் படிக்கமுடியும், எங்கும் என்பது ஒரு வரம்

அதைவிட தொடர்ச்சியாக வாசகர்களுடனும் நண்பர்களுடனும் நிகழும் இந்த உரையாடல். இவ்வாறு உள்ளங்கள் ஒற்றைச்சொல்வெளியாக ஆகமுடியும் என சென்ற காலங்களில் நினைத்ததே இல்லை

டிஜிட்டல் மாயை என எதைச் சொல்வேன் என்றால் நாம் இணையவெளியில் போடும் தகவல்களைத்தான். இவை நிரந்தரமானவை, அழிவதில்லை என நினைக்கிறோம். இந்த தளம் வெளிவரத்தொடங்கி பத்தாண்டுகளாகின்றன. இதில் இணைப்பு தரப்பட்டிருந்த கணிசமான வலைப்பூ எழுத்துக்கள் மறைந்துவிட்டன

ஜெ

முந்தைய கட்டுரைஅறமாகி வந்தவன்
அடுத்த கட்டுரைமாலா சின்ஹா- கடிதம்