அன்புள்ள ஜெ
“சில உணர்வு நிலைகள் ஊர்திகள் போல. அவற்றில் ஏறிய அவற்றுக்குரிய இடங்களுக்கு செல்ல முடியும்.” இந்த வரிகள் இப்போது எனக்கு மிகவும் தேவையாக இருந்தன. இதற்காக என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வரிகளை கொண்டு மேலே சிந்திக்கிறேன். குற்றமும் தண்டனையும் படித்து ஒரு வாரத்திற்கு மேலாகி விட்டது. அதிலிருந்து வரும் கேள்விகள் விடாமல் என்னை தொடர்ந்த வண்ணம் உள்ளன.ஒருபக்கம் மீள் வாசிப்பை நிகழ்த்த வேண்டும் என நினைக்கும் போதே அச்செயல் ஆற்ற இயலா ஓர் இனமறியா உள்ளத்தையும் உள்ளது. இன்னொரு பக்கம் அந்த கேள்விகள் தொடர்ச்சியாக நாவல் என்னை உந்தி தள்ளுகின்றன.
இது ஏன் என்று யோசிக்கையில் உங்கள் வரிகள் ஏணி அமைத்து கொடுத்தன. எந்த கேள்வியுமே அடிப்படையில் நம் சொந்த வாழ்வில் இருந்து வரும் போது தான் பெரும் தாக்கத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்துகிறது. வாழ்வின் அத்தனை செயல்களும் நேரடியாக நம் உணர்வு நிலைகளோடு தொடர்புள்ள வை.அதனாலேயே அந்த கேள்விகள் அத்தனை தாக்கம் செலுத்துகின்றன. ஒரு புனைவு நமக்கு அளிப்பது நிகர் வாழ்க்கை ஒன்றை என்பதனாலேயே அவற்றின் கேள்விகளும் ஆழமும் விரிவும் கொண்டவையாக ஆகின்றன. நாவல் ஒன்று உருவாக்கும் மைய கேள்வியை தாண்டி மேலும் மேலும் நிறைய கேள்விகளை அடைதல் என்பது நாவலுடனான வாசகனின் ஒன்றுதலின் அளவே தீர்மானிக்கிறது என நினைக்கிறேன்.
இந்த ஒன்றுதல் செவ்வியலாக்கங்களில் கூடுதலாக நிகழ்கிறது என்பது என் எண்ணம். இன்று என் உளத்தடைகளை உடைத்து கொள்ள தொடங்கி விட்டேன். அதிகாலையில் எத்தனை மணிக்கு எழுந்தேன் என்று தெரியவில்லை. குற்றமும் தண்டனையும் நாவலில் இருந்து உருவான கேள்விகளையும் அதற்கு என்னுள் உருவாகி வரும் பதில்களையும் எழுதினேன். அவற்றில் சிறு பகுதியே தாளில் வந்துள்ளது. என் பதில்களும் கேள்விகளும் ஆங்காங்கே தெளிவில்லாமலே உள்ளன.
இப்பொழுது இலக்கிய வாசகனின் பயிற்சி பதிவை படித்தேன். உங்களின் நூறு கதைகளின் போது தொடர்ச்சியாக வெளிவந்த வாசகர் கடிதங்கள் நிறைய கதைகளை புரிந்து கொள்ள மிகவும் உதவியது. அந்த கதைகளை இன்னும் முழுமையாக படிக்கவில்லை. படிக்க வேண்டும் என நினைத்து கொண்டுள்ளேன்.
தஸ்தாயெவ்ஸ்கின் குற்றமும் தண்டனையும் நாவல் குறித்து உங்கள் தளத்தில் வந்துள்ள வாசிப்புகளையும் மேலும் வாசித்தறிய வேண்டிய முக்கியமான தளங்களையும் புத்தகங்களையும் சுட்டிக் கொடுத்தால் எனக்கும் இனி மேல் வாசிப்பவர்களுக்கும் மிகவும் உதவியாயிருக்கும். என் அகத்தத்தளிப்பை தீர்த்து வைக்க உதவ வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
சக்திவேல்
***
அன்புள்ள சக்திவேல்
இந்த தளத்தில் தொடர்சியாக எழுதப்படுபவை எல்லாமே வாசகனுக்கான பயிற்சிகள்தான். இந்த தளமே ஒரு வாசகர்பயிற்சிக்கூடம்தான்
இந்த தளத்தில் மூன்று வகையான பயிற்சிகள் நிகழ்கின்றன. ஒன்று, நூல்கள் மீதான மதிப்புரைகள். அவை எப்படியெல்லாம் நூல்களை வாசிக்கமுடியும் என்பதற்கான வழிகாட்டல்கள். இரண்டு, கொள்கைகள் மற்றும் கருத்துக்களாக நான் முன்வைப்பவை. அவற்றில் சிலவற்றை வகுத்துரைக்கிறேன். மூன்று, வாசகர்கடிதங்கள். அவை விவாதங்களுக்கு களமொருக்குகின்றன
ஒரு கல்விக்கூடம் என்றால் இதை பாடநூல்கள், ஆசிரியர், சகமாணவர்கள் என கருதலாம்
ஜெ