பெண்கள் எழுதுதல்

உலகுக்குப் புறம்காட்டல்

மதிப்பிற்குரிய ஜெயமோகனுக்கு

இதோ இந்த ‘எம்’மைப் போலத்தான் நானும் இலக்கிய வாசலைத் திறந்து நுழைந்ததெல்லாம் உங்கள் புத்தகங்கள் மூலமாகத்தான். அப்படியே எழுதவும் துவங்கியவள்.

பணக்கார கணவரின் கீழ் வீம்புக்குச் சின்னச் சின்னதாய் எதையெதையோ செய்து சம்பாதித்து கொஞ்சம் எழுதி சில பல பாராட்டுக்களும் கொஞ்சம் ஏளனங்களும் பெற்று வாழும் ஒன்றுமற்றவள். (இதற்கு பரிதாபகரமான அர்த்தம் ஒன்றுமில்லை. பெரிதாக ஒன்றும் சாதிக்காதவள் என்ற பொருளில்)

இந்தப் புனைப் பெயர் விடயம் தான் தூண்டி உங்களுக்கு எழுத வைத்தது. ‘விமர்சனங்களும், ஏளனங்களும் எவ்வளவு உறுதியாக இருந்தாலும் நிலைகுலையச் செய்யும்’ என்ற வரிகள் பரபரப்பாக்கி விட்டது. இதுவரை புனைப்பெயர் பற்றிய எண்ணமில்லை. இப்போது குழப்பமாக உள்ளது. என்ன செய்ய?

பிரியதர்சினி

திண்டுக்கல்.

அன்புள்ள பிரியதர்சினி

எழுதுவதனால் உங்களுக்கு இதுவரை எந்த நெருக்கடியும் எழவில்லை என்றால் இனிமேலும் எழாது. ஆகவே நீங்கள் குழப்பம் அடையவேண்டியதில்லை. பல பெண்களுக்கு வீட்டில் சிக்கல்கள் உள்ளன. உறவினர்களிடையேயும் சிக்கல்கள். பலர் பெயர்களை வெளியிடவேண்டாம் என்று சொல்லித்தான் எனக்கு எழுதுகிறார்கள். பெயர்களை வெளியிடுவதிலுள்ள இன்னொரு சிக்கல், பெயர்களைக்கொண்டு முகநூலில், இன்ஸ்டகிராமில் தேடி சமயங்களில் ஆளை கண்டுபிடித்து மின்னஞ்சல்கள் அனுப்பி தொல்லைகொடுக்கும் கும்பல். தமிழ்ச்சூழலின் வறுமைகள் பல.

உங்கள் எழுத்தைப் பற்றிச் சொல்லும்போது சற்றே ஆர்வமற்ற தொனி தெரிகிறது. பொதுவாகவே மனிதர்கள் எவருக்கும் எச்செயலிலும் முழு ஆர்வம் இருக்காது. ஓரத்தில் கொஞ்சம் அவநம்பிக்கையும் ஆர்வமின்மையும் இருக்கும். ஆனால் அவற்றை சொல்லக்கூடாது. நமக்குநாமே கூட சொல்லிக்கொள்ளக் கூடாது. எவ்வகையிலும் வளர்க்கக்கூடாது. கூடுமானவரை வெல்ல, கடக்க முயலவேண்டும். இல்லையேல் அந்த ஆர்வமின்மை வளர்ந்து உங்களை ஆட்கொள்ளும். செயல்களை பொருளற்றதாகக் காட்டும்.

சென்ற சிலநாட்களாக எனக்கு வந்த மின்னஞ்சல்களை ஒட்டுமொத்தமாக பார்த்துக்கொண்டிருக்கிறேன். விட்டிப்போனவர்களுக்கெல்லாம் கடிதங்கள் அனுப்பிக்கொண்டிருக்கிறேன். கடிதங்களின் பொதுத்தன்மைகள், எண்ண ஓட்டங்களை புரிந்துகொள்ள இந்த ஒட்டுமொத்தப் பார்வை உதவுகிறது. எனக்கு இத்தனை பெண்கள் கடிதங்களெழுதுவதே எனக்கு இப்போதுதான் தெரியும். அவ்வப்போது கடிதங்களுக்கு பதில் எழுதுவேன். ஆனால் பெண்கள் பெரிதாக என் தளத்தை படிப்பதில்லை, விதிவிலக்கான பெண்களே படிக்கமுடியும், பெண்களுக்கு பொதுவாக ஆர்வமூட்டும் எவையும் இவற்றில் இல்லை என நினைத்திருந்தேன். அது உண்மையல்ல என்று தெரிந்தது. மூன்றிலொருபங்கு பெண்களின் கடிதங்கள்

அக்கடிதங்களிலிருந்து சிலவற்றை ஊகித்தேன். என் புனைவுகளுக்கே பெரும்பாலும் பெண்கள் எதிர்வினையாற்றுகிறார்கள். அடுத்தபடியாக தனிப்பட்ட வாழ்வுக்குறிப்புகள். அதன்பின் பயணக்குறிப்புகள். அரிதாக ஆன்மிகக்கட்டுரைகள். ஆனால் இலக்கியவிமர்சனக் கட்டுரைகள், அரசியல்கட்டுரைகள் ஆகியவற்றுக்கு பெண்களின் எதிர்வினை என அனேகமாக ஏதுமில்லை. அரசியல்கட்டுரைகளை அவர்கள் படிப்பதேயில்லையோ என்று தோன்றுகிறது. ஒருவகையில் அது இயல்பானது என்றும் படுகிறது- எனக்கும் அவை அவ்வளவு முக்கியமானவை அல்ல

ஆனால் பயணக்குறிப்புகள் பெரும்பாலான பெண்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இளம்பெண்கள் மட்டுமல்ல,  நடுவயதுப்பெண்களும் அவற்றை தொடர்ந்து படிக்கிறார்கள். பெண்கள் இங்கே தவிர்க்கமுடியாதபடி சிக்கிக்கொண்டிருக்கும் மிகச்சிறிய வாழ்விடத்திலிருந்து விடுபடுவதற்கான கனவு அவர்களுக்கு இருக்கிறது. அக்கனவை பயணக்கட்டுரைகள் மீட்டுகின்றன என நினைக்கிறேன். அதிலும் எங்கள் பயணங்களிலுள்ள திட்டமிடாத தன்மை, நாடோடித்தனம் பெண்களை கிளர்ச்சியடையச் செய்கிறது. பல கடிதங்கள் பயணங்களில் தாங்களும் மானசீகமாக உடன்வந்ததாக சொல்லி எழுதப்பட்டிருந்தன.

கட்டுரைகளை வாசிப்பதைவிட உரைகளை ஒலிவடிவாக கேட்பதில் பெண்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். ஒப்புநோக்க ஆண்களைவிட பெண்களே ஒலிவடிவை விரும்புகிறார்கள். இது ஏன் என தெரியவில்லை. அவர்களுக்குச் செவிசார் நுண்ணுணர்வு மிகுதியாக இருக்கலாம். பல பெண்கள் என் கதைகளை ஒலிவடிவில் கேட்டு எழுதியிருந்தனர்.

பெண்களின் வாழ்க்கைச் சிக்கல்கள், உளச்சோர்வுகள் பற்றி எழுதப்பட்ட கடிதங்கள் மிகுதி. பலவற்றுக்கு நான் நீண்ட பதில்கள் அளிப்பதில்லை, ஆனால் உரியபதில்களை அளிப்பேன். நீண்டபதில்கள் அனைவருக்கும் பொதுவானவை. அவை இணையத்தில் வெளியாகின்றன. அவற்றை எனக்கு எதுவும் எழுதாத பல பெண்கள் படிக்கிறார்கள் என்பதை பிறகெப்போதாவது அவர்கள் எனக்கு எழுதும்போது அறிந்துகொள்கிறேன்.

நான் கவனித்தவரை பெண்களின் சிக்கல்களாக தெரிபவை தீவிரத்தன்மைகுறைவு, முழுமையாக செயலில் தன்னை ஒப்படைத்துக்கொள்வதில்லை என்பது. ஆண்களின் சிக்கலாக தெரிவது, முதன்மையாக போதைப்பழக்கம். இரண்டாவதாக வெற்று அரசியல்- சினிமா அரட்டைகள். அவற்றை அறிவுச்செயல்பாடுகளாக எண்ணிக்கொள்ளும் அசட்டுத்தனம்.

உங்கள் இந்தக்குறிப்பிலேயே பெரிதாக எதையும் சாதிக்காமை குறித்து எழுதியிருக்கிறீர்கள். சாதிக்க என்ன தடை? ஒரு கோணத்தில் பார்த்தால் சாதிப்பதற்கான எல்லாமே நன்கு அமைந்திருக்கிறது அல்லவா? பொருளியல்சிக்கல்கள் இல்லை. சுதந்திரமும் உள்ளது. உள்ளத்தை அளிக்கவேண்டியதுதானே?

நீங்களே மகிழும்படி எதையாவது சாதித்துவிட்டால் உங்கள் உலகப்பார்வையே மாறிவிடும். அதன்பின் இன்றிருக்கும் அக்கறையற்ற, தன்னை சலித்துக்கொள்ளும் உளநிலையே அகன்றுவிடும். உங்களைச் சூழ்ந்திருக்கும் உலகமே இன்னொன்றாகத் தெரியத்தொடங்கும். இன்றுவரை சுவாரசியமற்றவை எனத்தோன்றிய பலவும் மகிழ்ச்சிநிறைந்தவையாக மாறிவிடும்.

அதற்கு நீங்கள் உங்கள் ஆர்வமும் திறமையும் எங்கே என கண்டடையவேண்டும். அது இலக்கியம், எழுத்து என்றால் நடுவே எதற்கு சில்லறை பொருளீட்டும் முயற்சிகள்? அவை கவனச்சிதைவுகள். முழுமையாக ஈடுபட்டு, வெறிகொண்டு எழுதுங்கள். எழுத்து என்பது தன் அகத்தை முழுதாகக் கொடுத்தாலொழிய வெல்ல இயலாத ஒன்று. பயிற்சிதேவை, கூடவே உணர்வுசார்ந்த ஒன்றுதலும் தேவை.

மொழி என்பது ஒரு மாய ஊடகம். நமக்கு தொடர்புறுத்தும் மொழி வெளியே இருந்து கிடைக்கிறது. நம் அகத்தே ஒரு மொழி ஓடிக்கொண்டிருக்கிறது. வெளிமொழி தர்க்கபூர்வமானது, பொதுவானது. அகமொழி தர்க்கமற்றது. நமக்கே உரியது. நாம் எழுதமுயலும்போது அந்த வெளிமொழியில் எழுத ஆரம்பிக்கிறோம். ஏனென்றால் அதில்தான் நாம் பேசிக்கொண்டிருக்கிறோம், கடிதங்களும் குறிப்புகளும் எழுதுகிறோம். ஆனால் அது பொதுமொழி. அதில் நாம் நமக்கே உரிய படைப்பை எழுதமுடியாது

அந்த பொதுமொழியில் எழுதியபின் வாசித்தால் நமக்கே எரிச்சலாக இருக்கிறது. அது எவருடையதோ போலிருக்கிறது. ஓர் அவசரத்துக்கு இன்னொருத்தரின் ஆடையை போட்டுக்கொண்டதுபோல ஓர் ஒவ்வாமை உருவாகிறது. வெளிமொழியில் சமகால பொதுச்சூழலில் புழங்கும் சொல்லாட்சிகள், தேய்வழக்குகள், தொனிகள் நிறைந்திருக்கும். பெண்கள் எழுதினால் அத்தனை பெண்களும் ஒரே நடையில் எழுதுவதுபோல தெரியும். பாலகுமாரனையும் ரமணிசந்திரனையும் கலந்த்துபோல் இருக்கும். அல்லது அம்பையை நகலெடுத்த்து போலிருக்கும்.

ஆனால் நம் அகமொழியில் எழுத நம்மால் முடியாது. அது அந்தரங்கமானது. அதை வெளியே எடுத்தால் உளறல்போல மழலை போல இருக்க்ககூடும். இரண்டுமொழிகளுமே நமக்கு அன்னியமாக உள்ளன. அப்படியென்றால் எந்த மொழியில் எழுதுவது? வெளிமொழியை புல்லாங்குழல் என்று கொள்வோம். அகமொழியை இசை என சொல்லலாம். அந்தப்புல்லாங்குழலில் உங்கள் இசையை வாசிக்கவேண்டும். வெளிமொழியை எழுதி எழுதி உங்கள் அகமொழியின் அருகே கொண்டுவரவேண்டும்.வெளிமொழி அகமொழியின் அதேவடிவை, அதே தொனியை கொள்ளவேண்டும். அதற்குத்தான் பயிற்சியும் உணர்வுரீதியான ஈடுபாடும் தேவை

அதற்கு தொடர்ந்த உழைப்பை அளித்தேயாகவேண்டும். ‘தோன்றும்போது எழுதுபவர்’ ஒருபோதும் எழுத்தாளர் ஆவதில்லை. உங்கள் மொழியைக் கண்டடைந்தபின் நீங்கள் அரிதாக எழுதலாம், அதுவேறு. அந்த தீவிரத்தை, முழுதளிப்பை உங்கள் கலைக்கு அளியுங்கள். உங்களைப்பற்றி உங்களுக்கே பெருமிதம் ஏற்படும். கலை, இலக்கியம் அளிக்கும் பெருமிதம்போல வாழ்க்கையை அர்த்தப்படுத்திக்கொள்வது வேறில்லை. கலையை நிகழ்த்தும்போது பெறும் நிறைவுக்கு நிகரான இன்பமும் வேறில்லை

பொதுவாக பெண்களிடம் நான் சொல்வது இவை. இப்போதெல்லாம் இளம் பெண்எழுத்தாளர்களை அடிக்கடிச் சந்திக்கிறேன்

அ. நேரடி அனுபவங்களை எழுதாதீர்கள். நேரடியாக அறிந்ததை, அனுபவித்ததை ’அப்படியே’ யதார்த்தமாக எழுதினால்தான் இலக்கியம் என்பது ஓர் அசட்டுப் பொய். அப்படி எழுதமுடியாது, எழுதினால் அது அனுபவக்குறிப்பாகவே இருக்கும். அனுபவத்தின் வெறும் புறவயத் தகவல்களே அப்படைப்பில் இருக்கும்.

ஆ. கதைக்கான களத்தை,கதைமாந்தரை உங்களிடமிருந்து தொலைவில் கண்டடையுங்கள். செயற்கையாக ஓர் ஊரை உருவாக்கிக் கொள்ளுங்கள். அது எங்குவேண்டுமென்றாலும் இருக்கலாம். அதற்குரிய அடிப்படைச்செய்திகளை ஆய்வுசெய்து சேகரித்துக்கொள்ளுங்கள். கதை நீங்கள் கற்பனைசெய்யும் நிலத்தில், காலத்தில், உணர்வுவெளியில் நிகழட்டும்.

இ.அந்த உலகை உருவாக்க முழுமையான செய்திகள் தேவையில்லை, கற்பனையை தூண்டுமளவுக்கு செய்திகள்போதும். அச்சூழலை காட்டுமளவுக்குச் செய்திகள் போதும். இலக்கியம் ஆவணம் அல்ல. அதில் செய்திகள் தாராளமாகவே பிழையாக இருக்கலாம். நீங்கள் திண்டுக்கல்லை எழுதவேண்டியதில்லை, கல்கத்தாவின் இடுங்கலான தெருவை எழுதலாம். இன்றைய காலகட்டத்தை எழுதவேண்டியதில்லை, திண்டுக்கல்லை திப்புசுல்தான் கைப்பற்றும்போது அங்கே வாழ்ந்த ஒருபெண்ணை நீங்கள் எழுதலாம்

ஈ. நீங்கள் உருவாக்கும் அந்த உலகில் உங்களை அறியாமலேயே உங்கள் அனுபவத்திலிருந்து என்னென்ன சென்று சேர்கிறதோ அதுதான் நீங்கள் அடைந்த அனுபவத்தின் சாரம் என உணருங்கள். அதைத்தான் எழுத்தாளன் எழுதவேண்டும். அந்த சாராம்சம் உணர்வாக, சிந்தனையாக, தரிசனமாக அதில் இருக்கும். நீங்கள் சந்தித்த மனிதர்களையே நீங்கள் அங்கே புதியவடிவில் கண்டுகொள்வீர்கள். அந்த மனிதர்களின் புறம் அங்கே இருக்காது, அகம் அங்கே தென்படும். அதுதான் இலக்கியம்

உ. வெவ்வேறு கதைக்கருக்களை எடுங்கள். பெண்கள் இன்று சிறைப்பட்டிருக்கிறார்கள். சிறியவாழ்வுக்குள். அவர்கள் எழுதவரும்போது அதை எழுதுகிறர்கள். அது சிறைப்பட்டமையின் புலம்பலாகவே உள்ளது.அல்லது மெல்லிய கற்பனாவாதம். கற்பனைவழியாக வெளியேறுங்கள். புதிய வாழ்க்கைக்கருக்களை கண்டடையுங்கள்.

ஒரு புதுவாசகர் சந்திப்பில் வந்த அனைவரும் தங்கள் சொந்தவாழ்க்கையிலிருந்து பெற்ற கதைகளுடன் வந்திருந்தனர். ஒரு பெண், ஸ்வேதா சண்முகம், மட்டும் கடைசிமுகலாயச் சக்கரவர்த்தியின் வாழ்க்கையில் ஒருநாளை கதையாக எழுதியிருந்தார். அந்த மீறல் அக்கதையை முக்கியமான ஆக்கமாக ஆக்கியது.ஆண்களை விட பெண்கள் விடுதலைக்கான ஏக்கம் கொண்டவர்கள். ஆகவே பெண்கள் முற்றிலும் புதிய கருக்களை எழுதமுடியும்

ஊ. கதைக்கான ஒரு ‘பிளாட்’ கிடைத்தால்போதும். அது வரலாற்றில் இருக்கலாம். செய்தியில் இருக்கலாம். அதற்கும் உங்களுக்கும் எந்த தொடர்பும் இருந்தாகவேண்டும் என்பதில்லை. அந்த கதைக்கட்டமைப்புக்குள் அடிப்படையானவையாக உங்களுக்குத் தோன்றும் கேள்விகளை எழுப்பிக்கொண்டு விடைநாடுங்கள். அங்கே நீங்கள் மறைமுகமாக உள்ளே வந்துவிடுவீர்கள். உங்கள் கோபம், துயரம், களிப்பு எல்லாமே நிகழ்ந்துவிடும். அப்படித்தான் கலை நிகழும்

சுருக்கமாகச் சொன்னால், பெண்களின் பிரச்சினைகளை எழுதுகிறேன் என்று மிகச்சின்ன வட்டத்திற்குள் நிகழும் அன்றாடப்பிரச்சினைகளையே திரும்பத்திரும்ப எழுதுவதை முற்றாகத் தவிர்த்துவிடவேண்டும். நீங்கள் எதை எழுதினாலும் உங்கள் சிந்தனையும் கற்பனையும் அதில் ஈடுபடுமென்றால் நீங்கள் உங்கள் அகத்தையே எழுதுவீர்கள். உங்கள் வாழ்க்கையின் சாராம்சமான உணர்வும் மெய்யும் அங்கே விளைந்துவிடும்

இன்னும் பெரிதாக கனவுகாணுங்கள். இன்னும் தீவிரமாக முயலுங்கள். முட்டையின் கூட்டை உடைக்க கருவடிவிலிருந்து முளைக்கும் குஞ்சுக்கு ஒரே வழிதான் உள்ளது- வளர்வது, சிறகுகொள்வது

ஜெ

பிகு- புனைபெயர் வைத்துக்கொள்வதற்கு ஒன்றும் தாமதமாகிவிடவில்லை. பிரியதர்சினி என்ற பெயரைவிட உங்கள் மின்னஞ்சலில் உள்ள சாய் சம்யுக்தா என்றபெயர் நன்றாக உள்ளது. ராணி சம்யுக்தா என்று வைத்துக்கொள்ளுங்கள்.

முந்தைய கட்டுரைகி.ராவுடன் ஒரு நாள்
அடுத்த கட்டுரைவெண்முரசு தொடங்குதல்