கி.ராவுடன் ஒரு நாள்

இனிய ஜெயம்

மற்றொரு புதுவைப் பயணம். இம்முறை மீண்டும்  நைனா கி. ரா அவர்களை சந்திக்க. கூடலூரில் இருந்து புதுவை 20 கிலோ மீட்டர். எல்லை கடக்க 10 கிலோ மீட்டர் போனால் போதும். கடலூர் ஜனத்தின் போதையடிமைகள் பாதி, இரவு ஏழு மணிக்கு மேல் எல்லை தாண்டி (தமிழக எல்லையை விட விலை குறைவு என்பதால்) போதையில் குளித்து பெரும்பாலும் சாலையில் விழுந்து கிடக்கும்.

கடலூர் புதுவை சாலையில் வாகனம் ஓட்டுவது என்பது, பைத்தியக்காரர் குடியில் வாழ்வதை போன்றது. எவன் எதற்க்காக எதை செய்கிறான் என்று எதுவும் விளங்காது. இரு சக்கர  வாகனத்தில்புதுவை சென்று ஒச்சமின்றி  மீள்வது அவரவர் மனைவியின்  பதி விரதா பக்தியின் வீரியத்தை சார்ந்தது. இவை போக மருத்துவம், துணி மணிகள்  பெட்ரோல் பொழுதுபோக்கு என பல விஷயங்கள் புதுவையில் பத்து சதம் வரை மலிவு என்பதால் புதுவை என்பது கடலூர்வாசிகளின் அன்றாட பயண கேந்திரங்களில் ஒன்று.  நான்கு நாட்களாக பேய் மழை, ஊரே நீருக்குள்அதற்க்கு முன்பு புயல், கொரானா வரி என்ற புதிய வரி வழியே, தமிழக போதையும் புதுவை போதையும் இப்போது ஒரே விலை, போன்ற நிலைகள் கூட, வட்டு இளக்கும் டிராபிக் இன்றி, புதுவை நோக்கிய சாலை காலியாக கிடந்தது.

புதுவை கடலூர் சாலை வரலாற்றுடன் பிணைந்தது. கெடில கரையை எல்லையாகக்  கொண்டு பிரிட்டன் அரசும், தென் பெண்ணை கரையை (இப்படி ஒரு நதி கர்நாடகாவில் உற்பத்தியாகி தமிழகம் வந்து கடலூரில் கடல் சேர்வது கடலூருக்கு வரும் புதிய நண்பர்கள் பலருக்கு அதிசய செய்தி) எல்லையாகக் கொண்டு ஃபிரென்ச் அரசும், காலனி எல்லை விரிவாக்க அடிதடியில் இருக்கும். இந்த இரு நதிகளுக்கு இடையேதான் புதுவையில் இருந்து வெளியேறிய பாரதியார் கடலூரில் கைது செய்யப்பட்டார்.

சங்க காலம்துவங்கி சர்வதேச  கடற்கரை வணிக பட்டினமான அப்போது தனது   ஆட்சிக்கு உட்பட்ட பொதுகே நிலத்தில் டச்சு வணிகர்களின் ஆதிக்கத்தை குறைக்க. பீஜப்பூர் சுல்தான் பிரெஞ்சு வணிகத்தை ஊக்குவிக்கிறார். அப்படி உள்ளே வந்த பிரென்ச் உருவாக்கியதே நவீன புதுவை. அரவிந்தர் பாரதி  முதல் பல ஆளுமைகளின் கேரக்டர் ஆர்க்கில்  முக்கிய பங்கு புதுவைக்கு உண்டு.  எத்தனையோ கலைஞர்கள் வந்து சேர்ந்த மண். அந்த வரிசையில் கரிசல் காட்டு கலைஞன் கி ரா இப்போது புதுவையில்.

புதுவை முற்றிலும் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட வணிக நகரம், இடைச்செவல் காடு திருத்தி கழனி கண்ட கிராமம். அங்கிருந்து இங்கே இடம்பெயர்ந்த கி ரா உள்ளே என்னவாக இருக்கிறார்? நூற்றாண்டு வாழ்வு. அங்கே என் கிராமத்தில் என்னோடு தொடர்பு கொண்ட எதுவுமே இப்போது இல்லை என்கிறார் கி ரா. பாலை நிலத்தில்பாறையை பிளந்து வேர் விட்டு பச்சையம் காட்டி நிற்கும் செடி போல, தூரத்து  வனத்திலிருந்த்து பறவை கொண்டு வந்து போட்ட விதை போல புதுவையில் கிரா.

லாஸ்பேட்டை அரசினர் குடியிருப்பில் கிரா வின் இல்லம். புதுவை மொத்தமும் கந்தல் கோலமாக கிடந்தது. புதுவை திட்டமிட்டு உருவாக்கிய நகரம் எனினும், கடற்கரை ஒட்டிய வெள்ளையர் நகரம் பிரென்ச் நகரம் ஒன்றில் உலவும் உணர்வை தந்தாலும், இப்போதைய புதுவை அவ்வாறு இல்லை. அழகுணர்ச்சி வழித்து எறியப்பட்ட நிர்வாகம். அழகிய வண்ண கட்டம் முன்பு குப்பை வண்டி நிற்கும், புதுவை கடற்கரை காந்தி சிலையை சுற்றி நாயக்கர் கால அழகிய தூண்களில், குறுக்கும் நெடுக்குமாக கயிருக்கள் ஒயர்கள் சுற்றி செல்லும், கடற்கரை விளிம்பில் நிற்கும் லே போண்டி ரெஸ்டாரண்ட் அதன் அமைவு இடம், வடிவவமைப்பு காரணமாக மிக அழகானது, இப்போது அதை சுற்றிலும் கேவலமான வண்ணக் கோலத்தில் விளம்பர பதாகைகள். கடற்கரை சாலை நெடுக அழகிய கட்டிட வாயில்களை இடித்துக் கொட்டி, என புதுவை எந்த பிற இந்தியக் குப்பை நகரங்கள் போலவே மாறிக்கொண்டிருக்கிறது. இப்போது ஆங்காங்கே மழையோடை அவற்றை கடந்து, அரசன் வசிக்கும் அரசினர் குடியிருப்பு வந்தடைந்தோம்.

கிரா எது அவர் அளித்த நேரமோ, சரியாக (கூடாது குறையாது) அதில் மட்டுமே வாசகரை சந்திக்க விரும்புவார். ராக்கெட் கிளம்பும் துல்லிய நேரத்தில் நாங்கள் கி ரா இல்லம் நுழைந்தோம். புதுவை இளவேனில் வித விதமான இனைய டோங்கில் வழியே அன்றைய தினம் எது தடையற்ற தொடர்பை அளிக்கிறது என்று சோதித்துக் கொண்டிருந்தார்.

அறைக்குள் படுத்திருந்த கிரா அப்போதுதான் எழுந்தார். என்னை நோக்கி வர சொல்லி தலையசைத்தார். விஷ்ணுபுரம் இலக்கிய கூடுகை சார்பாக நான் வந்திருப்பதாக அறிமுகம் செய்து கொண்டு, இந்தக் கூடுகையில் அவரது பங்கேற்புக்கு நன்றி தெரிவித்துவிட்டு ஹாலுக்கு திரும்பினேன்.  பொதுவாக எழுத்தாளர்களை இல்லத்தில் சென்று சந்தித்தால் எந்த வாசகரும் கவனிக்க வேண்டிய ஒன்று உண்டு, அந்த எழுத்தாளர் அவரது வீட்டில் எங்கே அமர்ந்து வாசகர்களுடன் உரையாடுவார் என்பதே அது. அந்த எழுத்தாளர் வந்து அமரும் இடம் என்பது மானசீகமாக அவருக்குள் அது ஒரு துவக்கம். நான் தயார் எனும் அவரது உடல்மொழிக்கு பிறகே உரையாடலை துவங்க வேண்டும்.

மிக சரியாக ஆறு மணிக்கு கிரா அவரது அவரது இருக்கையில் வந்து அமர்ந்து, இணைய சடங்குகளுக்கு தகவமைத்து கொண்டார். சரியா இருக்கா என்றார். சற்றே தொண்டையை செருமிக்கொண்டார். புண்டரீக பீடத்தில் அமர்ந்த வாணி. அழைத்த கை பேசியை நண்பர் வசம் தந்து, “அணைச்சி வெச்சிடுங்கோ” என்றார்.  உரையாடலில் வினாக்கள் சார்ந்து உதவி புரிய தாமரை கண்ணன் அவரது காலடியில் அமர்ந்தார்.

நூறை தொடப்போகும் அகவையில், எப்போதும்போல, தனித்துவமான சம்பவங்கள் வழியே சுவாரஸ்யமாக வாசகர்களுடன் உரையாடினார். கூறியது கூறல் எப்போதும் அவரிடம் இருந்ததில்லை என்பதை அவருடனான தொடர் சந்திப்புகள் வழியே அறிந்திருக்கிறேன். அவ்வாறே இந்த உரையாடலும் அமைந்தது.

உரையாடல் துவங்கி சிறிது நேரத்துக்கு காணொளி சந்திப்பு கோரும் ஆசாரங்களுக்குள் இருந்தவர் சட்டென திரும்பி கேள்விகளுக்கு பதிலை  தாமரை வசம் சொல்லத் துவங்கி விட்டார். நான் ஜாடையில் கணிப்பொறியை காட்டும்போது, அதில் தெரியும் தனது முகத்தால் அசுவாரஸ்யம் அடைந்து உரையாடல் அறுபட என்ன சொல்லிக்கிட்டு இருந்தேன் என நின்றார். அதற்க்கு மேல் நைனாவை நாம் ‘கையாள’ முடியாது என்பதால் விட்டுவிட்டேன். உரையாடலின் ஒரு சூழலில் எந்திரன் 2 ரஜினிகாந்த் அக்ஷய் குமார் போஸ்டர் போல இருவரும் முகம் வைத்திருந்தனர். நைனாவின் உற்ச்சாகம் அது போதும் வேறு என்ன வேண்டும்  என விட்டுவிட்டோம்.

ஒன்றரை மணிநேரம் குடி நீரையும் கூட மறுத்து உற்ச்சாகமாக உரையாடினார். நிகழ்வு முடிந்தது ஹெட் போனை கழற்றிய பிறகே, வாய்விட்டு ஹம்மா என ஆசுவாச குரல் எழுப்பியபடி, சாய்வு நாற்காலியில் சாய்ந்து ஆசுவாசமானார். அடுத்த நொடி ( நிகழ்ச்சி சார்ந்து) கிரா மைந்தனின் கைபேசிக்கு அழைப்பு. வேலாயுதம் என்பவர் அழைத்திருந்தார். பாராட்டி தள்ளினார் நைனாவை. கிராவோ “அதே விடுங்கோ, நான் அனுப்பினதே படிசீங்களா” என்றார். அந்தப் பக்கம் என்ன பதிலோ அறியேன், ஆனால் என்னளவில் இந்த அழைப்பில் இருந்த வன்முறை துணுக்குற வைத்தது. இந்த அழைப்பு எவ்வாறு வந்திருக்கும் என அறிவேன். கிரா கைபேசிக்கு அழைத்து, அது அணைக்கப்பட்டிருப்பது தெரிந்து அதன் பின்னர் அவர் மகனின் கைபேசிக்கு வந்த அழைப்பு இது.

எந்த வாசகரோ நெருங்கிய நண்பரோ ஒருபோதும் செய்யக்கூடாத தவறு இது.  கிரா நீர் கூட அருந்தாமல் பேசிக்கொண்டிருக்கிறார் என்பதை நேரலையில் பார்த்தபின்பும், கிரா ரிலாக்ஸ் ஆக கூட நேரம் அளிக்காமல் இப்படி தொடர்பு கொள்வது வன்முறை. கிரா சில வருடம் முன்பு எவரையுமே சந்திக்கும் மனநிலை அற்றவராக இருந்தார். இப்போது சில மாதங்களாக (எனக்கு நானே சீட்டாடுறது போல எழுதுறேன்) தொடர்ந்து எழுதுகிறார், எந்த வாசகர் சந்திக்க வந்தாலும் அவர் தவிர்ப்பதிலை, எந்த செல் அழைப்பையும் தவிர்ப்பதிலை. அது அவரது பெருந்தன்மை. சரஸ்வதியின் காருண்யம். அதற்காக அதை நமது நுண்ணுணர்வு இன்மையால் சுரண்டுவது வன்முறை அராஜகம்.

இனி நாளொன்றுக்கு காலை மாலை என ஒரு மணி நேரத்துக்கு உள்ளாக மட்டுமே அவரை வாசகர்கள் சந்திக்க வேண்டும், அவரை கைபேசியில் அழைக்கும் நேரத்தையும் அழைப்பவர் எவரும் நிர்ணயித்து கொள்ள வேண்டும், அவருக்கான நேரத்தை அவருக்கு உருவாக்கி அளிப்பது நாம் அனைவரும் கூடி நிகழ்த்த வேண்டியது . இது நைனாவின் வயது சார்ந்த ஒன்றல்ல. அவரது படைப்பாளுமை சார்ந்த ஒன்று.யாரறிவார்  நம்மிடம் பேசுவதை விடவும் அந்த நேரத்தில் நைனா இன்னொரு தனித்துவமான கதை எழுதிவிடக் கூடும். நமது நுண்ணறிவு இன்மை வழியே நாம் இனி வரப்போகும் அவரது கதை எதோ ஒன்றின் குறுக்கே சென்று விழுகிறோம் என்பதே நிஜம்.

உரையாடல் முடியும் வரை நைனாவுக்கான மருத்துவர் வெளியே காத்திருந்தார். அவரும் மொபைலில் இந்த இலக்கிய உரையாடலை பார்த்திருந்தார். நைனா அழைத்ததும் அவர் உள்ளே வந்தார். அவறது தினசரி பணிகளை துவங்கினார். நைனா என்பக்கம் திரும்பி கூர்மையாக நோக்கி  ” ஒங்களுக்கு சிலம்பு செல்வராசு தெரியுமா” என்றார். ” தெரியும் ஐயா, அவரது சங்க இலக்கிய சமுதாய ஆய்வு நூல் ரெண்டு வாசிச்சிருக்கேன்” என்று சொல்லி தலைப்பை சொன்னேன். மலர்ந்து புன்னகைத்து அவர் மக்கள்தான் இவங்க என்று சொல்லி டாக்டரை கைகாட்டினார் கிரா.

கிரா கையை காட்ட அவரது காலடியில் அமர்ந்திருந்த தாமரை விட்ட இடத்திலிருந்து அவரது கதை தருணத்தை தொடர,அதில் வந்த நகைச்சுவைக்கு இருவரும் எதோ அந்தரங்க ரகசியம் ஒன்றை பரிமாறி சிரிக்கும் இளம் பெண்கள் போல சிரித்தார்கள். நான் கி ரா முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவரது வழக்கமான மஷ்ரூம் கட் விடுத்து, சம்மர் கட் அடித்திருந்தார். தாடி மீசை மழித்தார் எனில் அசோகமித்திரன் போல இருப்பார், (அல்லது அசோகமித்ரன் தாடி மீசை வளர்த்தால் கிரா போல இருப்பார்). அவ்வப்போது தனக்குள் ஆழ்ந்து உறையும் கண்கள், மீண்டு உயரும் புருவம். நான் இந்த சந்திப்பில் அவருடன் எதுவுமே பேச வில்லை. நான் வந்தது அவரை ‘வேடிக்கை பார்க்க’.

வேடிக்கை பார்க்க கலைஞர்கள் வசம் என்ன உள்ளது? அறியேன். ஆனால் வேடிக்கை பார்க்கையில் அவர்களில் துலங்கி எழும் அம்சம், அது அவர்களின் கலையினும்   மேலானது என்றே  எண்ணுகிறேன், சில தருணங்களில்  தேவ தேவன் இடது விழியின்  பாப்பா ஆச்சர்யத்தில் விரிந்து உறைந்து நிற்பதை (இதே போல இளையராஜாவுக்கும் ), யுவன் சந்திர சேகர் எங்கோ நோக்கி நிச்சலனத்தில் புகை ஊதுகையில் அவரது வலது கை கட்டை விறல் சுழல்வதை, இதை நான் வேறு எங்கே காண்பேன். மொத்த போக்குவரத்தில் அமர்ந்து ஜெயமோகன் வெண்முரசு எழுதுவார். புற உலகின் கட்டுப்பாடு, அக உலகின் பாய்ச்சல் இரண்டும் வேறு வேறு என்று கையாண்டு எழுதிக்கொண்டு இருப்பார். மிக மிக அபூர்வமாக, சில சமயம்முகம் சிவந்து மூச்சு சீற, மெல்லிய மேலுதட்டை கீழுதட்டால் அழுத்தியபடி எழுதுவார். ஏதேனும் உணர்ச்சிகரமான காட்சியாக இருக்கும். அங்கே கதாபாத்திரங்கள் பேசுவது, அழுந்திய உதடுகளில் வழியே படித்தறிந்துவிட முடியும் போல இருக்கும்.  எனக்கு இவையெல்லாம் சேர்ந்ததுதான் இலக்கியம்.

பல்லாயிரம் ஆண்டுகளாக பொழியும் நயாகரா வரலாற்றில் முதன் முறையாக நிலவியல் ஆய்வு ஒன்றின் பொருட்டு நிறுத்தபட்டது. கனடா அரசும் அமெரிக்க அரசும் அருவி பொழியாத திடலை காண கூடப்போகும் மக்கள் திரளை சமாளிக்க ஆயுத்தத்தில் இறங்கின. பெருத்த ஏமாற்றம் இந்த வரலாற்று தருணத்தை காண உள்ளூர் மக்கள் கூட ஆர்வம் காட்ட வில்லை. எனக்கு எழுத்தாளர்கள் என்பவர்கள் நயாகரா போலத்தான். பல்லாயிரம் ஆண்டுகளாக எரிக் ஏரியில் இருந்து பொங்கும் அந்தர் வாகினியே நயாகரா .

எரிக் ஏரியை முகத்துவாரமாக கொண்டு பொங்கிப் பெருகும் நயாகரா. அந்த முகத்துவாரம் போல கலைஞர்கள். பொங்கிப் பீறிடும் சமுக கூட்டு நனவிலியின் அந்தர்வாகினியே கலை. அது ராஜாவின் இசையோ, கமலின் நடிப்போ, தேவதேவன் கவிதையோ, ஜெயமோகன் புனைவோ எல்லாமே அதுதான். அங்கே அக் கணம் கலைஞனில் திகழ்வது எதுவோ, அது நயாக்ராவை வேடிக்கை பார்ப்பதற்கு எந்த வகையிலும் குறைந்தது அல்ல.நண்பர்களுடன் எதோ பேசி சிரித்துக் கொண்டிருந்தார். விடை பெற சரியான நேரமும் இதுதான். கிளம்பும் முன்பாக நான் கிரா வை எடுத்த ஒரே ஒரு புகைப்படத்தை அவர் வசம் காட்டினேன். “நைனா ச்சும்மா ஜேம்ஸ் பாண்ட் கணக்கா இருக்கீங்க பாருங்க” என்றேன். மனம் விட்டு சிரித்தார். நிறைவான தருணம். இந்த வருட விஷ்ணுபுரம் இலக்கிய விருது எழுத்தாளர் சுரேஷ் குமார இந்திரஜித் அவர்களுக்கு வழங்கப்படவிருப்பத்தை சொன்னேன். மெல்ல ‘சுரேஷ் குமார இந்திரஜித்’ என்று திரும்ப சொல்லி சரி  என்று புன்னகைத்தார். நண்பர்கள் மூவரும் ஒருசேர காலில் விழுந்தோம்.

கிரா தலைக்கு மேலே கைகூப்பி ரொம்ப சந்தோஷம். சந்தோஷமா போயிட்டு வாங்கோ என்றார்

கடலூர் சீனு

முந்தைய கட்டுரைவெட்டிப்பூசல்,கமல்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைபெண்கள் எழுதுதல்