கி.ரா.உரையாடல்

கி.ராஜநாராயணன் அவர்களை சென்ற 6-12-2020 அன்று விஷ்ணுபுரம் நண்பர்கள் சந்தித்து உரையாடிய காணொளி காட்சி. அவருடைய உடல்நிலையை கருத்தில்கொண்டு ஒருமணிநேரமாக குறைத்துக்கொண்டோம். ஆனால் அவர் உற்சாகமாக மேலும் பேச விரும்பினார். நாங்கள் நிறுத்திக்கொண்டோம்

முதுமைக்கான எந்த நடுக்கமும் நினைவுப்பிழையும் இல்லாமல் பேசுகிறார் கி.ரா. தன் இலக்கியநுழைவைப் பற்றி. தன் தாய்மொழியான தெலுங்குடனுள்ள உறவைப் பற்றி. இசையைப்பற்றி பேசியிருக்கலாம். வாய்மொழி மரபு பற்றிப் பேசியிருக்கலாம்.இன்னும் பலவற்றை விவாதித்திருக்கலாம். ஆனால் எல்லைகள் உண்டே.

இந்த சிறு உரையாடலிலும் கி.ரா அவருடைய இரு அணுக்கநண்பர்கள் கு.அழகிரிசாமி, தீப நடராஜன் பற்றிச் சொல்கிறார். ஜீவா, நா.வானமாமலை, சுந்தர ராமசாமி என அவருடைய உலகின் ஆளுமைகள் வந்துசெல்கிறார்கள்

கி.ராஜநாராயணனை பார்ப்பதே நிறைவளிப்பதாக இருந்தது. அவருடன் அருகமர்ந்து பேசிய நாட்களை நினைவிலெழச்செய்தது. கி.ராஜநாராயணனின் பேச்சிலிருந்து தெரியவந்த ஒன்று அவருடைய துணிவு. எல்லா விதமான எதிர்ப்புகளையும் சர்ச்சைகளையும் இயல்பாக எடுத்துக்கொள்கிறார். அரசியல்சரிகளுக்கோ பிற கெடுபிடிகளுக்கோ அஞ்சுவதில்லை

சுந்தர ராமசாமி அதைப்பற்றி ஒருமுறை சொன்னார்.”அவரோட துணிச்சல் அபாரமானது. அதுக்கு ரெண்டு காரணம். ஒண்ணு கிராமத்து நிலக்கிழார். அது ஒரு அடிப்படை தைரியத்தை தருது. நிலக்கிழார் அஞ்சணும்னா மான அவமானத்துக்கு. சின்னவயசிலேயே அரசியல்போராட்டங்களிலே ஜெயிலுக்குப் போனதும் அதுவும் தெளிஞ்சிருச்சு”

கி.ரா ஒரு சுற்றுக்கடிதம் ஒன்றை ஒரு காலத்தில் உருவகித்தார். ஒருவர் ஒரு கடிதத்தை ஒருவருக்கு அனுப்புவார். அவர் அதற்கு பதிலெழுதி அந்த இரு கடிதங்களையும் இன்னொருவருக்கு அனுப்புவார். அவ்வாறு முக்கியமானவர்கள் எழுதிய அந்த கடிதத்தொகை ஒரு நூலாக கடைசியில் எழுதியவரை வந்துசேரும்

ஆனால் வந்துசேரவில்லை. சில ஆண்டுகளுக்குப் பின் சுந்தர ராமசாமியை பார்த்தபோது அந்த கடிதத்தொகுதியை தூக்கி கையில் கொடுத்தார். அவருக்கு அந்த ஏற்பாட்டில் விருப்பமில்லை. அதில் உண்மைபேசமுடியாது என நினைத்தார்

இப்போது கி.ரா சொல்லி கையெழுத்தில் எழுதிய நாவல் கடிதமாக எனக்கு வந்திருக்கிறது. அதை தனிப்பட்ட முறையில் சிலருக்கு அனுப்பவேண்டும் என்று கிரா சொல்லியிருக்கிறார். அதைப்பார்க்கையில் அவர் வந்து வீட்டில் அமர்ந்திருப்பதுபோல் ஒரு நிறைவு

முந்தைய கட்டுரைதொள்ளாயிரம் மின்னஞ்சல்கள்
அடுத்த கட்டுரைவெண்முரசில் இசை