அணுக்கம்- ஒரு கடிதம்

Nancy Rourke

 

அன்புள்ள ஆசிரியருக்கு,

உங்கள் பதிவைப் பார்த்து ஒருவித தலைகால் புரியாத நிலைமையில் இருக்கிறேன். அன்று இரவு முழுவதும் ஒரு படத்திற்கு தேவையான reference களை எடுத்து வைத்து விட்டு மிக பிந்தியே தூங்கச் சென்றேன். மறந்து போய் வழக்கத்திற்கும் மாறாக mobile data வை onஇல் வைத்திருந்தேன். அடுத்த நாள் காலை ஈரோடு சந்திப்பு நண்பர் கார்த்தி வாட்சப்பில் வாழ்த்துக் குறும்செய்தி அனுப்பி உங்கள் தளத்தின் சுட்டியை அளித்திருந்தார். ஏதோ நடந்துவிட்டிருக்கிறது என்ற ஊகத்துடனே போய் படித்தேன். இதை நான் எதிர்பார்க்கவில்லையென்பதால் ஒரு வித அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் கலந்த உணர்வு.

மகாபாரதத்தின் ஒப்பற்ற கதாபாத்திரங்களையும் காந்தி போன்ற மகத்தான ஆளுமைகளையும் ஆயிரக்கணக்கான வாசகர்களை ஈர்த்து உய்விக்கும் புனைவெழுத்துக்களையும் எழுதிய கையால் எழுதப்படுவதை விட மகத்தான பாக்கியம் இல்லை. அந்த வாய்ப்பை பெற்றுத் தந்ததாலே என் அப்பாவிடம் சமீபத்தில் உருவான கோபம் குறைந்து பேசாமல் இருப்பதைத் தவிர்த்து பேசலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன். அன்று முழுவதும் புன்னகைத்துக் கொண்டிருந்தேன்.

சென்ற இரு நாட்களாக ஒரு இருபதோ முப்பதோ தடவை இப்பதிவை வாசித்திருப்பேன். என் தங்கைக்கும் அனுப்பினேன். நான் ஒரு நாவலே எழுதி முடித்தது போல் கொண்டாடினார்கள். நீங்கள் இணைத்திருந்த சண்முகவேலின் ஓவியத்தில் உங்கள் கையில் குழந்தையாகவே நான் மாறிவிட்டது போலத் தோன்றியது. அதை நினைத்துக் கொண்டிருந்ததாலோ தெரியவில்லை முன்தினம் நள்ளிரவில் கணினியில் வரைந்து கொண்டிருக்கும் போது johnsons baby சோப்பிலும் பௌடரிலும் வரும் மணம் என்னிலிரிந்து வந்தது போல் உணர்ந்தேன்.

நான் பிறந்தவுடன் நீங்கள் அப்பா பெயரில் அனுப்பிய சிறுகதைக்குக் கிடைத்த தொகையை எனக்காகவே கொடுத்ததாக என்னிடம் சொல்லப்பட்ட போது நான் நான்காம் வகுப்போ ஐந்தாம் வகுப்போ படித்துக் கொண்டிருந்தேன். அப்போதே நீங்கள் எனக்கு “ஜெயமோகன் மாமன்” தான். பள்ளி நாட்களிலே வீட்டில் புத்தக அலமாரியில் இருந்த உங்கள் ‘திசைகளின் நடுவே’, ‘ரப்பர்’ போன்றவை வாசித்திருந்தேன். ஆனால் அப்பாவின் நண்பர்களான எந்த மாமாக்களை விடவும் அல்லது என் அப்பாவையும் விட மேலாக நீங்கள் எனக்கு முக்கியமானவராக மாறுவீர்கள் என்று எனக்கு அப்போது கொஞ்சமும் தெரியாது.

நீங்கள் கூறியது போல் உங்கள் பெயரில் மட்டுமல்ல உங்கள் ஆளுமையிலும் பாதியாகவே நான் இருக்கிறேன் என்பதே நான் உணர்ந்தது. என்னில் அப்பாதியை வளர்த்தால் இன்னொரு ‘ஜெயமோக’னாகவே இருக்கும். வெறுமனே உங்கள் எழுத்தில் வரும் உணர்வுகளைச் சொல்லவில்லை. நீங்கள் அன்றாடத்தில் எப்படி இருக்கிறீர்களோ எதையெல்லாம் கடந்து வந்தீர்களோ அதில் அப்படியே பாதி. பல உங்கள் எழுத்தில் இருந்து நேரடியாக நான் பெற்றுக் கொண்டது. பல உங்கள் எழுத்திலிருந்து நான் இயல்பிலேயே எப்படியோ அதை உறுதிபடுத்திக் கொண்டது.

இதில் பல நுண்ணிய விஷயங்களும் அடக்கம். ஒரே போல் இருக்கலாம் அதற்காக அதே நாளில் நீங்கள் சிந்தித்ததையும் உணர்ந்ததையும் கூடவா நானும் பார்க்கவும் உணரவும் முடியும்? சமீபத்திய உதாரணம் நான் 29 ஏப்ரல் 2020 இரவு ஒன்பது மணியளவில் என் அறையில் என்னைச் சுற்றி எப்போதும் இருக்கும் ஒரு பல்லியை ஏற்கனவே அறிமுகப்படுத்தியிருந்தாலும் முதன்முதலாக வீடியோ எடுத்து என் தங்கைக்கு அனுப்பினேன்(screenshot களை இணைத்துள்ளேன்). 30 ஏப்ரல் 2020 அன்று காலை உங்கள் தளத்தில் பல்லியைப் பற்றிய பதிவைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன்.

அது போல் நீங்கள் உங்கள் லக்கேஜ் பெட்டியை பஸ்ஸில் தவறவிட்டு திருவனந்தபுரம் சென்று மீட்டதற்கு மூன்று நாட்கள் முன்பு தான் நான் என் கைபேசியைத் தொலைத்திருந்தேன். நீங்கள் ஏடிஎம்’மில் பணம் எடுக்கச் சென்று மாட்டி அசடு வழிந்தது போல் பல அனுபவங்கள் எனக்கு உண்டு. நீங்கள் ‘Alcoholic anonymous’ பற்றிய உரையாடலில் ‘நான் குடிக்காத குடிகாரன்’ அதனால் குடிப்பதில்லை என்று உங்கள் நண்பர்களிடம் சொன்னதாகச் சொன்ன வரியை அதே வரியை அக்கட்டுரையை வாசிப்பதற்கு இரண்டோ மூன்றோ வருடங்களுக்கு முன்பே உணர்ந்து அதையே கோட்பாடாகக் கொண்டேன். சில முறை வைன் அருந்திவிட்டு வாந்தியெல்லாம் எடுத்திருக்கிறேன். அத்துடன் நிறுத்திவிட்டேன். பீர் கூட சாப்பிட்ட அனுபவம் இல்லை.

எனக்கு அப்போதே நன்றாக தெரிந்திருந்தது. நான் குடிக்க ஆரம்பித்தால் என்னிடம் எனக்கிருக்கும் குறைந்தபட்ச கட்டுப்பாடும் இல்லாமலாகிவிடுமென்று. அதை உங்கள் கட்டுரையை படித்தவுடன் ஆச்சரியத்துடன் உறுதிபடுத்திக் கொண்டேன். பெண்கள் விஷயத்திலும் அதுவே. வழி தவறுவதற்கான எல்லா வாய்ப்பும் இருந்தாலும் எனக்கும் ஒரு பெண் போதுமென்பதையே சொல்லிக் கொள்கிறேன். இனியும் அதிலிருந்து வழுவமாட்டேனென்றே நினைக்கிறேன். எந்த பெண்ணை நினைத்தாலும் நீங்களே நினைவில் வந்து தொலைக்கிறீர்கள்:)

அரசியல் கோட்பாட்டில் நான் கல்லூரியில் சேர்ந்த காலங்களில் ஏபிவிபி, ஆர் எஸ் எஸ் மற்றும் அப்பாவின் உந்தலால் விஜயபாரதம் போன்ற இதழ்களுடன் தொடர்பு உருவாகத் தொடங்கியது. ‘சுதேசி செய்தி’ இதழுக்கு கேலிச்சித்திரம் வரையும் வாய்ப்பும் வந்தது. இது போன்ற இயக்கங்களில் இருந்து கொண்டு இவர்களின் இயக்கத்தவர்களே செய்யும் பிழைகளை நாம் ஏதாவது கட்டத்தில் உணர்ந்து அதைக் கேலிச்சித்திரமாக வரைய வேண்டும் என்று தோன்றினால் இது போன்ற இயக்கங்களில் இருக்கும் வரை வரைய முடியாது என்பதை உணர்ந்து எந்த இயக்கங்களுக்குள்ளும் எப்போதும் நான் இருக்கப் போவதில்லை சுதந்திரமான கலைஞனாகவே இருப்பது என்று முடிவெடுத்தேன். அதையே நீங்களும் கூறினீர்கள். உறுதிபடுத்திக் கொண்டேன்.

இதைப் படித்தவுடன் நீங்கள் புன்னகைக்கலாம். எனக்கு இன்னும் மோட்டார் வாகனங்கள் எதுவும் ஓட்டத் தெரியாது. ப்ளஸ் டூ முடித்தவுடன் நண்பனிடமிருந்து பைக் கற்றுக் கொண்டேன். அத்துடன் பைக்குடன் எந்த தொடர்பும் இல்லை. இப்போது பயிற்சி இல்லாமல் ஓட்ட முடியாது. இங்கே சென்னையிலும் ஊருக்கு வரும் போதும் ஒரு வண்டியின் தேவையை உணர்ந்தே இருக்கிறேன். ஆனாலும் இன்று வரை பெரிய ஆர்வமெல்லாம் இல்லை. ‘கனவில்’ இருந்துகொண்டே வண்டி ஓட்டுவது இயலாத காரியம் என்றே நினைக்கிறேன். எங்கேயாவது மோதவேண்டி வரும். இன்னொன்று நீங்களும் வண்டி ஓட்டுவதில்லை என்பதும் காரணம்.

ஆனால் சைக்கிளின் மேல் பெரிய ஈடுபாடு உண்டு. சைக்கிளைப் பார்க்கும் போது சிறு வயதில் என்ன மனநிலை ஏற்பட்டதோ அதே குதூகலம் தான் இப்போதும். விட்டால் இமயமலை வரை சைக்கிளிலேயே சென்று வருவேன். அது eco-friendly என்பதும் ஒரு காரணம் இன்னொன்று நம் உடலின் எல்லா பாகங்களும் சைக்கிள் ஓட்டும் போது செயல்படுவதாலும் நம் கவனம் முழுவதும் குவிந்திருப்பதாலும் எங்கேயும் மோதாமல் ஓட்ட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. சந்தர்ப்பம் கிடைக்கும் போது அப்போது கிடைப்பதில் சிறந்த சைக்கிள் ஒன்றை வாங்குவேன்.

உங்கள் எழுத்துக்கள் எப்படியெல்லாம் என்னை ஒரு வாசகனை பாதித்தன என்று ஒரு ஆய்வுக் கட்டுரையே எழுதும் அளவிற்கு விசயங்கள் உள்ளன. எதேச்சையாக உங்கள் தளத்தை 2011-ஆம் ஆண்டு வாக்கில் படிக்க ஆரம்பித்தேன். பிறகு தொடர்ந்து படித்தேன். 2015-ஆம் ஆண்டு வாக்கில் மேற்படிப்பிற்கான நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று படிக்க ஆரம்பித்த போது கிட்டதட்ட ஒரு வருட காலம் நுழைவுத் தேர்வுக்கான தீவிர பயிற்சியின் அயர்ச்சியாலும் நாங்கள் பெருங்குளத்தூரில் தங்கியிருந்த பெரிய வீட்டில் என் ஓவியக் கல்லூரி நண்பர்கள் பலர் படிப்பு முடித்து விட்டு வெவ்வேறு ஊர்களுக்குச் செல்ல அவ்விடங்களை நிரப்ப ஊரில் சொகுசாக என்ஜினியரிங் படித்து விட்டும் வேலை தேடவும் வந்த ‘சாதாரணமானவர்’களுடன் எனக்கு அப்போதிருந்த தீவிரத்தாலும் என் கலைப் பயிற்சிகளுக்கு அவர்கள் தடையாக தோன்றியதாலும் ஒன்ற முடியாமல் போனது.

நான் தனியாக என் பள்ளி நண்பன் இருந்த வீட்டிற்கு மாறிவிட்டேன். கல்லூரிக்கெல்லாம் சென்று கொண்டிருந்தாலும் அப்போதைய தனிமை என்னை மிகவும் வாட்டி விட்டது. என் அறைக்கு வெளியே வீட்டு உரிமையாளரின் சொந்தக்கார பையன்கள் ஒரு கும்பல் கூடி அரட்டை அடிப்பது வழக்கம். கேரம்போர்ட் விளையாடுவதும் சினிமாக் கதை பேசுவதுமாக. என்னால் அவர்களுடன் சில நிமிடங்களுக்கு மேல் எப்போதும் பேச முடிந்ததில்லை. என் மேல் வீட்டு உரிமையாளர் மற்றும் அவரது தாய்க்கும் என் மீது இருந்த மரியாதையாலும் நான் திறமையானவன் ஓவியன் என்றெல்லாம் எனக்கிருந்த பெயராலும் அங்கே சமாளிக்க முடிந்தது. இந்த ‘ஒன்ற முடியாமை’ தான் பெரும் பிரச்சனையாக இருந்தது.

கிட்டத்தட்ட மனநிலை பிறழ்வின் ஆரம்பத்தை எட்டியிருந்தேன். நான் அப்படியெல்லாம் இருந்ததே இல்லை. என் இயல்பான கொண்டாட்டம் குதூகலம் சிரிப்பெல்லாம் எங்கே என்று தேட வேண்டியிருந்தது. அப்போது தான் புத்தகக் கண்காட்சிக்கு சென்ற போது உங்கள் ‘பொன்நிறப்பாதை’ வாங்கினேன். கூடவே ‘மன இறுக்கத்தை போக்குவது எப்படி’ போன்ற இன்றுவரை வாசிக்காத புத்தகங்கள். ‘பொன்நிறப்பாதை’ என்னை மீட்டது என்றே சொல்லலாம். நான் ‘தேர்ந்தெடுக்கப்பட்டவனாக’ உணர்ந்த பிறகு என் பாதி பிரச்சினை தீர்ந்து விட்டது. எனக்கு இட்ட பணியை செயல்படுத்தும் பயணத்தை அப்போது மனதளவில் ஆரம்பித்திருந்தேன். அதற்குள் கல்லூரி இறுதி வகுப்பில் ஒரு மாணவனுடன் வார்த்தைகள் பிறழ அவன் என்னை அடிக்க நானும் அவன் மூக்கில் இரத்தம் வழிய குத்திவிட்டு ஓட வேண்டியிருந்தது.

நான் காந்தியைப் பற்றி நீங்கள் எழுதியதை தவிர பெரிதாக ஒன்றும் வாசித்தறியாதவன். எனக்கு அவர் இந்துக்களுக்கு எதிராக செயல்பட்டவர் என்ற பிம்பம் என் தாத்தாவிடமிருந்து வந்து சேர்நதது. ஆனால் மற்ற மதத்தவரும் இயக்கத்தவர்களும் கூட அவரைப் பற்றி தவறாகவே பேசுவதைக் கண்டிருக்கிறேன். நீங்கள் காந்தியைப் பற்றி எழுதிய கட்டுரைகளை மிகுந்த ஆர்வமுடன் வாசித்தேன். அவர் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடினாலும் அவரை ஆங்கில அதிகாரிகள் ‘டியர் காந்தி’ என்று குறிப்பிட்டு கடிதம் எழுதும் அளவிற்கு அவர்களுடன் நட்புடன் இருந்தார் என்பதும் அவர் பிரிட்டனுக்குச் சென்றபோது அவரால் வேலையிழந்த தொழிலாளர்கள் அவரைப் புரிந்து கொண்டு வரவேற்றதும் களிமண் பற்று போட்டுக் கொண்டு ஆங்கிலேயர்களைச் சந்திக்கச் சென்ற அவரது திமிரும் அவரால் ஈர்க்கப்பட்டு பெரும் செயல் வீரர்களான ஆளுமைகள் அரசியல் பொருளாதாரம் கலை என்று பல துறைகளில் நிறைந்திருப்பதும் எல்லாம் என்னைப் பெரிதாக ஈர்த்தது.

காந்தியைப் பற்றிய உங்கள் கட்டுரைகளை வாசித்தபிறகுதான் பொறுமையை நாட ஆரம்பித்தேன். உறவுகளையெல்லாம் மேலும் கனிவுடன் அணுக ஆரம்பித்தேன். விட்டுக் கொடுத்துப் போவதின் மகத்துவத்தை கற்றுக் கொண்டேன். நீங்கள் காந்தியின் வழியில் உங்களை எதிரியாகக் கருதும் அ மார்க்ஸ் அவர்களுக்கு புத்தகத்தை சமர்பித்ததை தான் என் வாழ்க்கையிலும் நான் எடுத்துக் காட்டாகக் கொள்ள விரும்புகிறேன். நீ பழையது போல உன் அப்பாவைப் போல இல்லை சென்னை சென்ற பிறகு நிறைய மாறி விட்டாய் என்று என் அம்மாவே சொல்லும் அளவிற்கு மாறியது உறவுகளையும் மேம்படுத்தியது. சென்னை அனுபவங்கள் ஒரு காரணமென்றால் உங்கள் எழுத்து அதைவிட முக்கிய காரணம்.

நான் கல்லூரியில் சேர்ந்த போது என்னை விட நன்றாக வரைபவர்கள் பலர் இருந்தார்கள். அவர்களிடத்தைப் பிடிக்கவும் அவர்களைத் தாண்டவும் நான் மிகக் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. கிட்டத்தட்ட முதற்கனலின் சிகண்டிப் போல வெறியுடனிருந்தேன். எந்தளவிற்கென்றால் நான் சென்னையில் நான் வழக்கமாப் புழங்கும் இடங்கள் தவிர எங்கேயும் அதிகமாகப் போனதில்லை. எங்களுக்கு கடைசி மூன்று வருடங்களும் கல்லூரியின் விரிவான கல்விச் சுற்றுலா உண்டு. அதனால் மட்டும் பேலூர் முதல் ஹரித்வார் வரை இந்தியாவின் முக்கியமான பல நினைவுச்சின்னங்களையும் இடங்களையும் பார்க்க முடிந்தது. ஆனால் சென்னையில் மகாபலிபுரம் கூட பார்த்தது கிடையாது. அறையிலேயே அடைந்து கிடப்பேன். ஒன்பது பத்து மணி நேரமெல்லாம் உணவில்லாமல் இடைவெளியில்லாமல் வரைந்திருக்கிறேன். எங்கள் கல்லூரியில் 150 வருட பழைமையான பல அரிய கலை நூல்கள் அடங்கிய நூலகம் உள்ளது. அதைகூட முழுவதுமாக பயன்படுத்திக் கொள்ளும் மனநிலையில் அப்போது இல்லை. இப்போது நினைத்தால் அதெல்லாம் பெரிய அசட்டுத்தனமாகத் தெரிகிறது.

ஒரு அக்னிவேசரின் வழிகாட்டுதல் கிடைத்திருந்தால் நான் சமநிலையைப் பேணியிருப்பேன். அதன் மூலமாக மேலும் நிறைய தெரிந்திருக்கலாம். உங்களை அப்போது வாசிக்க ஆரம்பிக்கவும் இல்லை. ஊரில் இருக்கும் வரை கராத்தே பயின்று கொண்டிருந்தேன். கற்றுத் தந்த விஜயன் மாஸ்டர் நான் மிகவும் மதிக்கும் ஆசான் களில் ஒருவர். ஆனால் சென்னை வந்த பிறகு அவரது வழிகாட்டுதல் இல்லாமலேயே தவறான பயிற்சிகளில் ஈடுபட்டதும் இடைவெளியில்லாமல் சரியான உபகரணங்கள் இல்லாமல் தரையில் படுத்துக் கொண்டே ஓவியப் பயிற்சியில் ஈடுபட்டது எல்லாம் சேர்ந்து இன்று வரைத் தொடரும் தோள்பட்டை வலியால் அவதிப்பட்டேன்.

வலியால் வரைய முடியாததால் தான் வாசிப்பின் பக்கம் கொஞ்சம் கவனம் திரும்பியது. எதை வாசித்தேன் என்றால் ‘த ஹிந்து’, ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’, ‘தமிழ் ஹிந்து’ ‘தின மணி’ இதில் ஏதாவது ஒன்றை வரி விடாமல் வாசித்துவிடுவேன். பள்ளி நாட்களில் வீட்டில் தொலைக்காட்சி இல்லாமல் இருந்ததால் நாளிதழ்கள் வார இதழ்கள் மாத இதழ்கள் என்று வாசித்துப் பழகிய பழக்கம் தான் இங்கேயும் தொடர்ந்தது. கொஞ்சம் சமாளிக்கும் அளவிற்கு ஆங்கில ஞானம் கிட்டியது. கூடவே தாய் மொழி மலையாளத்தை பழக்கப்படுத்திக் கொள்ள அவ்வப்போது மாத்ருபூமியும் மனோரமாவும். சில நாட்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பத்திரிகைகளை வாசித்து விடுவேன்.

அப்போது ஸ்மார்ட் போன் இல்லையென்பதால் இப்போது bookmark செய்வதைப் போல அதில் வரும் செய்திகளை கட்டுரைகளை கலை இலக்கியம் அரசியல் புவிப்பாதுகாப்பு ஆங்கில இலக்கணம் என்று எல்லா தலைப்புகளிலும் பிரித்து தனித்தனியாக கத்தரித்து சேகரித்து வைத்துக் கொள்வேன். எனக்கு உங்கள் தளம் மேலும் அணுக்கமாவதற்கு என் பரந்துபட்ட இந்த ஆர்வம் தான் காரணமென்று நினைக்கிறேன். பல துறைகளைப் பற்றிய தெளிவான கட்டுரைகள் உங்கள் தளத்தில் தான் வாசித்தேன். அப்போது தான் ஏதோ பத்திரிகையில் சென்னை புத்தகக் கண்காட்சி பற்றிய செய்தி வந்து சென்று உங்கள் பெயர் இருந்ததால் வாழ்க்கை பற்றிய கேள்விகளுக்கான தொகுப்பு என்ற அர்த்தத்தில் பின் அட்டையில் எழுதியிருந்ததால் ‘பொன்நிறப் பாதை’ தொகுப்பு வாங்கி படித்தேன். இறுதியாண்டு முடித்ததும் ஊருக்கு வந்த பிறகு தோள்பட்டை வலிக்கு பிஸியோதெரபி சிகிச்சை பல முறை பெறவேண்டியிருந்தது. பிறகு கண்ணில் ‘vasculitis’ பிரச்சனை வேறு. அதற்கு திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். வரைவதை நிறுத்தி விட்டேன்.

என்னை நான் இப்போது பணியாற்றிக் கொண்டிருக்கும் நிறுவனத்தில் பணிக்கு அழைக்கும் வரையிலான அவ்விரண்டு மூன்று மாதகாலம் உங்கள் தளமே கதியென்று கிடந்தேன். தங்கையின் மடிகணினியில் தொகுத்து வைத்த எனக்கு பிடித்தமான முக்கியமான உங்கள் கட்டுரைகள் மட்டும் சுமார் ஐநூறு இருக்கும். தோண்டத் தோண்ட நிதி கிடைக்கும் சுரங்கம் போலிருந்தது உங்கள் தளம். இலக்கியம் கலை சம்பந்தமான அடிப்படை வினாக்களையும் கேள்விகளையும் அங்கே தான் படித்தேன். பணிக்கு சேர்ந்து அடுத்த 2-3 வருடங்கள் தீவிரமாக வரைவதை நிறுத்திவிட்டேன். அவ்வப்போது வரைந்து முகநூலில் மட்டும் போட்டுக் கொண்டிருந்தேன்.

உங்கள் தளத்தை நாள் தவறாமல் படித்தேன். மெல்ல ‘இரவு’, ‘ஏழாம் உலகம்’, ‘அறம்’, ‘வாழ்விலே ஒரு முறை’, ‘இவர்கள் இருந்தார்கள்’, ‘புறப்பாடு’, ‘சிறு கதைகள்’ என்று ஆரம்பித்து இன்று ‘வெண்முரசு’ வரை வந்து நிற்கிறேன். மற்ற எழுத்தாளர்களை அவ்வளவாகப் படித்த தில்லை என்றாலும் உங்கள் தளத்தின் மூலமாக தெரிந்து கொண்ட எழுத்தாளர்களில் ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்’, சு வேணுகோபாலின் ‘வலசை’, எஸ் ராமகிருஷ்ணனின் ‘எனது இந்தியா’, சமீபத்தில் தாஸ்தவெஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’ சுசீலா அவர்களின் மொழிபெயர்ப்பில். மலையாளத்தில் உங்கள் ‘நூறு சிம்ஹாசனங்கள்’, பஷீரின் ‘பிரேமலேகலங்ஙள்’, கசாக்கின்றெ இதிகாசம், எம் டி யின் ‘முத்தச்சிமாருடெ ராத்திரி’ சிறுகதை அனுபவத் தொகுப்பு போன்றவை. இப்போது வெண்முரசு தவிர ‘விஷ்ணுபுரமும்’, நாஞ்சில் நாடனின் ‘கான்சாகிப்’ தொகுப்பும், மலையாளத்தில் மாதவிக்குட்டியின் ‘நீர்மாதுளம் பூத்தகாலமும்’ வாசிக்கிறேன். நீங்கள் பதிவிட்ட ‘காவிய சுகேயம்’ தளத்தில் தினமும் சப்ததாராவலியின் உதவியுடன் ஒரு மலையாளக் கவிதையாவது வாசித்தும் கேட்டும் விடுகிறேன்.

தமிழில் உங்களுடன் தொடர்பில் இருப்பதால் இயல்பாக என்னால் சில நல்ல கட்டுரைகளாவது எழுத முடியும் என்ற நம்பிக்கை உண்டு. ஆனால் மலையாளத்தில் ஒரு ஐந்து சிறு கதைகளும் முடிந்தால் கசாக்கின்றெ இதிகாசம் போல நிலைத்து நிற்கும் ஒரு நாவலும் எழுதவேண்டும் என்பது என் வாழ்நாள் ஆசைகளில் ஒன்று. நான் காட்சிக் கலைகளில் குவிமயம் கொண்டிருப்பதால் அதற்கு மேல் என்னால் முடியாதென்று நினைக்கிறேன்.

எனக்கு கல்லூரியில் படிக்கும் போது கணினி செயலிகளில் பயிற்சியெல்லாம் பெரிதாக இல்லை. ஆனாலும் கற்பனைத் திறனுக்காக மட்டும் தான் என்னை நான் இப்போது வேலை செய்யும் நிறுவனத்தில்(Cognizant) வடிவமைப்பாளராக ‘campus interview’இல் தேர்ந்தெடுத்தார்கள். இங்கே பொருளாதாரத்தில் பிரச்சினை இல்லை என்றாலும் நான் விரும்பிய வேலை இதுவல்ல. ‘எல்லையில்லா’ கற்பனைகளுக்கெல்லாம் இங்கே இடமில்லை. ஆனாலும் எனக்கு இங்கே கிடைத்த வழிகாட்டிகளும் அன்பும் நான் இங்கே விரும்பும் வரை எந்த இடரும் இன்றி தொடரலாம் என்ற நிலைமையாலும் அடுத்த அடி எடுத்து வைப்பதற்கு முன் தயார்படுத்த வேண்டியிருப்பதாலும் தொடர்கிறேன்.

தனியாக என் எல்லா கற்பனைகளுக்கும் வடிவம் கொடுத்துப் பார்க்கும் பொருளாதார சுதந்திரத்துடன் இயங்கும் கலைஞனாக இருக்கவே ஆசை. அதற்கான வழிகளை ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். காட்சிக் கலையில் நான் ஒரு ‘ஜெயமோகனாக’ மாற வேண்டும். கடந்தகால கலைப் போக்குகள் நிகழ்காலக் கலைப் போக்குகள் என்று நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்துக் கொண்டிருக்கிறேன். உத்வேகமும் செயல்வீரனுமான ஆசிரியரை தொடர்ந்து வாசிப்பதால் அந்த தீ எனக்குள்ளும் எரிந்து கொண்டிருக்கிறது. இப்போது தொடர்ந்து படைப்புகள் படைக்கத் துவங்கியிருக்கிறேன். இப்போது கொஞ்சம் நாளாக ஏற்கனவே எடுத்த புகைப்படம் அல்லது படங்களின் மேல் கணினியில் வரையும் படைப்புகளை செய்து கொண்டிருக்கிறேன். அனேகமாக இக் கொரோனா காலம் முடிந்தவுடன் என் முதல் கண்காட்சி நடக்கும். இன்னும் வாசிக்கவும் பயணம் செய்யவும் கற்கவும் செயல்படுத்தவும் நிறைய உள்ளது.

என் சமீபத்திய சில படைப்புகளில் உங்கள் எழுத்தின் தாக்கம் என்ன, அந்த படைப்புகளில் உங்களை வாசிக்கும் வாசகனான என் மனவோட்டங்கள் எப்படிப் பதிவாகியுள்ளது, ஒரு படைப்பாளனாக என் மனம் எப்படியெல்லாம் செயல்படுகிறது, அதில் நான் வளர்த்துக் கொள்ளவும் திருத்திக் கொள்ளவும் வேண்டியவை எவையெவை என்பதைப் பற்றியெல்லாம் உங்களுடன் உரையாடி வழிகாட்டுதல்கள் பெறவேண்டும் என்பது என் விருப்பம். அடுத்த கடிதத்தில் அதைப்பற்றி விரிவாகக் கூறுகிறேன்.

உங்கள் ஆசியும் வழிகாட்டுதலும் வேண்டும். எனக்கு உங்களால் மட்டுமே வழிகாட்ட முடியும் என்பதே நான் உணர்ந்து கொண்டது. ஏனென்றால் நான் உங்களின் வார்ப்பாகவே என்னை உருவகித்துக் கொண்டவன்.

பணிவன்புடன்,
ஜெயராம்

அன்புள்ள ஜெயராம்

முதன்மையாக ஒன்றுண்டு. இலக்கியமோ கலையோ கடிதங்கள் வழியாக ஓர் எல்லைக்குமேல் பேசிக்கொள்ள முடியாது. ஏனென்றால் எழுத்தே புறவயமானதுதான். எங்கோ அது பொதுவான ஒரு பேச்சாக ஆகிவிடுகிறது. மொழியின் கணக்கு வந்துவிடுகிறது. சரியான உரையாடல் நேர்ப்பேச்சிலேயே இயலும்

நாம் நேரில் சந்திப்போம். எங்கள் பயணங்களில் உடன் வரலாம். அல்லது சிலநாட்கள் நான் ஈரட்டியிலும் மலைப்பகுதிகளிலும் தங்கும் எண்ணம் கொண்டிருக்கிறேன். அப்போது உடனிருக்கலாம்.

ஜெ

முந்தைய கட்டுரைஇமைக்கணம் ஒரு கேள்வி
அடுத்த கட்டுரைஒரு தொடக்கம், அதன் பரவல்