புனைவு வாசிப்பு தவிர்க்கமுடியாததா?

வணக்கம் ஐயா

நான் ஒரு ஆரம்ப நிலை வாசகன். பள்ளிக்காலம் முதல் நாளீதழ் மட்டுமே வாசித்து வந்தவன். இப்போது புத்தகம், முகநூல் என வாசிப்பு தொடர்கிறது. அதுவும் தொடர் வாசிப்பாளனும் கிடையாது. அரசு சித்த மருத்துவராக பணி காரணமாக நேரம் கிடைக்கும் போது மட்டுமே வாசிப்பு!!! உங்களது இணையத்தினை நேரமிருக்கும் வாசித்தும் இருக்கிறேன். பல பதில்கள் மனதிற்கு நெருக்கமாக இருக்கும் என்பதால், இக்கேள்வியை கேட்கிறேன்.

பொதுவாக வாசிப்பு என்பது புனைவில் ஆரம்பித்து அபுனைவில் தொடர்வதாக புரிந்து கொள்ளப்படுகிறது. ஆனால் என்னுடைய நிலை என்பது நேர் எதிராகவே உள்ளது. நான் வாங்குவது அபுனைவு சார்ந்த நூல்களே!!!! சரித்திர நாவல்கள் மட்டும் சற்று பிடிக்கும்!!!! பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் மட்டுமே ஆர்வத்தோடு படிக்க முடிந்தது!!! அதனை தொடர்ந்து சில வரலாற்று நாவல்களை படித்த ஆரம்பித்த போது…. எப்போதும் முடியும்? என்ற நிலைக்கு சென்று விட்டேன் !!! கதை, கவிதை என எந்த புத்தகத்தையும் வாங்கியதில்லை!!!

எனது வாசிப்பு பட்டியல் என்பது முழுவதும் அபுனைவு சார்ந்த நூல்களாகவே அமைகிறது. இது சரியா? புனைவில் பெறக் கூடிய தகவல்களை, அபுனைவின் வழியாகவே பெற முடியும் என்று மனம் நம்புகிறது. சமூக வைத்திருக்கும் பிம்பத்திற்கு ஏதிராக எனது மனம் எண்ணுவதால், எனக்கு குழப்பம் வந்து விடுகிறது. விளக்கம் அளித்தால் நன்று.

மரு.பெ.இரமேஷ்குமார்

வேதாரண்யம்.

***

அன்புள்ள இரமேஷ்குமார்,

ஒருவரால் புனைவுநூல்களை வாசிக்கமுடியவில்லை, அவருடைய உள்ளம் அதில் ஓடவில்லை என்றால் அது அவருடைய குறைபாடு அல்ல. அது அவருடைய அறிவியக்கத்தில் எந்தச் சிக்கலையும் உருவாக்குவதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான மூளைநரம்பமைப்பு, அதற்கேற்ற உளஅமைப்பு உள்ளது. தர்க்கபூர்வமான அறிதல்முறை ஓங்கிய உள்ளம் கொண்டவர்களால் புனைவுகளை வாசிக்கமுடியாது. தர்க்கபூர்வ அறிதல்முறை குறைந்தவர்களால் புனைவற்ற நூல்களை வாசிப்பது இயலாது

அதற்குமுன் நீங்கள் முதலில் சரியான புனைவுநூல்களை வாசித்தீர்களா என உறுதிசெய்துகொள்ளவேண்டும். ஏனென்றால் பொன்னியின்செல்வன் போன்ற எளிய பொழுதுபோக்கு நூல்களை வாசிக்கமுடியவில்லை என்று சலிப்புடன் சொல்லும் பலருக்கு தீவிரமான புனைவுநூல்கள் பிடித்திருப்பதை கண்டிருக்கிறேன். உங்களுக்கு வரலாற்றில் ஆர்வமிருக்கிறது. அவ்வரலாற்றை அதேயளவுக்கு தீவிரமாக பேசும் புனைவுநூல்களை வாசித்துப்பாருங்கள்.

புனைவிலக்கியத்தில் வெவ்வேறு படிநிலைகள் உள்ளன. அனைத்தும் ஒரே போன்றவை அல்ல. பொன்னியின் செல்வன் அடிப்படை வாசிப்புக்கானது. சாண்டில்யனின் நாவல்கள் இன்னும்கொஞ்சம் விரிந்த களம்கொண்ட சிக்கலான கதைக்கட்டமைப்பு கொண்ட ஆக்கங்கள். இன்னும் தீவிரமாக வரலாற்றைப் பேசும் காவல்கோட்டம், மானுடம்வெல்லும் போன்ற நாவல்களை வாசித்துப் பாருங்கள். வரலாற்று உருவாக்கத்தின் தத்துவச் சிக்கல்களைப்பேசும் விஷ்ணுபுரம் அடுத்தபடி. இவை எவையுமே கவரவில்லை என்றால்தான் உங்களுக்கு புனைவு ஏற்புடையதல்ல என்று பொருள்

அத்துடன் புனைவை சரியானபடி வாசிக்கவேண்டுமென்றால் அதற்குரிய சிறு பின்புல வாசிப்பும்தேவை. உதாரணமாக காவல்கோட்டம் வாசிக்கவேண்டுமென்றால் அது எந்த வரலாற்றுப்புலத்தில் எழுதப்பட்டுள்ளது, அதன் உள்ளடக்கத்தின் தனித்தன்மை என்ன என்பதைப்பற்றி கொஞ்சம் தெரிந்துகொண்டால் உங்களுக்கு ஓர் ஆர்வமும் திறப்பும் ஏற்படக்கூடும். ஆனந்தரங்கம்பிள்ளை டைரிக்குறிப்புகளைப் பற்றிய ஓர் அறிமுகம் இருந்தால் பிரபஞ்சனின் மானுடம் வெல்லும் ஆர்வமூட்டக்கூடும். இந்தியத்தொன்மங்களும் தத்துவங்களும் செயல்படும் முறைபற்றிய அறிமுகநூல் ஒன்றை வாசித்தால் விஷ்ணுபுரம் கவரக்கூடும்

புனைவுக்குள் நுழையமுடியவில்லை என்றால் உங்களுக்கு ஒரு பகுதி இழப்பு ஏற்படுகிறது. வரலாற்றின் நுண்ணிய தளங்களை வாழ்ந்து பார்த்தே அறியமுடியும். நல்ல வரலாற்றுநூல்கள் புனைவினூடாக கற்பனைவாழ்வு ஒன்றை அளிக்கின்றன. அதனூடாக உங்களுக்கென ஒரு வகை அறிதல் உருவாகிறது. புனைவை வாசிக்காவிட்டால் அந்த அந்தரங்க அறிதல், உங்களால் மட்டுமே உருவாக்கிக்கொள்ளப்பட்ட அறிதல், இல்லாமலாகிறது. அதை ஈடுகட்ட நீங்கள் வரலாற்றை இன்னும் தீவிரமாகவும் நுட்பமாகவும் பலகோணங்களிலும் படிக்கவேண்டும். அது உங்களை அறிஞனாக ஆக்கும். அறிஞன் புனைவெழுத்தாளனை விட குறைந்தவனல்ல. அவனும் அதே இடத்தையே வேறுவழியில் சென்றடைகிறான்

இது எல்லாவகையான வாசிப்புகளுக்கும் பொருந்தும். புனைவெழுத்து அறிதல்முறையில் ஒரு வழி மட்டுமே. அது கற்பனையை துணைகொள்கிறது. புனைவல்லாத எழுத்து தர்க்கத்தை துணைகொள்கிறது. இரண்டும் சமம். ஆனால் இரண்டிலும் மூன்றாவது அறிதல்முறை ஒன்று இருந்தாகவேண்டும், உள்ளுணர்வு. [intuition]

கற்பனையில் உள்ளுணர்வு ஊடாடவேண்டும். தர்க்கத்திலும் அது வேண்டும். அதுவே அறிதலைக் கடந்து உணர்தலை நிகழ்த்துகிறது. அதை எவ்வகையில் வேண்டுமென்றாலும் வளர்த்துக்கொள்ளலாம். அது ஒரு தற்கண்டடைதல். வாசிப்பின் நோக்கம் அதுவே

ஜெ

ஆனந்தரங்கம் பிள்ளை 

தினப்படி சேதிக்குறிப்பு

முந்தைய கட்டுரைவெங்கட்டாம்பேட்டை – கடலூர் சீனு
அடுத்த கட்டுரைஇளநாகன் ஏன்?