வேதசகாயகுமார்- ஒரு நூல்

அஞ்சலி- எம்.வேதசகாயகுமார்

எம்.வேதசகாயகுமார் பற்றிய இக்கட்டுரையை சென்றவாரம் எழுதினேன். அடுத்த ஆண்டு ஜனவரி 10ஆம் தேதிக்காக சேர்த்து வைத்திருந்தேன். கட்டுரை எழுதுவதைப்பற்றி அவரிடம் சொன்னேன். ”உங்களைப் பத்தி ஒரு கட்டுரை எழுதிட்டிருக்கேன் சார்“

சிரித்தபடி “கடுமையாட்டா?”என்றார்.

“உங்க வண்டவாளங்கள்லாம் தண்டவாளத்திலே ஏறப்போகுது” என்றேன்.

“உண்மையிலேயே ஜெயமோகன், தண்டவாளத்திலே ஏத்த வண்டவாளமே இல்லாம வாழ்ந்துட்டோமேன்னு நினைச்சு ஒருமாதிரி ஏமாற்றமாத்தான் இருக்கு” என்றார்.

“கிறிஸ்தவபக்தி இல்லேன்னாலும் நல்ல கிறிஸ்வதனா வாழ்ந்திருக்கீங்க’ என்றேன்

இன்று இக்கட்டுரையை பிரசுரம் செய்யும்போது ஓர் அஞ்சலிக்கட்டுரைபோல ஆகிவிட்டிருப்பதை காண நெஞ்சில் ஓர் எடை ஏறுகிறது.

தமிழில் சில புகழ்பெற்ற ஆசிரியர் – மாணவர் வரிசை உண்டு. மீனாட்சிசுந்தரம் பிள்ளை – உ.வே.சாமிநாதய்யர் – கி.வா.ஜெகன்னாதன் ஓர் உதாரணம். இன்னொன்றைச் சொல்லவேண்டுமென்றால் திருவிக – மு.வரதராஜன் – ம.ரா.பொ.குருசாமி என்னும் வரிசையைச் சொல்லலாம். ஆசிரிய மாணவ உறவு ஒரு தலைமுறைக்காலம் நீடித்தமைக்கு பல உதாரணங்கள் உண்டு, நாவலர் சோமசுந்தர பாரதியார் – அ.சா.ஞானசம்பந்தம் போல. ஆனால் மூன்று தலைமுறைக்காலம் நீடித்தால் மட்டுமே அதை ஒரு ஆசிரியர் மாணவர் நீட்சி என்று சொல்லவேண்டும்.

அறிவுலகில் இந்த ஆசிரியர் – மாணவர் உறவுக்கு சில தனிச்சிறப்புகள் உண்டு. ஒரு குறிப்பிட்ட கருத்துநிலை, ஒரு குறிப்பிட்ட ஆய்வுமுறை தொடர்ச்சியாக மூன்று, நான்கு தலைமுறைக்காலம் நீடிப்பது ஒரு வலிமையான அறிவுச்செயல்பாடு. அக்கருத்துநிலை பல மாணவர்களுக்கு பரவி ஒரு புறவயமான கருத்தமைப்பாகவே நிலைகொள்கிறது. ஒரு கருத்துநிலை ஒன்றுக்குமேற்பட்ட தலைமுறைக்காலம் நீடிக்கையில் அக்கருத்துநிலை வெவ்வேறு வரலாற்றுச் சூழல்களை சந்திக்கிறது. பலவகையான சிந்தனைமாறுதல்களை எதிர்கொள்கிறது. அவ்வண்ணம் அது தன் சாராம்சத்தை கண்டடைந்து தன்னை வலுவாக நிலைநிறுத்திக்கொள்கிறது.

இத்தகைய தொடர்ச்சி என்பது அறிவியக்கத்தில் ஆய்வு – விமர்சனத்துறையிலேயே இயல்வது. ஏனென்றால் இவை புறவயமான கருத்துநிலைகளைக் கொண்டவை. ஆசிரியரின் சிந்தனைப்பள்ளியை மாணவர் வலுப்படுத்தி முன்னெடுக்கலாகும். புனைவிலக்கியத்திலும் இத்தகைய ஆசிரிய – மாணவ நிரை உண்டு. ஆனால் அங்கே ஏற்புக்கு நிகராகவே மறுப்பும் உண்டு. ஏனென்றால் புனைவிலக்கியத்தின் அடிப்படை அகவயமானது. கற்பனையும் அகத்தேடலும் சார்ந்தது. அதை இன்னொருவரிடமிருந்து பெற்றுக்கொள்ள இயலாது. ஆசிரியன் தன்னிடமிருந்தே கண்டடைவது. இன்னொருவரின் வழிமுறையை கொண்டு அதை வெளிப்படுத்தவும் இயலாது.

ஆகவே புனைவிலக்கியத்தில் மட்டும் ஒருவகை முரணியக்கம் உள்ளது. இலக்கியத்தின் மீதான அடிப்படைப்பார்வை, இலக்கியவாதியென நிலைகொள்ளும் அறவியல் ஆகியவற்றை ஆசிரியரிடமிருந்து மாணவர் கற்றுக்கொள்கிறார். அவற்றின் நீட்சி என இறுதிவரை நிலைகொள்கிறார். கூடவே தனக்கான புனைவுமொழி, புனைவுக்கோணம் ஆகியவற்றையும் உருவாக்கிக்கொள்கிறார். அதன்பொருட்டு அவர் ஆசிரியர்களை மீறிச்செல்கிறார். இது அடிக்கடி நிகழ்வதில்லை. பொதுவாக இருதலைமுறையினருக்கிடையே புனைவுக்கோணத்தில் ஒத்திசைவு காணப்படுகிறது. மூன்றாம் தலைமுறையிலேயே மறுப்பும் முன்னகர்வும் நிகழ்கிறது.

அறிவியக்கத்தில் நிகழும் இந்த தொடர்ச்சியை ஆய்வாளர்கள் எப்போதும் கருத்தில்கொள்கிறார்கள். ஆனால் முன்னோடியிடமிருந்து ஒர் ஆய்வாளன் தனிப்பட்ட முறையில் முன்னகரும் இடங்களை அடையாளப்படுத்துவதில் பலசமயம் பிழைகள் நிகழ்கின்றன. அவர்களை ஒட்டுமொத்தமாக ஒரே கருத்துநிலையாக மதிப்பிட்டுவிடுகிறார்கள்.

தமிழ்ச்சூழலில் குமரிமாவட்டத்தில் சில அறிவியக்க ஆசிரியர் – மாணவர் தொடர்ச்சிகள் உண்டு. அதில் முதன்மையானவை கவிமணி மரபு, எஸ்.வையாபுரிப்பிள்ளை மரபு என இரண்டு. கவிமணியின் ஆய்வுமுறையின் தொடர்ச்சி என அ.கா.பெருமாள் அவர்களைச் சொல்லலாம். எஸ்.வையாபுரிப்பிள்ளை மரபுக்கு பலகிளைகள். அதிலொன்று பேராசிரியர் ஜேசுதாசன். அவருடைய மாணவர் எம்.வேதசகாயகுமார். அவருக்கும் ஆய்வாளர்களாகிய மாணவர்கள் பலர் உண்டு.

எஸ்.வையாபுரிப் பிள்ளையின் அறிவுமரபின் பொதுக்கூறுகள் என சிலவற்றைச் சொல்லலாம்:

அ. புறவயமான ஆய்வுமுறை, ஆய்வில் தெளிவான முறைமை ஆகியவற்றுக்கு முதன்மை இடம் அளித்தல்

ஆ. உணர்வுசார்ந்த நிலைபாடுகளை ஐயத்துடன் விலக்குதல். பெருமிதமோ காழ்ப்போ ஆய்வுக்கு எதிரானவை என்னும் பார்வை

இ. பிரதியை கூர்ந்து வாசிக்கும் நுண்ணோக்குப் பார்வை. பிரதிசார் விமர்சனம் என்று அதைச் சொல்லலாம். அதில் மிகைக்கற்பனைகள், பாய்ச்சல்களுக்கு இடமளிக்காமலிருத்தல்

ஈ. சொல்லாராய்ச்சி. சொற்களில் பண்பாடு உறைந்துள்ளது என்னும் பார்வை. ஆகவே சொற்களுக்கு தன் விருப்பப்படி பொருள் அளிப்பதோ திரிப்பதோ பிழை என்னும் அணுகுமுறை

உ. சமூகவியல், மானுடவியல், நாட்டாரியல், வரலாற்றாய்வு முதலிய பிற அறிவுத்துறைகளை கூடுமானவரை சார்ந்திருத்தல்

ஊ. நவீன இலக்கியத்தை பண்டைய இலக்கியத்தின் இயல்பான நீட்சியாக எண்ணுதல். நவீன இலக்கியத்தின் சோதனைகள், முன்னகர்வுகளை திறந்த உள்ளத்துடன் ஏற்றுக்கொள்ளுதல்

இக்கொள்கைகளை கொண்டிருந்த காரணத்தாலேயே எஸ்.வையாபுரிப்பிள்ளை தமிழகத்தில் இருந்து துரத்தப்பட்டார். தமிழின் காலக்கணக்கு, தமிழ்ச்சொற்களின் வேர்கள் ஆகியவை பற்றிய மொழிப்பெருமித ஆய்வுகளை அவர் ஏற்கவில்லை. அவை அன்றைய அரசியலின் அடித்தளமாக இருந்தன. வையாபுரிப்பிள்ளை கல்வெட்டியல் போன்ற துறைகளுடன் அணுக்கமான தொடர்பு கொண்டிருந்தார். அவர் செவ்விலக்கியத்தின் ஆர்வலர், ஆனால் நவீன இலக்கியத்திலும் பற்றும் பயிற்சியும் கொண்டிருந்தார். 1958ல் ராஜி என்ற நாவலையும் எழுதியிருக்கிறார்.

எஸ்.வையாபுரிப்பிள்ளையின் மாணவரான கோட்டாறு குமாரசாமிப்பிள்ளையின் நேரடி மாணவர் பேராசிரியர் ஜேசுதாசன். திருவனந்தபுரம் பல்கலைக் கழகக் கல்லூரியில் வையாபுரிப்பிள்ளையின் நேரடி மாணவரும்கூட. வையாபுரிப்பிள்ளையின் கருத்துக்களும் ஆய்வுநெறிகளும் ஜேசுதாசனில் நீடித்தன. ஜேசுதாசன் நேரடியாக எழுதியவை குறைவு. ஆனால் மாணவர்கள் வழியாக தமிழில் ஆழ்ந்த செல்வாக்கைச் செலுத்தினார். அவருடைய துணைவியார் ஹெப்ஸிபா ஜேசுதாசன் ஆங்கிலத்தில் எழுதிய தமிழிலக்கிய வரலாறு ஜேசுதாசனின் பார்வையை முன்வைப்பது.

ஜேசுதாசன் நவீனத்தமிழிலக்கியத்தை கல்விப்புலத்திற்குக் கொண்டுசெல்லும்பொருட்டு கடும் முயற்சிகளை எடுத்துக்கொண்டார். நவீன இலக்கியவாதிகளை அழைத்து கருத்தரங்குகள் நடத்தினார். இலக்கிய நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார். பண்டைய இலக்கிய ஆய்வில் ஐரோப்பிய ஆய்வாளர்களின் முறைமைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தினார். ஜேசுதாசனின் ஆய்வுமுறைமையில் இரு அம்சங்கள் முக்கியமானவை என அவருடைய மாணவர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆய்வுப்பொருளை பிழைகளைந்து முழுமையாகத் திரட்டிக்கொள்வது, புறவயத்தர்க்கமுறைமைக்கு அப்பாற்பட்ட ஊகங்களை அறவே தவிர்ப்பது.

ஜேசுதாசனின் நேரடி மாணவர் எம்.வேதசகாயகுமார். சுந்தர ராமசாமிக்கும் வெங்கட் சாமிநாதனுக்கும் அணுக்கமானவராக இருந்திருக்கிறார். திருவனந்தபுரம் பல்கலைக்கழக கல்லூரியில் தமிழாசிரியராக பணியாற்றினார். தமிழாய்வு, விமர்சனம் ஆகிய இரு தளங்களிலும் வேதசகாயகுமார் பெரும்பங்காற்றியிருக்கிறார். தமிழ்ச்சிறுகதை வரலாறு, புனைவும் வாசிப்பும், தற்கால தமிழிலக்கியம் ஒரு விமரிசனப்பார்வை, புதுமைப்பித்தனும் ஜெயகாந்தனும் ஆகிய நூல்களை எழுதியிருக்கிறார். இருநூறு தமிழ் இலக்கிய ஆய்வாளர்களைப் பற்றிய அவருடைய குறுங்கலைக்களஞ்சியமே முதன்மையான ஆக்கம்.

எம்.வேதசகாயகுமாரின் மாணவரான அ.சஜன் மார்த்தாண்டம் கிறித்தவக் கல்லூரி ஆசிரியர். பாரதியின் இலக்கியக் கோட்பாடு, தலித்தியம் – இயக்கமும் இலக்கியமும், நவீனத்துவம் சுந்தர ராமசாமியை முன்வைத்து ஆகிய நூல்களின் ஆசிரியர். அவர் வேதசகாயகுமாரைப் பற்றி வெளியிட்டிருக்கும் ‘இலக்கிய விமர்சகர் எம்.வேதசகாய குமார்’ ஒரு குறிப்பிடத்தக்க நூல். பேராசிரியர் ஜேசுதாசன் அவர்களுக்கு இந்நூல் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

இந்நூலுக்கு முன்னுரை அளித்திருக்கும் எழுத்தாளர் குமாரசெல்வா ‘தமிழில் குரு – சீடன் மரபு என்பதை விரித்தால் பல அபூர்வப்பிணைப்புக்களை கானமுடியும்’ என தொடங்குகிறார். சஜனுக்கும் வேதசகாய குமாருக்குமான உறவு ஆழமான குரு-சீட உறவு என்கிறார்.

இந்நூல் சஜன் தன் ஆசிரியரான வேதசகாயகுமாரை மதிப்பிட்டு அறிமுகம் செய்யும் தன்மைகொண்டது. ஆய்வாளர் வறீதையா கன்ஸ்தண்டீனின் ‘அவதானமும் உயிர்த்திருத்தலும்’ என்னும் கட்டுரை வேதசகாயகுமாருடனான அனுபவக்குறிப்புகளாக அமைந்துள்ளது. மீனவப்பின்புலத்தில் இருந்து வந்து ஒரு கத்தோலிக்க நிறுவனத்தின் கெடுபிடிகள் நடுவே ஆய்வுகளைச் செய்த தனக்கு வேதசகாயகுமாரின் சமரசமற்ற தீவிரம் எப்படி வழிகாட்டியாக அமைந்தது என்கிறார்.

வேதசகாயகுமாரின் பலபடிகளிலான பரிணாமத்தை இந்நூலின் கட்டுரைகள் ஆராய்கின்றன. வேதசகாய குமாரின் கல்விச்சூழலும் படைப்புச்சூழலும் எவ்வண்ணம் அவரை தமிழில் ஒரு விமர்சகராக உருவாக்கின என முதல் கட்டுரை ஆராய்கிறது. தமிழ் நவீனத்துவம் உருவானபோது அதன் அடிப்படைகளை முன்வைக்கும் விமர்சகராக வேதசகாயகுமார் எழுந்துவந்ததை இரண்டாவது கட்டுரை விவரிக்கிறது.

பேராசிரியர் ஜேசுதாசன் வழியாக வேதசகாயகுமார் நவீன இலக்கியத்தை மட்டுமல்ல நவீன இலக்கியவாதிகளையும் அறிமுகம் செய்துகொண்டார். நீல பத்மநாபன், ஆ.மாதவன், நகுலன், சண்முகசுப்பையா, காசியபன் போன்ற திருவனந்தபுரம் எழுத்தாளர்கள் மட்டுமல்லாமல் சுந்தர ராமசாமி போன்ற படைப்பாளிகளையும் ஜேசுதாசன் வழியாக வேதசகாயகுமார் அறிந்துகொண்டார். கல்லூரிக்கு வருகைதந்த ஆர்.ஷண்முகசுந்தரம், சி.சு.செல்லப்பா, க.நா.சு, பிரமிள் போன்றவர்களுடனும் அணுக்கம் கொண்டார்.

சுந்தர ராமசாமியின் காகங்கள் அமைப்பில் வேதசகாயகுமார் தீவிரமாக பங்கேற்றார். ஜேசுதாசனின் இன்னொரு மாணவரான ராஜமார்த்தாண்டனுடன் இணைந்து கோகயம் என்னும் இலக்கியச் சிற்றிதழைக் கொண்டுவந்தார். பின்னர் கொல்லிப்பாவை இதழிலும் பங்கேற்றார்.

இக்காலகட்டத்தில் வேதசகாயகுமார் தன் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டிருந்தார். ஜெயகாந்தனும் புதுமைப்பித்தனும் ஒப்பாய்வு என்பது அதன் தலைப்பு. பிரதிசார் விமர்சன நம்பிக்கை கொண்டிருந்த வேதசகாயகுமார் அதன்பொருட்டு அன்று முழுமையாக கிடைக்காமலிருந்த புதுமைப்பித்தனின் படைப்புக்களை தொகுக்கும்பொருட்டு நீண்ட பயணங்களை மேற்கொண்டார். பழைய மணிக்கொடி கால எழுத்தாளர்களை நேரில் சந்தித்தார். புதுமைப்பித்தனின் ஓரிரு கதைகள் தவிர்த்து அத்தனை கதைகளுக்குமான ஓர் அட்டவணையை உருவாக்கினார். அதில் புதுமைப்பித்தன் வெவ்வேறு பெயர்களில் எழுதியவையும் அடக்கம். அவர் தயாரித்த புதுமைப்பித்தன் ஆய்வடங்கல் அட்டவணை தமிழ் நவீன இலக்கிய ஆய்வில் ஒரு பெரிய கொடை.

அந்நூலிலேயே வேதசகாயகுமார் தன்னுடைய விமர்சன கருத்தை முன்வைத்திருந்தார். புதுமைப்பித்தனை தமிழ் நவீனத்துவத்தின் தலைமகனாக வரையறை செய்தார். வடிவம், மொழி , உளநிலை ஆகியவற்றில் புதுமைப்பித்தன் நவீனத்துவர் என்பது அவருடைய கணிப்பு. ஜெயகாந்தன் நவீனத்துவத்திற்கு எதிரான யதார்த்தவாத படைப்பாளி, பிரச்சாரகர் என்பது விமர்சனம்.

பின்னர் தமிழ்ச் சிறுகதை வரலாறு என்ற பெயரில் இக்கருத்துக்களை மேலும் கூர்மையாக வெளியிட்டார். அந்நூல் அன்று பெரிதும் பேசப்பட்ட ஒன்றாக இருந்தது. அந்நூலில் வேதசகாயகுமார் இன்றும் பொதுவாகச் சிற்றிதழ்ச்சூழலில் புழங்கும் சில அடுக்குமுறைகளை உருவாக்கினார். புதுமைப்பித்தன், பிச்சமூர்த்தி, குபரா ஆகியோரை முன்வைத்து பி.எஸ்.ராமையா, தி.ஜ.ரங்கநாதன் ஆகியோரை நிராகரித்து அவர் உருவாக்கிய அடுக்குமுறை அப்படியே நிலைகொண்டது. என்ன சிக்கல் என்றால் அவர் கு.அழகிரிசாமியையும் வடிவ உணர்வில்லாத சிறுகதைக்காரர் என நிராகரித்தார். அதிலிருந்து கு.அழகிரிசாமியை மீட்கவேண்டியிருந்தது.

நவீனத்துவ விமர்சகராக வேதசகாயகுமார் கலைகுறித்த மிகக்கடுமையான நோக்கு கொண்டிருந்தார். எல்லாவகையான வணிக எழுத்தையும் முழுமையாக நிராகரிப்பதும், எல்லாவகையான கருத்துப்பிரச்சார எழுத்தையும் மறுதலிப்பதும் அவருடைய நிலைபாடாக இருந்தது. எழுத்தில் சற்றேனும் போலித்தனம் தெரிந்தால் அதை முழுமையாகவே பொருட்படுத்தாமலிருந்துவிடவேண்டும் எனபது அவருடைய கொள்கை. செவ்வியல் சிறுகதைவடிவம் என்பது ஒரு வகையான இலக்கிய உச்சம் என நினைத்தார். இறுக்கமான கதையோட்டமும், மிகையற்ற சித்தரிப்பும்,கூர்மையான முடிவும்கொண்ட கதைகளை மட்டுமே அவர் ஏற்றுக்கொண்டார்.

சஜன் வேதசகாயகுமாரின் இரண்டாவது கட்டம் நவீனத்துவத்திற்கு பிந்தையது என கணிக்கிறார். இது ‘சொல்புதிது’ காலகட்டம். சுந்தர ராமசாமியின் நவீனத்துவ நோக்கிலிருந்து விடுபட்டு அதற்கு அப்பால் செல்வதற்கான விவாதங்களும் ஆய்வுகளும் கொண்டது இக்காலகட்டம். சொல்புதிது இதழ் நான் நண்பர்களுடன் சேர்ந்து நடத்தியது, அதில் வேதசகாய குமார் பெரும் பங்களிப்பை ஆற்றினார். எல்லா இதழிலும் எழுதினார்.

சொல்புதிதில் நவீனத்துவத்தால் கடுமையான வடிவ விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டு தவிர்க்கப்பட்ட படைப்பாளிகள் மீள்கண்டடைவு செய்யப்பட்டனர். தமிழிசை உட்பட வெவ்வேறு பண்பாட்டுக்களங்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. வேதசகாயகுமார் வித்வான் லக்ஷ்மணபிள்ளை போன்றவர்களை விரிவாக ஆராய்ந்தது இக்காலகட்டத்தில்தான். வித்வான் பி லக்ஷ்மணபிள்ளையின் வாழ்க்கை குறித்த செய்திகளுக்காக நாங்கள் இருவரும் அவருடைய காரில் குமரிமாவட்டத்திலும் திருவனந்தபுரத்திலும் அலைந்தோம். சங்ககாலக் கவிதைகளில் தமிழ்நவீனச் சிறுகதையின் வேர்களை கண்டடைவதற்கான நீண்ட ஆய்வு அதில் வெளிவந்த ஒரு குறிப்பிடத்தக்க கட்டுரை.

நவீனத்துவத்தின் தேக்கநிலைக்கு செவ்விலக்கியம் மீதான அதன் விலக்கமே காரணம் என உணர்ந்து வேதசகாயகுமார் செவ்வியல் படைப்புகளை வரலாற்றுரீதியாக ஆராயலானார். கால்டுவெல் பதிப்பித்த திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம் நூலின் முன்னுரை பிந்தைய பதிப்புகளில் விடுபட்டிருப்பதை சுட்டிக்காட்டி அவர் உருவாக்கிய விவாதம் குறிப்பிடத்தக்கது. பறையர்களே திராவிடர்கள் என்ற கால்டுவெல்லின் கருத்து பின்னாளில் திராவிட இயக்கம் சூடுபிடித்தபோது மறைக்கப்பட்டது. அந்த மறைக்கப்பட்ட முன்னுரையின் நாலைந்து வரிகள் தென்னிந்திய ஆய்வுதொகுதி என்னும் நூலில் மேற்கோள்காட்டப்பட்டிருந்தன. அந்த வரிகளிலிருந்து அந்த முன்னுரையை வேதசகாயகுமார் தேடி எடுத்தார்.

தொல்காப்பியம் சங்கப்பாடல்கள் போன்றவறின் மீதான ஆய்வுகளை இக்காலகட்டத்திலேயே அவர் நிகழ்த்தினார். வேதசகாயகுமாரின் செவ்விலக்கிய ஆய்வு என்பது தமிழர்பெருமையை கண்டடைவது அல்ல. இலக்கியநயம் பாராட்டலும் அல்ல. செவ்விலக்கியங்களை கூர்ந்து வாசித்து சமூக – வரலாற்று செய்திகளுடன் இணைத்தும் வேறு செவ்விலக்கியங்களுடன் ஒப்பிட்டும் அன்றைய சமூகமுரண்பாடுகளை, சமூகப்பரிணாமத்தை ஆராய்வது.

வேதசகாயகுமாரின் ஆய்வுக்கு ஓர் உதாரணம். பொருநராற்றுப்படையில் வரைப்பகம் என்னும் சொல் வருகிறது. அதை பின் தொடர்ந்து செல்லும் வேதசகாயகுமார் அது காவிரிக்கு கரை உயர்த்தும் செயலை குறிக்கிறது என்று கண்டடைகிறார். அவ்வண்ணம் எங்கெல்லாம் குறிப்புகள் உள்ளன என்று கண்டடைந்து அதைக்கொண்டு சோழர்கால பொருளியல் நடவடிக்கையின் ஒரு சித்திரத்தை உருவாக்குகிறார்.

சங்க காலம் முதல் தொடர்ச்சியாக பாணர்களின் சமூகநிலையில் வீழ்ச்சி இருப்பதை வேதசகாயகுமார் சுட்டிக்காட்டுகிறார். சங்ககாலத் தொடக்கத்தில் அரசர்களுக்கு நிகரானவர்களாக இருந்த அவர்கள் பிற்காலத்தில் பாலியல் தூதர்களாக மாறி சோழர்காலத்தில் தாழ்த்தப்பட்டோராக உருமாறிய பரிணாமத்தை தமிழ்ப்பண்பாட்டின் பின்புலத்தில் வைத்து ஆராய்கிறார். வேதசகாயகுமார் கேட்கும் கேள்விகளும் அவர் செய்யும் பயணங்களும் தமிழில் முன்பு எவராலும் நிகழ்த்தப்படாதவை.

செவ்விலக்கிய ஆய்வினூடாக வேதசகாயகுமார் தமிழ்ப்பண்பாட்டின் மேல் சங்ககாலம் முதலே படையெடுப்பு நிகழ்ந்துள்ளது என்றும், அது பெரும்பாலும் மைய இந்திய நிலத்திலிருந்தே என்றும், அந்த ஆதிக்கம் இன்றுமுள்ளது என்றும் முடிவுக்கு வருகிறார். வடுகப்படையெடுப்பு பற்றிய சங்க இலக்கியக் குறிப்புகளை விரிவாக ஆராய்ந்து ஒரு பெருஞ்சித்திரத்தை படிப்படியாக உருவாக்குகிறார்.அவ்வாறு தமிழன் என்ற இன அடையாளத்தை முன்வைப்பவராக, திராவிடன் என்னும் அடையாளத்தை ஓர் அரசியல்சூழ்ச்சியாக பார்ப்பவராக ஆனார்.

இந்நூல் வேதசகாயகுமாரின் கருத்துப்பயணத்தை சுருக்கமாகவும் செறிவாகவும் வரைந்துகாட்டுகிறது. அவர் சென்றடைந்த வெவ்வேறு கருத்துநிலைகளை சுட்டிக்காட்டி உரிய மேற்கோள்களுடன் நிறுவுகிறது. அவ்வகையில் ஆசிரியருக்கு மாணவன் செய்யும் சிறந்த கொடையாக அமைந்துள்ளது.

———————– —————————————————–

இலக்கிய விமர்சகர் எம்.வேதசகாயகுமார்

சஜன்

காலசகம் வெளியீடு,6/125-29 பாரத் நகர்,வடிவீஸ்வரம்,கோட்டார்,நாகர்கோயில்,629002

9442759897


வேதசகாயகுமார்’60

வேதசகாயகுமார் விழா

வேதசகாயகுமார் அல்லது ‘எனக்கு பொறத்தாலே போ பிசாசே!’

வேதசகாயகுமார், இயற்கைவேளாண்மை,வசை

விரியும் கருத்துப் புள்ளிகள் :வேதசகாயகுமாரின் பண்பாட்டு விமரிசனங்கள்.

எழுதப்போகிறவர்கள்

வேதசகாயகுமாரின் கலைக்களஞ்சியம்
குமார் 60 கடிதங்கள்

குருபீடம்

சூழ இருத்தல்  

 

முந்தைய கட்டுரைபெண்கள்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைவேதசகாயகுமார்- கமல்ஹாசன் அஞ்சலி