கலையும் பகுத்தறிவும்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

கலையை ரசிக்க பகுத்தறிவு எப்போதும் தடையாகவே அமையும் என்றீர்கள்.

என்னுடைய கேள்வி யாதெனில், பகுத்தறிவின் வெளிப்பாடு கலை நுகர்வின் முனையிலிருந்து பார்த்தல் தடையாகவே இருக்கும்பொழுது, அதே கலையின் உருவாக்கத்தில் பகுத்தறிவின் தாக்கம் யாது என்பதே. கலைஞனும் படைப்பாக்கத்தின்ப்பொழுது முழுக்க முழுக்க ஒருவகையான மயக்கநிலையில்தான் அக்கலைபடைப்பபை உருவாக்குகிறானா?

யாதொரு கலையை கற்கும் பொருட்டு ஒருவனுக்கு அதேப் பகுத்தறிவு தேவைப்படும் அல்லவா?. குறிப்பாக அக்கலையில் உள்ள டெக்னிக்ஸை கற்கும் பொழுதும் அதை தன் கலைப்படைப்பில் உபயோகிக்கும் பொழுதும் ஒருவகை தர்க்கத்தினூடகத்தானே சிறு சிறு முடிவுகளை நிச்சயம்ப் பன்னிக்கொண்டு முன் செல்கிறான்.

எனது கேள்வியை தெளிவாக கேட்டுள்ளேன் என்று நினைக்கிறேன்.கேள்வியில் ஏதேனும் குழப்பங்கள் இருப்பின் தயவுக் கூர்ந்து ‌தெரியப்படுத்தவும்.

குறிப்பு: நான், படைப்பூக்கம் தான் என்னக்கு நிறைவை தரும் என்று முடிவு செய்து, புகைப்பட கலையை சுயமாக கற்றுக் கொண்டு வருகிறேன், தங்களின் பதில் கலைப்புகைப்படங்களை எவ்வாறு நான் அணுக வேண்டும், காண வேண்டும், ரசிக்க வேண்டும் முதலிய அடிப்படைகளை நோக்கி ஒரு துளியேனும் நகர்த்தும் என்று நம்புகிறேன்.

நன்றி,
ம.பிரசாந்த்

அன்புள்ள பிரசாந்த்,

பலரும் இந்தக் கேள்வியை கேட்கிறார்கள். இந்த ஐயம் எங்கிருந்து எழுகிறது என்றால் பகுத்தறிவு என்ற சொல்லை அதன் தத்துவப் பின்புலம் இல்லாமல் பொதுவாக அறிவு என்ற பொருளிலேயே எடுத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதிலிருந்துதான். ஆகவே இந்த விளக்கத்தை அளிக்கிறேன்.

ஆங்கிலத்தில் சில கலைச்சொற்கள் அவற்றுக்குரிய தத்துவவிவாதப் பின்னணியில் உருவாகி வந்தவை. அவற்றிலொன்று Rationality. அதுதான் இங்கே பகுத்தறிவு என மொழியாக்கம் செய்யப்பட்டது. அந்தப் பின்னணியை புரிந்துகொள்ளாமல் சொல்லை மட்டுமே கொண்டு அதன் பொருளை ஊகிக்கக்கூடாது.

பகுத்தறிவுவாதம் [Rationalism] என்பதை இவ்வாறு வரையறை செய்யலாம். ‘புறவயமான அறிதல்களை மட்டுமே ஆதாரமாகக் கொள்வதும், தர்க்கபூர்வமாக அவற்றை வகுத்துக்கொள்வதும், புறவயமாக நிரூபிக்கத்தக்கவற்றை மட்டுமே உண்மை எனக் கொள்ளுதலும்”அதாவது ஐம்புலன்கள் வழியாகவும், அவற்றை தொகுக்கும் தர்க்கம் வழியாகவும் உலகைப் பார்த்தல்.

பகுத்தறிவுவாதம் என்பது ஒரு கறாரான தத்துவக்கொள்கை அல்ல. அது பொதுப்பயன்பாட்டில் உள்ள ஒரு வார்த்தைதான். தத்துவ விவாதங்களில் இருந்து முளைத்தது.பதினாறாம் நூற்றாண்டு முதல் ஐரோப்பாவில் பலவகையான தர்க்கவாதங்கள் மேலெழுந்தன. அவை பொதுத்தளத்தில் இப்படி ஒரு நிலைபாடாக தங்களை தொகுத்துக்கொண்டன.

ஐரோப்பாவில் பத்து நூற்றாண்டுக்கும் மேலாக கிறிஸ்தவ மதம் நம்பிக்கை சார்ந்த ஒரு உலகப்பார்வையை உருவாக்கியிருந்தது. அந்தப்பார்வையின் மையம் என்பது இறைவாதம்தான்.அதன் அடிப்படையில் பழைய நிலப்பிரபுத்துவம் கட்டப்பட்டிருந்தது. திருச்சபையின் அடித்தளமும் அதன்மேல் அமைந்திருந்தது. உலகத்தை இறைச்சக்தியே நடத்துகிறது, அதை உணர்ந்து தொகுத்துக்கொண்டதே மதம், ஆகவே மனிதவாழ்க்கையை இறையாணைகளின் பெயரால் மதம் வழிநடத்தவேண்டும் என்பதே அதன் கொள்கை.

அந்த இறைவாதம், நம்பிக்கை வாதம் ஆகியவற்றை எதிர்த்து மனிதஉரிமை, சிந்தனையுரிமை ஆகியவற்றுக்கான குரல் அங்கே எழுந்தது.உலகவாழ்க்கையை, மனித அகத்தை தர்க்கபூர்வமாக அணுகும் கொள்கைகள் உருவாயின. ஒட்டுமொத்தமாக அவற்றை தர்க்கபூர்வ உலகநோக்குகள் எனலாம். அவற்றை அவை உருவாகிவந்த காலம் அறிவொளிக்காலம் [Age of enlightenment] எனப்படுகிறது

அந்த காலகட்டத்தில் உருவாகிவந்த தர்க்கநோக்குகளை பலவகையிலும் நாம் சிந்தனையில் எதிர்கொள்வோம். அவற்றை ஒட்டுமொத்தமாக புறவயத்தர்க்கமுறையை முன்வைப்பவை, அகவயமான தர்க்கமுறையை முன்வைப்பவை என்று பிரிக்கலாம். புறவயத் தர்க்கத்தை முன்வைப்பவர்கள் உண்மை என்பது பொதுவாக விவாதிக்கப்பட்டு நிறுவத்தக்கது என்று நம்புபவர்கள். ஒருவர் மட்டுமே அறிந்து பிறர் அறியமுடியாதவை, புறவயமாக நிறுவப்படமுடியாதவை உண்மையல்ல என்று சொல்பவர்கள்.

இத்தரப்பில் இம்மானுவேல் காண்டின் மெய்யறிவுவாதம் [Pure Reason] அதிலொன்று. அது புறவுலகை அகத்தையும் புறத்தையும் இணைக்கும் விரிவான தர்க்கமுறையால் வகுத்துக்கொள்வதைப் பற்றிப் பேசுகிறது. ஐந்து புலன்களால் அறியும்படி நிரூபிக்கப்படுவன மட்டுமே உண்மை என நம்பும் கொள்கை நிரூபணவாதம் [ Empiricism]. அறிவார்ந்த தர்க்கத்துடன் பொதுவாக ஆராய்ந்து நிறுவப்படத்தக்கது மட்டுமே உண்மை என நம்புவது நிலைவாதம் [ Positivism] பயன்தரத்தக்க முறையில் தர்க்கபூர்வமாக நிறுவப்படுவது மட்டுமே உண்மை என்று கருதும் நடைமுறைவாதம் [Pragmatism] என பலகொள்கைகள் இத்தரப்பில் உண்டு.

இவையனைத்தையும் ஒட்டுமொத்தமாக நாம் பகுத்தறிவுவாதம் [Rationalism] என்கிறோம்.அதாவது எதையும் நம்பிக்கை சார்ந்து ஏற்காமல் தர்க்கபூர்வமான ஆராய்ச்சியை நம்புவது. உண்மை என்பது அனைவருக்கும் பொதுவாக நிரூபிக்கப்படவேண்டும் என எதிர்பார்ப்பது. எதையும் ஆராய்ந்து பார்க்கவும் நிரூபிக்கவும் முடியும் என்று கூறுவது. நிரூபணத்துக்கு முன்வராமல் முன்வைக்கப்படுவன அகவய கருத்துக்களே, அவற்றுக்கு உண்மைமதிப்பு இல்லை என நினைப்பது.

இந்த பகுத்தறிவுநோக்கு கடவுள்நம்பிக்கையை மறுப்பதாக ஆகும்போது அது இறைமறுப்புவாதம் எனப்படுகிறது [Atheism]. கடவுள் நம்பிக்கையை ஏற்கவோ மறுக்கவோ தர்க்கத்தால் முடியாது, ஆகவே அது பேசுபொருளே அல்ல என்று சொல்பவர்கள் அறியமுடியாமைவாதிகள் [Agnostics] எனப்படுகிறார்கள். தமிழகத்தில் பகுத்தறிவுவாதம் இறைமறுப்புவாதமாக மட்டுமே அறிமுகமாகி இரண்டுக்கும் ஒரே சொல்லே பயன்படுத்தப்படுகிறது.

இந்த புறவயமான தர்க்கநோக்குகள்தான் நவீன அறிவியலை கட்டி எழுப்பின. நாம் இன்று பயிலும் சமூகவியல் ஆய்வுகள், பண்பாட்டு ஆய்வுகள், வரலாற்று ஆய்வுகள் முதலிய அனைத்தையும் உருவாக்கின. நவீன ஜனநாயகக்கொள்கைகள் எல்லாமே அந்த நோக்கால் உருவாக்கப்பட்டவைதான்.இவற்றை சிந்திக்கும் மானுடர் எவரும் மறுக்கவியலாது. இவை தேவையில்லை என்று நான் சொல்லவுமில்லை.

நான் சொல்வது கலை என்பது அகவயமான செயல்பாடு என்பதனால் அங்கே இந்த பகுத்தறிவுவாதம் தடையாக ஆகக்கூடும் என்பதை மட்டும்தான்.பகுத்தறிவு என்பதில் எப்போதும் இருந்துகொண்டிருப்பது என்ன என்று பாருங்கள், ‘புறவயத்தன்மை’[Objectivity] இல்லையா? இன்னொன்று நிரூபணம். எந்த கருத்தானாலும் அனைவரும் அறியத்தக்க சான்றுகளுடன், அனைவருக்கும் உரிய தர்க்கத்துடன், பொதுவெளியில் புறவயமாக நிரூபிக்கப்படவேண்டும்

இந்த புறவயத்தன்மை ஒரு பெரிய அறிவுக் கட்டமைப்பாக இன்றைக்கு நம் சூழலில் உள்ளது. அங்கேதான் எல்லாவகையான அறிவியல் உண்மைகளும் முன்வைக்கப்படுகின்றன. சமூகவியல் உண்மைகள் முன்வைக்கப்படுகின்றன. அவை பொதுவாக விவாதிக்கப்படுகின்றன. நிரூபிக்கப்படுகின்றன, அல்லது மறுக்கப்படுகின்றன. கலையும் இலக்கியமும் அந்த புறவயத்தன்மை என்னும் அறிவுக்கட்டமைப்புக்குள் இருப்பவை அல்ல

அந்த அறிவுக்கட்டமைப்புக்குள் நாம் அறிபவை அனைத்துக்குமே ஒரு பொதுத்தன்மை உள்ளது. அந்த புறவய அறிவுக்கட்டமைப்பில் இருந்து எவர் எதைச் சொன்னாலும் அது அதேவகையான பயிற்சி கொண்ட இன்னொருவர் சொல்வதைப்போலவே இருக்கும் அல்லவா? இருந்தாகவேண்டும், அப்போதுதான் அது புறவயமானது.

கலைஞன் தன் தனித்தன்மையை வெளிப்படுத்த வேண்டியவன். புறவயமான அறிவுச்சூழலில் இருந்து அவனும் தன் அறிவை பெற்றுக்கொண்டு அதை வெளிப்படுத்துவான் என்றால் அவனுக்கும் ஆய்வாளனுக்கும் என்ன வேறுபாடு? அவன் ஏன் செயல்படவேண்டும்? ஆய்வுகள் ஏராளமாக நிகழ்ந்தபடியே இருக்கின்றன, மிகப்பெரிய நிறுவனங்களாக அவை செயல்படுகின்றன அல்லவா?

ஓர் எழுத்தாளன் ஓர் உண்மையை உணர்கிறான். அதை அவன் அகவயமாகவே உணர்கிறான். அதை அவன் புறவயமான உண்மையாக ஆக்கவேண்டும் என்றால் அவன் அதிலுள்ள தன் சொந்த அனுபவத்தை களைந்துவிடவேண்டும். அனைவருக்கும் உரிய அனுபவங்களை மட்டுமே ஆதாரமாகக் கொள்ளவேண்டும். அதை தர்க்கபூர்வமாக முன்வைக்கவேண்டும். ஆனால் இதை அவன் செய்தால் அது கலையாக இருக்காது, அறிவியலாக ஆகிவிடும்.

கலை என்பதும் இலக்கியம் என்பதும் நிரூபணவாதத்திற்கு எதிரான உண்மைகளை முன்வைப்பவை. [Anti-empirical truth.] அவை பொதுவான உண்மைகளை முன்வைப்பதில்லை. ஆசிரியனின் தனியுண்மைகளையே முன்வைக்கின்றன. [Private truth]. அவை அகவயமானவை மட்டுமே. அவற்றை அவன் அகவயமாகவே முன்வைக்கிறான்.

ஒரு கதைசொல்லி, ஒரு கவிஞன், ஓர் ஓவியன் அவன் உணர்ந்த உண்மைக்கும் அறிந்த மெய்மைக்கும் என்ன ஆதாரத்தை முன்வைக்கமுடியும்? தன்னைமட்டுமே அவனால் முன்வைக்கமுடியும். இது என் அனுபவம் என்று மட்டுமே அவன் சொல்லமுடியும். என்னை நம்புங்கள், இதை உண்மையென ஏற்றுக்கொள்ளுங்கள் என்று மட்டுமே எந்தக்கலைஞனும் சொல்லமுடியும்.

அவனிடம் ‘இல்லை எனக்கு ஆதாரம் தேவை’ என ஒருவன் கேட்பான் என்றால் அவன் கலைக்கும் இலக்கியத்திற்கும் ரசிகனோ வாசகனோ அல்ல. அவன் அந்த கலைப்படைப்பையோ இலக்கியப்படைப்பையோ நிராகரிக்கவில்லை. கலையிலக்கியம் என்பதையே நிராகரிக்கிறான். அவனிடம் கலைஞனும் எழுத்தாளனும் பேச ஒன்றுமில்லை.

சரி, இந்த தனிப்பட்ட உண்மையை வாசகன் எப்படி ஏற்றுக்கொள்கிறான்? கலைஞனும் எழுத்தாளனும் தங்கள் அகத்தை முன்வைக்கிறார்கள். ரசிகனும் வாசகனும் தங்கள் அகத்தால் அதை எதிர்கொள்கிறார்கள். அவர்கள் வேறுவேறு மனிதர்களாக இருக்கலாம். ஆனால் அவர்களின் அகம் ஆழத்தில் ஒன்றுதான். நான் வழக்கமாகச் சொல்லும் உவமை ஒன்றுண்டு- கிணறுகள் தனித்தனி, நிலத்தடிநீர் ஒன்றே.

வாசகனும் எழுத்தாளனும் ஒரே ஆழத்தைப் பகிர்ந்துகொள்கிறார்கள். ஆகவே எழுத்தாளனின் உண்மையை வாசகன் ஏற்றுக்கொள்கிறான். அவனுக்கு அதற்கு புறவய நிரூபணம் தேவையில்லை.

இங்கே அறிவியல்,சமூகவியல், தத்துவம் எல்லாமே புறவயமாக பேசப்படுகின்றன, நிரூபிக்கப்படுகின்றன. இலக்கியமும் கலையும் அவை விட்டுவிட்ட இடங்களைப் பேசுபவை. அவற்றில் குறைவுபடும் ஓர் இடத்தை நிரப்புபவை. ஆகவே அவை அகவயமான உண்மைகளைப் பேசுகின்றன. இவற்றுக்கு பண்பாட்டுச் செயல்பாட்டில் மிக முக்கியமான இடம் உண்டு

இலக்கியமும் கலையும் ஒருபோதும் அறிவியலுக்கோ, தத்துவத்திற்கோ மாற்று அல்ல. அறிவியலும் தத்துவமும் பொய், இலக்கியமே மெய் என்று இலக்கியவாதிகள் சிலர் சொல்வதுண்டு. சுந்தர ராமசாமிகூட அவ்வாறு சொன்னதுண்டு. அது ஒரு இலக்கியவாதியின் பற்று மட்டுமே. அறிவியலும் தத்துவமும் அவற்றின் கிளைகளுமே மைய ஓட்டமாக அமைய முடியும். புறவய உண்மைகளே சமூகத்தின் அடித்தளத்தை கட்டமைக்கவேண்டும். இலக்கியம் அதன்மேல் எழும் இன்னொரு பார்வை, இன்னொரு தரிசனம், அவ்வளவுதான்.

இலக்கியமும் கலையும் புறவயத்தன்மை அற்றவை, ஆகவே அவைகூறும் உண்மைகள் நம்பகத்தன்மை இல்லாதவை என அறிவியலாளர்களும் தத்துவஞானிகளும் சொல்வதுண்டு. ரசலும், ஜே.கிருஷ்ணமூர்த்தியும் இதைச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அறிவியலும் தத்துவமும் நிரூபித்த உண்மைகளைப்போலவே இலக்கியம் கண்டடைந்த உண்மைகளும் வேரூன்றி நிலைகொள்வதை நாம் வரலாற்றில் காண்கிறோம்.

ஏனென்றால் விழுமியங்களை அறிவியலும் தத்துவமும் உருவாக்கமுடியாது. அவற்றை இலக்கியமே ஒர் இலட்சியக்கனவாக கண்டடைகிறது. அறம், நீதி, அன்பு, கருணை, கொடை, சமத்துவம், மானுட உரிமை என நாம் இன்று தலைக்கொள்ளும் அனைத்து விழுமியங்களும் இலக்கிய தரிசனங்கள்தான்.

ஆகவேதான் பகுத்தறிவு கலைக்கும் இலக்கியத்துக்கும் எதிரானது என்கிறேன். கலைஞன் ஓர் உண்மையை தன்னுள் உணர்கிறான். அவன் மேலும் தன்னுள் ஆழ்ந்து சென்று அதை கூர்ந்து அறிய, உரிய முறையில் அதை முன்வைக்கவே முயலவேண்டும். அதன் ஆழம்தான் மானுடர் அனைவருக்கும் பொதுவானது. ஆழத்துக்குச் செல்லச்செல்லத்தான் மானுட உள்ளம் ஒன்றாக உள்ளது. ஆழமாகச் சொல்லப்பட்டால்தான் கலையின் உண்மை நிறுவப்படுகிறது

அதற்குப் பதிலாக அவன் பகுத்தறிவுநோக்கை நம்பினால் அதை வெளியே கொண்டுவருகிறான். தரவுகளால் புறவயமாக அறியவும் நிரூபிக்கவும் முயன்றால் அது அறிவியலுண்மையாக, சமூகவியலுண்மையாக ஆகிவிடும். அது மறுக்கப்படலாம். ஏற்கப்பட்டால்கூட கலையாக நிலைகொள்ளாது.

நீங்கள் கேட்ட கடைசிக்கேள்விக்கு வருகிறேன். கலையை அறிவுபூர்வமாக கற்றுக்கொள்ள முடியாதா? கலையின் தொழில்நுட்பத்தை மட்டும் அறிவுபூர்வமாக கற்றுக்கொள்ளமுடியும். கற்றாகவேண்டும். ஆனால் கலைநிகழும் அகத்தளம் தானாகவே உருவாகிவரவேண்டும். கற்கவோ கற்பிக்கவோ இயலாது.

கலையின் கட்டமைப்பில் அறிவுத்தள கூறுகள் தேவையா? ஆமாம், அறிவுத்தளத்திலிருந்து செய்திகளை தரவுகளை கலை கையாளவேண்டும். நான் நாவலாசிரியனாக வரலாற்றையும் தத்துவத்தையும் பயின்றபடியே இருக்கிறேன். ஆனால் அவை அல்ல கலை, கலை அந்த அறிவுக்கூறுகளை பயன்படுத்திக்கொள்கிறது அவ்வளவுதான்.

கவனியுங்கள் இவை அறிவுக்கூறுகள். இவற்றை பகுத்தறிவு என்ற சொல்லால் சுட்டினால் பொருட்குழப்பத்தை உருவாக்கிக் கொள்கிறீர்கள்.

ஜெ

எழுத்தாளனின் பார்வை- கடிதம்

எழுத்தாளனின் பார்வை

முந்தைய கட்டுரைகுமரி ஆதவன்
அடுத்த கட்டுரைகன்னிநிலம் பற்றி