உலக இலக்கியத்தில் ஆர்வமூட்டும் ஓர் தனித்தன்மையைக் காண்கிறோம்- எப்போது புனைவு அச்சு வடிவில் உருவானதோ, எப்போது உரைநடை இலக்கியம் தோன்றியதோ, உடனே தோன்றிவிட்டது பகடி எழுத்து. கிட்டத்தட்ட பைபிளுக்கு நிகராக நான் படிக்கும் நூல்களில் ஒன்று பி.ஜி.வோட்ஹவுஸ் தொகுத்த ‘நூறாண்டு நகைச்சுவை’ என்னும் கதைத் தொகுதி. அதில் 1800கள் முதல் நூறாண்டுகள் எழுதப்பட்ட சிறந்த நகைச்சுவை, பகடி கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. 1940ல் வெளிவந்த நூல் அது.
பஞ்ச் என்னும் நகைச்சுவை இதழில் வெளிவந்தவை இத்தொகுதியில் உள்ள பெரும்பாலான கதைகள். அன்றைய அறிவியக்க எழுத்து, கற்பனாவாத எழுத்து எல்லாமே கொஞ்சம் பழையனவாகி தெரிய ,இவை இன்றும் புதியவையாக உள்ளன. ஏனென்றால் பகடியில்தான் மொழியின் அரிய இயல்கைகள் சில வெளிப்படுகின்றன. என்றும் என் அன்புக்குரிய பகடி எழுத்தாளர் ஸக்கி.
ஏன் பகடி முதலிலேயே தோன்றிவிட்டது? சில சமூகவியல் காரணங்களை சொல்லலாம். உரைநடை எழுத்து உருவாவதற்கு முந்தைய காலகட்டத்தில் பிரபுக்களின் அவையில் இலக்கியம் வாசிக்கப்பட்டு ரசிக்கப்பட்டது. உரைநடை நூல்கள் வெளிவந்ததுமே நேராக அங்கேதான் சென்றன, அவர்கள்தான் வாங்கிப்படித்தனர். அவர்களை மகிழ்விப்பதற்குரிய வேடிக்கைக் கதைகள், அறிவார்ந்த பகடிகள் அன்று விற்றன. ஆகவே அவை எழுதப்பட்டன.
உண்மை, உரைநடையின் முதற்பெரும் பயன் என்பது கருத்துப்பிரச்சாரமாகவே இருந்தது. மக்களிடம் நேரடியாகப் பேச அச்சும் உரைநடையும் உதவின. ஆகவே ஜனநாயகத்தின் ஊடகமாக அது அமைந்தது. அன்று புகழ்பெற்றிருந்த நூல்கள் பெரும்பாலும் சுருக்கமான கருத்துப்பிரச்சார வெளியீடுகளே. ஆனால் அடுத்தபடியாக பகடி இருந்துகொண்டிருந்தது. சொல்லப்போனால் மக்களிடையே கருததுப்பிரச்சாரமும் உயர்மட்டவாசகர் நடுவே பகடியும் புகழ்பெற்றிருந்தன.
இந்தியாவில் அச்சு வடிவில் உரைநடை வந்தபோது மூன்றுவகை நூல்கள் வெளிவந்தன. ஒன்று, செவ்விலக்கியங்கள் மற்றும் மதநூல்கள். அவை இங்கே பிரபுக்களிடம் முன்பணம் பெற்றுக்கொண்டு வெளியிடப்பட்டன. மக்களிடையே பிரபலமாக இருந்தவை மலிவுவிலையில் வெளியிடப்பட்ட நாட்டார் படைப்புக்கள். சித்தர்பாடல்கள் கூட அன்று நாட்டார்மரபிலேயே இருந்தன. பின்னர் புனைகதைகள் வரத்தொடங்கியபோதுகூட வினோதரசமஞ்சரி போன்ற அரைநாட்டார் ஆக்கங்களே வந்தன.
நவீனத்தன்மை கொண்ட புனைவுகள் வரத்தொடங்கிய 1800களின் இறுதியில் ஆங்கில எழுத்தை ஒட்டியே இங்கும் புனைவுகள் எழுதப்பட்டன. பெரும்பாலும் தழுவல்கள். ரெயினால்ட்ஸ் அன்று புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர். அவருடைய அரண்மனை மர்மக்கதைகள் அப்படியே தழுவப்பட்டன. ஷெர்லக் ஹோம்ஸ் பாணி துப்பறியும் கதைகள் தழுவப்பட்டன.
அன்று நீதிமன்றம், போலீஸ் ஆகியவை பிரிட்டிஷ் ஆட்சியால் அறிமுகமாகி மக்களின் வாழ்க்கையை பாதிக்க ஆரம்பித்திருந்தன. மக்கள் மிகுந்த ஆர்வததுடன் நீதிமன்ற விசாரணை, போலீஸ் துப்பறிதல் ஆகியவற்றை கவனித்தனர். ஆகவே அவை சார்ந்த நூல்கள் பரபரப்பாக விற்றன. வடுவூர் துரைசாமி அய்யங்கார், ஜே.ஆர்.ரங்கராஜு, ஆரணி குப்புசாமி முதலியார் போன்றவர்களின் புனைவுகள் அந்த வரிசையில் வருபவை. இந்தியாவில் கருததுப்பிரச்சார எழுத்து என்பது 1900த்தின் தொடக்கத்தில் காங்கிரசின் செயல்பாடுகள் வீச்சுகொண்டபோதுதான் தொடங்கியது.
அந்த ஆரம்பகாலத்திலேயே இங்கே பகடி எழுத்து வந்துவிட்டது. ஆனந்தவிகடன் என்ற இதழ் பகடிக்காகவே வெளியிடப்பட்டது. அதைத்தான் பின்னர் எஸ்.எஸ்.வாசன் வாங்கி குடும்ப இதழாக மாற்றி நடத்தினார். ஆனந்த விகடன் பஞ்ச் இதழின் பாணியில் அமைந்த இதழ். அதைப்போல பல வேடிக்கை இதழ்கள் அன்று வெளிவந்தன.
அக்காலகட்டத்தின் எழுத்தாளர்களில் பலர் வேடிக்கைவிளையாட்டு என எழுதியவர்க்ள். முக்கியமானவர் எஸ்.வி.வி. கல்கியின் நடையே பகடியம்சம் கொண்டதுதான். அவரை தொடர்ந்து எழுதிய தேவன் போன்றவர்களும் பகடியாளர்களே. தேவனின் துப்பறியும் சாம்பு தமிழின் குறிப்பிடத்தக்க பகடிக் கதாபாத்திரம்- ஆங்கில முன்மாதிரிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டது. ஏ.கே. பட்டுசாமியின் காஸ்டபிள் கந்தசாமி அக்காலத்தில் புகழ்பெற்றிருந்த ஒரு துப்பறியும் பகடி கதாபாத்திரம். துப்பறியும்கதை தொடங்கியதுமே அதன் பகடி வடிவமும் வந்துவிட்டதை நினைவுகொள்ளவேண்டும்.
இது தமிழில் மட்டும் நிகழவில்லை. மலையாளத்திலும் உரைநடை எழுத்தின் தொடக்ககால முன்மாதிரிகளில் பகடி முக்கியமானது. சஞ்சயன் என்றபெயரில் எழுதிய மாணிக்கோத்து ராமுண்ணி நாயர் முக்கியமான பகடி எழுத்தாளர். அன்று ஈ.வி.கிருஷ்ணபிள்ளை, எம்.என்.கோவிந்தப்பிள்ளை போன்று பல புகழ்பெற்ற பகடியாளர்கள் இருந்தனர். மலையாள தொடக்ககால நாவல்களில் முக்கியமானது ’விருதன்சங்கு’ ஒரு துப்பறியும் பகடிக்கதை. எழுதியவர் காராட்டு அச்சுத மேனன். அவருடைய கொள்ளுப்பேரன்தான் மார்க்சிய கம்யூனிஸ்டுக் கட்சித்தலைவரான பிரகாஷ் காராட்டு. இவையும் ஆங்கில பஞ்ச் இதழ் எழுத்துக்களின் தொடர்ச்சியாக உருவானவை
தமிழின் அக்காலப் பகடி எழுத்தின் மிகச்சிறந்த ஆக்கம் என்பது பண்டித நடேச சாஸ்திரி எழுதிய தலையணை மந்திரோபதேசம். 1901ல் எழுதப்பட்ட சிறிய நாவல் இது. அன்று நாவல் என்றபெயரே இல்லை. ஹாஸ்யகிரந்தம் என்றுதான் அறிமுகமாகியிருக்கிறது. அன்று இது புகழ்பெற்ற நூல். 1950களில்கூட இந்நூல் விரும்பிப் படிக்கப்பட்டது என்று க.நா.சு குறிப்பிடுகிறார்.
இதன் ஆசிரியர் நடேச சாஸ்திரி 1859ல் பிறந்தவர். 1906ல் மறைந்தார் தஞ்சைமாவட்டத்தில் பிறந்தவர். அங்கே மெட்ரிகுலேஷன் படிப்பை முடித்தபின் கும்பகோணம் கல்லூரியில் புகுமுக படிப்பை முடித்துவிட்டு சென்னை மாநிலக்கல்லூரியில் பி.ஏ. பட்டம்பெற்றார். பட்டம்பெறுவதற்கு முன்னரே நாகலட்சுமியை மண்ந்தார். 1881ல் இந்திய சாசன- சிற்ப காப்பகத்தில் ஊழியராகச் சேர்ந்தார்.
தொல்லியலில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த நடேச சாஸ்திரி தென்னிந்திய சிற்பக்கலைகளை ஆராய்ந்து ஆவணப்படுத்திய இ.பி.ஹாவல் அவர்களின் நெருக்கமான உதவியாளராக இருந்தார். தென்னகம் முழுக்க பயணம் செய்தார். இவருக்கு பதினெட்டு மொழிகள் தெரியும் என்றும் தென்னக கல்வெட்டுகள் மற்றும் சுவடிகளை ஒப்பிட்டு ஆராய்வதில் மிகப்பெரிய பங்களிப்பாற்றினார் என்றும் இவருடைய வாழ்க்கைக்குறிப்பில் சொல்லப்பட்டுள்ளது.
ஆங்கில ஆட்சியாளர்களின் கீழ் பல வேலைகளைப் பார்த்த நடேச சாஸ்திரி பதிவுத்துறை பொதுக் கண்காணிப்பாளர் பதவியை அடைந்தார். 1906, ஏப்ரல் 11 ஆம் தேதியில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ஆலயத்தில் நடந்த திருவிழாவில் கலந்துகொண்டார். அப்போது போடப்பட்ட அதிர்வெடியை கேட்டு அஞ்சி ஓடிய குதிரை இவரை உதைத்து கீழே தள்ளியதனால் உயிரிழந்தார். அப்போது இவருக்கு வயது நாற்பத்தேழு.
தீனதயாளு, கோமளம் குமரியானது, திக்கற்ற இருகுழந்தைகள், மதிகெட்ட மனைவி, மாமிகொலுவிருக்கை போன்ற நூல்களையும் எழுதியிருக்கிறார். தக்காணத்து மத்யகால கதைகள், நான்கு பக்கிரிகளின் கதை, தென்னிந்திய நாட்டுப்புறக் கதைகள் போன்ற நாட்டார்கதைகளை தொகுத்திருக்கிறார். வடமொழியிலிருந்து சாகுந்தலம், குமாரசம்பவம், ரகுவம்சம் போன்றவற்றை மொழியாக்கம் செய்திருக்கிறார்.
தலையணை மந்திரோபதேசத்தின் அமைப்பே ஆர்வமூட்டுவது.ராம்பிரசாத் என்ற குமாஸ்தாவுக்கு அவன் மனைவி அம்மணிபாய் 36 அத்தியாயங்களிலாக அளிக்கும் ‘அர்ச்சனைகள்’தான் இந்த நூல். ராம்பிரசாத் பெரும்பாலும் வாயே திறப்பதில்லை. அவ்வப்போது ஓரிரு சொற்கள் முனகுவதுடன் சரி. அம்மணிபாய் பொரிந்துகொட்டுகிறாள். கணவனின் ‘துப்புகெட்ட’ தன்மையை குத்திக்காட்டி, தன்னுடைய பொறுப்பையும் கஷ்டங்களையும் விரித்துரைத்து, அங்கலாய்த்து முடிக்கிறாள். ராமபிரசாத் அதை ஒருவகை தாலாட்டாக கேட்டுக்கொண்டு அப்படியே தூங்கிவிடுகிறான். இந்த இல்லறமென்னும் நல்லறத்தின் சித்திரமே இச்சிறியநூல்.
மந்திரோபதேசம் என்பது ஆன்மிகவழியில் முக்கியமானது. சீடனை உணர்ந்து அவனுக்கு வாழ்நாளெல்லாம் உடனிருக்கும் மந்திரத்தை செவியில் சொல்லி வழிகாட்டுவது அது. தலையணை மந்திரம் என மனைவி கணவனிடம் படுக்கையில் சொல்லும் முணுமுணுப்புகளை பிறர் பழிப்பதுண்டு. அதை ஒரு மந்திரோபதேசமாக நடேச சாஸ்திரி காட்டுகிறார். அம்மணிபாய் மிக ஆக்ரோஷமானவள். பேச ஆரம்பித்தால் நிறுத்துவதே இல்லை. அவளுடைய எல்லா கருத்துக்களும் ஒற்றைப்படையானவை. அதில் அவளுடைய பார்வை மட்டுமே உள்ளது,
அவள் ஒரு புனைவுலகை உருவாக்கி அங்கு நின்றே எல்லாவற்றையும் சொல்கிறாள். அதற்கும் உண்மைக்கும் தொடர்பில்லை. கணவன் ஒரு தத்தி, கூறுகெட்டவன், மனைவியை மதிக்காதவன், ஊதாரி, குழந்தைகள்மேல் அன்பில்லாதவன், ஊருக்கு இளைத்தவன் என்பதில் அம்மணிபாய்க்கு சந்தேகமே இல்லை. அதை சுட்டிக்காட்டி வசைபாடினால் அவனை சீர்திருத்தமுடியும் என்று நினைக்கிறாள்—அல்லது அது அவள் பாவனை. ராமபிரசாத் இடிவாங்கிக்கொண்டே இருக்கிறான்
அம்மணிபாயின் இந்த இயல்புக்கான காரணம் நூலில் தொடக்கத்திலேயே சொல்லப்பட்டுவிடுகிறது. அம்மணிபாய்க்கு சிறுவயதிலேயே நோய்கண்டு தலைமுடி உதிர்ந்துவிடுகிறது. ஒரு கால் கோணல். ஒரு கண்ணும் பார்வையில்லாதது. அழகும் ஆரோக்கியமும் இல்லாதவள். அவள் கணவன் ராமபிரசாத் அழகன், ஆரோக்கியமானவன். அம்மணிபாயின் பதற்றம் அங்கிருந்துதான் தொடங்குகிறது. ஒருவகையில் பரிதாபமான ஒரு வாழ்க்கை அம்மணிபாயுடையது.
அம்மணிபாயின் அப்பா சங்கரப்பிரசாத் செல்வந்தர். அவள் அவருக்கு ஒரே மகள். ராமபிரசாத் வறுமையான குடும்பத்தில் பிறந்தவன். சங்கரபிரசாத்தின் மகளை கொடுக்க அவர் முன்வந்ததும் ராமபிரசாத்தின் அப்பா வரதப்பிரசாத் பெரும் களிப்புடன் திருமணத்துக்கு வாக்கு கொடுததுவிட்டான். அப்படித்தான் அம்மணிபாய் ராமபிரசாத்துக்கு வாழ்க்கைப்பட்டள்.
இந்த தலையணை மந்திரங்கள் எப்படி ஆசிரியருக்கு தெரிந்தன? “தலையணையில் தலைவைத்தபடியே அம்மணிபாய் இவ்வுபதேசங்களை வாய்மலர்ந்தருளியபடியால் இக்கிரந்த்தத்துக்கு தலையணை மந்திரோபதேசம் என்று பெயரிடப்பட்டது. அச்சமயமன்றி மற்றவேளைகளிலும் இம்மாதுசிரோமணி செய்த உபதேசங்கள் வெகு சிலாக்கியமானவை. ஆகையால் அவைகளையும் இவ்வுபதேசங்களுடன் சேர்தது உலகத்திற்கு விளங்கச்செய்தோம்” என்று ஆசிரியர் சொல்கிறார்
“ஆனால் எழுதமட்டும் யோக்கியதை எப்படி வந்தது என்று கேட்டாலோ நாம் அதே சேலத்தில் ராமபிரசாத்தினுடைய அடுத்த வீட்டில் வெகுநாள் வரையில் வசித்தோமாகையினாலும், அம்மணியம்மாள் செய்த பிரசங்கங்கள் விசேஷமாய் நான்கு வீடுகள் மட்டுமே கேட்கும்படியான பிர்சங்கங்களாகையாலும் , அவைகளில் பலவற்றை நாமே நேரில் கேட்டிருக்கிறோமையாலும் நாமிவைகளை முற்றிலும் அறிந்துகொள்ளும் பாக்கியம் பெற்றோம்” என்கிறார். நான்குவீடுகளுக்கு கேட்கும் படுக்கையறை மந்திரம் இது!
அம்மணியம்மாளில் மொழிநடைக்குச் சான்று. “பார்த்தீர்களா பார்த்தீர்களா? உமக்கு எங்கேயாவது போகவேண்டுமென்றிருந்தால் அப்போது இப்படி யோசிக்கிறீர்களா? நான் வெளிக்கிளம்பவேண்டும் என்று ஒரு கேள்வி வாயைத்திறந்து கேட்டுவிட்டால் செலவென்ன பிடிக்கும் என்று அதட்டிக்கேட்கிறீர்கள். நீங்கள் தைப்பூசத்துக்கு ஒரு ஆள் புறப்பட்டுப்போய் பத்து ரூபாய் செலவிட்டு கூட பத்து ரூபாய் பணம் கடன் செய்து வந்தீர்களே…” இப்படியே போகும் நடை “சாப்பாட்டில் ருசிபார்த்து சாப்பிடப்பட்டவன் ஆம்பிள்ளையா? போட்டதை பசுப்போல் சாப்பிடப்பட்டவந்தான் யோக்கியன்” என்ற வகையான ஆழ்ந்த கருத்துக்களையும் வெளிப்படுததுகிறது.
கௌடபிராமண குடும்பத்தில் நிகழ்கிறது இக்கதை. அவர்களின் ஆசாரங்கள், அன்றைய கொண்டாட்டங்கள், அன்றைய புறவுலக நிகழ்ச்சிகள் போன்ற பலசெய்திகளை சொல்கிறது. அம்மணிபாய் மேலும் இரு துளைகள் காதுகுத்தி நகைபோட ஆசைப்படுகிறாள். அதற்கு லெப்பைப்பெண்கள் அடுக்கடுக்காக காதுகுத்தி ஏகப்பட்ட நகை போடவில்லையா என்ற கேள்வி. ராமபிரசாத்துக்கு பஜனை பாகவத கோஷ்டியில் ருசி. அது சூதாட்டம் போல வாழ்க்கையை கெடுப்பது என்பது அம்மணியம்மாளின் கருத்து.
அம்மணிபாய் சீக்கிரமே இறந்துவிடுகிறாள். ராமபிரசாத் உண்மையில் அம்மணியம்மாளின் அந்த சொற்தாண்டவத்தை ரசிக்கிறான். அவள் இறந்தபின்னர் அது தெளிவாக தெரியவருகிறது. அவள்குரல் அவனுக்கு கேட்டுக்கொண்டே இருக்கிறது. இளவயதிலேயே மனைவியை இழந்தாலும் அம்மணிபாயின் இடத்தில் இன்னொருவரை வைக்க அவன் மனம் இடம்தரவில்லை. ஆகவே அவன் மறுமணம் செய்யாமல் குழந்தைகளை வளர்த்தான் என்று இச்சிறு நாவல் முடிகிறது
அன்றாடக் குடும்ப வாழ்க்கை மீதான பகடி இந்நாவல். ஒவ்வொருநாளும் சிறுசிறு விஷயங்களால் வாழ்க்கை அலைக்கழிவதன் சித்திரம். எஸ்.வி.வி. பின்னாளில் இவ்வகையில் மேலும் எழுதியிருக்கிறார். அவருடைய தாசில்தார் கதைகளுக்குச் சமானமானது இது. குறிப்பாக எஸ்.வி.வியின் பால்கணக்கு என்ற கதை இந்நாவலின் நீட்சி என்றே தோன்றும்.
இந்நாவலை தமிழின் பகடி எழுத்தின் தொடக்கப்புள்ளி என்று சொல்லலாம். இன்றைய வாசிப்பிலும் வாய்விட்டுச் சிரிக்கவைக்கும் பல இடங்கள் உள்ளன. அதோடு இந்த இடிதாங்கிவாழ்க்கை இன்றும் அப்படியே நீடிக்கின்றது என்னும் மெய்யுணர்வு மேலும் சிரிப்பூட்டுகிறது
[தலையணை மந்திரோபதேசம், தமிழினி பிரசுரம்]