குருதியின் சதுரங்கம்

ஒருமுறை சும்மா நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது வேண்டுமென்றே மாலா சின்கா பற்றி சொன்னேன். பலருக்கு அந்தப்பெயரே தெரிந்திருக்காது என்று நன்றாகவே தெரியும். ‘நாங்கள்லாம் வேற உலகம், அந்த உலகம் இனி உங்களுக்கு கிடைக்காது’ என்ற கிழவர்களுக்கே உரிய பாவனைதான். ஆனால் நானே மாலாசின்ஹாவை பீம்பளாசியில் அமைந்த இந்திப்பாடல்களை தேடி

https://youtu.be/LUhfiIo_a7E

என்றபாட்டை கண்டடைந்து அதில்தான் முதன்முதலாகப் பார்த்தேன். தோளில் பையைப்போட்டுக்கொண்டு வரும் அந்த இயல்பான அசைவுகள் மிகவும் பிடித்திருந்தன. அவை ஒரு வங்காளப்பெண்ணுக்குரியவை. உடனே அவர் வங்காளமுகம் கொண்டிருப்பதாகப் பட்டது. கொஞ்சம் சீனச்சாயலோ என மயங்கவைக்கும் அத்தகைய முகங்கள் வங்காளத்திலுண்டு. அப்படியே அந்த சீனச்சாயல் கூடிக்கொண்டே சென்று மணிப்பூரில் மிக அழகிய ஒரு கலவையை அடைகிறது.

தேடிப்பார்த்தபோது ஆச்சரியம், மாலா சின்கா பிறப்பால் நேபாளி. இயற்பெயர் அல்டா சின்ஹா. அவருடைய அப்பா ஆல்பிரட் சின்கா வங்காளத்திலிருந்து நேபாளத்திற்கு புலம்பெயர்ந்து நேபாளி பெண்ணை மணந்துகொண்டவர். நேபாளத்திலிருந்து கல்கத்தா வந்து கல்விகற்ற ஆல்டா அங்கிருந்துதான் சினிமாவுக்கு வந்தார். அவரிடமிருக்கும் வங்காளச் சாயல், அல்லது உடற்பாவனைகள் அப்படி அமைந்தவை.

பல வட இந்திய நடிகைகளில் பட்டாணி குருதி உண்டு. சீனக்குருதியும் பட்டாணிக்குருதியும் கலக்கையில் மனீஷா கொய்ராலா போன்ற அரிய ‘அல்லாய்’கள் உருவாகின்றன.மாலா சின்ஹாவே சிலகோணங்களில் பழைய மனீஷா கொய்ராலா போல தோன்றுகிறார். குறிப்பாக நேப்பாளி என தெரிந்தபிறகு. வட இந்தியாவே பல இனங்களின் முகங்களை போட்டு சுழற்றி எடுக்கப்பட்ட கலைடாஸ்கோப்

வடஇந்திய நடிகைகளில் இப்படி முகங்களின் இனக்கலவைகளை ஆராய்வது மிகமிக ஆர்வமூட்டக்கூடிய ஒன்று. குறிப்பாக நள்ளிரவில் அமர்ந்து முகங்களின் குருதிக்கலப்புகளை தொடர்ந்து செல்லும்போது ஒருவகையில் வரலாறே நம்மைச்சூழ்ந்து விரிந்துகொண்டே செல்கிறது. திரும்பிப்பார்க்கையில் ஒரு மிகப்பெரிய வெளியில் நின்றிருப்போம்.

முந்தைய கட்டுரைதாகூரும் கிரீஷ் கர்நாடும்
அடுத்த கட்டுரைஇமைக்கணம்- வாக் சூக்தம்