இனிய ஜெ சார்,
நீங்கள் நாகர்கோவிலில் ஒரு கல்லூரியில் ஆற்றிய உரையில் அமெரிக்காவின் வாசிப்பு வெறியைப் பற்றி சொல்லியிருந்தீர்கள். அது தொடர்பான ஒரு செய்தி:
கடந்த ஆண்டு திரைப்படங்களுக்கு செல்வதை காட்டிலும் அதிகமாக அமெரிக்கர்கள் நூலகங்களுக்கு தான் சென்றுள்ளனர்:
https://lithub.com/in-2019-more-americans-went-to-the-library-than-to-the-movies-yes-really/
அன்புடன்
கிருஷ்ணன ரவிக்குமார்.
அன்புள்ள கிருஷ்ணன் ரவிக்குமார்
நன்றி
அமெரிக்காவின் வாசிப்புக்கு ஐரோப்பாவின் வாசிப்பு நிகரானது. பிரிட்டனில் எத்தனைபேர் நூல்களுடன் தென்படுகிறர்கள் என்று பார்த்தேன். மெட்ரோவில் பார்த்தே எந்த எந்த நூல்கள் ‘ட்ரெண்டிங்’கில் இருக்கின்றன என்று சொல்லிவிடமுடியும்
ஜெ
அன்புள்ள ஜெ
நீங்கள் வாசிப்பு பற்றி எழுதிய கட்டுரைகளை வாசித்திருக்கிறேன். மார்த்தாண்டம் கல்லூரியிலும் நாகர்கோயில் கல்லூரியிலும் வாசிப்பைப் பற்றி பேசுகிறீர்கள். மிக தர்க்கபூர்வமாக, மிக உணர்ச்சிகரமாக, கொஞ்சம் சீண்டும்படியாக பேசுகிறீர்கள். ஆனால் உண்மையில் இந்த வகையான பேச்சுக்களால் ஏதாவது பயனிருக்கிறதா? எவராவது மேற்கொண்டு படிக்க ஆரம்பிக்கிறார்களா?’
நான் முப்பத்தாண்டுகளாக கல்லூரியில் வேலை பார்த்து ஓய்வுபெற்றவன். நான் நூல்களை அறிமுகம்செய்து கொண்டே இருந்தேன். ஆனால் ஒருவர்கூட தொடர்ந்துபோய் நூல்களை வாசித்ததில்லை. என் வாழ்க்கை அந்தவகையில் மிகப்பெரிய வீணடிப்புதான்.
ஏன் வாசிக்க மாட்டேன் என்கிறார்கள்? வாசிப்பு ஒரு பழக்கம். சைக்கிள் ஓட்டுவதுபோல. அதை சின்னவயசிலேயே கற்றுக்கொடுத்தால் மேற்கொண்டு வாசிக்கமுடியும். நாம் காணும் மாணவர்கள் அப்படி அல்ல. அவர்கள் வளரும் சூழலில் வாசிப்புக்கே இடமில்லை. அவர்கள் கல்லூரிக்கு வரும்போதே மனம் ஒரு பாதையில் போய்விடுகிறது. மேற்கொண்டு வாசிப்பதே இல்லை
நான் திராவிட இயக்க ஆதரவாளன். ஆனால் வெளிப்படையாகச் சொல்கிறேனே. பிராமணர்கள் தவிர பிற சாதியினருக்கு வாசிக்கும் வழக்கம் மிகமிகக்குறைவு. அவர்களின் வீடுகளில் அந்த கலாச்சாரம் இல்லை. அவர்கள் வாசிப்புக்கு எதிரானவர்களும்கூட. அவர்களுக்கு வம்புச்சண்டைகளில் ஈடுபாடுண்டு, ஆனால் ஒரு புத்தகத்தை வாசிக்கமுடியாது
எஞ்சியிருக்கும் பிராமணர்களும் போய்விட்டால் தமிழகத்தில் புத்தகம் வாசிக்க ஆளிருக்காது
எம்.சென்னியப்பன்
அன்புள்ள சென்னியப்பன்,
கல்லூரிக்குச் சென்றுபேசுவதைப்போல வீண்வேலை வேறில்லை. இரண்டு காரணங்களுக்காகச் செல்லலாம். கொஞ்சம் பணம் கிடைக்கும். எழுத்தாளன் என்னும் அங்கீகாரம் கிடைப்பதாக எண்ணிக்கொள்ளலாம். ஆனால் அவையிரண்டுமே எனக்கு மிக அதிகமாக வேறிடங்களில் கிடைக்கின்றன. நான் செல்ல நேர்வது பெரும்பாலும் நண்பர்களுக்காக.
கல்லூரிகளில் என் பேச்சைக்கேட்டு நூல்களை வாசிக்க ஆரம்பித்த, நான் சொன்னவற்றைப் பற்றி எதையாவது மேலே யோசித்த, ஒருவரைக்கூட சென்ற பத்தாண்டுகளில் நான் சந்தித்ததில்லை. கேள்விப்பட்டதுமில்லை. அதற்கான வாய்ப்பும் இல்லை.
நான் எப்போதுமே மண்ணாந்தைவிழிகளையே எனக்கு முன்னால் பார்க்கிறேன். கிராமக்கல்லூரிகளில் மட்டுமல்ல மிக உயர்ந்த தர கல்லூரிகளில்கூட. ஒருமுறைகூட, ஒரு மாணவரைக்கூட, ஏற்கனவே கொஞ்சம் வாசித்தவர் என்று பார்க்கநேரிட்டதில்லை. பல உரைகளில் அந்த அவைபற்றிய என் அவநம்பிக்கையை சொல்லிவிட்டே ஆரம்பிப்பேன்.
உயர்தர கல்லூரிகளில் ஒன்றுமே தெரியாத மாணவர்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவாளிகள் என்னும் மாயையில் ஒருவகை அலட்சியத்துடன் அமர்ந்திருப்பார்கள். கிராமக்கல்லூரிகளில் அக்கறையே இல்லாமல் இருப்பார்கள். இவ்வளவுதான் வேறுபாடு
இங்குள்ள பிரச்சினை இளமையிலேயே அளிக்கப்படும் தீவிர மனப்பாடக் கல்வி. அத்துடன் வாசிப்பு மற்றும் அறிவியக்கம் மீதான ஆழமான அவநம்பிக்கையும் ஏளனமும் உடைய சூழல். நீங்கள் சமூக ஊடகங்களில் உலவுபவர் என்றால் பாருங்கள். எத்தனை லட்சம்பேர் அங்கே இரவுபகலாக அரட்டை அடிக்கிறார்கள். ஒரு புத்தகத்தை எவரேனும் குறிப்பிடுவது எத்தனைமுறை நிகழ்கிறது?
ஆனால் வாசிப்புக்கு, சிந்தனைக்கு எதிராக எத்தனை வசைகள், ஏளனங்கள் நாள்தோறும் எழுகின்றன. யாராவது ஓர் எழுத்தாளனை எவராவது வசைபாடிவிட்டால் எத்தனை பேர் ஆவலாக எழுந்துவந்து கூடி கும்மியடித்து மகிழ்கிறார்கள். இதுதான் சூழல்.
இச்சூழலில் இருந்து எழுந்துவரும் லட்சத்தில் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கிறேன். அவரிடம் நீ லட்சத்தில் ஒருவன், அந்தப்பொறுப்பு உனக்கு தேவை என்கிறேன். ஆயிரம்பேர் அவனிடம் ’நீ ஒன்றும் அரிதானவன் அல்ல. நாங்கள் படிக்கமாட்டோம், எதையும் தெரிந்துகொள்ள மாட்டோம். ஆனால் ஜனநாயகக் கொள்கைப்படி நீயும் நானும் சமமே’ என்று சொல்லி அவனைக் கீழிறக்க முயல்கிறார்கள். பலர் இதனாலெயே படிப்பதை நிறுத்திவிடுகிறார்கள்.
ஜெ