சீமைக்கருவேலத்திற்காக ஒரு குரல்
அன்பு ஜெ,
எழுத்து விரும்பப்படும்போது அது பிறந்த அகம் மகிழ்வுறுகிறது. நீங்கள் என் இந்த பயண அனுபவத்தை உங்கள் தளத்தில் பதிவிட்டது எனக்கு மிகப்பெரிய விடயம் ஜெ. அது தவிரவும் ஒரு சிறந்த வாசகரிடமிருந்து பாராட்டு பெரும்போது மேலும் மகிழ்வுறுகிறது மனம். இந்தத் தளம் உயிருள்ளது என்று எப்போதும் தோன்றும் எனக்கு. எத்தனை எண்ணங்கள், முகம் தெரியாத ஆன்மாக்கள், பகிர்வுகள், வாழ்க்கைகள், புனைவுகள், அபுனைவுகள், படைப்புகள், உணர்வுகள் என நிறம்பித் ததும்புகிறது. ஆம் உயிருள்ள தளம். உண்மையில் நானும் இந்த உயிருள்ள பிரபஞ்சத்திற்குள் ஒரு துளியாகி விட்டதான உணர்வு எனக்கு. நன்றி ஜெ.
கருவேலம் கட்டுரை பற்றி!
கருவேலத்தின் வரலாற்றையே கண் முன் நிறுத்திவிட்டிருந்தார்கள் லோகமாதேவி அவர்கள். சே! இத்துனை நல்ல மரத்தைப் போய் உயிர்கொல்லி அது இதுன்னு வாய்க்கு வந்தபடி திட்டிவிட்டோமேன்னு வருந்துமளவு பதிவு அமைந்துவிட்டது.
என் சிறுபிராயங்களில் கருவேலத்துடன் தான் என் காலங்கள் கழிந்திருக்கிறது. வெயில் கொதிக்கும் அந்த நாட்களிலும் அதன் பொய் நிழலில் வியர்வை சொட்டச் சொட்ட உட்கர்ந்து சொப்புச் சாமான்கள் வைத்து கூட்டாஞ்சோறு சமைத்திருக்கிறோம். அதன் காய் நெத்தை பிய்த்து தண்ணீர் ஊற்றி குழம்பு எனவும், பூவுரி என்று நாங்கள் பெயர்வைத்த அதன் பூவை \ பிய்த்து கூட்டு பொறியலாகவும், அரிசியைப் போன்றே இருக்கும் அதன் இலைகளை உருவி சிரட்டையில் வைத்து அரிசி என்று கூறியும் விளையாடியிருக்கிறோம். நாங்கள் மட்டுமல்ல எங்கள் மருத நிலத்துக் குருவிகளும் தன் கூடுகளைக் கட்டி அதை வரவேற்று தங்கள் பிரபஞ்சத்தில் சேர்த்துக் கொண்டன. அவர்கள் சொன்னது போலவே பிசின் எடுத்ததும், அத்தையுடன் சென்று விறகு வெட்டியதும் நினைவிற்கு வந்தது. ஆனால் இன்று எங்கள் ஊரிலும் கைவிடப்பட்டு அது ஓடையிலும்,காட்டிலும் பரவி விரவி கிடக்கிறது.
இன்று கருவேலத்தைப் போன்றே பலவற்றை அவ்வாறு நாம் திட்டிக் கொண்டிருக்கிறோமே என்று தோன்றியது ஜெ. ஜெர்சி பால், பிராய்லர் கோழிகள், ரீஃபைண்டு எண்ணெய்கள், பாலியஸ்டர் ஆடைகள், சத்தற்ற கொழுப்புமிக்க வெளி நாட்டு உணவுகள், மரபுரீதியாக மாற்றப்பட்ட விதைகள் இன்னும் பலவற்றை இந்த தலைமுறை எதிர்த்துக் கொண்டிருக்கிறது.
சந்தையாக மக்கள் மாற்றப்பட்டு அனைத்துமே திணிக்கப்பட்டதை உணர்ந்து ஒரு தலைமுறை வெளிவர, மாற்ற/மாற முற்பட்டுக் கொண்டிருக்கிறது. அதிக பயன்படுத்தலிருந்தும், தூக்கியெறியும் கலாச்சாரத்திலிருந்தும் காந்தியார் முன் மொழிந்த குறைந்தபட்ச தேவையுடைய வாழ்வை நோக்கி அடுத்த தலைமுறையை செலுத்திவிட முனைப்பாயிருக்கும் தலைமுறை இன்றுள்ளது. மரபுகளின் வேரை நோக்கித் திரும்பும் ஒரு தலைமுறை, புனிதங்களைக் கட்டுடைத்து, உள்ளுணர்வை, பகுத்தறிவு ஆத்திகத்தை நோக்கிச் செல்லும் ஒரு பின் நவீனத்துவ தலைமுறை என்றும் சொல்லலாம்.
காலங்காலமாக ஆட்சியாளர்களால் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருக்கின்றது. லோகமாதேவி அவர்கள் சொன்னது போல 1877 col.R.H.Bendome –னாலும், அதன் பின் பரவலாக காமராஜராலும் சீமைக்கருவேலம் அறிமுகப்படுத்தப்பட்டது போலவே இன்று நாம் எதிர்க்கும் பல விடயங்கள் காலங்காலமாக ஆட்சியாளர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது தான். இந்திரா காந்தி அவர்கள் இந்தியர்களின் தன்மானத்தைக் காக்க, உணவில் தன்னிறைவு பெற பசுமைப்புரட்சியைக் கொணர்ந்தார்கள். உணவில் தன்னிறைவு அந்தக் காலகட்டத்தைய தேவை. அதை நாம் இன்று பழிக்கலாகாது. ஆனால் தன்னிறைவுக்குப் பின் என்ன? என்ற கேள்வியில் தான் இன்று கரிம வேளாண்மையை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். எம்.எஸ் சுவாமி நாதன், வர்கீஸ் குரியனிலிருந்து இன்று நாம் நெல் ஜெயராமன் ஐயாவை நோக்கி வந்து கொண்டிருக்கிறோம்.
கருவேலத்தைப் போலவே எனக்கு நெருக்கமான இன்னொரு மரம் யூக்கலிப்டஸ். ஊட்டியில் என் பள்ளி வாழ்க்கையில் நித்தமும் ஒன்றரை கிலோ மீட்டர் நடந்து பயணம் செய்து செல்லும் வழியில் முக்கியமான மரம் இந்த யூக்கலிப்டஸ். அந்த இடத்தைத் தாண்டும்போது மட்டும் அனைவரும் நின்று வேடிக்கை பார்த்துவிட்டு அந்த தைல மணத்தை நுகர்ந்திருப்போம். பள்ளி விட்டு வரும்போதும் அவர்கள் தைலம் செய்யும் முறையை அங்கு வெகு நேரம் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருப்போம். மலைவாழ் மக்களுக்கு வாழ்வாதாரமாக யூக்கலிப்டஸ் அமைந்தது. ஆனால் வளர்ந்தபின் அதை ஒரு ஆக்கிரமிப்புச் செடி என்றும் மேற்குத் தொடர்ச்சி மலைக்கான உயிர்க்கொல்லி எனும்போதும் என் மனம் அதனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
கருவேலங்களுக்கும், யூக்கலிப்டசுகளுக்கும் இந்த விடயம் தெரியாது. அவை முளைக்க வைக்கப்பட்ட இடங்களில் மகிழ்ச்சியாக பயன் தந்து கொண்டிருக்கின்றது. ”உயிர்க்கொல்லி” என்று அவற்றை கடிந்திருக்கக் கூடாது.
ஆனாலும் இவை வரலாற்றில் ஆட்சியாளர்களின் பிழை தானே. விழித்துக் கொண்ட, மாற்றம் தேவைப்படும் தலைமுறைகளில் இது மாற்றம் பெற வேண்டும் தானே. ஐந்திணைகளை சங்கத்தில் பாடியிருக்கிறார்கள். அதன் கருப்பொருட்களன்றி இன்று கருவேலங்கள் ஆக்கிரமித்திருக்கும்போது அது அகற்றப்பட வேண்டும்தானே. கருவேலம் உண்டாக்கப்பட்ட காலகட்டத்திற்கான தேவை நிறைவுற்றது. அதன் விறகுகளை எரித்து என் பாட்டியும் சமைத்திருக்கிறாள். ஆனால் வீட்டின் உட்புற காற்று மாசுபாட்டை முற்றிலும் இல்லாமல் செய்யும் கேஸ் அடுப்புக்கு மாறிய பின்னர், அதன் விறகுகளை வெட்டித்தான் ஜீவனம் நடத்த வேண்டும், தொழிற்சாலையின் அடுப்பும், வீட்டின் அடுப்பும் எரிய வேண்டும் என்ற நிலையினின்று மீண்ட பின்னர் அதை அகற்றலாம் தானே. என் திணைக்கே உரிய கருப்பொருளை நான் காண வேண்டும் என்ற கனவை நான் காணலாம் தானே. உலகம் முழுவதும் இன்று சுற்றுசூழல், நீடித்த நிலையான வளர்ச்சி, தற்சார்பு பொருளாதாரம் ஆகியவற்றை நோக்கி மாறிவரும் காலகட்டத்தில் இந்த ஆக்கிரமிப்பு தாவரங்கள் பற்றிய விழிப்புணர்வு வந்தபின்னர் இவைகளை அகற்ற வேண்டும் என்ற எண்ணமும், அகற்றுவதும் நியாயம்தானே.
மதுரையிலிருந்து இடைக்காட்டூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை 87 -ன் வழியான பயணம் என்பது, வையையின் வலப்பக்கம் வழியாக செல்லக்கூடியது. இந்த இடைக்காட்டூர் வருவதற்கு பதினைந்து நிமிடத்திற்கு முன்னர் நம் சங்ககால நாகரிகத்திற்கு சான்றாக விளங்ககூடிய ”கீழடி” இருக்கிறது. வையை அங்கிருந்து ராமநாதபுரத்திலுள்ள ஆத்தன்கரை என்னுமிடத்தில் வங்கக் கடலில் கலக்கும் இடம் மிகவும் அழகு நிறம்பியது.
”வையை என்னும் பொய்யாக் குலக்கொடி
தையற்கு உறுவது தான் அறிந்தனன்போல
புண்ணிய நறுமல ராடை போர்த்துக்
கண்ணிறை நெடுநீர் கரந்தனள் அடக்கி”
வையை இளங்கோவால் இப்படி பாடப்பட்டது. இன்று வையை மணலால் தன்னை போர்த்திகொண்டு, மலர்களால் தன்னை அணிசெய்து கொள்ளவியலாது, வெறும் நூறே ஆண்டு பழமைகொண்ட ஓர் செடி ஆக்கிரமித்து காடே ஆகி இருமருங்கிலும் கருவேலத்தால் சுற்றப்பட்டு காலத்தில் சிதைவுற்றிருக்கிறாள். நாமே செய்த பிழையான கருவேலத்தை அகற்றினால் தான் மண்மகளுக்கு உகந்த, அவள் இயல்புக்கான செடிகளும் மரங்களும் முளைக்க வாய்ப்பிருக்கிறது. வையை கூவமானதையும் அவளுக்கான தாவரங்களின்றி அவள் கரைகள் கலையிழந்திருப்பதையும் பார்க்கையில் ஒரு பதபதைப்பு இருக்கிறது. அவள் பொய்யாக் குலக்கொடியாய் நறுமலராடை உடுத்தும் அந்தக் காட்சியைக் காணும் அவாவில் வந்த வருத்தமது. வருந்தலைமுறைக்கான ஒரு அழைப்பாக ஒரு அபாய அறிவிப்பாக அறை கூவலாக எடுத்தக் கொள்ள வேண்டியது அவசியம் என்று நினைக்கிறேன். கருவேலத்தினால் தான் எல்லா தவறும் என்பதல்ல ஆனால் கருவேலமும் ஒரு காரணம் எனக் கொண்டே ஆக வேண்டும். ஆனால் லோகமாதேவி அவர்கள் சொன்னதுபோல நன்றியுணர்வோடு கருவேலத்திற்கு பிரியாவிடை கொடுத்தாக வேண்டும். அவர்கள் கட்டுரை அவ்வாறான நன்றியுணர்வு நிறைந்ததாயிருந்தது. அவர்களுக்கு நன்றி.
அன்புடன்
இரம்யா.
கோவை