சிறுகதையின் திருப்பம்
அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,
சிறுகதையின் திருப்பம் பற்றிய உங்கள் விரிவான பதிலுக்கு நன்றி. நண்பர் ஒருவர் அண்மையில் தந்திருந்த அசோமித்திரன் சிறுகதைகள் (இரண்டு தொகுதிகள்) தற்போது வாசித்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் சொன்னது போல இறுதித் திருப்பம் சிறப்பாக அமைந்த மற்றும் உருவகத்தன்மை கொண்ட சிறு கதைகளை அவர் எழுதிருக்கிறார்.
சிறுகதையின் இறுதித் திருப்பம், முத்தாய்ப்பு, உருவகத்தன்மை என்பவை குறித்து நீங்கள் எழுதியவற்றைப் பற்றி சிந்தித்துப்பார்த்தேன். இதனால் நீங்கள் எழுதிய சிறு கதை , குறு நாவல் தொகுப்புகள், மற்றும் அறம் சிறுகதைகள் என்பவற்றில் சிலவற்றை எடுத்து இன்னொரு மீள்வாசிப்பின் மூலம் இதனைப் புரிந்து கொள்ள முயல்கிறேன். இவை என்னுடைய புரிந்து கொள்ளல் ஆதலினால் தவறுகளும் இருக்கக் கூடும்.
உங்களது ‘யானை டாக்டர்’, ‘மடம்’ , ‘பத்ம வியூகம்’ போன்ற கதைகளில் வலுவான ஒரு முடிவு வருகிறது. இதில் ‘யானை டாக்டர்’ தரும் தாக்கம் வலிமையானது, சிறுகதையின் முடிவுக்குப் பின்னே தொடராக சிந்தனையைத் தூண்டுவது, அதிலும் இங்கே அவுஸ்திரேலியாவில் ஏராளமான காட்டு விலங்குகள் அண்மையில் தீக்கிரையான சூழலில் இதனை நன்கு புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு நல்ல முத்தாய்ப்புடன் முடிந்த கதையாக யானை டாக்டரைக் கருதலாம். ‘மாடன் மோட்சம்’, ‘மடம்’ போல நகைச்சுவையான ஒட்டத்தில் எழுதப் பட்டிருந்தாலும் மாடன் மோட்சத்தில் உருவகத் தன்மை உண்டு. அவை இரண்டுமே ஒரு திருப்பத்தையடைகின்றன.
‘மடம்’, ‘மாடன் மோட்சம்’, ‘பத்ம வியூகம்’ போன்றவற்றை நாடமாக்க கூடிய அளவுக்கு காட்சிகளைக் கொண்டிருப்பன. அவை நாடகமாக்கப் பட்டாலும் அவற்றின் உச்சத்தை அடையும் என்று தோன்றுகிறது. பத்ம வியூகம், பாரதக் கதையை இன்றைய போர்ச் சூழலுக்கு அர்த்தம் தரும் வகையில் மீள் வார்ப்பு செய்யப்பட்டுள்ளதாயும் நிறைந்த கற்பனை வீச்சினைக் கொண்டதாயுமுள்ளது. அறம் சிறுகதையில் வரும் திருப்பம் எதிர்பாரா வலிமையான திருப்பம். தார் வீதியில் நடுவெயிலில் பிடிவாதத்துடன் அமர்ந்த அந்த தாயின் முடிவு சற்றிலும் எதிர் பாரா வகையில் கதையின் திசையை மாற்றுகிறது. வாசகர்கள் அந்த எழுத்தாளரின் தற்கொலையை பெரும்பாலும் ஊகித்திருக்கும் நிலையில் அந்த ஊகத்தைப் பொய்யாக்குகிறது இந்த திருப்பம்.
அறம், தாயார் பாதம் இரண்டும் ஒருவர் இன்னொருவருக்கு முன் நிகழ்ந்ததை சொல்லும் கதைகளாக விரிகின்றன. தாயார் பாதத்தில் வரும் திருப்பம் தாத்தாவின் முற் கோபம் பாட்டியின் வாழ்நாள் முழுதுமாக அவரை மாற்றி விடுவதை காட்டுகிறது. நூறு நாற்காலிகளில் வரும் கடைநிலை சமூகத்தின் பிரதிநிதியான காப்பன் இறுதியில் தாயின் இறப்புடன் அடையும் உத்வேகமே திருப்பமாகிறது. இக்கதை உங்கள் நாவலான ஏழாம் உலகத்தைப்போல மனதை ரணமாக்குகிறது.
ஓலைச் சிலுவை ஒரு காலகட்டத்தை பிரதிபலிப்பதாக இருந்தாலும் கூர்மையாக அவதானித்தால் அதிலுள்ள நுட்பங்களைப் புரிந்து கொள்ள முடிகிறது. தகப்பன் மரணப் படுக்கையில் கிடக்கிறான் என்று தெரிந்தும் அதை புரிந்து கொள்ள முடியாமல் ஆஸ்பத்திரி வாசலில் வேப்பம் பழங்களை பொறுக்கி அடுக்கி விளையாடும் மகன் சிறுவன். பசியின் கோரத்தைக் காட்டும் ஒரு இடம், சோறுண்பதாக கனவு கண்டு சப்புக் கொட்டும் சிறுமி. உதாரணத்துக்கு இந்த இரண்டும். இதில் வரும் முத்தாய்ப்பான முடிவு மிஷனரி சார்மவல் இந்துப் பெண்ணுக்கு கொடுத்த குருவாயூரப்பன் படமும், டேனியேலுக்கு கொடுத்த ஓலை சிலுவையுமே என்று தோன்றுகிறது.
டார்த்தீனியம் ஒரு உருவகக் கதையாகப் படுகிறது, அது அடையும் திருப்பம் படிப்படியானது. ஒரு அமைப்பின் பெரிய வீழ்ச்சியை சுட்டுவதாக கொள்ளலாமோ என்று தோன்றுகிறது. எல்லா கதைகளிலுமே பொதுவாக காணப்படும் திருப்பம் அல்லது முரணை, கூர்மையாகவும் உச்சமாகவும் கொண்டு செல்லும் உத்திகளும், அதற்கான வடிவங்களும் , மொழி நடையும் கதைகளின் வீச்சை உயர்த்தி விடுகின்றன. வாழ்த்துக்களுடன் விடை பெறுகிறேன்.
அன்புடன்
யோகன்
கன்பரா.