புவியரசு- கடிதம்

புவியரசு 90

அன்பு ஜெயமோகன்,

கவிஞர் புவியரசு அவர்களின் தொன்னூறாவது பிறந்தநாள் தொடர்பான கடிதம் கண்டேன்; மகிழ்ச்சியாய் இருந்தது. சில நாட்களுக்கு முன் அவரைப் பற்றி எழுத உத்தேசித்திருந்தேன். வழக்கம்போல, இயலாமல் ஆயிற்று.

2000-ஆம் ஆண்டுத் துவக்கத்தில் புல் தானாகவே வளர்கிறது(ஓஷோவின் மொழியாக்கம்) எனும் நூல் வழியாக புவியரசு அறிமுகமானார். பழுத்த தமிழாசிரியர் என்றாலும் அவரின் மொழிநடை ‘ஆசிரியத்தனமில்லாதது’. அதுவே அந்நூலைப் பலமுறை வாசிக்கச் செய்தது. ஓஷோ பித்து தலைக்கேறி இருந்த காலகட்டம் அது. இருநூறுக்கும் மேற்பட்ட ஓஷோவின் நூல்களைப் பல மாதங்களில் வாசித்துப் பெருமிதத்தோடு அலைந்த நாட்கள்; சிலசமயங்களில் சுற்றி இருப்பவர்கள் எல்லாம் அற்பப்பதர்களாக யோசித்திருக்கிறேன். பல மொழியாக்க நூல்களை புவியரசு அவர்களே செய்திருந்தார். அப்போது அவர் கோவையில் வசிப்பவர் என்பதும், அவரைச் சந்தித்து நெருக்கமாவேன் என்பதும் தெரியாது.

அப்போது கோவையில் நண்பர் சரவணன் இந்திப் பயிற்சி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். அவர் வழியாகவே புவியரசு ஐயா அவர்களின் முகவரி கிடைத்தது. நண்பர் சரவணன் குடியிருந்த சாய்பாபா காலணிக்கு அருகில் இருக்கும் கவுண்டம்பாளையம்தான் புவியரசு அவர்களின் ஊர். பலமுறை அவரைச் சந்திக்கலாமா வேண்டாமா எனத் தயங்கினேன். ஏதோ ஒரு கணம், தயக்கம் கடந்து அவரைச் சந்தித்து விடத் தீர்மானித்தேன்.

புவியரசு அவர்களை முதன் முதலாய் 2005-இல் சந்தித்தேன். கவுண்டம்பாளையம் தீயணைப்பு நிலையச் சாலையின் இறுதியில் எளிமையான சிறு ஓட்டுவீடு.  முதல் சந்திப்பில் கொஞ்சம் சுயஅறிமுகம் செய்து கொண்டேன். மேற்படி அவர் எதுவுமே கேட்கவில்லை. சரளமாய்ப் பேசத் தொடங்கி விட்டார். ஓஷோ, கவிதை, இலக்கியம் குறித்துப் பேசினோம். அவர் வானம்பாடி கவிஞர் என்பது தெரியும்; ம.பொ.சியின்ப் தமிழரசுக் கழகத்தில் இருந்தவர் என்பது தெரியாது. அத்தகவல் நீண்ட வருடங்களுக்குப் பிறகே தெரிய வந்தது.

கோவை ஞானியைச் சந்திக்கச் செய்ததும் அவர்தான். ஒருமுறை கோவை ஞானியின் கடவுள் ஏன் இன்னும் சாகவில்லை நூலைக் குறித்துப் பேசினேன். உடனே, அவரைச் சந்திக்கிறீர்களா என்று கேட்டு அவரின் தொடர்பு எணணையும் முகவரியையும் கொடுத்தார். அப்போது இருவருக்கும் இடையில் பேச்சுவார்த்தை இல்லை என நினைக்கிறேன். ஏனோ, கோவை ஞானியோடு நட்பைத் தொடர இயலவில்லை.

ஒருமுறை என்னை கோவை வர முடியுமா எனக்கேட்டார் புவியரசு ஐயா. “ஒஷோவை விட எளிமையான முக்கியமான ஆள் இருக்கார். போய் பார்ப்போம்!” என்றார். இப்போது ஸ்ரீபகவத் என்றழைக்கப்படும் பகவத் அவர்களை ஒரு நண்பர் வீட்டில் சந்திக்க வைத்தார். ஞானவிடுதலை எனும் அவரின் சிறுநூலையும் வாசிக்கும்படி சொன்னார். அப்போது சட்தர்ஷன் ஆனந்தகுமார்தான் பகவத் அவர்களின் கலந்துரையாடல் நிகழ்வுகளைக் கோவையில் ஒருங்கிணைத்துக் கொண்டிருந்தார். பகவத் உடனான அனுபவங்களை சூன்யப் பிரவாகம் எனும் நூலில் ஆனந்தகுமார் விரிவாகவே சொல்லி இருக்கிறார்.

மொழியாக்கங்களைக் கடந்து புவியரசு ஐயா அவர்களின் கவிதைகளும், படைப்புகளும் எனக்கு உவப்பானவையாக இல்லை. அதை அவரிடத்தில் பகிர்ந்து கொள்ளத் தயக்கம். இருந்தும், என் நடவடிக்கைகள் வழி அவர் அதைப்புரிந்து கொண்டிருக்கக் கூடும். அவரின் பல கவிதைகள் வானம்பாடித்தனத்துடன் இருந்தன. எனினும், சில கவிதைகள் நவீனத்தின் சாயலை இயல்பாகக் கொண்டிருந்தது. இளங்கவிஞர்களுடான பழக்கத்தில் தன் படைப்பாக்க முறையை மாற்றிக்கொண்டிருக்கிறார் எனக் கருதிக் கொண்டேன். எனினும், அவரின் நேரடி படைப்புகள் பலவற்றோடு இன்றுவரை எனக்கு உடன்பாடு இல்லை.

அவரின் கரமசோவ் சகோதரர்கள் மொழியாக்கம் தஸ்தாயேவ்ஸ்கியின் மாயத்தன்மைக்கு நெருக்கமாக நம்மைக் கொண்டு செலுத்தும். அந்நாவலை மொழிபெயர்க்கும்போது அடிக்கடி அவரைச் சந்தித்திருக்கிறேன். நாவலின் தத்துவ விசாரணைப் பகுதிகளை ஒரு போதகர் போல வியந்தோதுவார். கரம்சோவ் சகோதரர்கள் நூலை வாசிக்கத் தூண்டும்படியான சிறுநூல் ஒன்றையும் வெளியிட்டிருந்தார். கோவையைச் சேர்ந்த புலவர் ஆதி மற்றும் பேராசிரியர் முப்பால்மணி(சிறப்பான உலகாய்தக் கட்டுரைகளை எழுதியிருப்பவர்) போன்றோரை ஐயா வழியாகவே அறிந்தேன்; சந்திக்கவும் செய்தேன். முப்பால்மணி அவர்களைச் சந்தித்தபோது, உங்கள் விஷ்ணுபுரம் நாவலைக் குறித்த அவரது விமர்சனத்தை உற்சாகத்துடன் பகிர்ந்து கொண்டார்; ஆச்சர்யமாய் இருந்தது.

மார்க்சியச் சார்பு கொண்ட அவர் என்னிடம் ஒருமுறை கூட அதை வலியுறுத்திப் பேசியதோ, திணித்ததோ கூட கிடையாது. ஏன், கோவை ஞானி அவர்களைப் போல என்னிடம் கடுமை காட்டியதும் கிடையாது. புரட்சியின் மீது அலாதி விருப்பம் கொண்ட அவரின் ஆன்மீகப் புரிதல் ‘தோழர்களுக்கு’ ஆச்சர்யம் அளிப்பதாய் இருக்கக் கூடும். ஒருமுறை பேரூர் ஆதினத்துக்குச் செல்ல வேண்டி இருந்தது. அப்போது ஐயா அவர்கள்தான் தொடர்பு ஏற்படுத்தித் தந்தார். அக்கல்லூரி சென்றபோதுதான் தெரிந்தது, புவியரசு அவர்கள் அவ்வாதீனத் தமிழ்க்கல்லூரியின் துவக்க ஆண்டு மாணவர் என்பது.

நடிகர் கமலுக்கும் அவருக்குமான நெருக்கத்தைப் பலர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். என்றாலும், கமல் அவர்களின் பொன்விழா ஆண்டுக்கு(2010) இருவருடங்கள் முன்புதான் அதை நேரில் கண்டேன். பொன்விழாவை ஒட்டி அபூர்வ நாயகன் எனும் தொகுப்பைக் கொண்டு வர கவிஞர் புவியரசு அவர்களும் நானும் முடிவு செய்தோம். திரைத்தரத்திலான ஒரு அழகியல் நூலைக் கொண்டு வரும் எங்கள் முயற்சிக்கு கமல் ஒப்புதல் தந்துவிட்டதாகச் சொன்னார். வேலையைத் துவங்கினேன். ஒருநாள், “சத்தி! அடுத்த வாரம் சென்னை வர முடியுமா?” என்றார். “சொன்னீங்கன்னா வரலாங்கய்யா” என்றேன். ஆழ்வார்ப்பேட்டை வரச்சொன்னார். கமல் அவர்களின் வீடு(தற்போது அலுவலகம்). அப்போது கமல்ஹாசன் அவர்களின் அண்ணன் சந்திரஹாசன் உயிருடன் இருக்கிறார்.

ஐயாவே வந்து உள்ளே அழைத்துச் சென்றார். வீட்டின் ஒரு அறையில். என்னை நிற்கச் சொல்லிவிட்டு உள்ளே சென்றார். கறுப்பு டீ-சர்டுடன் இருந்த கமலை அழைத்து வந்தார். மூவரும் நின்று கொண்டேதான் பேசினோம். “நம்ம தம்பி.. பேரு சத்தி.. நான் உங்களுக்குச் சொன்னேன் இல்ல” என்றார். கமல் என்னிடம், “இவ்வளவு தூரம் எதுக்கு வந்தீங்க. ஐயா சொன்னா நான் சொன்ன மாதிரி. இந்த வேலைய மேற்கொண்டு செய்ங்க” என்றார். ஐயா குறுக்கிட்டு ”எதுவும் மாயையா தெரியக்கூடாதுல்ல.. அதான் தம்பிய வரச்சொன்ன்னேன்.. அப்புறம் ஒரு விஷயம்.. அந்தத் தொகுப்புக்கு உங்க படைப்பு ஏதாவது தரணும்” என்றார். கமல் “நான் ஒரு நாவலை ஆரம்பித்திருக்கிறேன். அதன் ஆரம்ப அத்தியாயத்தைத் தருகிறேன்” என்றார். அது இருமை அல்லது விண்டபின் சித்தார்த்தன் எனும் தலைப்பில் தொகுப்பில் இருக்கிறது. மறுமுறை கமலைச் சந்தித்தபோது, சிவவாக்கியர் பற்றிப் பேசினோம். பறைச்சியாவது ஏதடா எனும் பாடலை அவர் பாணியில் பாடிக் காட்டினார். நாட்டுநடப்பு குறித்த தனது அபிப்ராயங்களைப் பகிர்ந்து கொண்டார். அவரின் “ஞானமெனும் பெருஞ்சிங்கம் எறும்புகளை உண்பதில்லை; இறந்தபின்பு சிங்கத்தை எறும்புகள் உண்பதுண்டு” எனும் கவிதையைப் பற்றிச் சொன்னேன்.

இங்கு இன்னொரு விஷயத்தையும் நினைவுகூர வேண்டும். அபூர்வ நாயகன் தொகுப்பைக் கொண்டு வர அலைந்து கொண்டிருந்த பொழுதுகளில் புவியரசு ஐயாவே எனக்கு உதவினார். நடிகர் சிவகுமார் வழியாக ராம்ராஜ் காட்டன் நாகராஜ் அவர்களின் தொடர்புக்குத் தூண்டியவரும் அவரே. ராம்ராஜ் காட்டன் நிறுவனமே அந்நூல் வெளிவருவதற்குப் பெரிதும் காரணமாய் இருந்தது.

அபூர்வ நாயகன் தொகுப்பை கமல்ஹாசனைக் கொண்டாடுவதற்கு நாங்கள் வெளிக்கொணரவில்லை. அதன்வழி அவரின் ரசிகர்களுக்கும், அன்பர்களுக்கும் நவீன சமூகத்தைச் சேர்ந்த சில முக்கிய ஆளுமைகளின் பெயர்களையாவது கொண்டுசேர்த்து விட நினைத்தோம். கொஞ்சம் வாசிப்போம் கொஞ்சம் யோசிப்போம் எனும் தலைப்பில் 40 சிந்தனைகளை ரசிகர்களுக்கு இணக்கமான வடிவில் அத்தொகுப்பில் சேர்த்திருந்தோம். அச்சிந்தனைகளில் உங்கள் படைப்பில் இருந்தும் ஒன்று இடம் பெற்றிருக்கும். “வாழ்க்கை என்பது மலையேற்றம் போல / மலை ஏற ஏற ஒவ்வொன்றும் சிறியதாகி பார்வையை விட்டு மறந்தபடியே உள்ளன / ஏறி ஏறி உச்சியில் கால் வைத்ததும் மலையே அற்பமாகி மறைந்து விடுகிறது / ஏறும்போதெல்லாம் நான்நான் என்று நாமுணர்ந்த சுயமும் அற்பமாகி விடுகிறது / எல்லாவற்றையும் அற்பமாக்கி விடும் வானம் மட்டுமே எஞ்சுகிறது” எனும் உங்களின் சிந்தனையைப் பல ரசிகர்கள் என்னிடம் வியந்து பகிர்ந்து கொண்டனர். அப்போது உங்களின் ஒரு சில சிறுகதைகளை, கட்டுரைகளைப் படித்திருப்பேன்.. அவ்வளவே. அறம் தொகுப்பிற்குப் பிறகுதான் தீவிரமாய் உங்களை வாசிக்க ஆரம்பித்தேன். இன்றளவும் அது தொடர்கிறது.

சமீபமாய்(கொரோனா காலத்துக்குக் கொஞ்சம் முன்னர்) அவரைச் சந்தித்தேன். மிகைல் நைமியின் மிர்தாதின் புத்தகம் நூலை புவியரசு மொழிபெயர்த்திருந்தார். அந்நூலை வாசித்துவிட்டு அவரைச் சந்திக்க நினைதிருந்த சத்தியமங்கலம் ரேங்க் பள்ளித் தாளாளர் அருள் மற்றும் அவரின் நண்பர் கிரிஹரன் போன்றோருடன் கோவை சென்றிருந்தேன். உடல்நலக்குறைப்பாட்டுடன் இருந்தாலும் எங்களைக் கண்டதும் உற்சாகமானார். அருள் அண்ணன் அவரின் கால்களில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினார். “அட என்னங்க இது?” என்று ஐயா கூச்சப்பட்டார். நெகிழ்ந்தபடியே மிர்தாதின் புத்தகம் குறித்து ஐயாவிடம் அருள் அண்ணன் உணர்ச்சிவயமாய் உரையாடிக் கொண்டிருந்தார். புவியரசு ஐயா அவர்களின் உடலில் மழலைக் குறுகுறுப்பு நெளிந்து கொண்டிருந்தது. இரண்டு மணி நேரங்களில் விடைபெற்றோம். “சத்தி.. அடிக்கடி வாங்க!” என்றார்.

கொரோனா காலத்தில் அவரைத் தொடர்புகொள்ளவில்லை; சந்திக்கவும் வாய்ப்பில்லை. அத்தருணத்தில்தான் மயன் மகேஷ் அவர்கள் கவிஞர் புவியரசு குறித்த ஆவணப்படம் ஒன்றை எடுதிருப்பதை அறிந்தேன். விரிவாகவும் செறிவாகவும் இல்லாவிட்டாலும் அவரின் அன்பின் வெளிப்பாடு. அவ்வகையில் அது குறிப்பிடத்தகுந்த முயற்சி.

புவியரசு ஐயா அவர்களுக்கு 90 வயது ஆகிறது. என்னை விட ஒன்றரை மடங்கு வயது மூத்தவர். எனினும் ஒரு நண்பனைப்போலவே என்னிடம் பழகுகிறவர். இச்சமயத்தில் ஒரு நல்ல நண்பனாய் அவரை மனதார வாழ்த்துகிறேன், வயதில்லா விட்டாலும்.

சத்திவேல்

கோபிசெட்டிபாளையம்.

முந்தைய கட்டுரைஅஸ்வமுகி
அடுத்த கட்டுரைகமல்ஹாசனும் வெட்டிப்பூசலர்களும்