காந்தி, இந்துத்துவம், கியூபா

வெறுப்புடன் உரையாடுதல்

அன்புள்ள ஜெமோ

உங்களுக்கு நான் புதியவன் .உங்களுடைய “இன்றைய காந்தி” நூலைப் படித்துக் கொண்டிருக்கிறேன். பொதுவாக ஒரு நூலைப் படித்து முடிக்காமலேயே பாதியில் திறனாய்வு செய்வது முறையற்ற என்பதையறிவேன். இனி எழுதப் போவது திறனாய்வல்ல இரண்டு கருத்துக்கள் மட்டுமே என்பதை முதலில் சொல்லிவிடுகிறேன்.

“வெறுப்புடன் உரையாடுதல்” கட்டுரையில் கம்யூனிஸ்டுகளையும் மாவோயிஸ்டுகளையும் எடுத்துக்காட்டாக நீங்கள் முன்வைத்தாலும்  பக்கங்கள் 145 மற்றும் 146 லுள்ள அனைத்து வரையறுப்புகளும் இன்றைய சூழலில் பாஜகவினருக்கு தான் பொருந்துகின்றன.

இரண்டாவதாக ஆயுத எழுச்சி பற்றி எழுதும்போது எந்த நாட்டையாவது உதாரணம் காட்ட முடியுமா என்று வினவுகிறீர்கள். தென்னாபிரிக்காவை கூட காந்தியத்தின்  வெற்றிக்கு நீங்கள் உதாரணம் காட்டுகிறீர்கள். ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் வீழ்ச்சி என்பதாகவும் நீங்கள் எழுதி செல்கிறீர்கள். ரஷ்யா சீனாவை விடுங்கள். நீங்கள் முன்வைக்கும் கோட்பாடுகள் மற்றும் அறம் சார்ந்து கியூபாவை ஆய்வுக்கு உட்படுத்துவீர்களா?

ஆம் உண்மைதான் தென்னாப்பிரிக்காவில் மாண்டலா காந்திய வழிமுறையில் ஆட்சிக்கு வந்தார். இன்றைய கியூபாவின் சமூக நிலை என்ன? மக்களின் வாழ்க்கைத் தரம் என்ன ? தென்னாபிரிக்க சூழலுடன் நீங்கள் ஒப்பிட இயலுமா? இன்றைய மாபெரும் சிக்கலான கோரோனா நுண்தீயுயிரி(வைரஸ்) கொள்ளை நோயையே ஆய்வுக்கு எடுத்துக் கொண்டால் உலகில் உள்ள மற்ற நாடுகளின் நிலை என்ன? கியூபாவின் நிலை என்ன?  இங்கே எந்த தத்துவம் அறம் சார்ந்து உள்ளது?

ஐயா , காந்தீய விழுமியங்கள் குறித்து எனக்கு பெருமிதம் உண்டு. காந்தியை நான் திறனாய்வுடன்தான் அணுகுவேன். நிற்க!

உங்களது நிழலும் பின்தொடரும் மற்றும் வெள்ளையானை ஆகியவைகளை ஏற்கனவே படித்துள்ளேன். மீண்டும் எழுதுவேன் .

என்றென்றும்

அன்புடன்

நித்தில வாணன்.

அன்புள்ள நித்திலவாணன்

அழகியபெயர். முத்துக்களின் தலைவன். உங்கள் அப்பா போட்ட பெயர் என்றால் ரசிகர் அவர்

காந்தியைப்பற்றிய உச்சகட்ட அவதூறுகள், வசைகள், பழிப்புக்கள் இன்று இந்துத்துவர்களிடமிருந்தே வருகின்றன. நாளும் காதில் விழுந்துகொண்டிருக்கின்றன. ஆனால் இந்நூல் 2008- 2009 ல் என் தளத்தில் கட்டுரைகளாக எழுதப்பட்டது. அன்று தமிழ்ச்சூழலில் இந்த்துவர்களின் குரல் இத்தனை வீரியமானதாக இருக்கவில்லை. அன்றுவரை தமிழகத்தில் காந்திமீதான பழிகளைச் சுமத்திக்கொண்டிருந்தவர்கள் இடதுசாரிகள், திராவிட இயக்கத்தவர், தலித் தரப்பினரே.

அந்நூல் இயல்பாக எழுதப்பட்டது. நான் எழுதிய காந்தியைப் பற்றிய ஒருவரிக் கருத்துக்கு எதிராக மிகமிகக் கடுமையான கண்டனங்கள் வந்தன. ஆதாரமில்லாத வெறுப்புமொழிகள் அவை. அன்றெல்லாம் இணையச்சூழலில் காந்தி ஒரு பொதுஎதிரியாகவே கருதப்பட்டார். அத்தனை தீமைக்கும் உறைவிடமானவராக. காந்திமேல் இடதுசாரிகள், திராவிட இயக்கத்தவர் போன்றவர்களுக்கு நல்லெண்ணம் வந்தது இந்துத்துவர்களின் எதிரியாக காந்தி ஆனபோதுதான்.

அந்த வசைகளுக்கு நான் மறுமொழி அளித்தேன். ஆனால் எழுத எழுத மேலும் ஐயங்களும் அவதூறுகளும் வந்தன. காந்தியை வெறுப்பவர்கள், காந்திமேல் ஆர்வம்கொண்டவர்கள், காந்திமேல் நம்பிக்கை இருந்தாலும் கேள்விகளால் அலைக்கழிக்கப்பட்டவர்கள் என மூவகையினர் இருந்தனர். அவர்களின் கேள்விகளுக்கு விடையாக எழுதப்பட்டதே பின்னர் நூலாகத் தொகுக்கப்பட்டது. அந்த எல்லா கேள்விகளும் மேலே சொன்ன திராவிட, இடதுசாரிக் கருத்தியல் தரப்புகளிடமிருந்து வந்தவையே. இந்துத்துவத் தரப்பிலிருந்து எதிர்ப்புகள் எவையும் அன்று எழவில்லை.

இந்துத்துவ தரப்பு வலுவடைந்து முதன்மை எதிர்க்குரலாக ஆகத்தொடங்கியது மேலும் இரண்டு ஆண்டுகளுக்குப்பின் 2010 முதல்தான். இன்னும் சொல்லப்போனால் 2014ல் அவர்கள் ஆட்சிக்கு வந்தபின்னர்தான் அவர்களின் குரலில் பெரும் மாற்றம் வந்தது. பிரச்சாரம் செய்வதனால் உடனடி அரசியல் லாபம் உண்டு என்னும் நிலையும் வந்தது. நாம் காணும் உயரழுத்தப் பிரச்சாரமெல்லாம் அதன்பின்னர்தான்

2014ல் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த சிலநாட்களிலேயே, ஆம் மிகச்சில நாட்களிலேயே, உருவான மாற்றம் என் வாழ்க்கையின் மிகமுக்கியமான ஒரு பாடம். அதுவரை ஒரு முகம் காட்டி அணுக்கமாக இருந்த ஒருசில நண்பர்கள் சட்டென்று இன்னொரு முகம் காட்டலாயினர். சாதிப்பழமைவாத முகம், ஆனால் அதை அரசியல்முகமாக காட்ட ஒரு வெளி அமைந்தது அவர்களுக்கு. அஞ்சிக்கொண்டிருந்தவர்களுக்கு தன்னம்பிக்கை வந்தது. முந்தைய நிலைபாடுகளை உதறினர். நல்ல நட்புகளை உதறினர்.

நான் நம்பி விரும்பிய நண்பர்களிடமிருந்து காழ்ப்பையும் எள்ளலையும் வசைகளையும் சந்திக்க நேர்ந்தது.உண்மையில் இங்கே சாதி வகிக்கும் பங்கென்ன, அரசியல் அதில் ஊடுருவும் விதம் என்ன என்பதை புரிந்துகொள்ளும் வாய்ப்பு அமைந்தது. அந்த கசப்புகள் என்னை எதிர்மனநிலை கொண்டவராக ஆக்கிவிடலாகாது என்பதில் உறுதியாக இருந்தேன்.

இன்றைய காந்தி இன்று இந்துத்துவர் முன்வைக்கும் வாதங்களுக்கும் உரிய பதில்தான். பின்னர் எழுதிய உரையாடும் காந்தி போன்ற நூல்களில் மேலும் விரிவாக அப்பதில்கள் அளிக்கப்பட்டுள்ளன.

*

வன்முறையின் வெற்றி குறித்து தொடர்ச்சியாக எழுதிவருகிறேன். வன்முறையால் ஓர் ஆட்சிமாற்றம் நிகழ்ந்தால் அதை வன்முறையால் மட்டுமே நிலைநிறுத்திக்கொள்ள முடியும். அந்த நிலத்தில் நேரடி வன்முறை ஓர் அரசியல் கருவியாக நிலைகொள்ளும். அது அடக்குமுறை அரசையே உருவாக்கும். உலகவரலாறு காட்டுவது அதையே.

வன்முறையில்லாமல் நிகழும் ஆட்சிமாற்றம் இழப்புகள் அற்றது. அது வன்முறையற்ற அரசியலுக்கான வாய்ப்பை வழங்குகிறது. அதை அந்த மக்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றால், அல்லது பிழையாக பயன்படுத்திக்கொண்டால் அது அந்த அரசியல் வழிமுறையின் தோல்வி அல்ல. வன்முறைப்பாதையில் அந்த மாற்றம் நிகழ்ந்திருக்கவேண்டும் என்பதற்கான சான்றும் அல்ல. அந்த மக்களின் தோல்விதான். வன்முறை அரசியல் மக்களுக்கு அந்த வாய்ப்பையே அளிப்பதில்லை என்பதுதான் நான் சொல்லவருவது.

ஜனநாயகத்தின் சிறப்பு என்பது அது தன்னைத்தானே சீரமைத்தபடி முன்னகர்கிறது என்பதே. ஜனநாயகத்தில் எல்லா தரப்பும் தன்குரலை முன்வைக்க, அரசியல் சக்தியாக மாற, ஆட்சியாளர்களுக்கு அழுத்தம் அளிக்க இடமிருக்கிறது. ஒரு ஜனநாயகத்தில் நிகழும் எல்லா போராட்டங்களும் அந்த ஆட்சி தன்னை சரியான சமநிலையில் வைத்திருப்பதற்காகச் செய்யும் முயற்சிகள்தான். ஜனநாயகம் எதிர்ப்புகள் போராட்டங்கள் உள்முரண்கள் வழியாக, தொடர் சமரசங்கள் வழியாகவே முன்னகர்கிறது.

ஜனநாயகத்தில் இருக்கும் இந்த அம்சமே அதன் வல்லமை. அது அனைவருக்கும் இடமளித்தேயாகவேண்டும். சமரசங்கள் செய்தேயாகவேண்டும். பிழைகளைக் களைந்து முன்செல்ல அதில் இடமிருக்கிறது. அதில் ஒரு குழப்பநிலை, ஒரு முட்டிமோதல் இருப்பதுபோல தெரியும். ஆனால் குழப்பநிலை, முட்டிமோதல் இருந்தால் ஜனநாயகம் ஆக்கபூர்வமாகச் செயல்படுகிறது என்றுதான் பொருள்.

வன்முறை வழியாக ஆட்சிக்கு வந்தவர்களிடம் வன்முறையால் நிகழும் ஆட்சிக்கைப்பற்றல் குறித்த அச்சம் எப்போதுமிருக்கும். ஆகவே அவர்கள் சர்வாதிகாரத்தையே ஆட்சிமுறையாகக் கொள்வார்கள். தங்களுக்கு எதிரான சிறு விமர்சனங்களைக்கூட தங்களை அழிக்கும் முயற்சியாக பார்ப்பார்கள். எதிர்க்குரல்களை முற்றாக நசுக்குவார்கள். விளைவாக விமர்சனமற்ற ஓர் அரசியல், எதிர்நிலைகள் இல்லாத ஓர் அரசு உருவாகிறது. அரசின் பிழைகள் சுட்டிக்காட்டப்படுவதில்லை. நீண்டகால அளவில் பிழைகள் பெருகி பேரழிவு உருவாகிறது.

சர்வாதிகாரத்தில் ஜனநாயகத்திலுள்ள குழப்பநிலை இருப்பதில்லை. அங்கே ‘அமைதி’ நிலவுவதுபோல தோன்றும். அங்கே ஒற்றைப்படையான கருத்துநிலை நிலவுகிறது. அங்கே ஆதிக்கம் என்ன சொல்கிறதோ அதுவே மேலோட்டமாகத் தென்படுகிறது. அதுவே அந்நாடு பற்றி நாம் அடையும் சித்திரமாக உள்ளது. அது உண்மை அல்ல

கியூபா மிகச்சிறிய நாடு. அதன் பொருளியல் ருஷ்யா போன்ற பெரிய நாடுகளின் பேணலில் தாக்குப்பிடிப்பது. அமெரிக்காவுக்கு நேர் கீழே ஒரு ஆயுதத்தளம் தனக்குவேண்டும் என்ற ருஷ்யாவின் நோக்கமே க்யூபாவின் நிலைநிற்புக்கான ஆதாரம். மற்றபடி அது எந்த தளத்திலும் எந்த வெற்றியும் பெற்ற ஒரு நாடு அல்ல. அங்கே புரட்சிக்குப் பின் இருந்தது சர்வாதிகார ஆட்சி மட்டுமல்ல, பரம்பரை ஆட்சியும்கூட. காஸ்ட்ரோவுக்குப் பின் அவர் தம்பி பதவிக்கு வந்தார். கிட்டத்தட்ட அரைநூற்றாண்டுக்காலம் ஒரே அரசு, மறுகேள்வி இல்லாத ஆட்சி. எந்தவகையான உரிமைகளுமில்லாத மக்கள் அரைநூற்றாண்டாக ஒரே ஆட்சியின்கீழ் வாழ்கிறார்கள்.

அந்த ஆட்சி அங்கே நல்லாட்சி அளிக்கிறது என்பதை நாம் நம்பவேண்டும் என நமக்கு அந்த அரசு சொல்கிறது. உண்மையில் அங்கே நல்லாட்சி நடைபெறுகிறது என்றால் அங்கே பலகட்சி தேர்தல் நடந்து, மக்களின் முன் பல வாய்ப்புகளில் ஒன்றாக ஆளும் ட்சியும் போட்டியிட்டு, பெருவாரியான ஆதரவைப் பெற்று ஆட்சியில் அமரட்டுமே. ஏன் அஞ்சுகிறார்கள், ஏன் ஒடுக்குகிறார்கள்?நினைவில்கொள்ளுங்கள், 1988ல் பெரிஸ்த்யாய்க்கா -கிளாஸ்நோஸ்த் வருவதற்கு முன்பு ருஷ்யா பற்றி இதைவிட வண்ணம் மிக்க சித்திரமே இடதுசாரிகளால் அளிக்கப்பட்டது. அதற்குரிய எல்லா புள்ளிவிவரங்களும் கிடைத்துக்கொண்டிருந்தன.

உண்மையிலேயே அங்கே நல்லாட்சி நிகழ்கிறது என்றால்கூட அந்த முறையை உலகிலுள்ள மற்றநாடுகளுக்கு நீங்கள் சிபாரிசு செய்வீர்களா? கியூபா மிகச்சிறிய நாடு. அந்த ஆட்சியை ஒரு சிறு புரட்சியாளர் குழு அதிரடியாக கைப்பற்றிக்கொண்டது. அப்படி ஆட்சியை கைப்பற்றிக்கொண்ட ஒரு குழு அரைநூற்றாண்டாக வாரிசுரிமையாக ஒரு நாட்டை ஆண்டதென்பது ஒரு நல்ல அரசியல்முறை என சொல்வீர்களா? எதிர்க்குரலே இல்லாமல் அரசுக்கு முன் மக்கள் அடிபணிந்து வாழ்வது நலம் பயக்கும் அரசியல் என்கிறீர்களா? அங்கே எல்லாம் நல்லபடியாக நிகழும் என்று உண்மையிலேயே நம்புகிறீர்களா?

ஆம் என்று சொல்வீர்கள் என்றால் நீங்கள் இன்றைய காந்தியை கொஞ்சம் முதிர்ந்தபின் மீண்டும் படியுங்கள் என்றே சொல்வேன்.

ஜெ

காந்தியும் தலித் அரசியலும் -கடிதம்


இன்றைய காந்தி வாங்க

உரையாடும் காந்தி வாங்க

 

முந்தைய கட்டுரைகே.ஜி.ஜார்ஜ்- ஆவணப்படம்
அடுத்த கட்டுரைஅஞ்சலி:டிராஃபிக் ராமசாமி