வடக்கு- சாவு,மீட்பு

வணக்கம் ஜெ

நம் பழைய இலக்கியங்களில் ‘வடக்கிருத்தல்’ பற்றி வருகிறது. இதற்கு ‘வட திசை நோக்கி உண்ணா நோன்பிருந்து உயிர்விடல்’ என்றே பொருள் கொள்ளப்படுகிறது. அதேபோல் ‘தென்புலத்தார்’ என்பது ‘இறந்த மூதாதையர்கள்’ என்று தென்திசை மரணத்தோடு  (யமன்) தொடர்புபடுத்தப்படுகிறது. இதற்கான காரணங்கள் யாது ?

தற்போது நான் ந.சுப்பிரமணியனின் ‘சங்ககால வாழ்வியல்’ நூல் வாசித்துக் கொண்டிருக்கிறேன். அதில் அவர் கூறுகிறார்:

“வட மொழியில் வடதிசை புண்ணியதிசை. உலகத்தைத் துறந்து இறக்கத் துணிந்தவர்களை வடக்கு நோக்கிக் கிடத்தினர். இது வடமொழியில் மஹாபிரஸ்தானம் அல்லது உத்தரகமனம் எனப்படும். ஒருவேளை, ஆரியர்கள் தெற்குதிசையை காலனோடு பொருத்தி அமங்கலமாகக் கருதியதுபோல, பண்டைத் தமிழர் தொடக்க காலத்தில் வடதிசையை காலன் திசையென்று கொண்டு சாவதற்கு வடக்கு நோக்கினார் ஆகலாம்.”

தமிழர்கள் வடதிசையை இறப்புக்கு உரியதாகக் கருத்தியிருப்பின், ஏன் தென்திசையை இறந்தவர்களுக்கு குறிப்பிட வேண்டும் ?

மேலும், முதற்சங்க இடைச்சங்க காலத்தில் தென்திசையில் இருந்ததாகக் குறிப்பிடப்படும் தென்மதுரை, கபாடபுரம் கடல்கோளால் அழிந்துபட்டதாகச் சொல்லப்படுகிறது. அதாவது, தமிழகத்தின் தென்பகுதியில் உள்ள நிலம் கடல்கோளால் அழிந்ததால் தமிழர்கள் தென்திசையை மரணத்தின் திசையாகக் கருதினர் என்று எப்போதோ படித்த ஞாபகம்.

ஆரியவர்தத்தின் தென் எல்லையான தண்டக வனம் (Dandaka Forest) அடர்த்தியான  நாகர்கள் வாழும் காட்டுப்பகுதியாக, ‘துர்’பிரதேசமாக, அப்பகுதிக்கோ அல்லது அதைத்தாண்டி தென்பகுதிக்கோ மக்கள் செல்லக்கூடாது என்றும் அமிஷ் திரிபாதியின் நாவலில் வருகிறது.

இதற்கெல்லாம் அடிப்படை எது ? திசைகள் குறித்த இந்த குறியீட்டுத் தன்மைக்கு வெறும் இயற்கைசார்ந்த விஷயங்கள் (கடல்கோள் அல்லது அடர்வனம்) தான் காரணமா அல்லது வேறு காரணம் உள்ளதா ?

விவேக்

அன்புள்ள விவேக்,

பொதுவாகவே தொன்மங்கள் எப்படி உருவாயின என்பதை புரிந்துகொள்ள முடியாது. சமூகவியல் விளக்கம், உளவியல் விளக்கம், ஆன்மிகவிளக்கம் என பலவகையில் நாம் அளித்துப்பார்க்கலாம். எவையுமே அவற்றின் தோற்றுவாய்க்கான முழுமையான விளக்கமாக அமைவதில்லை.

அப்படியென்றால் இந்த விளக்கங்கள் ஏன் அளிக்கப்படுகின்றன? அவை இந்த தொன்மங்களை விளக்குவதற்குரியன அல்ல. இந்த தொன்மங்களைக்கொண்டு வேறுசிலவற்றைப் புரிந்துகொள்வதற்கான வழிமுறைகள் மட்டுமே

தொன்மங்கள் போன்றவற்றை சமூகவியல் போன்ற புறவயமான நோக்கில் விளக்கிக்கொள்வது மிகப்பெரிய பிழையாக அமையும் என்பதை நித்யா உரைகளில் வேடிக்கையாகச் சொல்வதுண்டு. மனிதன் பாம்பை அஞ்சினான், ஆகவே தெய்வமாக்கினான் என்றால் ஏன் அதை விட அஞ்சப்பட்ட முதலை தெய்வமாக ஆகவில்லை என்று அவர் கேட்டதை நினைவுறுகிறேன்.

டி.டி.கோசாம்பி வேதங்களை ஆராய்ந்த வழிமுறையைப் பயன்படுத்தி தமிழ் நவீனக்கவிதைகளை ஆராய்ந்தால் தமிழர்களின் முதன்மையான தொழிலும் பொழுதுபோக்கும் பறவைவளர்ப்பும் பட்டாம்பூச்சி பிடிப்பதும்தான் என்று முடிவுக்கு வரவேண்டியிருக்கும் என நண்பர்களுடனான ஓர் உரையாடலில் சொன்னார்

ஆகவே இந்தவகையான பார்வைகளை மிகுந்த எச்சரிக்கையுடன், நாம் செய்யும் சமூகவியல் ஆய்வுக்கான தேவையைச் சார்ந்து மட்டுமே முன்வைக்கவேண்டும். முடிவான கூற்றாகச் சொல்லிவிடக்கூடாது.

திசைகளை எவ்வண்ணம் மூதாதையர் கண்டனர் ஏன் என்பதை நூல்கள் காட்டுகின்றன. கிழக்கு இந்திரனுக்குரியது. மேற்கு வருணனுக்கு. வடக்கு குபேரனுக்கு தெற்கு யமனுக்கு. எட்டுதிசைகளாக கொண்டால் வடகிழக்கு ஈசானனுக்கு.தென்கிழக்கு அக்னிக்கு.வடமேற்கு வாயுவுக்கு.தென்மேற்கு நிருதிக்கு

இந்த எட்டு திசைத்தெய்வங்களுமே இன்று மையவழிபாட்டில் இல்லை. எட்டுமே வேதகால தெய்வங்கள். ஈசானனும் நிருதியும் எவரென்றே இந்துக்களுக்கு பெரும்பாலும் தெரியாது. இதிலிருந்து இந்த திசைத்தெய்வங்கள் மிகத்தொல்காலத்திலேயே உருவகிக்கப்பட்டுவிட்டன என்பதைக் காணலாம்.

வாஸ்துசாஸ்திரம் போன்றவற்றில் நடைமுறை சார்ந்தும், தாந்த்ரீக துறையில் குறியீடு சார்ந்தும் இத்தெய்வங்கள் இத்திசைகளுக்குரியவையாக இருப்பதற்கு பொருள்கொள்ளப்படுகிறது.முடிவான பொருள் இன்னதென ஊகிக்கமுடிவதில்லை

திரு சுப்ரமணியன் அவர்களின் கருத்து சரியானது அல்ல. அவருடைய பார்வையில் உள்ளது அக்காலத்தில் பழக்கத்திலிருந்த ஒரு கோணம். அதாவது எல்லாவற்றையும் ஆரியருக்கு நேர்எதிராக தமிழர் அல்லது திராவிடர் செய்தனர் என்பது. இதைச் சொல்வதற்கு முன் தமிழ் செவ்வியல்மரபும் நாட்டார்மரபும் என்ன சொல்கின்றன, கேரள மரபு என்ன சொல்கிறது என்றெல்லாம் அவர்கள் ஆராய்வதில்லை. ஊகங்களை அப்படியே சொல்லிவிட்டுச் செல்கிறார்கள்

இந்து தொல்நூல்களிலும் மகாபாரதத்திலும் தெளிவாகவே சொல்லப்பட்டுள்ளது. மூதாதையர் திசை தெற்குதான். அதுதான் யமனுக்குரியது. நீத்தோருக்கான திசை.

தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று

ஐம்புலத்தார் ஓம்பல் தலை

என்று குறள் சொல்கிறது. தென்புலத்தார் என்பது நீத்தாரை. நீத்தாரின் திசை தெற்கே. குறள் சமணரால் இயற்றப்பட்ட ஆக்கம் என நான் நினைக்கிறேன். அவர்களுக்கும் நீத்தார் திசை தெற்கே. அவர்கள் ஆலயங்களின் சிற்பங்களிலும் அப்படித்தான் உள்ளது.

சுடலைமாடசாமி கதை, மாயாண்டிக்கதை போன்றவற்றிலும் தெற்கே சாவின் திசை. ‘தெக்கோட்டு போறான்’ என நாட்டார் பாடலில் வந்தாலே சாவுக்குச் சென்றான், செத்தான் என்று பொருள். ‘உன்னை தெக்கோட்டு எடுக்க’ என்ற சாபமும் நாட்டார் கதைகளில் உண்டு.

ஆனால் மீட்புக்கான திசை வடக்கு. அதுவே கயிலை இருக்கும் திசை. நாட்டார்பாடல்களில் தெய்வங்களாக ஆகும் நீத்தோர் வடக்குசென்றுதான் சிவனை சந்தித்து அழிவிலா வரம், பலிகொள்ள வரம் பெறுகிறார்கள். தெய்வமாக ஆகிறார்கள். நாட்டார் தெய்வங்களின் வடதிசைப் பயணம் அடிக்கடி காணக்கிடைக்கிறது

மீட்பு ,சாவு இரண்டும் வேறுவேறு. திரு சுப்ரமணியன் அவர்கள் இரண்டையும் ஒன்றென காண்கிறார். பழைய நம்பிக்கை அப்படி அல்ல. பழைய நூல்களின்படி விண்புகுவது இருவழிகளில். மனிதர்கள் பொதுவாக உடல்நலிந்து சாவு எய்தி நீத்தோர் உலகு சென்று, அங்கே நீர்க்கடன்களுக்காக காத்திருந்து பெற்றுக்கொண்டு,நிறைவடைந்து முழுமைநிலை அடைகிறார்கள். அவர்கள் செல்லும் திசை தெற்கு

இன்னொருசாரார் நேராகவே முழுமைநிலை அடைகிறார்கள். யோகிகள், துறவிகள் போன்றோர். அவர்கள் செல்லும் வழி வடக்கு. அதாவது இறந்து விண்புகும் வழி தெற்கு. விடுதலைபெற்று விண்புகும் வழி வடக்கு என்று கொள்ளலாம்

உயிர்துறக்கும் நோன்பை மட்டும் அல்ல எல்லா நோன்புகளையும் வடக்குநோக்கி அமர்ந்தே செய்யவேண்டும் என்று ஆசாரம் சொல்கிறது. மங்கலச் செயல்களுக்கு கிழக்கு நோக்கியும் தவம்,நோன்பு ஆகியவற்றுக்கு வடக்குநோக்கியும் அமரவேண்டும். படிப்பும் ஒரு நோன்பு என்பதனால் படிப்பதற்கு வடக்குநோக்கி அமர்வதே சிறந்தது. கலைகள், கைத்தொழில்கள் ஆகியவற்றுக்கும் வடக்குநோக்கி அமரவேண்டும். உணவுண்பதை மட்டும் வடக்குநோக்கி அமர்ந்து செய்யக்கூடாது.

இதெல்லாம் நெடுங்காலமாக கேரளத்திலுள்ள வழக்கங்கள்தான். இதற்கு பலவகை சோதிட விளக்கங்களும் உண்டு.அதெல்லாம் மிகவும் சிக்கலானவை.

ஜெ

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருதுவிழா- கடிதங்கள்
அடுத்த கட்டுரைவெண்முரசின் நிலமும் மக்களும்