இந்துமதமும் ஆசாரவாதமும்

ராம் மோகன் ராய்

 இராமலிங்க வள்ளலார்

அன்புள்ள ஜெமோ,

இந்த இணைப்பிலுள்ள தகவல்களைப் பற்றி உங்கள் கருத்து என்ன? கருத்து இல்லை என்ற கருத்தை சொல்லமாட்டீர்கள் என்றும் கொஞ்சம் புளிச்சமாவாக இருந்தாலும் பரிமாறுவீர்கள் என்றும் நினைக்கிறேன்.

அன்புடன்

தேவ்ராஜ்

இந்து மதம் மைனஸ் பார்ப்பனீயம்

அன்புள்ள தேவ்ராஜ்

இதை இன்று காழ்ப்புடன் அடிவயிற்றை எக்கி கூச்சலிட்டுப் பேசிக்கொண்டிருக்கிறார்கள் – எல்லா தரப்பிலும். கொஞ்சம் நிதானமாக, கொஞ்சம் வரலாற்றுணர்வுடன் பேசமுடியுமா என்பதே நான் தொடர்ச்சியாக முயன்றுவருவது. ஒரு பத்துபேருக்கு அது சென்றுசேருமென ஒவ்வொரு முறையும் எண்ணிக் கொள்வேன். ஆகவே மீண்டும் முயல்கிறேன்.

மேலே சொன்ன கட்டுரையிலுள்ள கருத்துக்கள், அவற்றை வலியுறுத்திப் பேசும் பழமைவாத- ஆசாரவாத குரல்கள் ஆகியவற்றை இந்துமதத்தின் மறுமலர்ச்சிக்காலம் முதல், அதாவது பதினெட்டாம்நூற்றாண்டின் இறுதி முதல், மிகக்கடுமையாக விமர்சித்துப் பேசிவந்திருக்கின்றனர் இந்து மெய்ஞானிகள். ராஜா ராம்மோகன் ராய், ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், வள்ளலார், சட்டம்பிசாமிகள், நாராயணகுரு என ஒரு நீண்ட மரபு அதற்கு உண்டு.

அவர்களில் நாராயணகுருவின் வழிவந்த நித்யசைதன்ய யதியின் மாணவன் நான். நித்யா குருகுலத்தில் வேதம் கற்பிக்கப்பட்டது, வேள்விகள் செய்யப்பட்டன. தலித் பூர்வீகம் கொண்ட துறவிகள் வேள்வி செய்திருக்கிறார்கள். அந்த மரபு இன்றும் தொடர்கிறது.

ஆகவே இக்குரல்களை முற்றாக நிராகரிப்பதற்கும், மரபுவாதம் ஆசாரவாதம் ஆகியவற்றை நான் ஏற்க முடியாது என அறிவிப்பதற்கும் எனக்கு எந்த தடையும் இல்லை. இவர்களின் ஆசாரவாதம் மானுட அறத்தை மறுக்கும் என்றால் அதை கடுமையாக எதிர்ப்பதும் உண்டு. அதை எப்போதும் சொல்லி வந்திருக்கிறேன்.

‘ஆனால்’ என்று சொல்லி இரண்டு விஷயங்களை மேலதிகமாகச் சுட்டி வருகிறேன். முதலில் ஆசாரவாதத்தின் வரலாற்று பங்களிப்பை சுட்டவிடும்புகிறேன். இரண்டாவதாக சமூகச்சூழலில் நாம் கொள்ளும் சில சாதியச்சூழ்ச்சிகளை.

மரபுவாதம் அல்லது ஆசாரவாதம் எல்லா மதங்களிலும் இருக்கும். இது ஒருவகை வண்டல். இதை எந்த மதமும் முற்றாக அகற்றிவிட முடியாது.

ஏனென்றால் மதம் என்பதே ஆன்மிகத்தேடலை, ஆன்மிகப்பயிற்சியை நிறுவனமாக ஆக்கி உறையவைக்கும் முயற்சி. எந்த மதமும் ‘நிலைத்த தன்மை’ யைத்தான் தன் இலக்காக ஆக்கியிருக்கும். பூமியில் மானுடம் உள்ளவரை இதுவே உண்மை என்றுதான் அது சொல்லும். தன் மெய்மையை மட்டுமல்ல அதற்குச் சம்பந்தமில்லாத ஆசாரங்கள், நம்பிக்கைகள் ஆகியவற்றையும் காலம்கடந்த மெய் என்றே அது சொல்லும்.

பௌத்தமதத்தவரிடம் சென்று சங்கம் என்ற அமைப்பு புத்தரால் ஒரு குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது, ஆகவே இனிமேல் அது தேவையில்லை என்றும்; தலாய் லாமா, தேரர் போன்றவர்களை புனிதமான தலைவர்களாக கொள்ளவேண்டாம் என்றும் சொல்லமுடியுமா? மறுப்பார்கள். அவை காலமுடிவு வரை நீடிக்கும் மாறாத அமைப்புக்கள் என்றே சொல்வார்கள். மன்னராட்சி ஒழிந்தபின் எதற்கு போப்பாண்டவர் என்னும் மதத்தலைமை மன்னர் என்று கேட்கமுடியுமா?

மதத்தின் உள்ளே அதை மாறாது தக்கவைக்கும் ஒர் இயல்பு, ஒரு பிடிவாதம் இருந்துகொண்டே இருக்கும். அந்த இயல்பால்தான் அது ஒரு தொடர்ச்சியை அடைகிறது. ஒரு நிறுவனமாக நீடிக்கிறது. அந்தப்பிடிவாதம் இல்லாத மதங்கள் அழிந்துவிடும். ஆகவே இன்றைக்கு ஒரு மதம் நெடுங்காலமாக இருந்து நம்மிடம் வந்து சேர்ந்திருக்கிறதென்றாலே அதற்குள் மாறாமலிருக்கும் பிடிவாதம் ஒன்று செயல்படுகிறது என்றுதான் பொருள்.

அந்த இயல்புக்கு இரண்டு முகம் உண்டு.அதன் நன்மை என்னவென்றால் அதுதான் தொன்மையான மெய்நூல்களை, மெய்மையின் வெளிப்பாடான தொல்படிமங்களை அழியாது காப்பது, தலைமுறைகளுக்குக் கொண்டுசென்று சேர்ப்பது. கத்தோலிக்கத் திருச்சபை இல்லையேல் இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்து கிறிஸ்துவின் சொற்கள் வந்துசேர்ந்திருக்காது. மிக இறுக்கமான அமைப்பும், மிகப் பிடிவாதமான பயிற்சிகள் இருந்தமையால்தான் திபெத்தில் பௌத்த மூலநூல்களும்,ஞானமும் அழியாமல் நீடித்தன.

இந்துமதத்தின் சாராம்சமாக இருக்கும் இந்த ஆசாரவாதமும் பழமைவாதமும்தான் சென்ற காலங்களில் மிகமிக எதிர்மறையான சூழல்களில்கூட இந்துமதத்தின் மெய்நூல்களை, தொல்படிமங்களை அழியாமல் பாதுகாத்தன.தங்கள் ஆசாரவாதத்தின் பொருட்டு எல்லா உலகியல் நன்மைகளையும் துறக்கவும், உயிர் கொடுக்கவும் சித்தமாக இருந்தவர்களால்தான் உலகமெய்ஞானத்தின் பொக்கிஷங்களாக இந்துமத எதிர்ப்பாளர்களால்கூட சொல்லப்படும் உபநிடதங்கள்கூட பேணி அடுத்த தலைமுறைக்கு அளிக்கப்பட்டன.

இந்தப் பிடிவாதம், அனைத்து மாற்றங்களையும் எதிர்த்துநிற்கும் தன்மை கொண்டது. ஆகவே முன்னேற்றமற்றது. இதன் நற்கொடை என்பது ‘அடிப்படைகளைப் பேணிக்கொள்ளுதல்’ என்பதுதான். நடைமுறைப் பார்வை கொண்டவர்களுக்கு இதெல்லாம் அபத்தமானதாக, ஆபத்தானதாக தோன்றலாம். ஆனால் முற்போக்காளர் அந்தந்தக் காலகட்டத்து தேவைக்கு ஏற்ப அப்போது உதவாதவை என தோன்றுவதை உடனே கைவிட்டுவிடுவார்கள். அவர்களால் எவையுமே நெடுங்காலம் பேணப்படாது.

நடைமுறைநோக்கு கொண்டவர்கள் மட்டுமே மதங்களுக்குள் இருந்திருந்தால் அவ்வண்ணம் கைவிடப்பட்டவை அப்படியே அழிந்துபோகும். மீட்டெடுக்கவே முடியாது. மதத்துக்கு மட்டுமல்ல ஒரு பண்பாட்டுக்கு மட்டுமல்ல மானுட குலத்துக்கே அது பெரிய இழப்பு. மீளமுடியாத ஒருவழிப்பாதை. பார்த்துக்கொண்டே இருங்கள், நீங்கள் இளையவர் என்றால், ஐம்பதாண்டுகள் இன்னும் வாழ்வீர்கள் என்றால், ஜப்பானில் பௌத்தம் வெறும் வரலாற்றுச்சின்னமாக, வெறும் சுற்றுலாக் கவற்சியாக பொருளிழந்து போயிருப்பதை காண்பீர்கள்.கொரியாவில் ஏற்கனவே அப்படி ஆகிவிட்டது.

ஆசாரவாதிகள் எதையும் விடமாட்டார்கள். எதையும் மாற்ற மாட்டார்கள். ஏன் அப்படி இருக்கிறார்கள்? ஆசாரம் என்பதே மாறாச்சடங்குதான். அந்தப்பிடிவாதம் கொண்டவர்கள்தான் ஆசாரவாதிகள். அவர்களின் வழி அறிவார்ந்தது அல்ல. நடைமுறைநோக்கம் கொண்டதும் அல்ல. ஆராய்ந்து தெளிவது ஞானமார்க்கம். ஆசாரமார்க்கம் என்பது உறுதியாக கடைப்பிடிப்பது மட்டுமே. எது நன்று எது தீது என்று, எது தேவை எது தேவையில்லை என்று, தாங்களே மதிப்பிடும் அறிவார்ந்த அளவுகோல்கள் அவர்களுக்கு இல்லை. அவர்களுடையது சுருதிவாதம். முன்னோர்சொல், முன்செல்லும் வழிகாட்டியான ஆசிரியனின் சொல் ஆகிய இரண்டையும் முழுமையாக கடைப்பிடிப்பது அவர்களின் செயல்முறை. அந்த முன்னோர் சொல் எனும் சுருதி சொல்லும் எல்லாமே அவர்களுக்கு மரபுதான்.

இத்தரப்பை மதத்தின் நிலைச்சக்தி [Static force] என்று நான் சொல்வதுண்டு. பகுப்பாய்வுசெய்யும், மாற்றங்களை உள்வாங்கிக்கொள்ளும் ஞானத்தின் வழிதான் செயல்சக்தி. [Dynamic force] இவ்விரு சக்திகள் நடுவே இருக்கும் முரணியக்கமே மெய்யான இயக்கவியலாக இருக்கமுடியும். நிலைச்சக்தி மட்டும் இருந்தால் ஒரு மதத்தின் எடை மிகுந்து அசைவின்மை உருவாகும். செயல்சக்தி மட்டுமென்றால் புகையென நிலையில்லாமல் பறந்து கலைந்து அழியநேரிடும்.

எந்த தளத்திலும் என் பார்வை இதுவே. எண்பதுகளில் நான் நவீன இலக்கியத்திற்குள் வந்தபோது பொதுவாக அத்தனை நவீன இலக்கியவாதிகளுமே மரபான தமிழறிஞர்களுக்கு எதிரானவர்களாக இருந்தனர். அவர்களை கேலியும் கிண்டலும் செய்தனர். மரபான தமிழறிஞர்களை நையாண்டி செய்து அனைவருமே ஏதாவது கதை கவிதை எழுதியிருப்பார்கள்—புதுமைப்பித்தன் முதல் சுந்தர ராமசாமி வரை.அதிலும் தனித்தமிழியக்கம் போன்றவை மிகவும் பழிக்கப்பட்டன. அவை தமிழ்ப் பழமைவாதம் என்று கணிக்கப்பட்டன.

அந்த தமிழ் அடிப்படைவாதத்திற்கு எதிரான போக்கு அன்று சிற்றிதழ்ச்சூழலில் வலுவாக இருந்தது. சிற்றிதழ், பதிப்பகப் பெயர்களே கூட யாத்ரா, க்ரியா என்றெல்லாம் வைக்கப்பட்டன. தமிழறிஞரான வைத்திலிங்கம்கூட பிரபஞ்சன் என்று பெயர்வைத்துக்கொண்டார்.

உண்மையில் தமிழ் அடிப்படைவாதம் அன்று கொஞ்சம் தூக்கலாகவே இருந்தது. அது இலக்கணவாதம் பேசி அத்தனை நவீன இலக்கியங்களையும் நிராகரித்தது. பழமைப்பெருமை பேசி புதியன புகாதவாறு பார்த்துக்கொண்டது. ‘தமிழில் இல்லாதது இல்லை’ என்ற நிலைபாடு எல்லாவகையான புதிய திறப்புகளுக்கும் தடையாக அமைந்திருந்தது. கல்விக்கூடங்களில் தமிழ்ப்பழமைவாதிகள் இருந்து நவீன இலக்கியம் உள்ளே நுழையாதபடி பார்த்துக்கொண்டனர்.பழமையை புகழ்வதற்குப் பதிலாக பகுப்பு செய்து ஆராய்வதேகூட பிழை என எண்ணும் மடமையும் கொண்டிருந்தது. சுராவின் கட்டுரையில் சொல்வதுபோல ‘தமிழில் மிகமிகமிகச் சிறந்ததாக அல்லாமல் ஏதாவது கவிதை உண்டா?”என்ற நையாண்டி நவீன இலக்கியச்சூழலில் நிலவியது.

ஆனால் நான் தனித்தமிழியக்கத்தை, தமிழ்ப்பழமைவாதத்தை, சொல்லப்போனால் தமிழ் அடிப்படைவாதத்தையேகூட தொடக்கம் முதலே ஆதரித்தேன். எனக்கு முறையான பழந்தமிழ்க்கல்வி இருந்தது ஒரு காரணம். ஆனால் அதைவிட தமிழ்போன்ற தொன்மையான மொழிச்சூழலில் அடிப்படைவாதம் இல்லையென்றால் அறிவும், நூல்களும் பேணப்படாமல் அழியும் என நினைத்தேன். தமிழ்ப்பற்று இல்லையேல் தமிழ் தன் தனியடையாளம் கெட்டு உருவழியும் என நம்பினேன். தமிழ்போன்ற தொன்மையான மொழியில் பெரும்பணிகள் நிகழவேண்டும் என்றால் மூர்க்கமான பற்று, வாழ்நாளையே கொடுக்கும் வெறி தேவை என்று நினைத்தேன். இன்றும் என் நிலைபாடு அதுவே.

வெறுமே தமிழ்வெறியை கக்கிக்கொண்டிருப்பவர்கள், எந்த பணியும் செய்யாதவர்கள் எண்ணிக்கையில் மிகுதிதான். அவர்களால் பயனில்லைதான். ஆனால் அந்த வேகம் இல்லாவிட்டால் தமிழ் வாழமுடியாது என்பதும் உண்மை. நான் என்றும் நவீன இலக்கியத்தின் தரப்புதான், ஆனால் எனக்கு மறுபக்கமாக வலுவான மொழிப்பழமைவாதம், அதன் பிடிவாதம் இருக்கவேண்டும் என நினைத்தேன், இன்றும் நினைக்கிறேன். இப்போதுகூட மொழிப்பழமைவாதிகளை எப்போதுமே ஏற்கும் ஒரு நிலைபாடு என்னிடமிருப்பதை நண்பர்கள் கண்டிருக்கலாம்.

அன்றுமுதல் தமிழியக்கத் தரப்புடன் நான் உரையாடிக்கொண்டே இருந்தேன். தனித்தமிழ் இதழ்கள் அன்று நிறைய வந்தன. அவற்றில் நிறைய எழுதினேன். என் மொழியிலும் கூடுமானவரை அயல்மொழி களைந்து தமிழ்ச்சொற்களை கையாண்டேன். தேவையென்றால் புதிய சொற்களை உருவாக்கிக்கொண்டேன். நான் மீட்டுக் கொண்டுவந்த, உருவாக்கிய சொற்களால் தமிழ் இலக்கியச் சூழல் உரையாடுவதை பின்பு கண்டேன். தமிழ் நவீன எழுத்தாளர்களில் முற்றிலும் தனித்தமிழில் கொற்றவை, வெண்முரசு போன்ற பெருநூல்களை நான் ஒருவனே எழுதியிருக்கிறேன்.

இதுவே மதம் சார்ந்தும் என் நிலைபாடு. நிலைச்சக்தி அப்படித்தான் இருக்கும். அங்கே அது இருப்பதனால் ஒன்றும் ஆவதில்லை. அதைக்கொண்டு நான் மதத்தை அளவிடவில்லை. அந்த நிலைச்சக்தி ஒரு எதிர்விசையாகவே உள்ளது. செயல்சக்தியே இன்று மேலோங்கியிருக்கிறது.

இந்த தரப்பையே கேளுங்கள். இன்று இவர்கள் எவரைநோக்கிப் பேசுகிறார்களோ அந்த பிராமணசமூகம் இவர்கள் பேசுவதையா பின்பற்றுகிறது? அது பெண்களை பூட்டிவைக்கிறதா? விதவைகளை வாழாமல் தடுக்கிறதா? கலப்புமணங்களையே அது இயல்பாக ஏற்றுக்கொண்டு ஒரு தலைமுறை கடந்துவிட்டது.

இந்துமதத்தில் இந்த ஆசாரவாதிகள்தான் வழிகாட்டிகளா? இன்று இந்துமதம் வேதங்களை மொழியாக்கம் செய்து எல்லா மொழிகளிலும் பரப்பும் மாபெரும் அமைப்புக்களை கொண்டிருக்கிறது. இங்கே வேதங்களை மொழியாக்கம் செய்து மூலத்துடன் அச்சில்கொண்டுவந்தவர் ஜம்புநாதன் என்னும் அந்தணர்தான். இன்று ஊர் ஊராக பிராமணர்கள்தான் சம்ஸ்கிருதப் பள்ளிகள் நடத்துகிறார்கள். சம்ஸ்கிருத திணிப்பு நடக்கிறது என்று நீங்களே இன்னொரு பக்கம் கூவுகிறீர்கள் இல்லையா?

இது ஒரு குரல், இருந்துகொண்டே இருக்கக்கூடிய ஒரு பிடிவாதம், அவ்வளவுதான். இந்த மதிப்பீடுகள் எங்கே இந்துமதத்தை கட்டுப்படுத்துகின்றன? உண்மையில் அது வலுவாக இல்லை என்பதே பலசமயம் என் மனக்குறை. இப்படி சிறுவட்டங்களுக்குள் தங்களுக்குள் முணுமுணுக்கிறார்கள். ஆனால் ஆலயவழிபாட்டில் ஆகமநெறிகள் சிதைக்கப்படுகின்றன. அங்கே போய் மாற்றங்கள், திரிபுகளுக்கு எதிராக இவர்கள் நின்றிருக்கவேண்டாமா? மாறக்கூடாதவை என நம்பும் விஷயங்களுக்காக இவர்கள் குரல்கொடுத்திருக்கவேண்டாமா?

வரலாறெங்கிலும் நிலைச்சக்தி செயல்சக்தி இரண்டும் மாறிமாறி ஓங்கியிருப்பதை காணலாம். கிபி ஐந்தாம் நூற்றாண்டுமுதல் மூன்று நூற்றாண்டுக்காலம் இந்துமதம் இந்தியநிலத்தின் வழிபாட்டுமுறைகளை எல்லாம் தொகுத்துக்கொண்டு பேரமைப்பாக எழுந்தபோது நிலைச்சக்திகளாகிய இவர்கள் மையமாக ஒலித்தனர். மையத்தொகுப்புக்கான இழுவிசையாக இருந்தனர்.

பின்னர் பக்திக்காலத்தில் இவர்களுக்கு எதிரான செயல்சக்தி மேலோங்கியது. பக்திகாலகட்ட கதைகளையே பாருங்கள், வேதபண்டிதர் அல்லது ஆசாரசீலர் அடையமுடியாத இறையருளை அவை ஏதுமற்ற வெறும் பக்தன், கீழ்க்குலத்தான் அடைந்ததைத்தான் அக்கதைகள் பேசும். சூத்திரசாதிகளின் [சிரமண ஜாதிகளின்] எழுச்சியே பக்தி இயக்கம். அதன் நாயகர்கள் அனைவரும் ஆசாரவாதத்திற்கு எதிரானவர்கள். வெவ்வேறு குலங்களை சார்ந்தவர்கள்.

இந்து மதம் கடுமையான தாக்குதல்களுக்கு ஆளான பன்னிரண்டு முதல் பதினெட்டு வரையிலான காலகட்டத்தில் இந்த நிலைச்சக்தியின் தரப்பு மீண்டும் ஓங்கியிருந்தது. அது தன்னை தக்கவைப்பதற்கான போர். மரபு அழியாமல் காக்கவேண்டிய சமர். அதை நடத்தவேண்டியவர்கள் இவர்கள். அதை வெற்றிகரமாக நடத்தியும் காட்டினர்.

பதினெட்டாம்நூற்றாண்டின் இறுதியில் இந்துமதச்சீர்திருத்த அலையாக செயல்சக்தி மேலெழுந்தது. இன்றுவரை அதுவே தொடர்கிறது. இந்துச் சீர்திருத்த அலை பல படிகள் கொண்டது. இந்துமதத்தை ஐரோப்பிய தாராளவாதச் சிந்தனைகளுடன் இணைத்து நவீனப்படுத்தும் ஒரு போக்கு [ராஜா ராம்மோகன் ராய் உதாரணம்] இந்துமதத்தின் அறிவார்ந்த மையத்தை மட்டுமே முன்வைக்கும் போக்கு [சுவாமி விவேகானந்தர் உதாரணம்] என இரு போக்குகள் ஆரம்பகாலத்தில் உருவாயின

அடுத்தபடியாக இந்துமதத்தில் இருந்து மெய்யியலை மட்டுமே எடுத்துக்கொண்டு மதஅடையாளங்களை கடந்து உலகளாவ முன்வைக்கும் போக்கு உருவாகியது. ஜித்து கிருஷ்ணமூர்த்தி, ஓஷோ முதல் இன்று ஜக்கி வாசுதேவ் வரை உதாரணம். ஆசாரவாதிகள் இந்த மூன்று மரபையுமே எதிர்ப்பார்கள். ஆனால் இது இப்படி நிகழ்கிறது என்பதே வரலாறு.

நான் இந்துமதத்தின் மெய்யியல் சாரம்சமே முதன்மையானது என நம்புபவன். ஞானமார்க்கத்தை தெரிவுசெய்தவன். வேதாந்தியான நாராயணகுருவின் வழிவந்தவன். இந்த செயல்சக்தியே இந்துமதத்தின் இன்றைய தேவை என நினைப்பவன். ஆனால் நிலைச்சகதி இருப்பதை கண்டு வெறுப்படையவில்லை.

இரண்டாவதாக இந்தக் காணொளிகளில் உள்ள சாதியச் சூழ்ச்சிகளுக்கு வருகிறேன். மேலே காட்டிய காணொளிகளில் பேசுவதுபோலவே பேசும் தாத்தா பாட்டி அப்பா சித்தப்பாக்கள் பிராமணரல்லாதவர் இல்லங்களில் இல்லையா? அவர்கள்தானே நமது வீடுகள் தோறும் இருந்துகொண்டிருக்கிறார்கள்?

நான் ஈரோடு கோவை பகுதிகளில் பயணம்செய்கையில் ஒவ்வொரு ஊரிலும் இரட்டைக்குவளை முறை இருப்பதை பார்க்கிறேன். கண்ணாடிக்கோப்பையில் டீ கிடைக்காது. சிலர் குடித்துக்கொண்டிருப்பார்கள். கேட்டால் ‘அது தெரிஞ்சவங்களுக்கு’ என பதில்வரும். கோவையில் ஒரு நண்பர் நேற்று பேசும்போது அவர் கோவையின் புறநகர் டீக்கடையில் இரட்டைக்குவளை முறை இருப்பதைக் கண்ட அதிர்ச்சியை பதிவுசெய்தார்

சாதி என்பது மதத்தால் உருவாக்கப்பட்டது அல்ல. அது தொன்மையான இனக்குழு [tribe]க்களிலிருந்து உருவாகி வந்தது. இனக்குழுக்கள் திரண்டு சாதிகளாயின. சாதிகளுக்குள் துணைச்சாதிகாளாக கோத்திரங்களாக கூட்டங்களாக இனக்குழு  அடையாளங்களும் நீடிக்கின்றன.

சாதிகளின் மேல்கீழ் அடுக்குகளும் மதத்தால் உருவாக்கப்பட்டவை அல்ல. நிலஉரிமை, அரசியல் ஆதிக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் நீண்டகால போராட்டம் வழியாக உருவாகி வந்தது அந்த அடுக்கு. அது மாறிக்கொண்டும் இருந்தது. நிலமும் அரசுரிமையும்பெற்ற சாதிகள் மேலே சென்றதும் இழந்த சாதிகள் கீழே தள்ளப்பட்டதும் பத்தொன்பதாம்நூற்றாண்டு வரை நிகழ்ந்துகொண்டிருந்தது.

சாதிகளின் அடுக்குமுறையை பேரரசுகள் உறுதிசெய்தன. அவற்றின் ஆட்சிக்கு அந்த அடுக்குமுறை தேவை. பேரரசுகள் சாதிகளின் அடுக்குமுறையை நிலைபெறச்செய்ய மதங்களை பயன்படுத்திக்கொண்டன. மதங்களின் பணி அந்த அடுக்குமுறைக்கு புனிதத்தன்மையை கற்பிப்பது, அவற்றை இறையாணையாக காட்டுவது மட்டுமே. அதற்கு அப்பால் சாதி என்பது ஒரு வேர்த்தொடர்ச்சி, குழுஅடையாளம்.

ஆகவேதான் எந்தச் சாதியானாலும் சாதிமேல் பற்றுடன் இருக்கிறது. சாதியடையாளத்தை விட மறுக்கிறது. சாதியால் ஒடுக்கப்பட்ட சாதிகூட தன் சாதிமேன்மைகளை கண்டுபிடிக்கிறது. கூடவே இன்னொரு சாதியை தன்னைவிடக் கீழே வைக்க முயல்கிறது. சாதி அடுக்குபோலவே சாதிக்குள்ளும் அடுக்குகள் உள்ளன. நீங்கள் கவுண்டர். கவுண்டர்களில் எந்தக்கூட்டம் மேல் எந்தகூட்டம் கீழ் என்று உங்களுக்கே தெரியும்.

ஆக, சாதிமேட்டிமைவாதம் நம்மிடம் பலமடங்கு உள்ளது. சாதி ஒடுக்குமுறையை நேரடியாகச் செய்பவர்கள் நாம். ஆனால் தந்திரமாக சாதியை கற்பித்தவன் பிராமணன், ஆகவே சாதி ஒடுக்குமுறைக்கு பிராமணனே காரணம் என கைகாட்டிவிட்டுத் தப்பித்துக்கொள்கிறோம். இது நம் ஆத்மாவை நாமே ஜேபடி செய்துகொள்வது. இதை திரும்பத்திரும்பச் சுட்டிக்காட்டுகிறேன்

தமிழ்நாட்டில் உண்மையில் சாதிப்பழமைவாதம், ஒடுக்குமுறை ஒழிய வேண்டுமென்றால் இதுபோல பிராமணர்களை கண்டுபிடித்து பலியாடுகளாக ஆக்குவதை கைவிட்டு நாம் நம்மை விமர்சிக்க பழகவேண்டும். அதற்கு நாம் நம் பழமைவாதத்தையும் மேட்டிமைவாதத்தையும் ஒப்புக்கொள்ளவேண்டும்.

அந்தக் கட்டுரையின் தலைப்பே பழியை திசைதிருப்பி தன்னை ஒளித்துக்கொள்ளும் சூழ்ச்சி என நான் சொல்வேன். நேர்மையாக நம்மை நாம் முன்வைப்போம் என்று அறைகூவுவேன்.

இன்றைய தேவை பிராமணவாதம் இல்லாத இந்துமதம் அல்ல. செயல்சக்தி ஓங்கிய இந்துமதம். இந்துமதத்தின் மெய்யியலை, ஞானத்தை முன்வைக்கும் இந்துமதம். ஆசாரவாதம் அடங்கி செயலற்றிருக்கும் இந்துமதம். அது உருவாகி மேலோங்கி வருகிறது என்பதும் கண்கூடு.

ஆசாரவாதத்தில் இருந்து வெளிவரவேண்டியவர்கள் பிராமணர்கள் மட்டுமல்ல. அத்தனை இந்துக்களும்தான். பிராமணர்களை விட சாதிவெறி உச்சத்திலிருக்கும் கவுண்டர்,நாடார், வன்னியர், தேவர் போன்ற இடைநிலைச் சாதியினர் முதன்மையாக. நாயர்களும்தான்.

ஜெ

நான் இந்துவா?
இந்துமதத்தைக் காப்பது…
தீட்டு,சபரிமலை, மதம்
சவரக்கத்திமுனையில் நடப்பது
இந்துத்துவ முத்திரை
கார்ப்பரேட் சாமியார்கள் தேவையானவர்களா?
நாட்டார் தெய்வங்களும் சம்ஸ்கிருதமும்
இந்துமதம்,சம்ஸ்கிருதம்,பிராமணர்
கலாச்சார இந்து
மனு இன்று
மனு இறுதியாக…
முந்தைய கட்டுரைஜெயமோகன் : இந்துத்துவ பாசிசத்தின் இலக்கிய முகம் -தொகைநூல்
அடுத்த கட்டுரைகோட்டை