சுந்தரன் காதை

வணக்கங்கள்!

2008 முதல் தங்கள் தளத்தின் வாசகன். நிகழ் காவியமாம் வெண்முரசின் தொடர் வாசகன். நம் தளத்தில் வந்த நாஞ்சில் நாடன் அவர்களின் கம்பராமாயண அமர்வுகள் குறித்த பதிவுகளும், தங்களின் கம்பனை பற்றிய கட்டுரைகளும், சொல்புதிது விவாத குழுமத்தில் இது பற்றி எழுதப்பட்ட பதிவுகளும் கம்பராமாயணம் வாசிக்க என் ஆவலை தூண்டின. அதனால் உந்தப்பெற்று வெவ்வேறு சில பாடல்களை படிக்கத் துவங்கி அளவற்ற பிரமிப்பில் ஆழ்ந்தேன். உரைகளின் துணை கொண்டு சில பாடல்களின் பொருளை நான் எழுதிப்பார்த்தால் என்ன எனும் எண்ணம் வந்ததுமுயன்றேன். அவற்றில் சிலவற்றை என் நண்பர்கள் குழுவிடம் பகிர்ந்து கொண்டதில் நன்றாக இருக்கிறது என்றார்கள்.

அதன் தொடர்ச்சியாக, சுந்தரகாண்டத்தின் பாடல்களை எடுத்துக்கொண்டு வரிசைக்கிரமமாக அவற்றுக்கான பொருளை நவீன தமிழில் எழுதிப்பார்க்கலாம் என முயன்றேன்(வை.மு.கோ அவர்களின் உரையும் கோவை கம்பன் கழக உரையும் இதற்கு பேருதவியாக இருந்தன). இதுவரை கிட்டத்தட்ட 150 பாடல்களுக்கான நவீன மொழி வடிவை இந்த தளத்தில் பதிவிட்டிருக்கிறேன்

சுந்தரன் காதை

இவற்றின் இடம் என்ன? எவர் இவற்றை வாசிக்கக்கூடும்? இந்த முயற்சி தொடர்ந்து செய்ய வேண்டியதா? அல்லது இவற்றை வேறேதேனும் கோணத்தில் பார்த்து சீர் செய்யவேண்டுமா என்பவனவற்றில் தெளிவின்றி இருக்கிறேன். நீங்கள் இவற்றில் சிலவற்றை பார்வையிட்டு தங்கள் கருத்துக்களை (எத்துணை கடுமையானதாக இருப்பினும்) கூறினால் மிக பயனுள்ளதாக இருக்கும்.

தங்கள் நேரத்திற்கு நன்றி!

அன்புடன்,

மதி

அன்புள்ள மதி,

இத்தகைய செயல்களின் மதிப்பென்ன என்று நமக்கு தெரியாமலிருக்கலாம். ஆனால் இவை எங்கோ எவருக்கோ பயன்படும். அத்துடன் நாம் நம்மையறியாமலேயே ஒரு நீண்ட பயணத்தில் இருக்கிறோம் இல்லையா? இதை முடித்துவிட்டால் நீங்கள் கம்பராமாயணத்தை முழுமையாக ஆழ்ந்து வாசித்த சிலரில் ஒருவராகிவிட்டிருப்பீர்கள். அதுவே மிகப்பெரிய நன்மைதானே?

நான் ஆழமாக புரிந்துகொள்ள விழையும் பல விஷயங்களை மொழியாக்கம் செய்துதான் உள்வாங்கிக்கொண்டேன். அவற்றை பிரசுரித்ததுகூட இல்லை

ஜெ

பெருமதிப்பிற்குரிய ஜெ,

வெண்முரசிற்கு நீங்கள் அளித்த பேருழைப்பும் ஈடுபாடுமே என்னுடைய  இந்த மிக மிகச் சிறு முயற்சிக்கு உந்துதலாக இருந்தது. தந்தையை நடிக்க முடியும் சிறு குழவி போல இதை முயலத் துவங்கினேன். இப்போது 700 பாடல்கள் வரை வந்துவிட்டேன். உங்கள் சொற்கள் பேருண்மை. கம்பனின் கவி நயத்தை ருசிக்க துவங்கி, மூல வால்மீகி இராமாயணம், ஆழ்வார்கள், நாயன்மார்கள் பாடல்கள், சங்க இலக்கியம் என்று கம்பராமாயணத்தின் வேர்களும் கிளைகளும் உள்ள திசைகளில் எல்லாம் இம்முயற்சியால் சென்று பார்க்கும் வாய்ப்பு அமைந்தது. அதைக்காட்டிலும் பெரிய நன்மை வேறென்ன?
உங்கள் மின்மடலின் சொற்கள் வழியே தங்கள் நற்கரத்தின் ஆசிகளின் வெம்மையை உணர்கிறேன். வணக்கங்கள்!
அன்புடன்,
மதி
முந்தைய கட்டுரைஅந்த முகில் இந்த முகில் (குறுநாவல்) : கடிதங்கள் – 1
அடுத்த கட்டுரைதிரை, எரிசிதை- கடிதங்கள்