அன்னமாச்சாரியாவும் கி.ராஜநாராயணனும்-கடிதம்

அன்புள்ள சார்,

நலம் தானே! சற்று நேரத்துக்கு முன்னாடிதான் கி.ரா. வின் கலந்துரையாடல் நிகழ்ச்சியை பார்த்தேன். மகிழ்ச்சையாக  இருந்தது. தமிழுக்கு மட்டும் அல்ல தெலுங்கிற்கும் அவர் பெரிய பொக்கிஷம். இரண்டு தெலுங்கு மாநிலத்தவர்களும் அவர் மூலமாக தமிழ்நாட்டிலுள்ள தெலுங்கு வாழ்க்கையை ஆவணப்படுத்தலாம்.

இங்குள்ள பெரிய பத்திரிக்கைகளில் ஒன்றான ‘ஆந்திர ஜோதி’யின் ‘நவ்ய’ வாரஇதழில் ‘கோபல்லெ’ என்ற பெயரில்  தொடராக வந்தது கோபல்ல கிராமம் நாவல். ஓசூரை சேர்ந்த நந்தியால நாராயணரெட்டி அவர்கள் மொழிபெயர்த்தார். தமிழ்நாட்டு தெலுங்கு(தட்சணாந்திரம் – தெற்கத்திய தெலுங்கு என்கிறார்கள்!) எழுத்தாளர் ச.வெங்.ரமேஷ், தமிழ்நாட்டு தெலுங்கு கிராமிய கதைகளை ஆவணபடுத்திய சுதாராணி அவருக்கு உதவினார்கள்.

இதே போன்று, கோபல்லபுரத்து மக்களும் ‘கோபல்லெ ஜனாலு’ என்ற பெயரில் மதுரை காமராஜ பல்கலையின் முன்னாள் பேராசிரியர் ஜெயப்ரகாஷ் மொழியாக்கத்தில் வந்தது. இதில், கி.ரா.வின் தெலுங்கு பேசு மொழியில் உள்ள முன்னுரையை படித்தால்… நாள் முழுக்க அப்பட்டமான ‘சமஸ்க்ருத ஆதிக்க’ தெலுங்கை கேட்டுக்கொண்டு இருக்கும் என்னை போன்றவர்களின் காதுகளுக்குள் தேன் பாயும்!   ஆனால், இங்கு இருக்கும் இலக்கியவாதிகள் இந்த இரு நாவல்களை பற்றி சொல்ல தக்கவாறு எதுவும் எழுதவில்லை. கி.ரா.வை இங்கு இன்னும் கூட கொண்டாடி இருக்கலாம் என்று  தோன்றுகிறது.

மலையாளத்தின் வழியே தெலுங்கு பக்தி இலக்கியங்களை வாசித்துக்கொண்டு இருப்பதாக சொன்னீர்கள். அதை பற்றி ஒரு நீண்ட கட்டுரையை உங்களிடம் எதிர்பார்க்கிறேன் சார். எனக்கு தெலுங்கு மொழிமேல் பற்று வருவதற்கு காரணமான விஷயங்களில் அன்னமாச்சார்யரின் கீர்த்தனைகளுக்கு முக்கிய பங்குண்டு. அவர் பாடல்களின் வழியை தேறாமல்… காவியங்களை எழுதி இருந்தால் மறு பேச்சுக்கே இடம் இல்லாமல் தெலுங்கின் மகா கவியாக வளம் வந்து இருப்பார். அவரின் உவமைகளும், ஆழங்களும், மொழி ஆளுமையும் அத்தகையது. இத்தனைக்கும் அன்றைய மக்களின் அன்றாட மொழியில் பாடியவர்  அவர்.

‘திருப்பதி பெருமாள் சக்திவாய்ந்தவரோ இல்லையோ தெரியாது. ஆனால், அன்னமய்யாவின் பாடலைகளை பெற்றதற்காகவே, அவருள் அந்த பரவசத்தை நிறைத்ததற்க்காகவே பெருமாள் வணங்க தக்கவர்’ என்றுதான் என் நண்பர்களுடன் சொல்வேன். அன்னம்மாச்சார்யாவின் பக்தி மரபு ஆழ்வார்களின் வழியை சார்ந்தது. சிருங்கார பாடல்களுக்கு ஜெயதேவரின் பாதிப்பு இருக்கலாம் என்று நினைக்கிறேன். அந்த காதல் பாடல்கள் ஒவ்வொன்றும் அமுத துளிகள் தான்.

ஏமக்கோ… என்று ஒரு பாடல். அதன் பல்லவியை இப்படி மொழிபெயர்க்கலாம்…

‘என்னவாயிற்று?

துளிர் இதழ்களில்

கஸ்தூரியின் மனம் நிறைந்துள்ளதே…

நாதனுக்கு நாச்சியார்

தன் இதழில்

கடிதம் எழுதிவிட்டாளா என்ன?!

(ஏமக்கோ சிகுருட்டதரமுன

ஏடநெட கஸ்தூரி நிண்டெனு

பாமினி விபுனக்கு

ராசின பத்திரிக்க காது கதா!)

சரணம் இப்படி வரும் :

‘சகோர(chakora) பறவைப்போன்று

காத்திருக்கும் இச்சிறியவளின்

கடைக்கண்களில் அந்த சிவப்பென்ன?

சிந்தியுங்கள் தோழிகளே!

உயிர் நாயகனின் மேனி மேல்

குத்தியிருந்த அந்த கூரிய பார்வையை…

சரக்கென்று இழுத்ததால்

ஒட்டிக்கொண்ட குருதியல்லவா?!’

என்று முடிப்பார்.

(கலிக்கி சகோராக்ஷிக்கி கடகண்ணுளு

கெம்பை தோச்சின செலுவம்பிப்புடு இதேமோ!

சிந்திம்பரே செலுலு!

நளுவுந பிராணேஸ்வரூபை நாட்டின

ஆ கொண சூப்புளு… நிளுவுன பெருக்ககா

நண்ட்டின நெத்துரு காதுக்கதா)

‘வின்னபாலு வினவலெ…’ என்ற பாடலில்

‘நீ அந்த ‘பாம்பு கொசுவலயை’ கொஞ்சம் விலக்கி

எங்கள் விண்ணப்பங்களை  கேட்க கூடாதா?’

என்று கேட்பார்.

ஆதிஷேஷனை கொசு வலையாக கற்பனை செய்ய எவ்வளவு துணிச்சல் இருக்கணும்!

அன்னமாச்சார்யரின் பாடல்கள் எனக்கு தெலுங்கு அன்னமய்யா சினிமாவின் மூலம் தான் அறிமுகமாயின. எம்.எம்.கீரவாணி(மரகதமணி) அப்பாடல்களுக்கு அற்புதமாக இசை சேர்த்திருப்பர்… மெட்டுக்கள் அவருடையவை அல்ல என்றாலும். இதே மெட்டுக்களை தங்கள் சொந்தம் என்று சொல்லிக்கொள்ளும் திருமலை திருப்பதி தேவஸ்தானம்(ttd) போட்ட கேசட்டுகளை விட இந்த பாடல்கள் எத்தனையோ படி மேல். கேட்டுள்ளீர்களா?

அன்புடன்,

ராஜு. 

முந்தைய கட்டுரைவெண்முரசு தொடங்குதல்
அடுத்த கட்டுரைபெண்கள் எழுதுவது- கடிதம்