ஓபோஸ்- ஒரு சமையல்முறை

அன்புள்ள ஜெ வணக்கம்

என் அப்பா, அம்மா, இருவருக்குமே உடன் பிறந்தவர்கள் ஐவர், அதிலும் அம்மா முதல் குழந்தை, முதலில் அவர்களுக்கு தான் திருமணம் நிகழ்ந்தது, நான் என் அம்மாவிற்கு முதல் குழந்தை, 38 வருடத்திற்கு முந்தைய கூட்டுக்குடும்ப சூழலில், மாமா சித்தி அத்தை பெரியப்பா என உறவுகள் சூழ அமைந்தது என் முன் இளமைக்காலம்.

வீடு கூட்டுதல், பாத்திரம் கழுவுதல், துணி துவைத்தல் ,காயப் போடுதல், மடித்து வைத்தல், தண்ணீர் எடுத்தல் ,போன்ற எந்த வேலையிலும் பெரிதாக ஈடுபட்டதில்லை.

திருமணமாகாத சித்திகளும் ,தாய்மாமன் களும் நிறைந்து இருந்ததால், மிகுந்த செல்லம் கிடைத்தது, என் அம்மாவும் கடுமையான உழைப்பாளி வேலைகள் செய்ய தயங்காதவர், வேண்டிய நேரத்தில் வேண்டியது உண்ணக் கிடைக்கும், வீட்டில் ஒரு முறை கூட உணவுண்ட தட்டு நான் கழுவியது இல்லை, குடிப்பதற்கு நீர் தருவார்கள் அந்த பாத்திரத்தையும் அவர்களே எடுத்து வைத்து விடுவார்கள்.

எங்களுடையது காதல் திருமணம், இருவரின் பெற்றோரின் பூரண சம்மதமும், திருமணத்திற்கு பின்பாண உதவிகளும் பெரிதாக கிட்டவில்லை.

மனைவி வேலைக்குச் செல்பவர், எங்கள் குழந்தை போதியை நாங்களே வளர்த்து வருகிறோம்.

திருமணத்திற்குப் பிறகுதான் சமையலுக்கு செலவாகும் நேரமும் ,அதற்கான தயாரிப்புகளும், பாத்திரம் கழுவுதல் என்னும் பெரும் பணியின் வலியும் எனக்கு  உறைக்கத் தொடங்கியது,வேலையின் அழுத்தமே நிறைய சண்டைகளுக்கு காரணமாக அமைவதையும் கண்டுகொண்டேன்.

எனக்கு இன்ன இன்ன உணவு சாப்பிட வேண்டும் என்று என் மனைவியிடம் நான் கேட்டதே இல்லை செய்து தருவதை உண்பேன், தேநீரும் காபியும் எனக்கு ஏற்றவாறு நானே தயாரித்து கொள்வேன்.

இந்த சூழ்நிலையில் குறைமாவு நிறை கொழுப்பு உணவு முறைக்கு மூன்றாண்டுகளுக்கு முன்பு இருவருமே மாறினோம், சமையல் நேரத்தை அதன் சிரமத்தை இவ்வுணவு முறை குறிப்பிடத்தக்க அளவு குறைத்தது.

சில மாதங்களுக்கு முன் OPOS என்ற அணுகுமுறை நண்பர் கோவிந்தராஜ் மூலம் கவனத்திற்கு வந்தது.

சமையலில் சிற்சில மாற்றங்களை செய்வதன் மூலம்,

அ. மிக குறைவான நேரம்.

ஆ. மிகக் குறைந்த எரிபொருள் செலவு.

இ. மிகுந்த சத்தும் சுவையும் நிறைந்த உணவு.

ஈ. குறைவான பாத்திரங்களே பயன்படுத்தப்படுவதால் கழுவும் வேலையிலிருந்து விடுதலை.

உ. சமையல் வேலை மிகவும் எளிதான ஒன்றாக மாறிவிடுவதால்,

அடிக்கடி உணவகத்தில் உண்டு காசையும் வீணடித்து உடல் நலனையும் கெடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.

ஊ. கல்வியின் பொருட்டோ வேலை நிமித்தமோ, வெளியூரில் வசிப்பவர்களுக்கு இது ஓர் வரப்பிரசாதம்.(ஒரு சிறிய இன்டக்ஷன் ஸ்டவ்வும்,ஒரு 2 லிட்டர் குக்கர் போதுமானது அனைத்து வகை உணவையும் சமைக்க)

எ. புது சமையல் முறை என்பதால் நம் நாவிற்கு பழகிய நமக்கு பிடித்தமான எந்த ஒரு உணவு வகையும் இழக்க மாட்டோம் அனைத்து தென்னிந்திய உணவு வகைகளையும் இதில் செய்ய முடியும்.

(சாம்பார், குருமா, பொரியல், ரசம் ,தொக்கு, சட்னி, அசைவ, வகைகள் என அனைத்தும் செய்யலாம்)

இன்று அனைவருக்குமே நேர நெருக்கடி உள்ளது,அதுவும்  வேலைக்குச்செல்லும் வீட்டில் குழந்தைகள் இருக்கும் பெண்கள் படும்பாடு சொல்லில் அடங்காது, அவர்களுக்கு இச்சமையல் முறை ஒரு வரம் போல் இருக்கும்.

சர்வநிச்சயமாக சமையல் நேரத்தில் சரிபாதி குறையும் உணவின் சுவையும் சத்தும் மிகவும் அதிகரிக்கும்

எப்படியும் சில வாரங்களுக்கு எங்கேயும் செல்ல முடியாது வீட்டிலேயே தான் இருக்கப் போகிறோம்,opos பற்றிய அனைத்து விபரங்களும் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றது,யூடியூப் வீடியோக்கள் ஆகவும் முகநூல் பதிவுகள் ஆகவும் பல்லாயிரக்கணக்கான பலன் பெற்றோரின் அனுபவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது,எந்த ஒரு புதிய முயற்சியிலும் சில ஆரம்பகட்ட தயக்கங்கள் இருக்கும் அதை உடைத்து விட்டால் பெரும் புதையல் காத்திருக்கிறது.

என் மனைவியும் ஆரம்பத்தில் தயங்கினார் நானே முயற்சி எடுத்து சில உணவுகளை செய்து கொடுத்தேன் அதன் எளிதான தன்மையிலும் சுவையிலும் மயங்கியே அவர் இந்த முறைக்கு மாறினார்.

வீட்டில் இருக்கும் பாத்திரங்களே போதுமானது(புதிய குக்கர் வாங்க வேண்டியதில்லை), தேவை படுவோர் 400 ரூபாய் மதிப்புள்ள ஒரு டிவைடர் மட்டும் வாங்கிக் கொள்ளலாம், காய்கறி வெங்காயம் வெட்டுவதற்கு 100 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை மதிப்புள்ள ஒரு கருவி கிடைக்கிறது, இதுவும் நேரத்தை மிகவும் மிச்சப்படுத்தும்.

சமையலை ஒரு தண்டனை போல் பாவித்து வந்த என் மனைவி ,இப்பொழுதெல்லாம் மிகுந்த படைப்பூக்கத்துடன் எவ்வாறெல்லாம் நேரத்தை குறைக்கலாம், சுவை கூட்டலாம் .புதிய வழிமுறைகளை கண்டறியலாம் என கொண்டாட்டத்துடன் மகிழ்ச்சியுடனும் விதவிதமாக சமைத்து அசத்துகிறார்.

உங்கள் வாசகர்களில் பெரும்பாலான பெண்கள், பெரும்பாலோனோர் வெளிநாடுகளில் வசிக்கின்றனர், அவர்கள் அனைவருக்கும் இந்த நவீன புதிய அணுகுமுறை மிகவும் உதவியாக இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.

மு.கதிர்முருகன் 

கோவை

முந்தைய கட்டுரைமகாபாரதம்- பீட்டர் புரூக்ஸ்- வெண்முரசு
அடுத்த கட்டுரைஉலகுக்குப் புறங்காட்டல்- கடிதங்கள்