அடிக்கடி என் கனவில் கற்சிலைகள் வருகின்றன. இது எப்போது தொடங்கியது என்று எண்ணிப்பார்க்கிறேன். சிறுவயதிலேயே கோயிலருகே வாழ்ந்தவன். அன்றே சிலைகளை தொடர்ந்து பார்த்துவந்தவன். அவை நானறியா இளமையிலேயே என் கனவுக்குள் நுழைந்துவிட்டிருக்கவேண்டும்
ஆனால் நினைவில் நிற்பது நான் எட்டாவது படிக்கும்போது நிகழ்ந்த ஒன்று. ஊருக்கு வெளியே ஓர் யக்ஷிகோயில். சிதிலமடைந்து , உடைந்த கூரைமேல் நாணல் செறிந்து, கோடையில் காய்ந்து சிங்கப்பிடரி என்றாகி, பிடாரி என நின்றிருக்கும். நேர் எதிரே ஒரு தாமரை படர்ந்த குளம். சுற்றிலும் தோப்புகளில் மனிதநடமாட்டமே அரிது.
அங்கேதான் நாங்கள் சிறுவர்கள்கூடுவோம். பாலியல் கதைகளை பரிமாறிக்கொள்வோம். திருடிக்கொண்டுவந்த பொருட்களை தின்போம். அங்கே கோயிலின் கல்திண்ணையில் ஆடுபுலியாட்டக் கட்டம் நிரந்தரமாக வரையப்பட்டிருக்கும். மாங்காய் தின்ன உப்புப்பொட்டலம் இருக்கும். அன்றெல்லாம் குடிகாரர்கள் இதுபோன்ற இடங்களைக் கைப்பற்றிக்கொள்ளவில்லை.
ஒருநாள் நானும் ராதாகிருஷ்ணனும் தனித்திருந்தோம். பேசிக்கொண்டே இருந்துவிட்டு நான் தூங்கிவிட்டேன். ராதாகிருஷ்ணன் சென்றுவிட்டான். நான் விழித்துக்கொண்டபோது அந்தி சாய தொடங்கியிருந்தது. மேற்குநோக்கிய கோயிலின் மேல் சூரியவெளிச்சம் நேரடியாக விழுந்தது. என் கண்களுக்குமேல் வெயில்விழுந்துதான் நான் விழித்துக்கொண்டிருந்தேன்
யாரோ என்னை பார்க்கும் உணர்வு ஏற்பட்டது. எங்கே என்று அங்குமிங்கும் பார்த்தபின் சட்டென்று கருவறைக்குள் யக்ஷியை கண்டேன். மாலையொளியில் சுடர்விடும் கரிய கற்சிலை. கண்களில் கனிவும் காமமும். பேரழகு முகம். பல்லாயிரமாண்டுகளாக சிற்பிகள் கனவுகண்டு கற்பனையில் வளர்த்து கையில் தேர்ச்சிகொண்ட கலைவடிவ தோற்றம்
நான் பிரமைபிடித்ததுபோல பார்த்துக்கொண்டிருந்தேன். பின்னர் அஞ்சி என் ஆழம் நலுங்கியது. ஓர் உளறலோசையுடன் எழுந்து ஓடினேன். இரண்டு இடங்களில் விழுந்து எழுந்து ஓடி தப்பிவிட்டேன். ஆனால் வீட்டுக்குச் சென்றபின் காய்ச்சல்வந்தது. விந்தையான நறுமணம் அல்லது நாற்றம் ஒன்று என்னை சிலநாட்கள் சூழ்ந்திருந்தது.
வெவ்வேறுவகையான கனவுகள் என்னை அலைக்கழித்தன. அக்கனவில் சிறுமியர், அழகிய கன்னியர், வெண்ணிற ஆடை அணிந்த முதுமகள் என தோன்றிக்கொண்டே இருந்தனர். இருமுறை இரவில் துயிலில் எழுந்து ஆற்றங்கரை வரைச் சென்று விழித்துக்கொண்டு ஓடி திரும்பிவந்தேன். அந்த அனுபவங்களின் கூர்வடிவம் நூறுகதைகளில் ஒன்றில் உள்ளது.
அதை எங்களூரில் ‘யக்ஷி அடித்தல்’ என்பார்கள். யக்ஷியின் மணம் கிடைத்தவன் அவளிடமிருந்து விலகமுடியாமல் விட்டில் தீயிலென அவளிலேயே சென்று முடிவான். நான் தப்பிவிட்டேன்.
ஆனால் மெய்யாகவே தப்பினேனா? இத்தனை ஆண்டுகளில் யக்ஷிகளைப்பற்றி எழுதிக்கொண்டேதான் இருக்கிறேன். அச்சொல்லே தமிழில் என்னால் புகழ்பெற்றிருக்கிறது.
அழகின் ஓர் உச்சக்கணம் யக்ஷி. அத்தனைகூர்கொண்ட எதுவும் ஆயுதம்தான். கொல்லும்பேரழகு. அந்த கற்பனை என்னை நெடுநாட்கள் பித்தெடுக்கவைத்துள்ளது. யக்ஷித்தன்மை கொண்ட பல கதைமாந்தரை நான் எழுதியிருக்கிறேன். விஷ்ணுபுரம், காடு, இரவு. வெண்முரசில் திரௌபதி அதன் விரிவான வடிவம்
தமிழகக் கோயில்களிலெங்கும் யக்ஷிகள் உண்டு. வாசலைக் காக்கும் புஷ்பபாலிகை அல்லது புஷ்பயக்ஷிகள் முதல் மோகினிகள் என்று பொதுவாக எழுதிவைக்கப்பட்டிருக்கும் யக்ஷிகள் வரை. யக்ஷி என்றால் விழிகொண்டவள் என்று பொதுப்பொருள் சொல்வார்கள்.
நோக்கநேரும் பெண்களின் அழகின் உச்சக்கணநேரத்தில் எழுந்து மின்னி மறைபவளாகவே நாம் யக்ஷிகளை காண்கிறோம். ஆனால் எப்படி நேரிலெழக் கண்டாலும் யக்ஷிகளின் அழகின் உச்சமென்பது கல்லில் அவள் எழும்போதுதான் என்று படுகிறது
காமம் நுண்ணுணர்வென எழுத சிற்றிளமைப்பருவம் முதல் தசையுடலை நோக்கிக்கொண்டே இருக்கிறேன்.எலும்பின் சட்டகத்தில் ஒட்டப்பட்ட தசைகள் கணந்தோறும் சரிந்தபடியே இருக்கின்றன. கண்களுக்குக் கீழே, முகவாய்கோடுகளில், வாயின் வளைவில், தாடைக்குக்கீழே, கழுத்துமடிப்புகளில் என தசைதளர்வையே நாம் முகங்களில் பார்த்துக்கொண்டிருக்கிறோம். முகம் உருகிவழியும் மெழுகாலான வடிவம்
அதை கணமென நினைவில் நிறுத்தியே நாம் அழகை நிலைகொள்ளச் செய்கிறோம். வரைகிறோம், புகைப்படம் எடுக்கிறோம். கவிதைகள் புனைகிறோம். ஆனால் முகமென்பதும் உடலென்பதும் ஓர் அமைப்பல்ல, நிகழ்வு என அறிந்திருக்கிறோம். சுடர் போல. கண்ணால் காட்சி சிறைப்பிடிக்கப்பட்டு அதை நாம் பொருளென நினைக்கலாம், அது கணந்தோறும் மாறுவதென்று கண்ணுக்குள் வாழும் பிரக்ஞை அறியும்.
கல்லில் அப்படியல்ல. காலமில்லாது நிறுத்தப்பட்டுவிடுகிறது பேரழகு. தளர்வில்லை, உருகுதலில்லை. அவ்வண்ணமே அதே கணத்தில் அதே நோக்கில் அதே மிளிர்வில் நின்றுவிட்டிருக்கிறது. அழிவின்மை என்று ஒன்றில்லை. மலைகளே அழிந்துகொண்டிருக்கின்றன. ஆனால் நாம் மானுடர், குமிழிகளென மறைவோர். நமக்கு கல்லே நிலைக்கோள் கொண்டது. கல்லில் எழுந்த மலர் உதிர்வதில்லை. கல்லில் எரியும் சுடர் அணைவதில்லை. கல்லில் நிகழும் நடனம் முடிவடைவதே இல்லை