அன்பின் ஜெயமோகன்
நான் தற்போது இருத்தலியல் படித்துவருகிறேன். அல்பேட் காமு தஸ்தவிஸ்கி போன்றவர்களை இருத்தலியலின் எழுத்தாளரகள் என்று பொதுவாக அடையாளப்படுத்துகிறார்கள்.
உங்களது இயக்கத்தை என்னால் அடையாளப்படுத்த முடிகிறது செய்யும் விடயத்தில் தொடர்ச்சியாக அதே வேளையில் தனித்துவமாக இயங்கியபடி எந்த அரசியல் குழுவோடு இல்லாது பயணிக்கிறீர்கள்.
தமிழில் இலக்கியங்கள் எதையும் நான் அறிந்தவரை இருத்தலியல் முற்றாக அடையாளபடுத்த முடியவில்லை
மேலும் இருத்தலியல் இந்திய சித்தாந்தங்களுக்கு முக்கியமாக பவுத்தத்திற்கு எதிரானது என நினைக்கிறேன். தமிழில் இதை தனது எழுத்துகளில் வைத்தவர்கள் யார் ?
அன்புடன்
நோயல் நடேசன்
அன்புள்ள நடேசன்,
இருத்தலியல் எந்தவகையான சாராம்சவாத [Essentialism] கொள்கைக்கும் எதிராகவே இருக்கமுடியும்.பௌத்தம் மட்டுமல்ல வேதாந்தம் ,சைவசித்தாந்தம் உட்பட எல்லா மையம்சார்ந்த சிந்தனைகளையும் அது நிராகரிக்கும். ஒற்றைவரியில் சொல்லப்போனால் அது மனிதனின் சாராம்சம் என்ன என்று உசாவி, அப்படி ஒன்று இருக்கிறதா என்ற ஐயத்தை முன்வைக்கும் ஒரு சிந்தனைமுறை.
இருத்தலியலில் இரு போக்குகள் உண்டு. ஒன்று மார்ட்டின் ஹைடெக்கர் வழிவந்த அகநிகழ்வியல் [Phenomenology] பார்வைகொண்ட, சாராம்சவாத மறுப்பு நோக்கு கொண்ட இருத்தலியல். பொதுவாக அதையே நாம் இருத்தலியல் என்று இங்கே சொல்கிறோம். இலக்கியத்தில் தீவிரமாகச் செல்வாக்கு செலுத்தியது அதுதான்.
இன்னொன்று மார்க்ஸிய நோக்கில் முன்வைக்கப்பட்ட அன்னியமாதல் கோட்பாடு [Alienation]. முதலாளித்துவச் சூழலால் உழைப்பிலிருந்து அன்னியப்படும் மனிதன் அதன்விளைவாக சமூகம் இயற்கை ஆகியவற்றிலிருந்தும் அன்னியப்படுகிறான். அதை ஒரு தனிக்கொள்கையாக முன்னெடுத்தவர் அல்தூசர் [ Louis Althusser]. இது இருத்தலியலின் மார்க்சியக் கோணம்
தமிழில் ஆச்சரியமான ஒரு நிகழ்வு உண்டு. முதல்வகை இருத்தலியலும் அன்னியமாதலும்தான் இங்கே இலக்கியத்தில் ஆழ்ந்த செல்வாக்கைச் செலுத்தின.அவை நேரடியாக இலக்கியப்படைப்புக்கள் வழியாகவே வந்துசேர்ந்தன. அல்பேர் காம்யூவின் அந்நியன் [மொழியாக்கம் வே.ஸ்ரீராம்] இங்கே தீவிரமான பாதிப்பைச் செலுத்திய ஒரு நாவல். அந்நாவலின் நேரடியான மொழியை, தன்வயக்கூற்றை இங்குள்ள பல புனைவுகள் பின் தொடர்ந்தன.
ஆனால் வெளியே தெரியாமலேயே அதேயளவுக்கு செல்வாக்கு செலுத்திய இரு நாவல்கள் உண்டு. அவை இருத்தலியல் உள்ளடக்கம் கொண்டவை. ஆனால் அப்படி வெளிப்படையாக தெரியவில்லை, அப்படி விவாதிக்கப்படவில்லை. அவை அளித்த உணர்வு அன்னியமாதல் சார்ந்ததே. ஹெர்மன் ஹெசியின் சித்தார்த்தா [மொழியாக்கம் திரிலோக சீதாராம்] பேர்லாகர் க்விஸ்டின் அன்புவழி. அல்லது பரபாஸ். [மொழியாக்கம் க.நா.சு]
ஆனால் இங்கே இந்த இருத்தலியப்பார்வையின் தத்துவ உள்ளடக்கம் விவாதிக்கப்படவில்லை. இந்த சிந்தனைமரபின் எந்த முக்கியமான கோட்பாட்டு நூலும் மொழியாக்கம் செய்யப்படவில்லை. இருத்தலியத்தின் பிதாமகர்களின் கட்டுரைகள் வாசிக்கப்பட்ட செய்தியே சிற்றிதழ்சார்ந்த இலக்கியச்சூழலில் காணக்கிடைக்கவில்லை. மார்ட்டின் ஹைடெக்கர், சார்த்ர் போன்றவர்களைப் பற்றிய பேச்சுக்கள் இங்கே இல்லை. இலக்கியத்திலிருந்து இலக்கியத்துக்கான ஒரு பரிமாற்றமாகவே இந்த இருத்தலிய- அன்னியமாதல் சிந்தனைகள் வந்தமைந்தன.
ஆனால் மார்க்சிய கோணத்திலான அன்னியமாதல் பற்றி முக்கியமான நூல் ஒன்று வெளிவந்துள்ளது. எஸ்.வி.ராஜதுரை எழுதிய ‘இருத்தலியமும் மார்க்சியமும்’ தமிழில் பெரிதும் வாசிக்கப்பட்ட கோட்பாட்டு நூல்களில் ஒன்று அது. சார்த்ர் பற்றியும் அவர் நூல் எழுதியிருக்கிறார்.ஆனால் மார்க்ஸியக் கோணம் கோட்பாட்டாளர்கள் நடுவே ஏராளமாக பேசப்பட்டதே ஒழிய அந்தக்கோணத்தில் புனைவிலக்கியம் ஏதும் வரவில்லை. எஸ்.வி.ஆர் உருவாக்கிய நூல்களுக்கு புனைவிலக்கியத்தில் எந்தச் செல்வாக்கும் இல்லை.
இது ஏன் என்பது ஆய்வுக்குரியது. என் ஊகம் இதுதான். இங்கே மார்க்ஸிய இலக்கியம் பொதுவான களச்செயல்பாட்டின் ஒரு பகுதியாகவே நிலைகொண்டது. ஆகவே களயதார்த்தமே இலக்கியமாகியது. ஒடுக்குமுறையை, சுரண்டலமைப்பை, அதன் பண்பாட்டு உள்ளீடுகளைப் பேசுவதற்கான யதார்த்தவாதச் சித்தரிப்பே அதன் அழகியலாக நிலைகொண்டது. இங்கே மார்க்ஸியம் கோட்பாடு சார்ந்து பேசப்படவே இல்லை. அடிப்படைக் கோட்பாடுகளில் மார்க்ஸிய எழுத்தாளர்கள் ஆர்வம் காட்டவுமில்லை. மார்க்ஸிய வரலாற்றுவாதமேகூட இங்கே புனைவில் வெளிப்படவில்லை.
ஆகவே மார்க்ஸிய சிந்தனையின் ஒரு சிறு பகுதியான அன்னியமாதல் இங்கே பொருட்படுத்தப்படவில்லை. மேலும் அது இளம் மார்க்ஸின் சிந்தனைகளின் ஒரு பகுதி என்றும், செவ்வியல் மார்க்ஸியத்தில் அன்னியமாதல்கோட்பாட்டுக்கு இடமில்லை என்றும் இங்குள்ள முன்னோடிகள் கருதி அதை நிராகரித்தனர். அந்தக் கோணத்தை ஏற்றுக்கொண்டு மேலே விவாதித்த மார்க்ஸிய முன்னோடி என்றால் கோவை ஞானி மட்டுமே.
சார்த்ர் பற்றி சாரு நிவேதிதா ஒரு சிறுநூல் எழுதியிருக்கிறார். ஆனால் அது சார்த்ரை ஒரு புரட்சியாளராக சித்தரிக்கும் நூல். பொதுவாக இங்கே மார்க்சியர்களே இருத்தலியம் பற்றி கோட்பாட்டு அடிப்படையில் பேசினார்கள். அதை இலக்கியவாதிகள் விவாதிக்கவே இல்லை. அவர்களிடம் புனைவுகள் வழியாக வந்த இருத்தலியல் அறியாத செல்வாக்கையே செலுத்தியது.இந்த முரண்பாடு விவாதிக்கத்தக்கது.
தமிழில் நேரடியாகவே இருத்தலியச் சிந்தனைகளைப் பேசிய படைப்புக்கள் ஒருசில உள்ளன. சம்பத் எழுதிய இடைவெளி அவ்வகையில் முதலில் சொல்லப்படவேண்டியது. ஆர்வமூட்டும் ஒரு சிறு தகவல், சார்த்ர் எழுதிய ‘துளை’ என்ற கட்டுரையின் பாதிப்பை இந்நாவலில் காணலாம் – துளை என்னும் அக்கட்டுரை சொல்புதிது இதழில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.
நகுலனின் நினைவுப்பாதை இருத்தலியல் சிக்கல்களை நாட்குறிப்புகள், உளக்கொந்தளிப்புகள் வழியாக பதிவுசெய்யும் ஒருநாவல். அது இருத்தலின் பொருட்டு ஒன்றையொன்று வேவுபார்க்கும் இரு ஆளுமைகளாக தன்னை பிரித்துக்கொண்ட ஒருவனின் வெளிப்பாடு. நகுலனும் நவீனனும் மாறிமாறி வெளிப்படுகிறார்கள். இருத்தலியலை இந்திய மாயாவாதத்துடன் இணைத்துவிடும் ஒரு நுண்முயற்சியும் அதிலுண்டு.
தலைப்பே நேரடியாக இருத்தலியல் சார்ந்த சுட்டு கொண்ட ஜி.நாகராஜனின் நாளை மற்றுமொரு நாளே’ மார்க்கரெட் மிச்செல் எழுதிய ‘Gone with the Wind நாவலில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி. சினிமாவில் விவியன் லே சொல்லும் ஆற்றல்மிக்க வசனமாக வந்தது. பாடல் ஒன்றின் முதல்வரியாக புகழ்பெற்றது. ஜி.நாகராஜனின் நாவல் தமிழின் இருத்தலியல் நாவல்களில் சிறந்தது என நினைக்கிறேன்
அசோகமித்திரனின் ‘தண்ணீர்’ முக்கியமான இருத்தலியல் நாவல். தண்ணீர் தமிழில் உருவாக்கப்பட்ட மிகச்சிறந்த இருத்தலியப் படிமம். தண்ணீர்தேடித்தவிக்கும் ஒரு நகரின் பின்னணியில் ஈரமிழந்துபோன உறவுகளின் கதையாக இந்நாவல் விரிகிறது. அதன் கதைமாந்தரும் வெவ்வேறுவகையில் அன்னியமாகிவிட்டவர்கள்தான்
சா.கந்தசாமியின் அவன் ஆனது எல்லாவகையிலும் ஓர் இருத்தலியல் நாவல், இருத்தலுக்கு ஆதாரமான அடையாளங்கள், தனித்தன்மைகள் ஆகிய அனைத்தையும் அகற்றிவிட்டு ஒருவன் இருத்தலெனக்கொண்டுள்ளது என்ன என்று ஆராய்கிறது
நாடகங்களில் இந்திரா பார்த்தசாரதியின் ‘போர்வைபோர்த்திய உடல்கள்’ முக்கியமான இருத்தலியல் படைப்பு.
எழுபதுகளில் வந்த பலநாவல்களில் இருத்தலியல் சார்ந்த உள்ளடக்கம் உண்டு. ஆனால் அவை மேலைநாட்டிலிருந்து கடன்வாங்கிய சிந்தனைகளாக இல்லை. இந்தியச்சூழலில் அறுபதுகளில் ஜவகர்லால்யுகம் உருவாக்கிய நம்பிக்கைகள் சிதைந்தன. எழுபதுகளில் அதற்கு மாற்றாக எழுந்த இடதுசாரி இயக்கங்கள் பற்றிய எதிர்பார்ப்புகளும் அழிந்தன. அந்தச் சோர்வே இருத்தலியம் நோக்கி இங்கிருந்த எழுத்தாளர்களை ஈர்த்தது.
இன்னொரு பக்கம் ஃப்ராய்டிய சிந்தனைகள் அறிமுகமாகி சமூகத்தை ஒட்டுமொத்தமாக பார்ப்பதற்குப் பதிலாக தனிமனிதனின் அகமாக பார்க்கும் கோணத்தை அறிமுகம் செய்தன. விளைவாக தனிமனிதன் மீதான நம்பிக்கையிழந்த நோக்கு உருவாகியது. அதுவும் இருத்தலியத்தை அடையாளம் கண்டுகொண்டு ஏற்றுக்கொண்டது
இங்குள்ள இருத்தலியல் உள்ளடக்கம் கொண்ட நாவல்களின் சிந்தனைக் கட்டமைப்பு மூன்றுவகையிலாக அமைந்திருக்கும்.
அ. தேடல்கொண்ட தனிமனிதன் இருண்மையைக் கண்டடையும் வீழ்ச்சி. அது வரலாற்று இருண்மை, ஆன்மிக இருண்மை, சமூக உறவுகளின் இருண்மை- எதுவாகவும் இருக்கலாம்.
ஆ. சமகால அரசியல், தத்துவம் ஆகியவை முற்றாக மானுடனைக் கைவிடுவது. அவற்றை நம்பிய மனிதர்கள் சென்றடையும் வெறுமை.
இ. மானுட உறவுகளுக்குள் வெறும் காமமும் அடையாள உருவாக்க விழைவும் மட்டுமே அடங்கியிருக்கிறது என உணர்தல். அதை உணரும் கதாபாத்திரங்கள் தன்னுள் சுருண்டுகொள்கின்றன.
இருத்தலியல் சார்ந்த மேலே சொன்ன உணர்வுநிலைகள், கருத்துக்கள் இருந்தாலே அது இருத்தலியச்சார்பு கொண்ட ஆக்கம் எனலாம். ஏனென்றால் அது அன்றைய சூழலின் பொதுவான உளநிலை. ஒவ்வொருவரும் அதில் அறியாமலேயே பங்குகொண்டனர்
இருத்தலிய உள்ளடக்கம் கொண்டவை என நான் நினைக்கும் வேறு தமிழ் நாவல்கள்
ஒரு புளியமரத்தின் கதை- சுந்தரராமசாமி
கிருஷ்ணப்பருந்து – ஆ.மாதவன்
புனலும் மணலும்- ஆ.மாதவன்
பதினெட்டாவது அட்சக்கோடு -அசோகமித்திரன்
பசித்த மானுடம்- கரிச்சான்குஞ்சு
இன்று- அசோகமித்திரன்
நாய்கள்- நகுலன்
வாக்குமூலம் -நகுலன்
மரப்பசு- தி.ஜானகிராமன்
என் பெயர் ராமசேஷன்- ஆதவன்
காகிதமலர்கள்-ஆதவன்
தந்திரபூமி- இந்திரா பார்த்தசாரதி
சுதந்திரபூமி- இந்திரா பார்த்தசாரதி
பள்ளிகொண்டபுரம்- நீலபத்மநாபன்
சாயாவனம் – சா.கந்தசாமி
தொலைந்துபோனவர்கள்- சா. கந்தசாமி
வாசவெஸ்வரம் – கிருத்திகா
புகைநடுவில் -கிருத்திகா
நேற்றிருந்தோம் -கிருத்திகா
சிலநாவல்களை இருத்தலியல் நாவல்கள் என்று சொல்லத்தோன்றும். ஆனால் ஆய்வுக்குப்பின் தவிர்த்திருக்கிறேன். க.நா.சுவின் ஒருநாள், பொய்த்தேவு ஆகியவை இருத்தலியல் நாவல்கள் அல்ல, அவை இந்திய வேதாந்தப் பார்வை கொண்டவை. அவற்றின் கதைநாயகர்கள் வெறுமையை சென்றடையவில்லை. உலகியல்பொருள் கடந்து முழுப்பொருள் சார்ந்த ஓர் உணர்வையே கண்டடைகிறார்கள்
ஜே.ஜே.சிலகுறிப்புகள் இருத்தலியல் சார்ந்த பல குறிப்புகள் கொண்டது. ஆனால் இருத்தலியல் நாவல் அல்ல, அதைக்கடக்கும் முதல் தமிழ் முயற்சி. அதற்கடுத்த பின்நவீனத்துவ கால நாவல்களின் தொடக்கம். அது இருத்தலை ஆராயவில்லை. மாறாக இருத்தலென்பது எப்படியெல்லாம் சூழலால், தன் ஆணவத்தால் கட்டமைக்கப்படுகிறது என்று பேசுகிறது. ஜே.ஜே.யை ஆல்பேர் காம்யூவுடன் சம்பந்தப்படுத்தி தொடங்கும் முதல்வரி, காம்யூவின் சாவை குறிக்கும் அச்சொற்றொரர் அவ்வகையில் முக்கியமான ஒன்று
நாஞ்சில்நாடனின் மிதவை, என்பிலதனை வெயில்காயும் போன்றவற்றில் தனிமனிதன் சென்றடையும் வெறுமை உண்டு. ஆனால் அவை தத்துவார்த்தமானவை அல்ல, முற்றிலும் உலகியல் சார்ந்தவை.
இருத்தலியல் முற்றாக அழிந்துவிடுவதில்லை. அது என்றும் நிலைகொள்ளும் ஒரு வாழ்க்கைநோக்கு. ஆகவே அந்த தீவிரப்புயல்மையக் காலம் கடந்தபின்னரும் அத்தகைய ஆக்கங்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. எஸ்.ராமகிருஷ்னனின் உறுபசி அத்தகைய நாவல். இருத்தலின் வெறுமைக்கும் அதை காமம்கொண்டு நிறைக்கும் முயற்சிக்குமான கொந்தளிப்பான ஊசலாட்டம் என அந்நாவலைச் சொல்லமுடியும்
அன்புடன்
ஜெ