யானை டாக்டர் இலவசப்பிரதிகள்

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,

டிசம்பர் மாதம் 9ம் தேதி, ஆசியாவின் தலைசிறந்த யானை மருத்துவராக வாழ்ந்து மறைந்த நம் ‘யானை டாக்டர்’ வி.கிருஷ்ணமூர்த்தி அவர்களுடைய நினைவுதினம்! கால்நடை மருத்துவராகத் தன் வாழ்வைத் துவங்கி, காட்டுயிர் மருத்துவத்துறையில் ஒரு சகாப்தமென நிலைபெற்றவர் டாக்டர் கே. எத்தகைய முன்னோடிகளை நீங்கள் பெற்றிருந்தீர்கள் என எதிர்காலம் நம்மைநோக்கி கேள்வியெழுப்புமானால், உரத்துத்துணிந்து நாம் எடுத்துச்சொல்ல நம்மிடம் எஞ்சியிருக்கும் நிறைமனிதர்களுள் இவரும் ஒருவர். தனது அறிவனுபவத்தாலும் அறமனதாலும் டாக்டர் கே நிகழ்த்திய துறைசாதனைகள் என்பது பள்ளிக்கூடம் முதல் பல்கலைக்கழகம் வரையில் அனைவரும் கற்றாக வேண்டியாகிய விழுமியம்.

குணமடைந்த யானைகளின் நன்றிப் பிளிறல்களைத் தவிர்த்து, தமிழ்ச்சூழலில் அவருக்கு அளிக்கப்பட்ட பெருமரியாதை என்பது, உங்களுடைய படைப்புமனதால் எழுதப்பட்ட ‘யானை டாக்டர்’ சிறுகதை. இலக்கியத்தில் இடம்பெறும் ஒரு மனிதனின் அகத்துக்கு இறப்பில்லை. அவ்வகையில், அழிவற்ற அறத்தின் மனிதக்கதையாக அவருடைய வாழ்வு புனைவில் நிலைநின்றமையால், காலந்தோறும் நமக்குக் கனவளிக்கும் உயரிலக்கை நாம் தன்னிச்சையாக அடைகிறோம். ‘அறம்’ நாயகர்களின் கதைத்தொகுப்பில் அறிமுகமாகி, இன்று உலகளாவிய வாசிப்புச்சூழலில் தவிர்க்கவே இயலாத ஆக்கமென இக்கதை ஆழ்வேர் கொண்டுவிட்டது.

ஆகவே, நம் பேராசான் ‘யானை டாக்டர்’ வி.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் தூயநினைவைப் போற்றி, அவரை சமகால மனங்களுக்கு அவரை மீளறிமுகம் செய்யும் உளவிருப்பத்தின் நீட்சியாக, 300 நண்பர்களுக்கு ‘யானை டாக்டர்’ புத்தகத்தை விலையில்லா பிரதிகளாக அனுப்பிவைக்க எண்ணம் கொண்டிருக்கிறோம். யானை டாக்டர் கதையின் விளைவாக நிகழ்கிற வெவ்வேறு சூழலியச் செயல்பாடுகள், தனிநபர் மற்றும் சமூக முன்னெடுப்புகள் என அனைத்தும் உங்கள் தளத்தில் தவறாமல் பதிவாவதால், இந்த முயற்சியையும் உங்களிடத்தும் உங்களுடைய வாசகத் தோழமைகளிடத்தும் தெரிவிப்பதை ஒரு ஆசியாகவே கருதுகிறோம்.

இப்புத்தகத்தை வாசிக்க விழைகிற அல்லது பிறர்க்குப் பெற்றுத்தர விரும்புகிற தோழமைகள், இப்புத்தகம் அனுப்பவேண்டிய முழுமுகவரியை குறிப்பிட்டு, இக்கடிதத்தின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ள இணையப் படிவத்தைப் (Google Fomrs) பூர்த்தி செய்து அனுப்ப வேண்டுகிறோம். புத்தகம் அனுப்புவதற்கான நிர்வாக வேலைகளை இது எளிமையாக்கும்.

300 நண்பர்கள் என்பது எங்களால் விலையில்லாமல் அனுப்பமுடிகிற எண்ணிக்கை-எல்லை என்பதால், இயன்றவரை அந்த எண்ணிக்கைக்குள் பதிவாகும் எல்லா முகவரிகளுக்கும் புத்தகத்தை அனுப்பிவிட முயல்கிறோம். நண்பர்களின் உதவிபகிர்தல் கைகூடினால் இந்த எண்ணிக்கையை அதற்கேற்றவாறு நூறுநூறாக உயர்த்திக்கொள்ளவும் ஒரு உளவிருப்பம் இருக்கிறது. இம்முயற்சியின் முதல் கரங்கோர்த்தலாக அகர்மா நண்பர்கள், நூறு புத்தகங்களுக்கான உற்பத்தி மற்றும் அனுப்பும் செலவுக்குப் பொறுப்பேற்று தங்கள் தரப்பிலிருந்து முகவரி திரட்டி வருகின்றனர்.

வரலாற்றுப்பெருமிதம் என சொல்லிக்கொள்வதற்கு நம்மிடம் இருக்கிற எஞ்சிய சில உதாரணமானுடர்களை, ஏதோவொரு செயலசைவின் வழியாக மீளமீள நிகழ்கால இளஞ்சமூகத்தின் முன்பாக முன்னிறுத்துவதென்பது ஒரு அறிவியக்கவிசை. காலந்தோறும் அவ்விசை எல்லா மட்டங்களிலும் நிகழ்தல் வேண்டும். யானை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி அவர்களை ஒரு படைப்புவழியாகப் பரவல்படுத்தும் வாய்ப்பு தன்னறம் நூல்வெளிக்குக் கிடைக்கப்பெற்றதற்கு நன்றியும் நிறைவும் அடைகிறோம்.

“யானையின் அடிக்கால் ஒரு மணல்மூட்டை போன்றது…” இவ்வரிகளை வாசிக்கையில், நம் மனக்கற்பனையில் விரிகிற பெருங்காட்டின் நடுவில், பாதங்காட்டி நிற்கிற ஒரு யானையின் சித்திரத்தை இன்னும் ஆயிரங்கோடி தடவைகள் இம்மானுடம் திரும்பத்திரும்ப உருவகித்து உளயெழுச்சி அடைதல் வேண்டும்! அந்த அகநிலை ஒரு இறைவரம்.

விலையில்லா பிரதி பெற: https://bit.ly/2LcqUpJ

கரங்குவிந்த நன்றியுடன்,

தன்னறம் நூல்வெளி

குக்கூ காட்டுப்பள்ளி

புளியானூர் கிராமம்.

“செய்யக்கூடியது, செய்யக்கூடாதது மட்டுமல்ல
செய்தே ஆகவேண்டியதையும் சேர்த்ததுதான் தன்னறம்”

முந்தைய கட்டுரைகமல்ஹாசனும் வெட்டிப்பூசலர்களும்
அடுத்த கட்டுரைகாவியங்களை வாசித்தல்