அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம். நலம் அறிய ஆவல். கடந்த ஆண்டு தாங்கள் அமெரிக்கா வந்து சென்ற பிறகு, அட்லாண்டாவில் தங்களை சந்தித்த தங்கள் வாசகர்கள் இணைந்து விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா) அமைத்துள்ளோம் என்று கடந்த விஷ்ணுபுரம் விழாவில் தங்களைச் சந்தித்தபோது நான் கூறியது உங்கள் நினைவில் இருக்கலாம். இலக்கியம் பற்றிய கலந்துரையாடல் எதுவும் இல்லாமல் வறண்டு இருந்த எங்களது வாழ்க்கை, அப்படியொரு உரையாடல் இல்லாமல் ஒரு நாள் கழிவதில்லை என்றாகிவிட்டது. வாட்ஸப்பை ஆக்கப்பூர்வமாக உபயோகிக்கும் குழு என்று எங்களை சொல்லலாம். கோவிட்19 பற்றி ஒரு சின்ன சிணுங்கல் கூட இல்லாத குழு.
உறுப்பினர் வாசித்த புத்தகம், அதைப் பற்றிய கருத்து, தளத்தில் அன்று வந்த கதை , தத்துவம் என்றுதான் உரையாடல் இருக்கும். ஒவ்வொரு காலாண்டும் இத்தனை புத்தகங்கள் வாசிக்கவேண்டும், ஒரு கலந்துரையாடலாவது நடத்தவேண்டும் என்ற கட்டுப்பாடுகளுடன், ஆரம்பித்த குழு, இந்த ஏப்ரல் முதல் வாரத்தோடு இரண்டாவது காலாண்டை நிறைவு செய்கிறது. ஒவ்வொருவரும் ஒரு மூலையில் இருப்பதால், முதல் காலாண்டு (oct-19 to Dec -19) முடிந்தபிறகு , ஜனவரியில் கூகிள் ஹேங்க் அவுட் மூலம் சந்தித்து உரையாடினோம். காணொளியில் முகங்களைப் பார்த்துக்கொண்டு, முதன் முதல் கலை இலக்கிய கூட்டம் நடத்தியவர்கள் நாங்களாகத்தான் இருப்போம்.
அது முதல் கூட்டம், உறுப்பினர்கள் பற்றிய அறிமுகம், அவர்களுக்கு பிடித்த கலை, இலக்கியம் என்று சுருக்கமான உரையாடல்கள் மட்டும் இருந்தன. குறிப்பிடப்படும்படி, ராஜன் சோமசுந்தரம், 2019 விஷ்ணுபுரம் விழா நாயகருக்கான ஆவணப்படத்திற்கு இசை அமைத்ததை , சங்கப் பாடல்களுக்கு இசை அமைத்ததை குறிப்பிட்டு அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தோம். இரண்டாவது காலாண்டின் நிறைவு கூட்டத்தின்போது, இரண்டு நபர்கள் அவர்கள் வாசித்ததை விவாதிக்கலாம் என்று முடிவு செய்து, போர்ட்லேண்ட் மதன், ‘இன்றைய காந்தி’ பற்றியும், ராலெ முத்து , ‘தண்ணீர்’ நாவல் பற்றியும் பேசுவது என்று முடிவாகியது. கனெக்டிகட் கிஷோர், இன்றைய காந்தி ,ஒரு கடல், அதில் சிறு துளி பருகவே நாள் வேண்டும் என்று எதிர்வினையாற்ற, எந்த வித மறுப்பும் இல்லாமல், மதன் முன்வந்து, ‘காந்தியின் போராட்ட வழிமுறை’ என்ற தலைப்பில் பேசுகிறேன் என்று ஒப்புக்கொண்டார்.
கூட்டம் ஏப்ரல் ஆறு என்று நாங்கள் முடிவு செய்தபொழுது, அனைவருக்கும் ஜூம்தான் கலந்துரையாடல் நடக்க ஏதுவான தளமாக இருக்கப் போகிறதென்று எங்கள் யாருக்கும் தெரியாது. வழக்கமான அறிமுகங்களுக்குப் பிறகு, முதலில், ‘தண்ணீர்’ நாவலைப் பற்றிய தனது அனுபவத்தையும், கருத்தையும், ‘அறம்’ நூலின் மூலம் தங்களை கண்டடைந்த முத்து முன் வைத்தார். அது இரண்டு பெண்களைப் பற்றிய நாவல் , வாழ்க்கை பற்றிய நாவல் என ஆரம்பித்து ஜமுனா, டீச்சர் இருவரையும் நாவல் வாசிக்காத வாசகர்களும், அவர்களை இனம் கண்டுகொள்ளுமளவு, நாவலின் துல்லியமான இடங்களையெல்லாம் தொட்டுச் சென்றார். ஒரு நாவல் பற்றி பேசினால், இன்னொரு நாவல் இடையில் வரத்தானே செய்யும். அசோகமித்தரனின், மானசரோவர் பற்றியும் உரையாடல் சென்று வந்தது. அசோகமித்தரன் கொடுக்கும் சென்னையின் சித்திரம், அவர் கதைகளில் எப்பொழுதும் இருக்கும் ஒரு மனநோயாளி, பெண்களின் மேல் அவருக்கு இருந்த அதீதிய பிரியத்தாலும், மதிப்பினாலும், அவர்களை அவர் எழுத்துக்களில் நுணுக்கமாக விவரிப்பது என எதிர்வினை ஆற்றிய மற்ற உறுப்பினர்களும் (ராலே விவேக், அட்லாண்டா சிஜோ மற்றும் சிவா, நியூ யார்க் அய்யப்பர்) ஆராய்ச்சி மாணவர்கள் போல் தங்கள் தரப்பை எடுத்து வைத்தனர்.
காந்தியின் போராட்ட வழிமுறை தலைப்பில் பேசிய மதன், தங்களின் எழுத்துக்களை ஒன்று விடாமல் வாசிப்பவர். விஷ்ணுபுரம் விழா முதன் முதல் கோயம்புத்தூரில் நடந்தபொழுது தாங்கள் எல்லாம் எப்படி, ஒருவர் எழுந்து மற்றவர் சேரில் அமர்ந்து உரையாட வேண்டி இருந்தது என்ற தனது அனுபவத்தை எங்களிடம் பகிர்ந்துகொண்டார். இன்றைய காந்தி அல்லாமல், மேலும் ஐந்து புத்தகங்களை வாசித்து , நன்றாக தயாரித்து வந்த அவரது உரை கன கச்சிதமாக இருந்தது. கொடுங்கோல் ஆட்சியாளர்களைவிட, காந்தியின் அஹிம்சைப் போராட்டமுறைதான், 1900-லிருந்து 2003 வரை இரண்டு மடங்கு வெற்றியடைந்தது என்று எரிகா செனாவெத்தின் நூலான why Civil Resistence works –லிருந்து எடுத்து புள்ளிவிபரங்களுடன் தனது உரையை ஆரம்பித்தார்.
ஒரு போராட்டம் வெற்றி பெற,
1) வரையறுக்கப்பட்ட கோட்பாடு,
2) போராடவேண்டிய முறை
3) போராட்டத்தை எப்பொழுது ஆரம்பிப்பது, எப்பொது முடிப்பது, தடைபட்டால் எப்படி மீண்டெழுவது என்ற தெளிவு
என்னும் மூன்று அடிப்படைத் தகுதிகளைச் சுட்டிக்காட்டி, காந்தியின் அஹிம்சைப் போராட்டத்தை ஒரு தெளிவான கட்டமைப்போடு விவரித்தார். தாங்கள் குறிப்பிடும், சமணம், வைனவ புஷ்டி மார்க்கத்திலிருந்து காந்தி தனது ஆளுமையை வளர்த்துக்கொண்டவிதம், ‘காந்தி’ படத்திலிருந்து சில காட்சிகள் என தான் எடுத்துக்கொண்ட தலைப்பை, சிறிதும் தடங்களில்லாமல் எங்களுக்கு அவர் பகிர்ந்ததை, ஒரு நல்ல கட்டுரையாக வெளியிடலாம் என ராஜன் சோமசுந்தரம் தனது பாராட்டைத் தெரிவித்தார். மற்ற உறுப்பினர்களும், (வாஷிங்க்டன் விஜய் சத்யா, மின்னஷோட்டா வேணு தயாநிதி, ராலெ விவேக், அட்லாண்டா சிவா), காந்தியைப் பற்றிய அவர்களின் புரிதல்களை குழுவுக்கு எடுத்துரைத்தனர். கூட்டத்தின் முடிவில் இன்றைய காந்தி-யை வெவ்வேறு தலைப்புகளில் வரும் நாட்களில் விவாதிப்பது என்றும், மூன்று மாதத்திற்கு ஒரு முறை நடக்கும் கலந்துரையாடலை இரு மாதத்திற்கு ஒரு முறையாவது நடத்தவேண்டும் என்று குழுவினர் அனைவரும் ஒருமித்த கருத்து தெரிவித்தனர்.
மேலும் குழு வளரவும், தமிழ் இலக்கியத்தை, தாங்கள் வழிகாட்டி எடுத்துச் செல்லும் பாதையில் பின் தொடர்ந்து பயணிக்கவும் ஆர்வமுடன் இருக்கிறோம். இவ்வாண்டு விஷ்ணுபுரம் வட்டம் அமெரிக்காவில் முறையாக சட்டப்படி ஒரு லாபநோக்கற்ற அமைப்பாக பதிவுசெய்யப்பட்டிருக்கிறது
அன்புடன்,
ஆஸ்டின் சௌந்தர்