காந்தியும் தலித் அரசியலும் -கடிதம்

அன்புள்ள ஆசானுக்கு ,

நலம். நலம்தானே? சமீபத்தில் தங்களுடைய காந்தியும் தலித் அரசியலும் என்ற விரிவான ஏழு பாகங்கள் கொண்ட கட்டுரையை வாசித்தேன். கல்விச்சாலை காந்தியை தாண்டி வரலாற்று காந்தியை உங்கள் மூலமாகவே படித்து வந்துள்ளேன். அந்த வரிசையில் காந்தி தலித்துகளுக்கு ஆற்றிய பங்கை மிக விரிவாக பன்முக பார்வையுடன் ஆராய்கிறது. காந்தியைப் பற்றி எல்லா பிம்பங்களும் இன்று ஒற்றை வரி மேற்கோள்களாக நமக்கு வந்து சேருகின்றன . அவைகளில் வசைகளே அதிகம். அப்படி பேசப்படும் வசைகளுக்கு இப்படி ஒரு தீர்க்கமான கட்டுரையை எவரேனும் அளித்துவிடமுடியுமா என்பது ஐயமே.

இந்த கட்டுரையை இப்போது வாசித்தமைக்கு சென்ற வாரம் வந்த அறிஞர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த தினமும் ஓர் காரணம். சமூக வலைதளங்கள் , வாட்சப் ஸ்டேடஸ்கள் அனைத்திலும் அம்பேத்கர் அவர்களின் புகழாரமே. அவர்களின் அம்பேத்கர் மீது கொண்ட பற்றின் மீது நான் கேள்வி எழுப்ப விழையவில்லை. ஆனால், தங்கள் கட்டுரையில் குறிப்பிட்டவாறு பழங்குடி மனநிலையில் நின்று சொந்தக்குடி வீரர்கள் X மாற்றுக்குல கொடியோர்கள் என்ற தொனியிலேயே உள்ளது. அம்பேத்கர் ஒரு பேரறிஞர் என்பதை நீங்கள் உட்பட, பேராய்வாளர்கள் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. அதை விளக்கும் பொருட்டு , மற்றவர்களை மொன்னைகளாக காட்டும் பாங்குதான் அருவருக்கச் செய்கிறது. அதிலும் அவர்களுக்கு கிடைத்த எளிதான இலக்கு காந்தி. அவர் தலித்துக்கு செய்த துரோகங்கள், அவரால் தான் அம்பேத்கரின் பிம்பம் மழுங்கடிக்கப்பட்டது போன்ற கூச்சல்கள்.

அன்னா கரினீனா  நாவலில் , அன்னாவின் சகோதரரான ஸ்டிவாவின் ரசனைப்  பற்றி தால்ஸ்தோய் ஒரு வரி கூறியிருப்பார். அவன் மிதவாத செய்திதாளைத் தான் படிப்பான். அதிலுள்ள கருத்துக்கள் அவனுக்கு ஏற்புடையதாக இருக்கும். அதற்கு காரணம் அவன் மிதவாதியெல்லாம் இல்லை. பெரும்பாலான மக்கள் அதைத்தான் விரும்புகிறார்கள் என்ற ஒற்றை காரணம் மட்டுமே. நாளையே அவர்களின் கருத்துகள் மாறுமெனின் அவனும் எந்த ஒரு பிரயத்தனமும் இன்றி மாற்றிக்கொள்வான். ஏன், அப்படி ஒரு கருத்துமாற்றம் நிகழந்தது என்பது கூட அவனுக்கு தெரியப்போவதில்லை.

இப்படித்தான் இன்று காந்தியைப் பற்றி குறைகூறுபவர்களின் நிலை இருந்துவருகிறது. Intellect என்று தன்னை காட்டிக்கொள்வதற்கு தற்பொழுது எது பேசுபொருளாக இருப்பதோ அதை தனது கருத்தாக்கிக்கொள்வது . இப்பொழுது அம்பேத்கர். நீங்கள் குறிப்பிட்டு இருப்பதுபோல் அம்பேத்கரும் கட்சி அரசியலில் வெற்றிபெற்று அதிகாரபீடத்தில் அமர்ந்து இருப்பாராயின் , அதே கூட்டம் இன்று அவருக்கு எதிராக கிளம்பி இருப்பார்கள். இன்றைய சூழலில் இதைத்தாண்டி காந்தி அம்பேத்கர் இருவரின் ஆளுமை சித்திரத்தையும் முரண் பற்றியும் வரலாற்று பிரக்ஞையை   முன்னிறுத்தி எழுதப்பட்டிருக்கிறது இக்கட்டுரை.

காந்தி இந்திய சுதந்திர போராட்டத்தில் ஏற்ற வரலாற்று பாத்திரத்தை விளக்க நீங்கள் சொன்ன ஒரு உருவகம் போதும். இத்தகைய ஒரு பீடத்தில் இருப்பவர், ஒரு நூறு தட்டுகள்  கொண்ட ஒரு தராசின் மையமுள் போன்றவர். அவற்றின் ஒவ்வொரு கனமும் மாறிக்கொண்டிருக்கும் எடைச்சமநிலைகள் நடுவே ஒரு சமரசப்புள்ளியாகவே அவர் இருக்க முடியும் ” இந்த சொற்களின் வழியே காந்தியை அருகிநின்று பார்த்தால் , அவரது ஆளுமை பிரமிப்பூட்டுகிறது . 1923 க்கு முன் காந்தி கொண்ட வருணாஸ்ரம கொள்கையை, அம்பேத்கர் போன்றவர்களுடனான நீண்ட உரையாடல் மூலம் தன் கொள்கையை மாற்றிகொண்டமையை தெளிவாக உணர முடிகிறது. இந்த உரையாடல்தன்மையற்ற வெற்றுக்கூச்சல் பேர்வழிகளிடம்  இதை புரியவைப்பது என்பது இமாலய இலக்கே.

இவர்களுக்கு “Father of Nation” தேவை இல்லாமலாகிறது. “Father of Constitution” என்ற மேதைமை மட்டுமே தேவையாகிறது. ஏனென்றால் ஒட்டுமொத்தமாக அதுதானே இந்தியர் அனைவரும் சமம் என்ற சரத்தை Article 14 மூலம் கொண்டுவந்தது, கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் தலித்துகளுக்கு இட ஒதுக்கீட்டை அளித்தது. ஆனால் அச்சட்டத்தை அடிப்படைவாதம்” மிகுந்த சமூகத்தில் பெரும்பான்மை மக்கள் ஏற்றுக்கொள்வதற்கு யார் காரணம் என்ற புரிதல் இல்லாமல் ஆகின்றன. அதற்கு நீங்கள் அளித்த பதிலை கண்ணீர் இல்லாமல் கடந்து போக முடியவில்லை “இன்று தலித்சிந்தனையாளர்களில் ஒருசாரார் எழுதும்போது இடஒதுக்கீடு அளித்த நன்மைகளைப் பட்டியலிட்டு அது அம்பேத்காரால் தலித்துக்களுக்கு வழங்கப்பட்ட மாபெரும்கொடை என்று மீண்டும் மீண்டும் பதிவுசெய்கிறார்கள். கண்டிப்பாக அம்பேத்காரின் கோரிக்கையும் வடிவமைப்பில் அவரது பங்களிப்பும் இட ஒதுக்கீட்டில் முக்கியமான இடம் வகித்தன. ஆனால் அவர் அதை எந்தப் போராட்டத்தையும் நடத்தி அடையவில்லை. காங்கிரஸ் அவரை அழைத்தமைக்குக் காரணம் காங்கிரசின் மனசாட்சி அவரது தரப்பை ஏற்றுக்கொண்டிருந்தது என்பதே. அந்த மனசாட்சியின் பெயர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி ”

அம்பேத்கரின் கல்வி, ஆராய்ச்சிபுலமை தாண்டி மேலதிகமாக இக்கட்டுரையில் கூறப்படவில்லை என்றாலும், நீங்களே அது இந்த கட்டுரையின்  வரையறைக்குள் வர வாய்ப்பில்லை என்றும் ; மேலும், “இந்திய மண்ணில் காலூன்றி நின்று இந்திய சிந்தனையையும் பண்பாட்டையும் ஆராயக்கூடிய தன்னம்பிக்கை கொண்ட ஒரு மரபை உருவாக்கிய முன்னோடி ” என்ற வார்த்தைகள் இந்த வெற்று புகழாரம் தாண்டி அறிஞர் அம்பேத்கரை படிக்க தூண்டுகிறது.

“கதாநாயகன் X வில்லன்’ என்ற வணிகசினிமா மனநிலையில் நின்று இதை அணுகும் இரு தரப்புக்கும் என்னிடம் சொல்ல ஏதுமில்லை. நான் பேசவிரும்பும் முன்னிலை  என்பது வரலாற்றை பல்வேறு கருத்துக்களின், பல்வேறு சக்திகளின் முரணியக்கமாக அணுகும் நவீன மனங்களிடம் மட்டுமே. அவர்கள் மட்டுமே சிந்திக்கும் தகுதி படைத்தவர்கள். பிறர் என்ன தலையணைகளை எழுதி அடுக்கினாலும் அரசியல் பெருங்கூட்டங்களில் அமர்ந்து கோஷம்போடவே லாயக்கானவர்கள்” என்ற உங்கள் வரிகளை உள்ளூர அசைபோட்டுக்கொள்கிறேன் . இரண்டாம் வட்டமேஜை மாநாடு , பூனா ஒப்பந்தம், ஹரிஜன இயக்கம், இந்து திருமணச் சட்டம் போன்ற வரலாற்று தரவுகளை , வரலாற்று  பிரக்ஞை மூலம் ஒரு சட்டகத்திற்குள் வைத்து பார்க்க இக்கட்டுரை பெரும் உதவியாக உள்ளது.

கார்த்திக் குமார்

காந்தியும் தலித்துக்களும்

காந்தியும் தலித் அரசியலும் 1

காந்தியும் தலித் அரசியலும் – 2

காந்தியும் தலித் அரசியலும் – 3

காந்தியும் தலித் அரசியலும் – 4

காந்தியும் தலித் அரசியலும் – 5

காந்தியும் தலித் அரசியலும் – 6

காந்தியும் தலித் அரசியலும் 1

 
முந்தைய கட்டுரைநமது முற்றத்து விண்மீன்கள்
அடுத்த கட்டுரைகோவையில் வெண்முரசு